ஆழ்வார் பேட்டையில் உள்ள அந்த வீட்டைத் தாண்டிப் போகும் போதெல்ல்லாம் சில நினைவுகளும் கடந்து போகும். அப்போது அது கமலஹாசன் வசித்து வந்த வீடாக இருந்தது. அது நட்சத்திரமாக அவர் அரும்ப ஆரம்பித்திருந்த நாட்கள். ஆனால் எங்களுக்கு இடையில் இலக்கியம்தான் பாலமாக இருந்தது. ஒரு நல்ல புத்தகம் படித்தால், அல்லது பொழுதை என்ன செய்வது தெரியாத நேரங்களில் அதைப் பகிர்ந்து கொள்ள அங்கே போவது வழக்கம்.
அன்று நான் போன போது அவர் வீட்டு மொட்டைமாடியில் ‘மூன்று முடிச்சு’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கீழே தரைத் தளத்தில் சுந்தரமூர்த்தி கமல் முகத்தில் எதையோ பூசிக் கொண்டிருந்தார்.
வழக்கமான புன்னகையுடன் வரவேற்ற கமல், எதிரே பழைய சோபா ஒன்றில் கையில் புத்தகத்துடன் உட்கார்ந்திருந்த ஒரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தினார். அவர் ஸ்ரீ தேவி. பள்ளிக் கூடத்திலிருந்து ஓடி வந்துவிட்ட எட்டாம் கிளாஸ் பெண்ணைப் போலிருந்தார். கிராமத்துப் பெண்ணைப் போலப் பாவாடை தாவணி அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த குதி உயர்ந்த செருப்பு அவரது உயரத்தை ஊகிக்க வைத்தது.முகத்தில் சற்று கனமாகவே பூசியிருந்த பான்கேக்கால் நிறத்தை கணிக்க முடியவில்லை. இன்னும் குழந்தைத்தனம் மிச்சமிருந்த முகத்திற்கு மூக்குத்திப் பொருத்தமாக இல்லை.கண்ணில் ஒரு மிரட்சி இருந்தது
நான் அவரை நேரில் சந்தித்தது அது ஒரு முறைதான்.அப்போது அவர் என்னிடம் பெரிதாக ஏதும் தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால் மூன்று முடிச்சைத் திரையில் பார்த்த போது, அந்தப் பெண்தானா இது என்று அசந்து போனேன்.’கமல், உங்களுக்கு இரண்டு சவால்கள் காத்திருக்கின்றன!’ என எழுதினேன்.ஒன்று ரஜனி. ஒன்று ஸ்ரீதேவி.
ஆனால் கம்லும் ரஜனியும் செய்ய முடியாத ஒன்றை அவர் பாலிவுட்டில் நிகழ்த்திக் காட்டினார். அதாவது தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேல் அங்கு முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்தார். சிவகாசிக்கு அருகில் உள்ள மீனம்பட்டியில் பிறந்த ஒரு தமிழ்ப் பெண், நிகழ்த்திய இந்த சாதனைக்குப் பின் அவரது அழகு மட்டுமல்ல திறமையும் காரணமாக இருந்தது.
இப்போது போலில்லாமல் எழுபதுகளின் மத்தியிலும் எண்பதுகள் வரைக்கும் கவர்ச்சிக்கு மட்டும் பயன்படும் கறிவேப்பிலைகளாக மட்டுமல்லாமல், நடிக்க வேண்டிய கட்டாயமும் கதாநாயகிகளுக்கு இருந்தது. நிமிடத்திற்கு 150 வார்த்தைகள் பேசும் கண்ணாம்பாக்கள் விடை பெற்றுப் போய்விட்டாலும் கூட, சாவித்திரியும் தேவிகாவும் நிறைய அழுது பிழிந்து உலர்த்திப் போயிருந்த வெள்ளித் திரையில் ஈரம் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருந்தது. அந்த நேரத்தில்தான் ஸ்ரீதேவி அறிமுகமாகிறார்.(குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கந்தன் கருணை, நம்நாடு இவற்றை விட்டுவிடலாம்).அப்போது அவருக்கு வயது 13! தமிழில் இவ்வளவு குறைந்த வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் இவர்தான் என நினைக்கிறேன்.
முதல் படமான மூன்று முடிச்சே சவால் நிறைந்த பாத்திரம்தான். முதல் பாதியில் அந்தாதிக் கவிதை (’ஆடி வெள்ளி தேடி உன்னை’) பாடும் கல்லூரி மாணவியாகவும் மறுபாதியில் வில்லனைப் பழிவாங்கும் சிற்றன்னையாகவும் பாலச்சந்தரால் செதுக்கப்பட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து தனக்கென வித்தியாசமான ஒரு பாணியை (கவர்ச்சி+திறமை) வைத்துக் கொண்டு ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடியவர். கமல்-ஸ்ரீதேவி, ரஜனி-ஸ்ரீதேவிப் படங்கள் தொடர்ச்சியாகக் திரையரங்குகளின் இருக்கைகளையும் கல்லாப் பெட்டிகளையும் நிறைத்தன. பொட்டிலிருந்து புடவை வரை அணிவது எப்படி என்பதைப் பார்ப்பதற்காகப் (மடிசாரிலிருந்து குட்டைப் பாவாடை வரை எல்லா உடைகளும் ஸ்ரீதேவிக்குப் பொருந்தின) பெண்களும், சிரிக்கும் கண்களைப் பார்ப்பதற்காக ஆண்களும் தியேட்டர்களுக்குப் படையெடுத்தார்கள்.தாங்கள் வார்த்து வைத்துள்ள பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கக் கூடியவர் என்ற நம்பிக்கையில் நட்சத்திர இயக்குநர்கள் பாரதிராஜா (சிகப்பு ரோஜாக்கள், பதினாறு வயதினிலே) பாலச்சந்தர் (வறுமையின் நிறம் சிகப்பு) பாலுமகேந்திரா (மூன்றாம் பிறை) மகேந்திரன் (ஜானி) அவரை அழைத்தார்கள். ஸ்ரீதேவி விரைவிலேயே தமிழ் சினிமா வரலாற்றின் இன்னொரு அத்தியாயம் ஆனார்.
தமிழ்த் திரை உலகில் இளம் நாயகர்களோடு (ஸ்ரீதேவி அறிமுகமாகும் போது கமலின் வயது 23,, ரஜனியின் வயது 26) ஜோடி போட்டுக் கொண்டிருந்த அதே காலத்தில் தெலுங்கு அவரை என்.டி. ஆர், நாகேஸ்வர ராவ் ஆகிய மூத்த நாயகர்களோடு நடிக்க அழைத்தது. கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பதும் தக்க வைத்துக் கொள்வதும் ஒரு சவால்தான்.
இந்திக்குப் போன பதினாறு வயதினிலே (சோல்வா சாவன்) அவரை பாலிவுட்டிற்கு அழைத்துப் போயிற்று அதற்கு முன் இந்தியில் ஜூலியில் நடித்திருந்தாலும் அந்தப் பட வெற்றியின் எல்லாப் புகழும் லட்சுமிக்கே என்றாகியிருந்தது. சோல்வா சாவனை சூப்பர் ஹிட் என்று சொல்ல முடியாது. ஆனால் ஸ்ரீதேவியை பாலிவுட் தக்க வைத்துக் கொண்டது.
ஆனால் ஸ்ரீதேவி அங்கே தனது தமிழ் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டார். வைஜெய்ந்திமாலாவிலிருந்து, அசின் வரைக்கும் தென்னிந்தியாவிலிருந்து பம்பாய் போன நடிகைகள் இந்தி ரசிகர்களிடம் இமேஜைத் தக்க வைத்துக் கொள்ள தாய் மொழி அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்வதில்லை என்பதுதான் வரலாறு.
ஃபெரோஸ்கானின் ஜான்பாஸ் படத்தில் 10 நிமிடங்கள் மாத்திரமே வரும் ஒரு கெளரவ வேடத்தில் நடிக்க ஸ்ரீதேவி ஒப்புக் கொண்ட போது அது பாலிவுட் முழுக்க ஆச்சரியக் குறிகளைப் பரப்பின. ஏனெனில் அப்போது தோஃபா, நாகினா,மிஸ்டர் இந்தியா, சால்பாஸ் என்று அடுத்தடுத்து அவரது சூப்பர்ஹிட்கள் வெளியாகி அவர் பாலிவுட்டின் அதிக சம்பளம் பெறும் நடிகையாக ஆகியிருந்தார். காசு மட்டுமல்ல புகழும் உச்சத்தில் இருந்தது.திரையில் கூட சாகடிக்கப்பட முடியாத நட்சத்திரமாக இருந்தார் (பாசிகர் படத்தில் கதாநாயகியை ஷாருக்கான் கொலை செய்ய வேண்டும். ஆனால் ஸ்ரீதேவியைக் கொல்வதை ரசிகர் ஏற்க மாட்டார்கள் என்பதால் அந்தப் பாத்திரத்தை வேறு ஒருவருக்கு மாற்றினார்கள்) அபூர்வ ராகங்களில் ரஜனியை சாகடிக்க முடிந்தது. சிவாஜியில் முடிந்ததா?
அந்த நேரத்த்தில் பத்து நிமிட கெளரவ வேடத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொள்ள வேண்டும்? டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நிருபரிடம் ஸ்ரீதேவியே புதிரை உடைத்தார். “நானும் முதலில் நடிக்க வேண்டுமா எனத்தான் நினைத்தேன். ஆனால் ஃபெரோஸ் என்னிடம் தமிழில் பேசி வேண்டுகோள் விடுத்தார். மறுக்க முடியவில்லை. ஆம் உங்களைப் போல எனக்கும் அவர் தமிழ் பேசுவார் என்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால் அவர் சரளமாகத் தமிழ் பேசுகிறார்” எனப் பேட்டியில் சொல்லியிருந்தார்.
அந்தப் படத்தில் 10 நிமிடமே வந்தாலும் அதில் ஸ்ரீதேவி தோன்றும் ஒரு பாடல்காட்சி பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழிலும் பாடல்காட்சிகளுக்காக நினைக்கப்படுபவர் ஸ்ரீதேவி. நினைவோ ஒரு பறவை (சிகப்பு ரோஜாக்கள்) சின்னஞ் சிறு வயதில் (மீண்டும் கோகிலா) சிப்பியிருக்குது (வறுமையின் நிறம் சிகப்பு) ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும் (ஜானி) இப்படி நிறைய உதாரணங்கள்.
ஸ்ரீதேவியின் நடிப்புத் திறமையை அறிந்து அவரை ஸ்பீல் பெர்க் ஜுராசிக் பார்க்கில் நடிக்க அழைத்ததாக ஒரு துணுக்கு பத்திரிகை அலுவலகங்களில் சுற்றிக் கொண்டிருந்தது. அது உண்மைதானா என ஒரு உதவி ஆசிரியரிடம் கேட்டேன். “உண்மைதான் சார். ஆனால் அவர் அழைப்பை ஏற்க மறுத்து விட்டார் சார்” என்றார். “ஏன்?” என்றேன். இந்திப் படங்களில் ரொம்ப பிசியாக இருக்கிறார். கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலை” என்றார். ”நியாயம்தான்” என்றேன்.
உதவி ஆசிரியர் சற்றுத் தயங்கி ஸ்பீல் பெர்க்கின் அழைப்பை நிராகரித்த இன்னொருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார் சார் என்றார். ”அட, அது யாரது?” என்றார். சற்றுத் தயங்கி, ”நான்தான்!” என்றார். தொடர்ந்து “பெரிய வேஷம்தான். ஆனாலும் மறுத்து விட்டேன் என்றார்.”
“அப்படியா! என்ன வேஷம்?”
“டைனசர் வேஷம்தான்”
“அப்ப, நிஜமாகவே ‘பெரிய’ வேஷம்தான். ஏன் மறுத்து விட்டீர்கள்?”
“நம்ம இமேஜுக்கு அது ஒத்து வராது சார்!” என்றாரே பார்க்கலாம்!
த சண்டே இந்தியனுக்காக எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, அவர்களது 30 அக்டோபர் 2011 இதழில் “சாதித்த தமிழ்ப் பெண்” என்ற தலைப்பில் (அந்தத் தலைப்பு அவர்களுடையது) வெளியானது. அவர்களது இணைய தளம்:
http://www.thesundayindian.