இருளில் வந்த சூரியன்

maalan_tamil_writer

வாசற் கதவு திறந்தது.  திறப்பில்  ஒரு  விசை  இருந்தது. பதற்றம் இருந்தது. அப்பா இல்லை.  அப்பா  இப்படிக்  கதவை  அதிரத் திறக்கும்  வழக்கம்  இல்லை. கீய்ய்ய்…  என்று  கீல்  இரைய  முழுசாய்த்   திறந்து,  மறுபடி மூடி,  கொக்கியை மடக்கி, ‘ டங் ’ கென்று  அதிராமல்  அதனிடத்தில் பொருத்திவிட்டு நுழைவதுதான் வழக்கம். தானே காரை ஓட்டி வருகிற நாட்களில் கூட, கதவைத் திறக்க ஹாரனை முழக்கி ஆளைக்  கூப்பிடும்  அவசரம் கிடையாது. கியரை  நியூட்ரல் செய்து, இன்ஜினை நிறுத்திக்  கீழிறங்கி  இரு கதவுகளையும் முழுசாய்த் திறந்து உள்ளே நுழைவதுதான் அவர் சுபாவம்.

       அவர் சுபாவம் வெகு நிதானம். கதவு என்றில்லை. எதையும் அதிரச் செய்யும் பழக்கம்  இல்லை.  தனக்குத்  தெரிந்து  இந்தப்  பதினெட்டு வருடங்களில் எதற்கும் அதிரச்  சிரித்ததில்லை. நொறுங்கி அழுததில்லை. அம்மா செத்துப் போனபோது கூட அப்பா புலம்பி அழுததில்லை. எப்போதோ அம்மா கையில் சாப்பிட்ட ஞாபகத்தில், வந்திருந்த  மாணவர்கள்  கதறி  அழுத  தருணங்களில்  கூட  அப்பா இறுகித் தனித்துதான் உட்கார்ந்திருந்தார்.  உடலைச்  சிதையில்  வைத்துத் தணலைச் சரித்த அந்தச்  சின்ன  நிமிடத்தில்  முகம்  கோணி,  குரல்  கனத்து  விசும்பியதைத்  தவிர, அப்பா எதற்கும் அழுததில்லை. உணர்ச்சிவசப்படுகிற மனநிலைகளை அப்பா கடந்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. படித்து படித்து மூளை விரிகையில் மனம் மரத்து  மூடிக்கொள்ளும்  போலும்.

       மறுபடி கதவு அதிர்ந்து அழைத்தது. இந்த முறை நிலைக்கதவு. தடதடவென்று தட்டல்  முழங்கிற்று.

       நிம்மி  எழுந்து  எட்டிப்  பார்த்தாள்.  இருள்.  முகம்  தெரியாத  இருள்.  இப்போது சில காலமாய் இங்கே எப்போதும் இருள். இரவுகள் எல்லாம் நிரந்தரம் என்று பயம் காட்டும்  இருள்.  பகலில்  கூட  மழைக்  காலம் போல் வெளிச்சம் மறைந்த மேக மூட்டம்.  புழுக்கம்.  புயலுக்கு  முந்திய  அமைதி.

       “ யாரு ? ”  என்றாள்  நிம்மி  மறுபடி.

       பதில்  இல்லை.  போர்ட்டிகோ  விளக்கைப்  பொருத்தினாள். நெடிய நிழல் மடங்கித் தெரிந்தது. தாழை நீக்கிக் கதவைத் திறந்தாள். தலையை நீட்டி வெளியே பார்த்தாள்.  விழுந்த  இடைவெளியைப்  பெரிதாக்கி வேகமாய் உள்ளே நுழைந்தாள் அவன்.  விருட்டென்று  கதவைச்  சாத்தினான்.

       பயந்து அலறப் போனவளைப் பார்த்துக் கும்பிட்டான். ‘ தண்ணீ ’  என்று  ஜாடை செய்தான்.  சிறிது  தயங்கி  ஜில்லிட்ட  பாட்டிலை எடுத்து  நீட்டிய  நிம்மி  அவனைக் கூர்ந்து  பார்த்தாள்.

       இளைஞன். வேர்த்திருந்தான். வெகுவாய் களைத்திருந்தான். காடாய்க் கேசம் மண்டிய  கேசம்  மண்டிய முகம். கழுத்தில் வடுவாய் உழைத்த காயம். தோளில் கைபோல் தொங்கும் பை. கனல்போல் கண்கள். புட்டியை திருப்பிய உள்ளங்கைகள் காய்த்துப்  போயிருந்ததைக்  காண  முடிந்தது.

       “ உங்கள்  தந்தையின்  ஒரு  காலத்திய  மாணவன் நான். வேட்டை நாய்கள் விரட்டி வருகின்றன.  ஒரு  நாள் மட்டும்  ஒதுங்கிக்  கொள்ள  உதவ வேண்டும் நீங்கள். ”

       ஆங்கிலம் வெகு சரளம். அழகாய் அமைந்த வாக்கியத் தொடர்கள் அவனின் புலமையை  அறிமுகம்  செய்தன.

       “ அப்பா  இல்லை.  வருவதற்கு நேரமாகும். ”

       “ அதுவரை  காத்திருக்கிறேன்.   ஆனால்,   அது  உங்களுக்கு  இடைஞ்சல் ஆகுமோ ? ”

       நிம்மிக்கு  உடனடியாகப்  பதில்  சொல்லத்  தெரியவில்லை.

       “ பயப்பட  வேண்டாம்.  பதுங்க  வந்திருக்கிறேன்.  பாய்வதன் பொருட்டு. பதுங்கலும் பாய்தலும் எங்களுக்கு விதிக்கப்பட்ட இயற்கை நியதி. ஒன்று மட்டும் உங்களுக்குச்  சொல்கிறேன். நம்பிக்கை வைத்தவர்களை தண்டிக்கும் வழக்கம் எங்களுக்கு  இல்லை. ”

       “ நீயா ?  என்றார்  அப்பா,  வந்தவன்  எழுந்து  நின்றான்.  வணக்கம்  சொல்லி  கை  குவித்தான்.

       “ ஆமாம்  சார்.  ஞாபகம்  இருக்கா ? ”

       அந்தக் கண்களை அவருக்கு ஞாபகம் இருந்தது. இது நடந்து இரண்டு வருடம் இருக்கும். கல்லூரிக்குள் ‘ ராகிங் ’  தூள்  பறந்த  நேரம்.  அறை  வாசலில் இந்தப் பையன்  அழுது கொண்டு நின்றான். அன்று கண்களில் கனல் இல்லை. புனல் பெருகிக் கொண்டிருந்தது. என்ன என்ற கேள்விக்கு உடனடியாகப் பதில் இல்லை. அதட்டலாய் இரண்டாம் முறை கேட்டபோது விக்கி விக்கி அழத் துவங்கினான். பதினாறு வயதுப் பையன்  பச்சைக் குழந்தை போல் அழுவதைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. விஷயத்தைக்  கேட்டால்  சிரிப்பு  வந்தது.

       ஆசாரம் நிறைந்த குடும்பத்துப் பையன். அப்பா, கோயில் அர்ச்சகர். இந்தப் பையனை இழுத்து உட்கார்த்தி சிகரெட் பிடிக்கச் சொல்லி சீனியர் மாணவர்கள் வற்புறுத்தினர்.  இதுதான்  புகார்.  கொலை,  களவு,  காமம்,  சூது வரிசையில் புகையையும்  சேர்த்திருந்தான்  பையன்.  பெரிய  தப்பு  செய்து  விட்டதாய்ப் புழுங்கினான்.  குற்ற  உணர்வில் கூசிப் போனான். அந்த முதல் சந்திப்புக்குப் பின் அநேகம் தடவை இந்த வெள்ளைப் பையனை, வெகுளித்தனம் ததும்பும் விழிகளை வகுப்பில்  பார்த்திருக்கிறார்.  திடுமென்று  காணாமல்  போனான்.

       பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைதாகிக் காவல் நிலையம் போனவன், காணாமற்  போனதாகத்  தகவல்  வந்தது.  கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி, போலீஸ்  வலை  வீசிக்  கொண்டிருந்தது.

       புரொபசருக்கு நம்ப முடியவில்லை. புகை பிடிப்பதைக் குற்றம் என்று புழுங்கிய சிறுவன்,  கொலை  செய்யும்   அளவுக்கு   இரண்டு  வருடத்தில்  இறுகிப்  போயிருப்பானா ?

       “ நீயா ? ”  என்றார்  மறுபடி.

       “ ஆமாம் சார். அன்று உங்களிடம் ஆறுதல் தேடி வந்தேன். இன்று அடைக்கலம் கேட்டு  வந்திருக்கிறேன். ”

       இரண்டுக்கும்  இடையில்  எத்தனை  மாறுதல் !

அன்றைக்குக் குற்றம் செய்து விட்டதாக அழுது நின்றேன்.  இன்று தண்டனை கொடுத்து  விட்டதற்காகத்  தப்ப  நினைக்கிறேன். ”

“ யாருக்குத்  தண்டனை – ”

“ உளவு சொன்ன போலீஸ்காரன் அதற்கு உயிரை விலையாய்க் கொடுக்க நேர்ந்தது. ”

“ அது  எப்படி  குற்றமாகும் ?  அவனுக்கு  அது  தொழில்  அல்லவா ? ”

“ அவன் ஆட்சி அமைப்பின் ஒரு சின்னம். இந்த அமைப்புக்கெதிரான எங்கள் கோபத்தை  வேறு  எப்படி  நாங்கள்  சொல்ல ? ”

“ உங்கள்  அமைப்பில்  போலீஸ்  இராதா ? ”

“ இருக்கும், அது  காக்கிற  போலீஸாக ;  தாக்குகிற  படையாக அல்ல. உங்களோடு  வாதிட  வரவில்லை  நான்,  உதவுங்கள்.  ஒருநாள்,  ஒரு  நாள்  மட்டும். நாளை  நான்  நாட்டைவிட்டே  போய்  விடுவேன். ”

“ எதிலிருந்து  இந்தத்  தப்புதல் ? ”

“ ஏற்கெனவே  சொன்னேன்.  ஒரு  கறுப்புச்  சட்டம்  துரத்தி  வருகிறது. ”

“ ஒரு சட்டத்திலிருந்து தப்புவதற்கு ஊரை விட்டே போகிறாய். வேடிக்கை ! உங்களுடைய செயல்களின் எதிர்வினையாக இங்கே மக்கள் கொல்லப்படும் போதில், ஒளிந்துகொள்ள இன்னொரு தேசம் போகும் நீங்கள் ! உங்களுடையது மக்களுக்கான இயக்கம்  என்றால் இங்கே இருந்து அவர்களுக்காகப் போரிடுங்கள். அதில் மடிந்து போவது  அப்படியொன்றும்  அவமானமில்லை. ”

“ சாவதற்காக  அல்ல,  வாழ்வதற்கு  நாங்கள்  போராடுகிறோம். ”

“ உயிர் வாழ உங்களுக்கு உரிமை இருந்தது – ஆயுதம் ஏந்தி அதைப் பறிக்கத் தூண்டியது  நீங்கள்தான். ”

“ உரிமை  இருந்தது  உயிர்  வாழ மட்டும். நாங்கள் வாழ விரும்புவது மனிதர்களாக. ”

“ அப்படியே  இருக்கட்டும்.  அரசியல்  பிரச்சினைக்கு  ஆயுதமா  தீர்வு ?

“ பேனாக்கள் பிரயோசனமற்றுப்போன பின்னரே ஆயுதம் ஏந்தி நியாயம் தேடுகிறோம்  புரொபசர். ”

“ என்னருமை  இளைஞனே, இதை நீ கேள்விப்பட்டதில்லையா ?  இரத்தம்,  இரத்தம் கொள்ளும் !

வந்தவன்  மௌனம்  கொண்டான்.  வாய்  மூடி மேலே பார்த்தான். ‘ பிளட் பி கெட்ஸ் பிளட் !    என்று  முணுமுணுத்தான்.

“ உங்களோடு  வாதம்  செய்ய எனக்குத் தெம்பில்லை புரொபசர் என்றாலும் உங்கள்  வார்த்தைகளுக்கு  வணக்கம்  செய்கிறேன்.  இரண்டு  வருடத்தில் இப்படி இறுகிப் போனது  எவ்விதம்  என்று  கேட்டீர்கள். இறுக வைத்தது இரத்தம். என் அப்பாவின் இரத்தம். அக்காளின் இரத்தம். என் அக்காவை உங்களுக்குத் தெரியாது. கறுப்புதான். ஆனால், களையான முகம். அந்தக் கண்களுக்கு இணையான கண்களை நான்  பார்த்தல்லை.  நீரோட்டம்  நெளியும்  கண்கள்.  அதில்  சுடரொளி !

“ அந்த  ஒளியைப்  பதிமூன்று பேர் புணர்ந்தார்கள். ஒரு மாலைப் பொழுதில் மாற்றி  மாற்றி நுகர்ந்தார்கள். அந்த மாலைக்குப் பின் அவள் திரும்பவே இல்லை. அழகாய்  இருந்தது அவள் தப்பில்லை. ஆனால் அதற்காகத்தான் அவள் தண்டிக்கப்பட்டாள்.  இந்த  நியாயத்தைக்  கேட்கப்  போய் அப்பா சிதைந்து போய்த் திரும்பி  வந்தார்.

“ அக்காவைத் தின்றவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்று கொதித்துத்தான் இருந்தேன், ஞானசம்பந்தனைப்  பார்க்கிற  வரையில்,  அவர்  கேட்ட  கேள்விகள் யோசிக்க வைத்தன. அந்தப் பதிமூன்று பேருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை. கொடுக்கல் வாங்கல் இல்லை. சொத்துப் பிரிவினை இல்லை. அவர்கள் யார் என்று நாங்கள் அறியோம். எங்கள் பெயர்களைக்கூட அவர்கள் அறியார்கள்.  என்றாலும் எங்களுக்குத் தீங்கிழைக்கப்பட்டது. இது தனிப்பகை அல்ல. இனப் பகை. நான் தமிழனாகப் பிறந்தது என் விருப்பத்தினால் அல்ல. அது எங்கள் தவறுமில்லை.  ஆனால்,  அதற்காகத்தான்  நாம்  இங்கு  தண்டிக்கப்படுகிறோம்.

எதற்கென்று  தெரியாமல்  திடுமென்று  விசித்து  விசித்து  அழத்  துவங்கினான்.

விடியற்காலை கதவு மறுபடி வீசித் திறந்தது. உறுமிக் கொண்டு ஜீப் உள்ளே வந்தது.  நிம்மி எட்டிப் பார்த்தாள். போலீஸ் ! அப்பாவை எழுப்பிக் காதில் கிசுகிசுத்தாள். பரபரவென்று  எழுந்தார் அப்பா. பக்கத்து அறையில் படுத்திருந்தவனைத் தட்டி எழுப்பினார். தொட்டவுடன் எழுந்து கொள்கிற தூக்கமாக இருந்தது அது. விஷயத்தைச் சொன்ன நொடியில் விளங்கிக் கொண்டான். வேகமாய் எழுந்தான். உடுத்திருந்த லுங்கியோடு  ஓடிப் போனான்.

அடுக்கடுக்காய்க்  கேள்விகளை  அப்பாவிடம்  வீசினார்கள். அறைகளைச் சோதனை போட்டார்கள்.  சூறையாட வந்தது  போல்  வாரி  இறைத்தார்கள்.  அவனுடைய பை  அவர்கள்  வசம்  சிக்கிற்று.  அப்பாவைக்  கைது  செய்து  கொண்டு  போனார்கள்.

நிம்மி  விசும்பினாள்.  வாய்  விட்டு அழப் பயந்து விம்மினாள். புறப்படும் முன் அப்பா  தனியாக  அழைத்துச்  சொன்னார் :

“ அழாதே நிம்மி. நாம் இனி அழுவதில் அர்த்தம் இல்லை. இயன்றால் போராடு. இல்லையென்றால்  வழி  விடு.  அழுவதில்  அர்த்தம்  இல்லை.

நேற்றைக்கு  எதிர்த்து  எதிர்த்து  வாதாடினீர்கள்.  இன்றைக்குத் தப்புவித்து நீங்கள்  மாட்டிக்  கொண்டீர்களே. அப்பா !

இன்றைய நிலைமையில் ஒரு வீரன் சிறைக்குப் போவதைவிட, அறிஞன் அகப்பட்டுக்  கொள்வதில்  இழப்பு அதிகம் இல்லை. ” – அப்பா சிரித்தார். பின்னர் சொன்னார் :

அவர்களை  நீ ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி. ஆனால், உளவு மட்டும் சொல்லாதே ! .

( ஆனந்த விகடன் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.