வரலாறு
இருவர்
மாலன்
நெல்சன் மண்டேலா
அதே பெண்தானா? என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் என்ன ஆச்சரியம், அது அவள்தான். சில வாரங்களுக்கு முன் நண்பர் ஒருவரை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துப் போக வேண்டியிருந்தது. நான்தான் காரை ஓட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தேன். வழியிலிருந்த பெரிய ஆஸ்பத்ரியின் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் அந்த இளம் பெண் நின்று கொண்டிருந்தாள். ஆ! என்ன அழகு! ஓரக் கண்ணால் அவளைப் பார்த்தேன். அவளை நன்றாகப் பார்க்கும் முன் என் கார் அவளைக் கடந்து விட்டது.பின்னால் திரும்பி அவளைப் பார்க்கலாமா என யோசித்துத் திரும்பிப் பார்ப்பதற்குள் சற்று தொலைவு வந்து விட்டேன். காரைத் திருப்பிக் கொண்டு வந்து பார்க்கலாமா என நினைத்தேன் ஆனால் கூட நண்பர் இருந்ததால் அது நன்றாக இருக்காது எனத் தோன்றியது. அன்று அந்தச் சில விநாடிகள்தான் அவளைப் பார்த்தேன் ஆனால் அவள் மனம் மனதில் தங்கி விட்டது.
அவள் இன்று என் அலுவலகத்தில்! நான் என் நண்பர் ஆலிவரோடு சேர்ந்து வக்கீல் தொழில் செய்து கொண்டிருந்தேன். அவள் எங்கள் அலுவலகத்தில் ஆலிவர் மேசை முன் அமர்ந்திருந்தாள். ஆலிவர் அவளை அறிமுகப்படுத்தி வைத்தார்:
“மிஸ்.நாம்ஜாமோ வின்ப்ரெட் மடிக்ஜிலா. சுருக்கமாக வின்னி. சமீபத்தில்தான் சமூகக் கல்விப் பணியை முடித்திருக்கிறார்.” என்றார். அந்த பெரிய ஆஸ்பத்ரியின் பெயரைச் சொல்லி அதில் அவள் சமூகப் பணியாளராக வேலை பார்க்கிறாள் என்றும் அவள் அருகில் இருந்த இளைஞனைக் காட்டி அவளது சகோதரர் என்று சொன்னார். அவர்கள் ஏதோ கேஸ் விஷயமாக ஆலிவரைப் பார்க்க வந்திருந்தார்கள். எனக்கு அந்த சொந்தக் கதையிலோ, வழக்கின் விவரங்களிலேயோ மனது செல்லவில்லை. அவளை அந்த நிமிடமே எங்கேயாவது வெளியே அழைத்துக் கொண்டு போய் என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா எனக் கேட்க வேண்டும் போலிருந்தது.
கண்டதும் காதல் என்பதை நீங்கள் நம்புவீர்களோ. மாட்டீர்களோ. எனக்கும் அந்த நிமிடம் வரை அதைப்பற்றி பெரிய அபிப்பிராயம் இல்லை. ஆனால் எது என்னைக் கவர்ந்தது, அவளது இளமையா, அவளது உற்சாகமா, அவளது தைரியமா எது என்று எனக்கு இன்று வரை தெரியவில்லை. ஆனால் அவளை நான் அந்த நிமிடமே திருமணம் செய்து கொள்ள விரும்பினேன் என்பது உண்மை.
மறுநாளே அவளுக்கு போன் செய்தேன். என் மீது நடந்து கொண்டிருந்த தேசத் துரோக வழக்கிற்கு அவள் படித்த கல்லூரியில் நிதி திரட்டித் தர முடியுமா என்பது பற்றி நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்றேன். அது சும்மா சாக்கு. “பேசலாமே!” என்றாள். அவளை அதே பஸ் ஸ்டாப்பிற்குச் சென்று கூட்டிக் கொண்டு ஒரு இந்தியன் ரெஸ்ட்டாரண்டிற்குப் போனேன். அங்குதான் எங்களைப் போன்ற கறுப்பர்களை அனுமதிப்பார்கள். நான் அடிக்கடி போகும் இடமும் கூட. ஆனால் வின்னி இந்திய உணவு சாப்பிடுவது அதுதான் முதல் முறை. காரமான இந்திய உணவை ‘உஸ்ஸு, உஸ்ஸு’ எனச் சாப்பிட்டபடியே அவள் அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தாள். அதுவும் கூட அழகாகத்தானிருந்தது.
அதன் பின் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். அவள் என் அரசியல் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தாள்
வின்னி
அவர் அப்படிக் கேட்பார் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. திடீரென்று ஒரு நாள் ஊரிலேயே பிரபலமான ஒரு டெய்லரைப் போய் பார்க்கச் சொன்னார். கல்யாணத்திற்கு கவுன் தைப்பதில் பேர் பெற்றவர் அந்த டெய்லர். “யாருக்குக் கல்யாணம்?” என்றேன். ”நமக்குத்தான்” என்றார் சிரித்துக் கொண்டே. “எவ்லீனிடமிருந்து விவாகரத்துக் கிடைத்து விட்டது. அதற்காகத்தான் இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தேன். இனி நாம் திருமணம் செய்து கொள்ளலாம்” என்றார்.எவ்லீன் அவரது முதல் மனைவி.
எனக்கும் சந்தோஷம்தான். பிரபலமான ஒருவருக்கு மனைவியாகப் போகிறோம் என்ற சந்தோஷம். ஆனால் அப்பாவிற்கு இதில் அவ்வளவு மகிழ்ச்சியில்லை. “யோசித்து முடிவு செய்! நீ ஒரு சிறைப்பறவையைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய்!” என்று கவலைப்பட்டார். ”அரசியல் என்பது ஒரு ஆபத்தான தொழில்மா” என்று எச்சரித்தார். ஏற்கனவே ஒரு முறை திருமணம் ஆகி 13 ஆண்டுகளுக்குப் பின் அந்த மனைவியை விவாக ரத்து செய்தவர் என்று நினைவுபடுத்தினார். எனக்கும் அவருக்கும் 18 வயது வித்தியாசம் எனச் சுட்டிக் காட்டினார்.
ஆனால் கல்யாணத்தை நல்லபடியாக நடத்தினார். அன்று அவருக்கே உரித்தான பாணியில் ”புருஷன் கெட்டிக்காரனா இருந்தா மனைவி பிசாசா இருக்கணும்” என்று ஆசிர்வதித்தார். வேதாளத்திற்கு வாழக்கைப்பட்டா முருங்கைமரம் ஏறித்தானாகணும் என்று இதற்கு அர்த்தம்.
நெல்சன்:
கல்யாணத்திற்குப்பின் ஹனிமூன் என்று எங்கேயும் போகவில்லை. காரணங்கள் இரண்டு. என் ஜாமீன் நிபந்தனைப்படி நான் ஊரை விட்டு வெளியே எங்கேயும் போக முடியாது. இன்னொரு காரணம் கையில் காசில்லை. என் மீதும் என் பார்ட்னர் மீதும் வழக்கு நடந்து கொண்டிருந்ததால் எங்கள் ப்ராக்டீஸ் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. சுத்தமாக எங்களிடம் எந்தக் கேசும் இல்லை. அதனால் கையில் பணப்புழக்கம் இல்லை. மணப் பெண்ணுக்காக என் மாமனாரிடம் நான் கொடுக்க வேண்டிய வரதட்சிணையைக் கூட நண்பர்களிடம் கடன் வாங்கித்தான் கொடுத்தேன்.
திருமணமான போது வின்னிக்கு 25 வயதுதான். ஆனால் மனைவியாக புதிய வாழ்க்கைக்கு வின்னி தன்னைச் சீக்கிரமாகவே அட்ஜெஸ்ட் செய்து கொண்டு விட்டாள். அவளுக்கு நான் காரோட்டக் கற்றுக் கொடுக்க நினைத்தேன். அந்தக் காலத்தில் காரோட்டுவது என்பது ஆண்கள் மட்டும் செய்யும் வேலையாகவே இருந்தது. ஆனால் என் போன்ற அரசியல்வாதியின் மனைவி காரோட்டக் கற்றுக் கொள்வது அவசியம் எனக்குத் தோன்றியது. நான் அருகில் இல்லாத போதும் அவளால் கடை கண்ணிக்கு, பள்ளிக்குப் போய் வர முடியும்.
அருகில் உள்ள நெடுஞ்சாலைக்கு அழைத்துச் சென்று காரோட்டக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். ஒன்று நான் மோசமான ஆசிரியராக இருக்க வேண்டும், அல்லது வின்னி அடம் பிடிக்கும் மாணவியாக இருக்க வேண்டும். ஏனெனில் காரோட்டுவது குறித்து நான் சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் எதையும் அவள் பொருட்படுத்தவே இல்லை. காருக்குள் எங்களுக்குள் எப்போதும் வாக்கு வாதம்தான். ஒரு நாள் வெறுத்துப் போய் மிகுந்த கோபத்துடன் ’எப்படி வேண்டுமாலும் போ!’ என்று நான் பாதிவழியிலேயே காரில் இருந்து இறங்கிக் கொண்டு விட்டேன்.
ஆனால் நான் வீடு வந்த கொஞ்ச நேரத்தில் வின்னி தானே தனியாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து நிற்கிறாள். அவள் நேரே வீட்டுக்கு வந்து விடவில்லை. நாங்கள் குடியிருந்த காலனியை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்திருக்கிறாள்.
வின்னி:
காதலித்த போது புத்தியில் படாத ஒரு விஷயம் காரோட்டக் கற்றுக் கொண்ட போது தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டது. அவருக்குப் பொறுமை அதிகம். எனக்கு எல்லாம் டக் டக்கென்று உடனே முடிய வேண்டும். அவர் காரோட்டினாலும் சரி, போராடினாலும் சரி, நிதானமாகத் திட்டமிட்டுச் செய்வது அவர் வழக்கம். எனக்கு ரிஸ்க் எடுப்பது பிடிக்கும்.
கார் ஓட்டக் கற்றுக் கொண்டபோது நான் அவரைப் புரிந்து கொண்டது போல அவரும் என்னைப் புரிந்து கொண்டு விட்டார் எனத் தோன்றியது. நான் அவரில் நிழலில் வெறும் திருமதி நெல்சன் மண்டேலாவாக மட்டும் இருப்பதில் திருப்தி அடைந்து விடமாட்டேன், எனக்கு என்று ஒரு தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முயற்சிப்பேன் என்பதைப் புரிந்து கொண்டு விட்டார்.
திடீரென்று தென்னாப்ரிக்கா அரசு ஒரு கொடுமையான அறிவிப்பை வெளியிட்டது. ஒவ்வொரு பெண்ணும் அவர் எங்கு சென்றாலும் ‘பாஸ்’ என்ற அடையாளச் சீட்டைக் எடுத்துச் செல்ல வேண்டும். அதிகாரிகள் கேட்கும் போது ஒரு பெண் தனது அடையாளச் சீட்டைக் காட்டவில்லை என்றால் அவருக்கு 10 பவுண்டு அபராதம் விதிக்கப்படும். அல்லது அவர் ஒரு மாதம் சிறைக்கு அனுப்பப்படுவார். அரசின் இந்த அறிவிப்பைக் கேட்டுப் பெண்கள் சீறி எழுந்தார்கள். நெல்சன் கட்சியின் மகளிர் பிரிவு போராட்டங்களை அறிவித்தது.
ஒரு நாளிரவு, சாப்பாட்டையெல்லாம் முடித்துவிட்டு, அவர் சற்று ஓய்வாக இருந்த போது, நெல்சனிடம், நான் நாளை நடக்கும் மகளிர் அணி போராட்டத்தில் பங்கேற்க விரும்புவதாக சொன்னேன். அவர் முதலில் திடுக்கிட்டுப் போனார். அந்த அதிர்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. அதன் பின் சிந்தனையில் ஆழ்ந்தார்.சிறிது நேரம் கழித்துப் பேச ஆரம்பித்தார்.
“வின்னி எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால் கவலையாகவும் இருக்கிறது”
“என்ன கவலை?”
“நீ வசதியாக வளர்ந்த பெண்.அடுத்த வேளைச் சோற்றுக்கு கவலை இல்லாமல் வளர்ந்த பெண். நீ போராடினால் உன்னைச் சிறையில் போடுவார்கள். சிறை வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதானல்ல. அந்த வாழ்க்கை மிகக் கடினமானது. உன்னால் தாங்க முடியாது.”
“என் மன உறுதியை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் டடா” நான் அவரை டடா என்று அவரது குடுமபத்தினர் அழைக்கும் செல்லப் பெயரைச் சொல்லிதான் அழைப்பது.
“ஒரு பெண் போராடுவது என்று தீர்மானித்து விட்டால் அவளை உலகில் உள்ள எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது எனக்குத் தெரியும் வின்னி. என்னுடைய கவலையெல்லாம் ஒரு கணவனின் கவலை.”
”அதான் என்ன?”
நீ இப்போது கர்ப்பமாக இருக்கிறாய். இந்த நேரத்தில் சிறைக்குப் போனால் உனக்கு சரியான சாப்பாடு கிடைக்காது. கடினமான வேலைகள் செய்ய வேண்டியிருக்கும். தேவைதானா?”
“அப்புறம்?”
“உனக்கே தெரியும் எனக்குத் தொழிலில் பெரிய வருமானம் இல்லை. உன் சம்பளத்தில்தான் குடும்பம் நடக்கிறது. நீ சிறைக்குப் போனால் அடுத்த நிமிடமே உன் ஆபீசில் உன் சீட்டைக் கிழித்து விடுவார்கள்! அப்புறம் எப்படி வாழ்க்கை நடக்கும்?”
நெல்சன் பேசப் பேச என உறுதி குறையவில்லை. மாறாகக் கூடிக் கொண்டே போனது.
“நான் முடிவு செய்துவிட்டேன்” என்றேன்
நெல்சன் உறுதியாக. தோளைக் குலுக்கிக் கொண்டு எழுந்து படுக்கையை நோக்கிப் போனார்.
வழக்கத்தை விட முன்னதாகவே எழுந்து எனக்குக் காலை உணவு தயார் செய்து கொடுத்தார். பின் காரில் ஏற்றிக் கொண்டு போராட்டக் களத்தில் இறக்கி விட்டார்.அன்று என்னோடு சேர்த்து 100 பேரைக் கைது செய்து செய்தார்கள்.மறுநாள் நாடு முழுக்க 2000 பேர் கைது செய்யப்பட்டார்கள். 15 நாள் சிறை வாசம்.
சிறைவாசம் என்னை பலவீனமாக்கவில்லை மாறாக என் உறுதி வலுப்பட்டது
நெல்சன்
என் மீதும் என் கட்சிக்காரர்கள் மீதும் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரிக்க அரசு ஒரு தனி நீதிமன்றத்தை அமைத்தது. அதை நான் வசித்து வந்த ஜோகனஸ்பர்க்கில் ஏற்படுத்தாமல், சற்றுத் தள்ளியிருந்த பிரிட்டோரியா நகரில் அமைத்தது.
ஒரு நாள் வழக்கு, அரசியல் பணிகள் இவற்றை முடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பினேன். வீட்டில் வின்னி தனியாக பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள். எந்த நேரமும் டெலிவரியாகக் கூடும் என்று தோன்றியது. அவளை அள்ளிப் போட்டுக் கொண்டு ஆஸ்பத்ரிக்கு ஓடினேன். ஆனால் டெலிவரி ஆக இன்னும் பல மணி நேரம் ஆகும் என்று சொன்னார்கள். அப்பாடா! என்றிருந்தது. ஆனாலும் கூடவே, நான் அதிக நேரம் இருக்க முடியாது என்பதை நினைத்த போது கவலையாக இருந்தது. மறுநாள் காலை நான் என் வழக்கிற்காக கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.
கனத்த மனதோடு காலை கோர்ட்டுக்குப் புறப்பட்டேன். “அரசியல்வாதியின் மனைவி என்பவள் கணவன் இருக்கும் போதே விதவை, அவன் சிறைக்குப் போகாவிட்டாலும் கூட” என்று மனதில் ஒரு சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.
வழக்கை முடித்து விட்டு ஓடி வந்தேன். எனக்கு பெண் பிறந்திருந்தாள்.
வின்னி
ஜீனானியையும் அழைத்துக் கொண்டு நெல்சனைப் பார்க்கச் சிறைக்குப் போயிருந்தேன். எனக்கு சின்னக் குழந்தையை சிறைக்குக் கூட்டிக் கொண்டு போக கஷ்டமாகத்தானிருந்தது. ஆனால் என்ன செய்ய. அது அவரது கட்டளை. அவள் பிறந்த போது ஜீனானி என்று கவித்துவமாக பெயர் வைத்தார். எங்கள் மொழியில் அதற்கு ‘ இந்த உலகிற்கு என்ன கொண்டு வந்தாய்?’ என்று அர்த்தம். எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்ளக் கூடாது உன்னிடம் உள்ளதை நீ வாழும் சமூகத்திற்குக் கொடுக்கக் கடமைப்பட்டவள் என்பதை நினைவூட்டும் சொல் அது.
அவளால் அவளது அப்பாவிற்குக் கொடுக்க முடிந்ததெல்லாம் தவணை முறையில் சந்தோஷம்தான். பார்க்கப் போகும் போதெல்லாம் அவளைத் தூக்கிக் கொஞ்சுவார். காவலர்கள் அனுமதித்தால் முத்தம் கொடுப்பார். விடை பெறும் நேரம்தான் வேதனையான நேரம். “அப்பா! நீயும் எங்களோடு வா!” என்று குழந்தை அழைக்கும். “நான் வரமுடியாதேம்மா!” என்று குரல் தழு தழுக்கச் சொல்வார்.”ஏன்?” என்று கேட்கும் ஜீனானியை, ”நான் சும்மா இரு” என்று அதட்டுவேன்.”அதட்டாதே!குழந்தைகளின் உலகம் நம்மைப் போல் சிக்கலானதில்லை” என்பார்.
அவரது கட்சியைத் தடை செய்து, அதன் முக்கியத் தலைவர்களைச் சிறைக்கு அனுப்பி விட்டதால் வெளியில் விடுதலை இயக்கத்தின் பணிகளை என் மூலம் தொடர்ந்து கொண்டிருந்தார். இளைஞர்களைத் திரட்ட வேண்டும், அவர்களிடம் விடுதலை வேட்கை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையைச் செயல்படுத்த முனைந்தேன். விடுதலை உணர்வை விதைப்பதில் அதிக சிரமம் இல்லை. எங்கள் குழந்தைகள் கறுப்பர்களுக்கென்று பிரத்தியேகமாக உள்ள மருத்துவமனைகளில் பிறப்பார்கள். கறுப்பர்களுக்கென்று உருவாக்கப்பட்ட குடியிருப்புகளில் வளர்வார்கள்.கறுப்பர்களின் பள்ளிக்குச் செல்வார்கள். கறுப்பர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வேலைகளில் சேர்வார்கள். கறுப்பர்களுக்க்கான ரயிலும் பஸ்ஸிலும் பயணிப்பார்கள். கடைசியில் கறுப்பர்களுக்கு ஒதுக்கப்பட கல்லறைகளில் புதைக்கப்படுவார்கள். சொந்த நாட்டிலேயே அடிமைகளாக வாழ்கிறோம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் விடுதலை உணர்வை விதைப்பதில் அதிக சிரமம் இல்லை.
ஆனால் கட்சி பகிரங்கமாகச் செயல்பட முடியாததால் அமைப்பு ரீதியாக இளைஞர்களைத் திரட்டுவதில் பிரச்சினைகள் இருந்தன. எங்கள் பகுதியில், அவர் பெயரில் ஒரு கால்பந்துக் கழகம் ஆரம்பித்தேன். நிறைய இளைஞர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள அது உதவியாக இருந்தது.
நெல்சன்
ஒரு மே மாதம் இரவு,”கிளம்பத் தயாராக இரு!” என்று சொல்லிவிட்டுப் போனார்.”எங்கே?” என்று கேட்டேன். அவர் பதில் சொல்லவில்லை. அடுத்த பத்தாவது மாதம் சிறையின் மேலதிகாரியின் முன் நிறுத்தப்பட்டேன். அங்கே வேறு மூன்று அரசியல் கைதிகளும் இருந்தார்கள் ”புறப்படுங்கள்!” என்றார்கள். மறுபடியும் எங்கே? என்று கேட்டேன்.” ம்…மரணத் தீவிற்கு!” என்றார் அதிகாரி. என்னுடைய வலது கையில் விலங்கு பூட்டி அதன் மற்றொரு முனையை இன்னொருவரின் இடது கையில் பூட்டினார்கள். இருவர் இருவராகப் பிணைக்கப்பட்டு ஜன்னல்கள் இல்லாத ஒரு வேனில் ஏற்றி கேப்டவுன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். மறுநாள் பகல் பொழுதில் போய்ச் சேர்ந்தோம். அந்த நெடும் பயணத்தில் ஒரு கையில் பூட்டப்பட்ட விலங்கோடு சிறுநீர்கழிப்பது கூடாக சிரமமாக இருந்தது.அந்தத் துறைமுகத்திலிருந்து ஒரு பழைய படகில் ஏற்றி ரோபன் தீவிற்கு அழைத்துச் சென்றார்கள். அதுதான் மரணத்தீவு. அந்தக் கொடுஞ்சிறைக்குப் போய்த் திரும்பியவர்கள் சிலரே. அங்கு நான் 20 வருடங்கள் இருக்கப் போகிறேன் என அப்ப்போதும் சற்றும் நினைக்கவில்லை.
அங்கு போனதும் வின்னியைச் சந்திப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு.
வின்னி
இன்று சிறையிலிருந்து அவரது கடிதம் வந்தது. அரசு பல ஊர்களுக்கு செல்ல எனக்குத் தடை விதித்திருந்தது. ரகசியப் போலீசார் என் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தது. நான்கு இளைஞர்களைக் கடத்தி அவர்களில் ஒருவரை நான் கொன்று விட்டதாக என் மீது வழக்குப் போட்டிருந்தது. அது தொடர்பாக இளம் வயதில் இருந்த என் வக்கீலை நான் சந்தித்துப் பேசுவதை வைத்து என் ஒழுக்கத்தின் மீது சந்தேகங்களை எழுப்பி கிசு கிசு மூலம் அவதூறுகளைப் பரப்பி வந்தது. இவ்வளவும் போதாதென்று எனக்கு வரும் கடிதங்களும் மறிக்கப்பட்டு வந்தன. அதனைத் தாண்டி இன்று அவரது கடிதம் கிடைத்தது.
அங்குள்ள நூலகத்தப் பயன்படுத்த அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதால் அவர் தோட்ட வேலையில் இறங்கியிருந்தார். “ ஒரு தக்காளிச் செடியைப் பிரியமாக வளர்த்து வந்தேன். அது சிறு நாற்றாக இருந்த காலத்திலிருந்து தானே நிமிர்ந்து நிற்கும் வரையில் அருகிருந்து போஷித்து வந்தேன். ஒரு நாள் ஆழ்ந்த சிவப்பில் அழகான, புஷ்டியான ஒரு பழத்தைக் கொடுத்தது. ஆனால் எங்கு தவறு நடந்ததோ தெரியவில்லை. அது வாட ஆரம்பித்தது. பின் மெல்ல மெல்ல பலவீனமடைந்து ஒரு நாள் இறந்து போயிற்று” என்று கடிதத்தில் ஒரு விவரணை இருந்தது.
ஏதோ பொடி வைத்து எழுதியிருக்கிறாரோ என்று தோன்றியது. என்னைப் பற்றிய வதந்திகளும் அவதூறுகளும் ‘செய்திகளாக’ அரசின் வானொலி மூலம் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதை அவர் கேட்டிருக்கலாம். அவற்றை நம்பத் தொடங்கிவிட்டாரோ என்னவோ?
எனக்குக் கவலையாக இருந்தது
நெல்சன்
சர்வதேச அழுத்தத்தின் காரணமாகவும் மக்களிடம் இருந்த கொந்தளிப்பின் காரணமாகவும் 28 ஆண்டுச் சிறை வாசத்திற்குப் பின் என்னை விடுதலை செய்தது. கட்சியின் மீதிருந்த தடை ஏற்கனவே நீக்கப்பட்டிருந்தது. அரசோடு பேச்சு வார்த்தை என்ற வேலை எனக்குக் காத்திருந்தது.
சிறையிலிருந்து வெளியே வந்த இரண்டு ஆண்டுகளில் வின்னியைப் பற்றிய பலவிதமான பேச்சுக்கள் என் காதில் விழுந்தன. அவற்றில் பல அரசு அவிழத்து விட்ட கட்டுக் கதைகள், பல அப்பட்டமான அவதூறுகள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவள் கட்சிப் பணத்தைக் கையாடி விட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை என்னால் எளிதாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை.ஒரு புறம் கட்சித் தோழர்களின் அழுத்தம். இன்னொரு புறம் பத்திரிகைகள் எழுப்பிய பரபரப்பு. மக்களிடம் கட்சியின் நற்பெயரை மீட்டெடுக்க வேண்டுமானால் எனக்கு ஒரு வழிதான் இருந்தது.
1992ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பத்திரிகையாளர்களை அழைத்தேன். ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஒரு அறிக்கையை வாசித்தேன்.
எனக்கும் என் மனைவி தோழர் வின்னி மண்டேலாவிற்கும் இடையே உள்ள உறவைப் பற்றி ஊடகங்கள் பல ஊகங்களை எழுதிக் கொண்டிருக்கின்றன. நிலையைத் தெளிவுபடுத்தவும், ஊகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
விடுதலைப் போராட்டம் நெருக்கடியான சூழலில் இருந்த போது நானும் வின்னியும் மணந்து கொண்டோம். நிறவேற்றுமைக்கு முடிவு கட்டுவதில் நாங்கள் உறுதியாக இருந்ததால் எல்லோரையும் போன்ற இயல்பான மண வாழ்க்கையை எங்களுக்குக் கிடைக்கவில்லை
நான் 20 ஆண்டுகள் மரணத்தீவில் சிறைப்பட்டிருந்த போது எனக்கு மிகப் பெரும் ஆறுதலாக, அசைக்க முடியாத ஒரு நம்பிக்கைத் தூணாக விளங்கினாள். அத்துடன் என் குழந்தைகளைத் தனியொரு ஆளாகச் சிறப்பாக வளர்த்து ஆளாக்கினாள். அரசால் அவள் மீது குவிக்கப்பட்ட வழக்குகளை வியக்க வைக்கும் மன உறுதியோடு எதிர் கொண்டாள். இத்தனைக்கும் நடுவில் விடுதலைப் போராட்டத்தில் சற்றும் தளராது ஈடுபாடு கொண்டிருந்தாள்.
என்ற போதிலும் சில நெருக்கடிகள் காரணமாக நாங்கள் பிரிகிறோம். அவருடனான மண வாழ்க்கையில் எனக்கு இம்மி அளவும் வருத்தம் கிடையாது. எங்கள் இருவரின் கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்ட சூழ்நிலைகள் இந்த முடிவை எங்கள் மீது நிர்பந்திக்கின்றன”
அறிக்கையை வாசித்து முடித்து விட்டு எழுந்தேன். ஒரு நிருபர் ஏதோ கேட்க எழுந்தார். “வேதனையில் இருக்கும் ஒரு மனிதனின் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வெளியே நடந்தேன்.
என் உள்ளம் அழுது கொண்டிருந்ததை யார் அறிவார்?
வின்னி
பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு திரும்பிய அவரிடம் என் மகள் சொன்னாள்:”சிறையிலிருந்து ஒரு நாள் அப்பா திரும்பி வருவார் என்று சொல்லி அம்மா அவ்வப்போது எங்களைத் தேற்றுவார். திரும்பி வந்தீர்கள். ஆனால் அப்பாவாக அல்ல. தேசத் தந்தையாக. எங்கள் தந்தையை தேசத்திடம் இழந்து விட்டோம்!”
அவர் ஒரு நிமிடம் திகைத்து நின்றார். பின் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னார்.”தேசத் தந்தையாக இருப்பது என்பது பெரிய பெருமை. குடும்பத்தில் தந்தையாக இருப்பது என்பது பெரிய சந்தோஷம். என் வாழ்க்கையில் என்றுமே நான் சந்தோஷப்பட கொடுத்து வைக்கவில்லை”
எத்தனையோ அவதூறுகளையும் துன்பங்களையும் சந்தித்த போது அழுதிராத, என் கண்கள் அப்போது கசிந்தன