எங்கள் கல்லூரியின் கம்பீரங்களில் ஒன்று தமிழ் முருகேசன்.
நாக்குக் குழறாமல், வார்த்தைப் பிறழாமல், மணிப் பிரவாளம் கலக்காமல் பேசக்கூடிய தமிழன் கேட்டவர் பிரமிக்க, கேளாதவர் கேட்கக் துடிக்கப் பேசுகிற சமர்த்தன். உணர்ச்சிகளைக் கொதி நிலைக்குக் கொண்டு செல்லும் கவிஞன். பண்டைப் பெருமை சொல்லி, இன்றைய அடிமை நிலை சுட்டி, ‘ ஹந்தி படிக்க மாட்டேன். இரண்டாந்தரக் குடிமகன் ஆக மாட்டேன் ’ என்று துப்பாக்கிக் குண்டிற்குத் துடித்துச் செத்த இராஜேந்திரன் கதை சொல்லக் கேட்டால் நெஞ்சில் கனல் சொரியும். ‘ எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் ’ எனப் பாரதிதாசனின் சங்கெடுத்தால் உங்கள் ரத்தம் சூடேறும். உடல் அனல் பறக்கும். கால்ஷியம் ஊசி போட்டது போல் பேச்சு முடிந்த பின்னும் வெகு நேரம் கதகதப்பாய் இருக்கும்.
இந்த ஜுரம்தான் என்னைப் புதிய உலகங்களுக்குள் செலுத்தியது. ஆர்ப்பாட்டம், போராட்டம், ஊர்வலம் என நான் அது நாள் வரை அறிந்திராத உலகங்கள். பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட உலகங்கள். ‘ நீ அடிமை, நீ அடிமை ’ என்ற அவமானம் மனத்தில் மணி ஒலிக்க, ஆவேச சத்தியங்கள் பூக்க, நானும் ஊர்வலத்திற்குப் புறப்பட்டேன்.
அன்று ஜனவரி இருபத்தி ஐந்து. அறுபத்தி ஐந்தின் கறுப்பு நினைவைக் கொண்டாடும் ஆண்டு தினம். பதினொரு மணிச் சூரியன் தலை மேல் தணல் பொழிய எங்கள் ஊர்வலம் புறப்பட்டது. ‘ உயிர் தமிழுக்கு உடல் மண்ணிற்கு ’ என ஒரு குரல் முழங்கிற்று. ‘ சாவிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும். எந்தன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் ’ எனக் கவிபாடும் மூங்கில் தட்டி.
ஊர்வலத்தின் முன்வரிசையில் முருகேன். கையில் தார்க்குவளை. இறுகிய தாரை இறக்கிப் பூசுவதற்கு ஏதுவாக மண்ணெண்ணெய், தல்லாகுளம் தபால் ஆபீஸில் பணவிடைத்தாள் வாங்கி கோரிப்பாளையம் முனையில் கொளுத்துவது முதல் திட்டம்.
அத்தனை மாணவர் மொத்தமாய்க் கண்ட அஞ்சல் ஆபீஸ் மிரண்டது. ஆளுக்கொரு ஐந்து பைசா வீசியெறிந்து மணியார்டர் பாரம் கேட்டபொழுது மலைத்தது. மறுத்தால் கலவரம் என மருண்டு, உடன் தெளிந்து, மறு நிமிடம் எல்லாக் கவுண்ட்டரிலும் மணியார்டர் ஃபாரம் முளைத்தது.
அத்தனை கைகளும் வீசிப் பிடிக்க ஆகாசம் பார்க்க எழுந்தது நெருப்பு. வானை நோக்கிக் கைகள் உயர்த்தி வளர்ந்தது தீ. ஒரு ராஜ்யமே புரண்டது போல் எங்களுக்குள் உற்சாகம் புரண்டது. ஊர்வலம் தலை நிமிர்ந்து பாலத்தின் முதுகேறியது.
போகிற வழியெல்லாம் போர்டுகளைக் கறுப்பாக்குவது இரண்டாம் கட்டம். இதன் உச்சம் இரயில் நிலையம், அத்துடன் ஊர்வலமும் முடிந்து போகும். அதுவரை நெல்லுப்பேட்டை தபால் ஆபீஸ், சிம்மக்கல் இன்ஷுரன்ஸ் கம்பெனி, சேதுபதி பள்ளிக்கடுத்த தந்தி ஆபீஸ், கூட்ஸ் ஷெட்டின் பெயர்ப்பலகை என்று அழகர் கோவில் மண்டகப்படி போல் அங்கங்கு தயங்கிச் செல்லும்.
நெல்லுப்பேட்டைத் தபால் நிலையம் சின்னஞ்சிறு கட்டடம். காம்பௌண்ட் சுவர் அருகில் கால் நட்டுப் பத்தடி உயரத்தில் அரசாங்கப் பெயர்ப்பலகை. கைக்கெட்டா உயரம். மதில் சுவரில் ஏற்றி விட்டால் அதன் முகத்தில் கரி பூசல் எளிது. ஆண்களும் பெண்களுமாய் ஒரு மனித ஏணி உருவாகிற்று. அரை நிமிடத்தில் என்னைத் தூக்கி மதிலில் நிறுத்தியது, ஏதோ ஒரு கை தார்க்குவளை நீட்டிற்று. “ பயப்படாதீங்க, விழுந்திட மாட்டீங்க” என்றொரு குரல் உறுதி சொல்லிற்று. மண்ணெண்ணெய் கலந்த தாரை மட்டை கொண்டு கலக்கினேன். கறுப்புப் பாகு கனவு போல் சுழன்று கலந்தது. கால்கள் நடுங்கின. கண்கள் செருகித் தலை சுழன்றது. அத்தனை பேர் முன்னால் விழுந்து விடாதிருக்கும் ஆவல், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் வேகம், உயிராசை எல்லாம் உந்தித் தள்ள இரண்டு கையாலும் பெயர்ப்பலகையை பற்றிக் கொண்டேன். நான் கைவிட்ட டப்பா குப்புற விழுந்தது. நாற்பத்தி ஐந்து டிகிரியில் சற்றுப் புரள, கறுப்பு திரவம் மணலில் கலந்தது.
“ பாலி கீழே இறங்குங்க ” என்ற அதட்டல் கேட்டது. அங்கங்கே எகத்தாளமாய்ச் சிரிப்புக் கேட்டது. பொம்பளையை எவன்யா சுவர் ஏறச் சொன்னது என்ற விமர்சனக் குரல் கேட்டது. ஆள் விழாமத் தப்பிச்சாங்களே அதைப் பார்ப்பியா என்று யாரோ ஆறுதல் சொன்னார்கள். முரட்டுத்தனமான ஆண்பிள்ளை வேலைகளை பொட்டச்சியிடம் கொடுத்தது முருகேசனின் தவறு என்று அர்த்தமில்லாமல் குற்றம் சொன்னார்கள். பெண் பிள்ளை என்றதும் பல் இளிக்குது தலைமை எனக் கூசாமல் கிசுகிசுத்தார்கள். இன்றைக்கு இத்தோடு போதும், திரும்பிடலாம் என்று முணுமுணுப்புக் கிளம்பியது.
எனக்கு வார்த்தை வரவில்லை. அவமானத்தில் அழுகை வந்தது. என் பயத்தால் ஒரு யுத்தம் நின்ற குற்றம் மனத்தை அறுத்தது.
அத்தனை குழப்பத்தையும் உடைத்துக் கொண்டு முருகேசன் குரல் எழுந்தது.
“ ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்ற பேச்சு வேண்டாம். எது இருந்தாலும், இல்லாவிட்டாலும், யார் வந்தாலும், வராவிட்டாலும் போராட்டம் நடக்கும். இஷ்டம் இருப்பவர்கள் வரலாம். விருப்பம் இல்லாதவர்கள் விடைபெற்றுக் கொள்ளலாம். ”
ஆணெண்றும், பெண்ணென்றும் பேதம் பாராத அந்த ஆரோக்கியமான மனிதன், மனத்தில் இடம் பிடித்தான். பந்தலிட்டு, பலர் அறிய மாலை சூடிக் கைப்பிடித்தான்.
மாலை மெல்ல மெல்ல விலங்காக மாறும் மாயம் நிகழ்ந்தது.
பட்டம் வாங்கிய கையோடு சட்டக்கல்லூரிக்குள் நுழைந்தான் முருகேசன். இரண்டு வருடம் கழித்து என்னுடைய பி.எஸ்ஸி., முடிந்தபோது அவனைப் போலவே சட்டம் படிக்க மனது துடித்தது. அவனுடைய அடிச்சுவட்டில் நடக்கும் ஆசை.
“ சட்டம் படிச்சு … ? ”
“ இரண்டு பேருமா சேர்ந்து பிராக்டீஸ் பண்ணலாம். நீங்கள் அரசியல் சட்டம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கான்ஸென்ட்ரேட் பண்ணுங்கள். நான் பெண்கள் பிரச்சினைகளை எடுத்துக் கொள்கிறேன்.
“ அப்போ வீட்டில் அடுப்பு மூட்டுவது யாரு ? ”
“ அப்படீன்னா ? ”
“ இந்த பாரு பாலி. ஒரு சமூகம் பெண் வக்கீல்கள், வாத்தியார்கள், குமாஸ்தாக்கள், டெலிபோன் ஆபரேட்டர்கள் இல்லாமல் இருந்துவிட முடியும். ஆனால் நல்ல மனைவிகள், தாய்மார்கள், சகோதரிகள் இல்லாமல் இருக்க முடியாது. ” என்று டால்ஸ்டாயை ஆதாரம் காட்டிச் சொன்ன குரல் நெஞ்சைச் சுட்டது. அடிமைத் தனத்தை நியாயப்படுத்த இலக்கியத்தை ஏவும் மனம் உறுத்தத் துவங்கியது. அது முதல் முள்.
“ சரி, வக்கீலுக்கு வேண்டாம். இலக்கியமாவது படிக்கிறேன். ”
“ வக்கீல் வேலை வேண்டாம்னா வாத்தியார் வேலையா ? ”
“ வேலை ! வேலை ! வேலைக்காகத்தான் படிப்பா ? எனக்குப் பள்ளு இலக்கியம் பற்றி விலாவாரியாகத் தெரிஞ்சுக்கணும். சங்க காலத்தில் பெண் அடிமை உண்டா ? ஆராய்ச்சி பண்ணனும். வாலியோட பெண்டாட்டியையும், சீஸரின் மனைவியையும் ஒப்பிட்டுப் பார்க்கணும்.
மேலே மேலே வானைத் துழாவி, காற்றைத் துளைத்து பறந்து கொண்டிருந்த பறவையின் சிறகில் பளீரெனக் கத்தி இறங்கியது. அடிவயிற்றில் இருந்து எழுந்த குரல், கூடம் முழுக்க ஒலித்தது.
“ அதுக்கெல்லாம் புஸ்தகம் படி. எல்லாம் அது போதும் . ”
சட்டென்ற அறையில் மௌனம் நிரம்பியது.
அடுத்தடுத்து உட்கார்ந்திருந்த எங்களுக்கு இடையில் ஆயிரம் கோடி மைல்கள். சுய இரக்கம் சொற்களை உறுத்த அவன் சொன்னான். “ எங்க குடும்பத்திலேயே பட்டணம் வந்து எம்.ஏ படிச்ச முதல் ஆள் நான்தான். என் விட்டிற்குள்ளேயிருந்தே ஒருத்தி என் கண் முன்னாலேயே அதையெல்லாம் நொறுக்கிக்கிட்டு எம்.ஏ., எம்.பில்., பி.எச்டினு நடந்து போறதை என்னால தாங்க முடியாது. மேலே மேலே நான் பேச விரும்பலை. என் தலைமுறையில், என் குடும்பத்தில எனக்குச் சமமா யாரும் படிக்கறதை நான் விரும்பலை. ”
பிள்ளை பிறந்து, பள்ளிக்குப் போகும்போது இரண்டாவது விலங்கு ஏறிற்று.
பள்ளிக்கூடத்து விண்ணப்ப ஃபாரம், பையனின் ஜாதியை விசாரித்தது.
“ என்னன்னு போடப் போறீங்க ? உங்க ஜாதியா ? என் ஜாதியா ?
“ என்ன போடுவேன்னு நீ நினைக்கற ? ”
“ எங்களுக்கு ஜாதி இல்லை ” அப்படீன்னு எழுதுங்க. ”
“ ஒரு வீம்புக்காக இன்னிக்கு அப்படிப் போடலாம். நாளைக்கு வேலைல அவனுக்கு ஒரு சலுகைன்னா அது குறுக்க வந்து நிற்கும். ”
“ இவன் படிச்சு முடிச்சு வேலைக்குப் போக இன்னும் குறைஞ்சது பதினைஞ்சு வருஷம் ஆகம். அதுவரைக்குமா அந்த சலுகையெல்லாம் இருக்கப் போவுது ? ”
“ இருக்கும். இருக்கும். இதையெல்லாம் எத்தனை வருஷமானாலும் மாத்த முடியாது. ”
“ சரி அப்படியே இருக்கட்டும். உங்களுக்கும், எனக்கும் ஜாதில நம்பிக்கை கிடையாது. நாமே இதையெல்லாம் விட ஆரம்பிக்கலைனா வேற யார்தான் செய்வாங்க ? ”
“ நாளைக்கு அவனுக்கு ஒரு சலுகை கிடைக்குன்னா அதற்கு நாம ஏன் குறுக்க நிற்கணும் ? ”
“ சலுகைக்காக கொள்கையை விட்றலாங்கறீங்களா ? ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். ஹிந்தி படிக்கறவங்களுக்கு வேலையில் சலுகைன்னு நாளைக்கு ஒரு ஏற்பாடு வருதுன்னு வெச்சுக்குங்க. உங்க மகனை ஹிந்தி படிக்க அனுப்புவீங்களா ? ”
“ எப்படி ! எப்படி ! ”
அரை நொடி கண் இமைக்காமல் முருகேசன் அவளையே பார்த்தான்.
“ கொள்கையை யாரும் விட்றதில்லை. சலுகை கிடைக்குது. கிடைக்காமப் போகுது. அவன் என் மகன். அதனால அவனுக்கு என் ஜாதிதான். ”
“ அவன் எனக்கும் மகன் தாங்க. ”
“ அதனால ? ”
“ உங்க மகன்கிறதுக்கு அடையாளமா இனிஷியலைக் குடுத்திட்டீங்களே. அப்புறம் எதுக்கு ஜாதி ? ”
“ அப்பன் ஜாதிதான் மகனுக்கு. அதுதான் தமிழங்க வழக்கம். ”
“ இருட்டறையில் இருக்குதடா உலகம். ஜாதி இருக்கிறது என்பானும் இருக்கிறானே. ”
“ என்னடி சொன்ன ? ”
“ சொன்னது நானில்லை, பாரதிதாசன். ”
“ இந்த இலக்கிய நக்கல் எல்லாம் இங்க வேண்டாம். ”
பளிச்சென்று முகத்தில் கை இறங்கிற்று.
எங்கள் வீட்டில் ஹிந்தி இல்லை என்றாலும் அடிமைகள் உண்டு.
புரட்சிக்காரர்களின் வீடுகளிலும் அடிமைகள் சிறைப்பட்டிருக்கிறார்கள்.
அநேகமாகப் பெண்களாக.
( குமுதம் )
2 thoughts on “எங்கள் வாழ்வும்”
எவ்ளோ தான் ஆணும் பெண்ணும் நிகர்ன்னு பேசினாலும், இன்னமும் நடைமுறையில் ஆணாதிக்கம் முழுவதுமாய் மறையவில்லை. வார்த்தைகளில் இருக்கும் நவீனங்கள் இன்னும் வாழ்க்கையில் வரவில்லை எனக் காட்டும் கதை. நைஸ்..
I’m impressed by your writing. Are you a professional or just very knellodgeabwe?