1967 பிப்ரவரி 23 : “விஷக் கிருமிகள் பரவிவிட்டன”
-திமுக வெற்றி குறித்து பதவி இழந்த முதலமைச்சர் பக்தவத்சலம்
2016 நவம்பர் 4;மிக முன்னேறிய மாநிலத்திற்கான விருது
இந்தியா டுடே இதழின் விருது வழங்கும் விழாவில் அறிவிப்பு
தமிழ்நாட்டின் கடந்த ஐம்பதாண்டுகால வரலாறு இந்த இரு புள்ளிகளுக்கிடையே விரிந்து கிடக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால் இரண்டிலும் உண்மை இருக்கிறது!
1967 பிப்ரவரியில் தேர்தல் முடிவுகள் வெளியான போது தேசம் திகைத்துப் போனது. தமிழகத்தில் இருந்த 14 மாவட்டங்களிலும் (அப்போது 14தான்) திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தது. ஒன்றில் கூட காங்கிரஸ் பெரும்பான்மை பெறவில்லை 138 இடங்களில் திமுக வென்றிருந்தது. அவற்றில் 98 இடங்களில் வாக்கு வித்தியாசம் 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை. பூவராகன் என்பவரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் தோற்றிருந்தார்கள். அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடி ஏற்படும் போது அதனைத் தீர்த்து வைக்கும் அரசியல் நுட்பமும் அனுபவமும் ஆளுமையும் கொண்டிருந்த பெருந்தலைவரான காமராஜ் தோற்றுப் போயிருந்தார். அவரைத் தோற்கடித்தவர் ஒரு மாணவர்
வெற்றி பெற்றவர்களில் அந்த மாணவரைப் போல நிர்வாக அனுபவம் அற்றவர்கள் கணிசமாக இருந்தார்கள். நிர்வாக அனுபவத்திலும், அமைப்பு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், வலிமை கொண்ட காங்கிரசை எப்படி ஒரு மாநிலக் கட்சியான திமுகவால் தோற்கடிக்க முடிந்தது என்ற கேள்விக்கு அநேகமாக எல்லோருக்கும் விடைதெரிந்திருந்தது. ஆனால் அதிகாரங்களின் தாழ்வாரங்களிலும், பத்திரிகையாளர்களிடமும் எழுந்த கேள்வி, அதிக அனுபவம் இல்லாதவர்கள் வசம் ஆட்சியைக் கொடுத்தால் தமிழகத்தின் எதிர்காலம் என்ன ஆகும்?
இந்தக் கேள்விக்குக் காலம் பதில் சொல்லிவிட்டது. சமூக, பொருளாதார, மனிதவள, நிர்வாக விஷயங்களில் இன்று தமிழகம் மற்ற பல மாநிலங்களை விட முன்னணியில் இருக்கிறது.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் 2000 ஆம் ஆண்டு எழுதிய வளர்ச்சி என்ற சுதந்திரம் (Development as Freedom) என்ற நூலில் குறிப்பிட்டிருந்த ஒரு தகவல் பலரது புருவங்களை வியப்பில் உயர்த்தியது. ‘ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்திய சீனத்தை விட தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு வெகு வேகமாக குறைந்திருக்கிறது என்பதுதான் அந்த தகவல். அவர் இன்னொரு புள்ளி விவரத்தையும் சுட்டிக் காட்டியிருந்தார். பிரசவத்தின் போது இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை (MMR) இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகக் குறைவு, அந்த ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்த மிலினியம் வளர்ச்சி இலக்குகளில் ஒன்றை (இலக்கு எண்4) தமிழகம் ஏற்கனவே எட்டிவிட்டிருந்தது
புள்ளி விவரங்கள் முக்கியமில்லை. ஆனால் இதைக் குறித்து அவர் தெரிவித்த கருத்து ஒன்று முக்கியமானது. இந்த சாதனைக்கு அடிப்படை காரணம் அரசின் கொள்கைகளும். நிர்வாகம். அதை தொடர்ந்து 10 ஆண்டுகள் தொய்வின்றி பின்பற்றி வந்ததும்தான்.
அவர் குறிப்பிடும் பத்தாண்டுகளில் இரு பெரும் திராவிடக் கடசிகளும் தமிழகத்தை ஆண்டிருந்தன. ஆட்சிகள் மாறின. ஆனால் அரசின் கொள்கை மாறவில்லை.
இது ஓர் உதாரணம். இன்று என் முன் தமிழகத்தின் நிலை குறித்த பல புள்ளிவிவரங்கள் இருக்கின்றன. பொருளாதாரத்தைப் பொறுத்த வரை இந்திய மாநிலங்களிலேயே இரண்டாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு (2nd largest economy in India after Maharashtra) இது 2014-15 ஜிடிபி அடிப்படையில் மத்திய அரசு அறிவித்துள்ள தகவல். நிதியாண்டுகள் 2004-05 முதல 2011-12 வரையிலான காலகட்டத்திலிருந்த தனிநபர் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு திட்டக் கமிஷன் இந்திய மாநிலங்களை நான்கு வகையாகப் பிரித்தது. 1அதிக வளர்ச்சி,.அதிக அளவில் வறுமை ஒழிக்கப்பட்ட மாநிலங்கள், 2அதிக வளர்ச்சி, ஆனால் குறைந்த அளவில் வறுமை ஒழிக்கப்பட்ட மாநிலங்கள், 3குறைந்த வளர்ச்சி, குறைந்த வறுமை ஒழிப்பு, 4.குறைந்த வளர்ச்சி, ஆனால் அதிக அளவில் வறுமை ஒழிப்பு எனப் பகுத்துப் பட்டியலிட்டது. அதில் முதல் பிரிவில் அதாவது அதிக வளர்ச்சி, அதிக அளவில் வறுமை ஒழிப்பு என்ற பிரிவில் மூன்று மாநிலங்கள் மட்டுமே இடம் பெற்றன. அதில் ஒன்று தமிழ்நாடு (மற்றவை ஆந்திரம், மகாராஷ்டிரம்) இந்தியாவிலேயே அதிகப் பல்கலைக்கழகங்கள் (59), அதிக அளவில் பி.எச்டி படிப்பவர்கள், மாற்று எரிசக்தி உற்பத்தி, அலைக்கற்றை பயன்பாடு எனப் பலமுனைகளில் தமிழகம் இன்று முதலிடத்தில் இருக்கிறது.
திராவிடக் கட்சிகளால் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை இப்போது அந்தக் கடசிகள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.(சத்துணவு, (மத்திய அரசு) மாணவருக்குக் கணினி (உ.பி) பேறு காலத்தில் உள்ள பெண்களுக்கு மாத்திரைகள் (ம.பி) அம்மா உணவகம் (ஆந்திரம்) இலவச அரிசி (தெலுங்கானா) தாலிக்குத் தங்கம் (தெலுங்கானா)
ஆனால் நான் முக்கியமாகக் கருதுவது இந்த பொருளாதார, மனித நல புள்ளிவிவரங்களை மட்டுமல்ல. புள்ளிவிவரங்களை மட்டும் கொண்டு அளவிடமுடியாத,மறைநீரோட்டத்தில், திராவிட ஆட்சிகளின் மிகப் பெரிய பங்களிப்புகள் இரண்டு உண்டு. ஒன்று சமூக நீதி. மற்றொன்று பெண்களுக்கு அதிகாரமளித்தல்
திமுக ஆட்சிக்கு வந்ததும், முதன்மையாக அக்கறை செலுத்திய விஷயம் இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதி என்பதை தனது லட்சியமாக்க் கொண்டிருந்தவர் திராவிட இயக்கங்களின் தந்தையான பெரியார். 1967 தேர்தலில் பெரியார் திமுகவிற்கு ஆதரவளிக்கவில்லை என்ற போதும், ஆட்சிப் பொறுப்பேற்றதும் திமுக இட ஒதுக்கீட்டை செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளைத் தொடங்கியது. முதன் முறையாக தமிழ்நாட்டில் பிற்பட்டோருக்கென்று தனி ஆணையம் 1969 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது (சட்டநாதன் கமிஷன்) 1971 ஆம் ஆண்டு திமுக அரசு, 25 சதவீதமாக இருந்த பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவீதமாக அதிகரித்தது..1980ல் இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயரை அறிமுகப்படுத்த முயன்று சூடு பட்ட எம்.ஜி.ஆர், பின்னர் இடஒதுக்கீட்டை 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தினார். பட்டியல் இனத்திற்கு அரசமைப்புச் சட்டம் உறுதி செய்திருந்த 18 சதவீதம் இட ஒதுக்கீட்டையும் சேர்த்து தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு மொத்தம் 68 சதவீதமாக ஆனது. மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதற்கு மேல் இருக்கக் கூடாது என்று உச்சநீதி மன்றம் பலமுறை அறிவுரைகள்/தீர்ப்புக்கள் வழங்கியிருந்த நிலையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது திராவிடக் கட்சிகளுக்கு இட ஒதுக்கீட்டின் மீதிருந்த உறுதிப்பாட்டைப் புலப்படுத்துகிறது. இதில் இன்னொரு வியப்பூட்டும் ஓர் செய்தி என்னவென்றால், திமுக தலைவர் கருணாநிதியைப் போல் பெரியாரது இயக்கத்தில் நேரடியாக அவரது தலைமையின் கீழ் பணியாற்றியிராத, அண்ணாவினால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆரைப் போல் அல்லாத, இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பதாக குற்றம் சாட்டப்படும் பிராமண வகுப்பில் பிறந்த ஜெயலலிதா, இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருப்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தை சிலர் அணுகியபோது, 69 சதவீத இட ஒதுக்கீட்டை அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் மத்திய அரசை நிர்பந்தித்து சேர்க்கச் செய்தார். ஓன்பதாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் குறித்து நீதிமன்றங்களில் வழக்காட முடியாது.
திராவிட ஆட்சிகளின் தலைவர்கள், அவர்களிடையே எத்தகைய கருத்து மோதல்கள் இருந்த போதிலும் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதிலும், அதை காப்பாற்றுவதிலும் ஒன்றுபட்டு நின்றார்கள் என்பதை எதிர்காலத் தலைமுறை நம்பக் கூட மறுக்கலாம்.
ஆனால் ஒரு தலைமுறை பெருமளவிற்கு கல்வி பெறவும், வேலை வாய்ப்புக்கள் பெறவும், அவற்றின் நீட்சியாக பொருளாதார மேம்பாடு அடையவும் இடஒதுக்கீடு முறை உதவிற்று என்பது சமூக யதார்த்தம்.
திராவிட ஆட்சிகள் ஆர்வம் காட்டிய மற்றொரு விஷயம் பெண்களுக்கு அதிகாரமளித்தல். 1989ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முறையாக பெண்களுக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற திட்டத்தை திமுக அரசு நடைமுறைப்படுத்தியது . பின்னர் 1990 ஆம் ஆண்டு பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்று சட்டம் இயற்றப்பட்டது.. கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சுய உதவிக்குழுக்கள் என்ற நுண் கடன் திட்டத்தை ஜெயல்லிதா பெருமளவில் வளர்த்தெடுத்தார். இவை எல்லாமே பெண்கள் பொருளாதார ரீதியாகத் தங்களை வலுப்படுத்திக் கொள்ள உதவின. பொருளாதார சுதந்திரமே எல்லா சுதந்திரங்களும் ஆதாரம்.
பெண்கள் அரசியல் ரீதியான அதிகாரம் பெறுவதற்கு இந்திய அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட பஞ்சாயத்து ராஜ் அமைப்பு உதவியது. அண்மையில் ஜெயலலிதா அரசு உள்ளாட்சி அமைப்புக்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்து சட்டம் இயற்றியிருக்கிறது. இது நடைமுறைக்கு வரும் போது உள்ளாட்சி அமைப்புக்களில் எந்த அளவிற்கு ஆண்கள் இருப்பார்களோ அந்த அளவிற்குப் பெண்களும் இருப்பார்கள்.
பொருளாதார, அரசியல் அதிகாரங்களுக்கு அப்பால், சமூகத்தில் பெண்களின் சம நிலையை அங்கீகரிக்கும் விதமாகப் பல நுட்பமான செயல்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் தாயின் பெயரை தங்கள் முதலெழுத்தாகக் கொள்ளலாம் என்பது அவற்றில் ஒன்று
சமூக, பொருளாதாரத் தளங்களில் உணரத் தக்க விதங்களில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் கீழ் தமிழகம் முன்னேற்றம் கண்டிருந்த போதிலும், அரசியல் கலாச்சாரத்தில் அது கண்டிருக்கும் வீழ்ச்சி பயங்கரமானது.
திமுகவின் ஆரம்ப லட்சியங்கள், கடவுள் மறுப்பு, ஜாதி மறுப்பு, தமிழ் வளர்ச்சி. இன்று இவையெல்லாம் தோற்றுவிட்டன என்பது கண்கூடு. ஜாதிச் சங்கங்களாக அரும்பியவை அரசியல் சக்திகளாக வளர்ந்து இன்று தேர்தல் களத்தில் பேரம் பேசும் சக்திகளாக வலுப்பெற்று நிற்கின்றன. கீழ்வெண்மணியில் தொடங்கி, திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், ஜாதி மோதல்கள், ஜாதிய வன்முறைகள் தொடர்ந்து அரங்கேறியுள்ளன. ஆணவக் கொலைகள் பட்டப்பகலில், நடுவீதியில் நிகழ்த்தப்படுகின்றன. வ.வே.சு. அய்யர், வரதராஜூலு நாயுடு, டி.எம். நாயர், ராமசாமி நாயக்கர், சிவசண்முகம் பிள்ளை, அண்ணாமலைச் செட்டியார், சுப்பு ரெட்டியார், ராமசாமி படையாச்சி, லெட்சுமணசாமி முதலியார் என்று தங்கள் பெயரோடு ஜாதியையும் சேர்த்து அறிவித்துக் கொள்ளும் கலாசாரம் திராவிட ஆட்சிகளின் காலத்திற்கு முன்பிருந்த்து. இன்று யாரும் ஜாதியை அறிவித்துக் கொள்வதில்லை. ஆனால் ஜாதிப் பெருமிதம் என்பது தலைதூக்கி நிற்கிறது
தமிழ் வழிக் கல்வியில் சேர்வதிலோ, தமிழ் இலக்கியங்களை நாடிப் படிப்பதிலோ இளம் தலைமுறை பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. அன்பரசி, முத்தழகு, தமிழ்ச் செல்வன், கதிரவன் எனத் தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டும் வழக்கம் குன்றி, ஆதித்யா, பிரஷாந்த், தர்ஷிணி, ப்ரியா எனப் பெயர் சூட்டும் வழக்கம் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், தமிழறிஞர்கள் குடும்பங்களிலேயே தோன்றிவிட்டது. கணினித் தொழில்நுட்பத்தின் மூலம் தமிழை நவீன உலகிற்குள் எடுத்துச் செல்லும் முயற்சிகள் பலவும் அயலகத்தில் வாழும் தமிழர்கள் முன்னெடுத்தவைதான். ஹார்வேர்ட் போன்ற உலகப் புகழ் கொண்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கையை நிறுவும் முயற்சிகளும் அவர்களிடமிருந்துதான் முகிழ்க்கின்றன
தகுதியானவர்களைப் புறந்தள்ளித் தங்கள் அரசியல் பார்வைகளுக்கு இணக்கமானவர்களை, தலைமைப் பதவிக்கு நியமிப்பதை திராவிடக் கட்சிகள் ஒரு வழக்கமாகவே நிறுவியதன் காரணமாக, பலகலைக்கழகங்கள் உட்படப் பல சமூக நிறுவனங்கள் சிறுத்துக் கிடக்கின்றன
திராவிடக் கட்சிகளின் அடையாளமாக இன்று முன் நிற்பவை லஞ்சம்,வாரிசு அரசியல், தனிமனிதப் புகழ்ச்சி இவைதான் இரு பெரும் திராவிடக் கட்சிகளின் தலைமைகளோ, அல்லது தலைமைகளின் குடும்பத்தினரோ லஞ்ச வழக்குகளை எதிர்கொண்டு நீதிமன்றங்களின் தீர்ப்பிற்காகக் காத்திருக்கின்றனர்.
அண்ணாவின் தலைமையில் இயங்கிய திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் என்பது உச்சத்தில் இருந்தது. அவர் தன் குடும்பத்தினரை கட்சிப் பொறுப்புக்களுக்கு நியமிக்கவோ, தேர்ந்தெடுக்க வகை செய்யவோ இல்லை. மாறாக,த் தன் வாயாலேயே, ‘தம்பி வா, தலைமையேற்க வா’ என நெடுஞ்செழியனை அழைத்தவர்.இன்றைய திமுகவின் இரண்டாம் மூன்றாம் தலைமுறைகள் அரசியல் லட்சியங்களால் அல்ல, குடும்ப உறவுகளால் உருவானவை. ஒரு தருணத்தில் கருணாநிதி முதல்வர், அவரது ஒரு மகன் துணை முதலமைச்சர், மற்றொரு மகன் மத்திய அமைச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர், பேரன் மத்திய அமைச்சர் என்று பதவிகளில் பரவிக் கிடந்தனர் என்பது வரலாறு. சட்டமன்றத்தில் இதுவரை எந்தக் கட்சியும் இந்த எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றதில்லை என்ற புகழ் கொண்ட நிலையில் இருந்த திமுக, பின்னொரு காலத்தில் எதிர்கடசியாக கூட அமரமுடியாமல் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதில் வாரிசு அரசியலுக்குக் கணிசமான பங்குண்டு
இன்னொரு திராவிடக் கட்சியான அதிமுகவில் யார் வேண்டுமானலும் அமைச்சராகவோ, கட்சிப்பதவிகளிலோ அமரலாம் என்பது உண்மைதான் என்றாலும் அங்கு நடக்கும் தனிமனிதத் துதி, அருவருப்பானது. கூழைக் கும்பிடுகள், தரையோடு படர்ந்த நமஸ்காரங்கள், வானில் பறக்கும் விமானத்தைப் பார்த்து வணங்குதல் என்பதை ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது
கடந்த ஐம்பதாண்டுகளில், இரு கட்சிகளாலும் தேர்தலில் பாய்ச்சப்பட்டுள்ள பணம், தேர்தல் என்ற நடைமுறையையே அர்த்தமற்றதாக்கிவிட்டன. பணபலம் இல்லாத எவரும் இன்று தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. இதை வேறு வார்த்தைகளில் சொல்வதனால் ஐம்பதாண்டுகால திராவிட ஆட்சியில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல மக்களும் கறை படிந்த கரங்களுக்கு சொந்தக்காரர்கள் ஆகிவிட்டனர்.
பணத்தால் வளர்ந்திருக்கிறோம் . மனதால் குன்றியிருக்கிறோம்
(அந்திமழை டிசம்பர் 2016)