ஒரு நாடு என்பது அதன் மலைகளும்? நதிகளும், வயல்களும் வெளிகளுமா? அதன் வரலாறா? அதன் அரசாங்கமா? அல்லது மக்களா?
இதற்கு விடையாக நாம் எதை எண்ணுகிறோமோ அதற்கேற்பத்தான் எந்த ஒரு நாட்டையும் – குறிப்பாக அமெரிக்காவை – ’பார்க்கவும்’, புரிந்து கொள்ளவும், நேசிக்கவும், வெறுக்கவும் முடியும்.
ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் படிப்பவனாகவும், படிப்பிப்பவனாகவும் இருந்த நாட்களில் இதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். இந்தியாவைப் பற்றி என்னிடம் பேசியவர்கள், அதன் ஆனமீகத்தைப் பற்றி அக்கறையோடு கேட்டார்கள். ‘விவரம் தெரிந்தவர்கள்’ காஷ்மீரைப் பற்றிப் பேசினார்கள். ‘மனித உரிமைகள் மறுக்கப்படுகிறதாமே’ என்று நிஜமான கவலையோடு கேட்டார்கள், இந்தியா என்றால் யானைகள், வண்ண வண்ண உடைகள், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிற மக்கள் என்று மட்டுமே அறிந்த பேராசிரியர்களும் உண்டு, ஒரு இரண்டு மணி நேர விமானப் பயணத்தின்போது இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர்தான் இந்தியாவே என்பதுபோல் வியந்து, மகிழ்ந்து, திகைத்து, பிரமித்துப் பேசிய பக்கத்து சீட்காரர் உண்டு, இந்தியாவும் இலங்கையும் இருவேறு நாடுகள் என்று விளங்கிக் கொள்ளாமல் வினாக்கள் தொடுத்த வகுப்புத் தோழர்கள் உண்டு.
யானையைப் பார்த்த குருடர்களாய் அவர்கள் என் தேசத்தைப் பார்த்தார்கள். அனுதாபம் பிறந்தது. ஆனால் அத்தோடு பளிச்சென்று ஒரு கேள்வியும் உதித்தது.
அன்பிற்குரிய என் தமிழனுக்கு அமெரிக்காவைப் பற்றி எவ்வளவு தெரியும்?
அமெரிக்காவைப் பற்றி ஏராளமாகத் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அவை பெரும்பாலும் மிட்டாய்க்கடையைப் பார்த்த பட்டிக்காட்டானின் பார்வையாகவோ, காமாலைக் கண் பார்வையாகவோ இருந்தன.
அவர்கள் வானளாவிய கட்டிடங்களையோ, எலக்ட்ரானிக்ஸ் ஏற்படுத்தும் அற்புத உலகங்களையோ, சூப்பர் மார்க்கெட்டுகளையோ, ஸ்பீட் வேக்களையோ பார்த்துவிட்டு எழுதினார்கள். வேலை கிடைக்காமல் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு அரசாங்கம் வழங்கும் உணவுக் கூப்பனோடு மளிகைக் கடையில் க்யூவில் நிற்கம் கறுப்பு அமெரிக்கர்களை அவர்கள் அதிகம் பார்த்ததில்லை. பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக உணவு விடுதிகளில் எச்சில் தட்டு கழுவும் மத்தியதர வர்க்க மாணவர்களை அவர்கள் அதிகம் சந்தித்திருக்க மாட்டார்கள்.
நான் சந்தித்தேன் ; அவர்களோடு வாழ்ந்தேன் ; ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் வகுப்புத் தோழனாய் இருந்தேன். அமெரிக்காவின் இன்னொரு முகத்தை என்னுடைய மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதுதான் இந்தக் கடிதங்கள்.
அமெரிக்காவின் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், கறுப்பர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், பள்ளிகள், விளையாட்டுகள், அதன் கம்ப்யூட்டர்கள், உள்ளூர் அரசியல், உலக அரசியல், மனிதர்களை மனிதர் கொல்லும் வன்முறை, சாதாரண உயிர்களிடத்தும் அவர்கள் காட்டும் அன்பு எல்லாவற்றையும் என்னுடைய வாசகர்களுடன் இந்தக் கடிதங்கள் மூலம் பகிர்ந்து கொண்டேன்.
தினமணி கதிரில் வாராவாரம் வந்த தொடர் கட்டுரை வானதி பதிக்கத்தார் முயற்சியால் காலாகாலத்திற்கும் நின்று நிலைக்கக்கூடிய நூலாகிறது. திருநாவுக்கரசு அவர்கள் தனி அக்கறை எடுத்துக் கொண்டு இந்த நூலைத் தயாரித்திருக்கிறார். அவருக்கும், அவரது அன்பு மகன்களான சோமு, ராமு இருவருக்கும் எனது அன்பு கலந்த நன்றி.
இந்த நூலுக்கு அமெரிக்காவை நன்கு அறிந்த, அங்கு வாழ்ந்த, அங்கு பயிற்றுவித்த, இந்தியாவை நேசிக்கிற ஒரு அறிஞர் முன்னுரை எழுத வேண்டும் என்று எண்ணினேன். உடனடியாக மனதில் தோன்றிய பெயர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு நயமானதொரு முன்னுரையை அவர் நல்கியிருக்கிறார். அதில் அவர் என்னைப்பற்றி சொல்லி யிருக்கும் வார்த்தைகள் அவரது அன்பை அதிகம் வெளிப்படுத்துகின்றன. அவருடைய வார்த்தைகளுக்கு மட்டுமன்றி அவருடைய அன்பிற்கும் நன்றி.
இந்தக் கட்டுரைகளை தினமணி கதிரிலும் நூலவடிவிலும் சிறப்புற வெளியிட உறுதுணையாகச் செயல்பட்ட சக பத்திரிகையாளர்களுக்கும் தொழிலாளத் தோழர்களுக்கும் நன்றி.
சென்னை – 41 மாலன்
நவம்பர் 16, 1994