ஆரோக்கியமாக இருக்கிறதா நமது ஜனநாயகம் ?

maalan_tamil_writer

ஆரோக்கியமாக இருக்கிறதா நமது ஜனநாயகம் ?

இந்தியா: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. இந்த வாசகத்தை எத்தனையோ அரங்குகளில், எத்தனையோ ஆண்டுகளாக எத்தனையோ பேர் வாயிலாகக் கேட்டு வந்திருக்கிறோம். வாக்காளர்களின் எண்ணிக்கை என்ற கோணத்தில் பார்த்தால் இது உண்மைதான். ஆனால் ஆட்சியில் மக்களுக்கு உள்ள பிரதிநிதித்துவத்தின் அளவு என்ற கோணத்தில் பார்த்தால், 1992க்கு முன்வரை, இந்தியா தனது ஜனநாயகத்தைக் குறித்துப் பெருமை கொள்ள முடியாது. அன்று இந்தியாவின் மக்கள் தொகை என்பது 80 கோடிக்கு அருகில் இருந்தது. அப்போது, நாடாளுமன்றம், மாநிலச் சட்ட மன்றங்களில் இருந்த இடங்கள் இவை எல்லாமுமாகச் சேர்ந்து மக்களால் தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டாது. அதாவது 80 கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வெறும் 5000 பேர். அதாவது 0.000625 சதவீதம்!

 

இந்திம மக்கள், ஆட்சிகளின் மீதும் அரசியலின் மீதும் தொடர்ந்து நம்பிக்கை இழந்து வருவதற்கு, இந்திய ஜனநாயகம் இப்படி கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலையில் இருந்ததும் ஒரு காரணம்.

 

கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலையில் இருந்த நம் நாடாளுமன்ற- சட்டமன்ற ஜனநாயகத்தை 1992ல் நிறைவேற்றப்பட்ட ஓர் அரசியல் சட்டத் திருத்தம் மாற்றி அமைத்தது. 73வது அரசமைப்புச் சட்டம் என்றழைக்கப்பட்ட அந்தச் சட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புக்களை கிராம அளவில் அமைவதை உறுதி செய்தது.அது மட்டுமல்ல, அந்த அமைப்புகளில் முன்றிலொரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவும், தலித்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படவும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் மூலம் பஞ்சாயத்து உறுப்பினர்களும் தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்படவும் அது வகை செய்தது.இவை ஏதோ கருணையின் பேரில அளிக்கப்படும் சலுகையாக அல்லாமல், அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட உரிமையாக அளிக்கப்பட்டன. அதாவது இவற்றை இன்னொரு அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம்தான் மாற்றவோ, குறைக்கவோ, ரத்து செய்யவோ முடியும். அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபங்கு பெரும்பானமை வேண்டும்.

 

இந்தத் திருத்தத்தின் காரணமாக, சுமார் 30லட்சத்திற்கும் அதிகமாக பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.இவற்றில் 10 லட்சம் பேருக்கு மேல் பெண்கள். கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேருக்கு மேல் தலித்துகள்.

 

நெடுங்காலமாக வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு, ஓரம் கட்டப்படிருந்த மனிதர்களை ஆளும் பொறுப்புக்களுக்கு (governance) சுதந்திரத்திற்குப் பிறகு நமக்கு அரை நூற்றாண்டு காலமாகியது. கிராம சுயராஜ்யமே பூரண சுயராஜ்யம் என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி பலமுறை பேசிவந்திருந்த போதிலும், இந்திய அரசமைப்புச் சட்டம் வரையபட்டபோது கிராம அளவிலான பஞ்சாயத்துக்கள் பற்றி, அந்த வரைவில் ஏதும் குறிப்பிடபடவில்லை.

அதைச் சுட்டிக்காட்டி, ராஜேந்திர பிரசாத் டாக்டர்.அம்பேத்கருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் காரணமாக, அரசமைப்புச் சட்டத்தை இயற்றுவதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் ஓர் விவாதம் எழுந்தது.காந்தியவாதியான கே. சந்தானம் ஒரு வரைவுத் திருத்தத்தை முன் மொழிந்தார்.

அந்தத் திருத்தத்தின் அடிப்படையில் பஞ்சாயத்து பற்றிய கருத்துக்கள் அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் இடம் பெற்றது. வழிகாட்டு நெறிமுறைகளில் இடம் பெற்றுள்ளவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்குக் கிடையாது. உதாரணம்:மதுவிலக்கு

இந்த நிலையை 73வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் மாற்றியது.

 

ஆனால் அதை நிறைவேற்றுவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. அடித்தள ஜனநாயகத்தை வலுப்படுத்த ராஜீவ் காந்தியின் எண்ணத்தில் உருவான பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அவரே பிரதமராக இருந்த போது 1984ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முன் மொழிந்தார். ஆனால் 64வது சட்டத்திருத்தம் என்றழைக்கப்பட்ட அது, மாநிலங்களவையில் அந்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டது. அப்போது ஆளும் கட்சிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.

 

ராஜீவ் மறைவுக்குப் பின் நரசிம்மராவ் அரசு மீண்டும் அதை அறிமுகப்படுத்தியது. அயோத்தி பிரசினை காரணமாக ஏற்பட்டிருந்த அமளியில் அதிக விவாதமின்றி சட்டம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநிலங்களுடையது.

ஒவ்வொரு மாநிலமும் அதை நடைமுறைப்படுத்த பஞ்சாயத்து ராஜ் சட்டம் ஒன்றை – உறுதி செய்யும் சட்டமாக, Conformatory legislation- இயற்ற வேண்டும். இந்தியாவில் கடைசியாக அந்தச் சட்டத்தை இயற்றிய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும், அதிகாரப் பரவல் ஏற்பட வேண்டும் என்று எழுதியும் பேசியும் வந்த திராவிட இயக்க அரசுகள், தங்களிடமிருந்த அதிகாரத்தை அடித்தட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்வதில் தயக்கம் காட்டின.

 

ஆனால் இது திராவிடக் கட்சிகளின் போக்கு மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள பல கட்சிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. பீகாரில் லாலு பிரசாத் அரசு இருந்த போது பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாமலேயே ஊராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. (இப்போது நிதிஷ்குமார் அரசு ஏற்பட்ட பிரகு அது இந்தியாவிலேயே முதல்முறையாக, உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை உருவாக்கியிருக்கிறது)

 

காங்கிரஸ் ஆளும் அசாமில், ஊராட்சிகளின் பதவிக்காலமான ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பிறகு, மாநில அரசு, ஓர் அரசாணையின் மூலம் ஊராட்சியின் அதிகாரங்களை அதிகாரிகள் வசம் மாற்றிவிட்டு, தேர்தல்களை நடத்தாமல் காலம் கடத்தியது. இந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி, குவாஹாத்தியில், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தன்னார்வ அமைப்புக்கள், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம். பின் கூட்டாக ஊராட்சித் தேர்தல்களை நடத்தக் கோரி ஒரு மனு தயாரித்தோம். அதை முதல்வரை சந்தித்து அளிப்பதற்காக நேரம் கேட்டோம். முதல்வர் அலுவலகம் அவரை சந்திப்பது கடினம், மனுவை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அவரிடம் சேர்த்துவிடுவதாகத் தெரிவித்தது. எங்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அசாம் டிரிப்யூன் என்ற ஆங்கில நாளிதழ் மறுநாள் எனது உரையையும், எங்கள் மனுவையும்  முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்ட பின், முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. இதற்கிடையில் நாங்கள் நீதிமன்றத்தை அணுகியிருந்தோம். நீதிமன்றத் தலையீட்டின் பேரில் அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் நடத்த உத்தரவாகியிருக்கிறது. அடித்தள மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக இவ்வளவு மெனக்கிட வேண்டியிருக்கிறது.

 

காஷ்மீரில் நிலமை அசாமின் நிலைமைக்கு சற்றும் குறைந்ததல்ல. அங்கும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.நான் மே மாதம் ஸ்ரீநகர் சென்று முதல்வரைத் தவிர எல்லா அரசியல்கட்சித் தலைவர்களையும் சந்தித்தேன். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களையும், ஆட்சியில் பங்கு வகிக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) நிறுவனரும், முன்னாள் இந்திய உள்துறை அமைச்சருமான, முப்தி முகமது சயீத்தையும் சந்தித்து, தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து வாதிட்டேன். பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. மீண்டும் ஜூலை மாதம் 24ம் தேதி ஸ்ரீநகர் சென்று பத்திரிகையாளர்களை சந்தித்தேன். கிரேட்டர் காஷ்மீர் போன்ற செல்வாக்குள்ள ஆங்கில நாளேடுகளும் உருது ஏடுகளும் என் பேட்டியை பெரிய அளவில் பிரசுரித்திருக்கின்றன. ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். வானத்து நட்சத்திரங்களைப் பறித்துத் தரும்படி கேட்கவில்லை, அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கும் அடித்தள மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்காகத்தான் இவ்வளவு மெனக்கிட வேண்டியிருக்கிறது.

 

அன்று மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யக் கனவை நிறைவேற்ற காங்கிரஸ் ஆட்சி தயக்கம் காட்டியது. இன்று ராஜீவ் காந்தியின் கனவை நிறைவேற்ற அவரது கட்சியின் அரசுகளே தயங்குகின்றன.

 

மக்கள் ஜனநாயகம் பற்றிப் பேசும் மார்க்சிஸ்ட்களின் ஆட்சியில், சிங்கூர் நந்திகிராம் ஆகிய இரண்டு இடங்களிலுமே, அங்கு அமைக்கப்படும் டாடா தொழிற்சாலைகள் பற்றி அங்குள்ள பஞ்சாயத்து அமைப்புகளோடு விவாதிக்கப்பட்டு ஒப்புதல் ஏதும் பெறப்படவில்லை.இது அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உறுதி மொழிகளுக்கு முரணானது.

 

அரசமைப்புச் சட்டத்தின் 243G பிரிவு, மூன்று நிலைகளிலும் உள்ள பஞ்சாயத்துக்கள், தங்கள் பகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், சமூக நீதிக்குமானதிட்டங்களை வகுக்க வேண்டும் என அதிகாரமளிக்கிறது. தங்கள் பகுதிக்கான வளர்ச்சிப் பணிகளைத் தீர்மானிப்பதில் பஞ்சாயத்துக்களுக்கான உரிமையை அங்கீரிக்கும் பிரிவு இது. ஒரு கிராமத்தில் வசிக்கும் வாக்காளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய கிராமசபைக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்துத் திட்டமிடும் உரிமை உண்டு. மேற்கு வங்கத்தில் இயற்றப்பட்டுள்ள பஞ்சாயத்துக்கள்

சட்டம் இன்னும் ஒரு படி மேலே போய், வார்டுகள் தோறும் அங்குள்ள வாக்காளர்களைக் கொண்டு கிராம சன்சாத் என்ற சபைகளை உருவாக்கி, வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்களை உருவாக்கக் கணிசமான அதிகாரங்களை அளித்துள்ளது. இத்த்னைக்குப் பிறகும், மாநில அரசு, பஞ்சாயத்துக்களிடமோ, மக்கள் அங்கம் வகிக்கும் கிராமசபைகளிடமோ கலந்து விவாதிக்காமல், தன்னிச்சையாக அங்கு தொழிற்சாலைகளைத் திணிக்க முற்பட்டது.

 

கர்நாடகத்தில் ஆளும் ஜனதா-பாஜக கூட்டணி அரசு, அங்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த, பஞ்சாயத்து அமைப்பில் மக்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டப் பிரிவுகளைத் தூக்கி எறியும் விதமாக அண்மையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் நல்லகாலமாக, ஆளுநர் அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து அதைத் திருப்பி அனுப்பிவிட்டார். 

 

மக்கள் பங்கேற்புடன் கூடிய அடித்தள ஜனநாயகம், அறுபதாண்டு சுதந்திரத்திற்குப் பின்னும் ஒரு கனவாகவே இருப்பதற்கு என்ன காரணம்?

 

ஜனநாயகத்தின் ஒர் அம்சமான தேர்தலில் (ஜனநாயகம் என்பது தேர்தல் மட்டுமல்ல) முக்கியப்பங்கு வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லை என்பது மட்டுமல்ல, அவை ஜனநாயகத்தை தங்கள் வசதிப்படி பயன்படுத்திக் கொள்ளவும் முற்படுகின்றன. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இந்தக் கட்சிகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதே இதற்கு சாட்சி. நேற்று எதிர்கட்சியாக இருந்த போது நாள்தோறும் வெளி நடப்புச் செய்தவர்கள் இன்று ஆளும் கட்சி. நேற்று ஆளும் கட்சியாக இருந்தவர்கள் இன்று எதிர்க்கட்சியாக மாறியதும், அவர்களும் அவ்வப்போது வெளிநடப்புச் செய்கிறார்கள். காரணம் இரண்டு பேருக்கும் ஒன்றுதான்: சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது.நேற்று எதிர்கட்சித் தலைவராக இருந்தவர் சட்டமன்றத்திற்குள் முக்கிய விவாதங்களின் போது கூட வந்ததில்லை.இன்றும் அதே நிலைதான். ஆட்சிகள் மாறியிருக்கின்றன. ஆட்கள் மாறியிருக்கிறார்கள் ஆனால் காட்சிகள் மாறவில்லை.

 

சட்டமன்றத்திற்குள் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய வாய்ப்பும் பொறுப்பும் முழுக்க முழுக்க அங்கு பணியாற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்தது. அந்தக் கடமையை அரசியல் கட்சிகள் எவ்விதம் நிறைவேற்றுகின்றன? சட்டமன்றத்தை நெறிப்படுத்தும் வாய்ப்பு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அவர்கள் கடமை தங்கள் பிரதிநிதிகளை சட்டமன்றத்திற்கு அனுப்புவதோடு முடிந்துவிடுகிறது. அதை உற்சாகத்தோடும், கடமை தவறாமலும் அவர்கள் செய்துவருகிறார்கள்.

 

அண்மையில், தூத்துக்குடி மாவட்டத்தில் டாடாவின் டைட்டானியும் டை ஆக்சைட் ஆலை தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்பைக் கண்டு அதை ஓர் உயர் நிலைக் குழு விசாரிக்கும், விசாரணை செய்தியாளர்கள் முன் நடைபெறும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். மெத்த மகிழ்ச்சி. வரவேற்க வேண்டிய, ஜனநாயக ரீதியில் ஆன நடைமுறை.

 

ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் போது சென்னை நகரம் வரலாறு காணாத வன்முறையை சந்தித்தது. அதை விவாதிப்ப்பதற்கான உள்ளரங்கக் கூட்டத்திற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. இருவாரங்களுக்குப் பின் நடந்த கூட்டம், “வன்முறைச் சம்பவங்கள் குறித்து எல்லா நாளிதழ்களும் படத்துடன், சம்பவ இடத்தைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கின்றன.அதையே முதல் நிலை ஆதாரமாகக் கொண்டு, அரசு ஓர் பகிரங்க விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அந்த விசாரணை மக்கள் பங்கேற்கும் வகையில், ஊடகங்கள் முன் நடைபெற வேண்டும்” என்ற என் கருத்தை ஒரு தீர்மானமாக ஏற்றுக் கொண்டது. மறுநாள் முரசொலியில் முதல்வர் என்னைத் தனிப்பட விமர்சித்து எழுதினார். அந்தத் தீர்மானத்தை அரசு அலட்சியம் செய்தது.

 

உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை தலைவிரித்தாடியது. அதை உயர் நீதிமன்றமே சுட்டிக் காட்டியது.கூட்டுறவுத் தேர்தலில் வன்முறைகள் நடந்தன. அவற்றை கூட்டணிக் கட்சிகள் கண்டித்தன. ஆனால் அப்போதெல்லாம் அதைக் குறித்து விசாரிக்க முன்வராத திமுக அரசு, டாடா ஆலை குறித்து கருத்தாய்வு நடத்த முன் வந்திருக்கிறது. அதாவது ஜனநாயகத்தை அரசியல் கட்சிகள் தங்கள் வசதிக்கேற்ப நடைமுறைப்படுத்துகின்றன.

 

கலைஞர் மட்டும் காங்கிரஸ் கட்சியில் தன் அரசியல் வாழ்க்கையைத் துவக்கியிருந்தால், ஒரு தாலுகா காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவோ, அதிகபட்சம் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவோ முடிந்து போயிருப்பார். அதைத் தாண்டி அவரால் வளர்ந்திருக்க முடியாது” என்று ஒரு மூத்த காங்கிரஸ் தலைவரிடம் ஒருமுறை சொன்னேன். அவர் அதிர்ந்து போய் “என்ன இப்படிச் சொல்கிறீர்கள்?” என்றார். ” உங்கள் கட்சியில் உயர்பதவிகளில் இருப்பவர்கள் யார்? யோசித்துப் பாருங்கள். ஒன்று அவர் மெத்தப் படித்தவராக, அயல்நாடுகளில் சென்று படித்தவராக இருக்க வேண்டும். அல்லது நிறைய நிலபுலன்கள் கொண்டவராக இருக்க வேண்டும். அல்லது பெரிய வீட்டுப் பிள்ளையாக இருக்க வேண்டும். அல்லது பஸ் டிரான்ஸ்போர்ட், நூற்பாலை, ஏற்றுமதித் தொழில், செய்பவர்களாகவோ, ஊரில் நான்கைந்து கடைகள் வைத்திருப்பவராகவோ இருக்க வேண்டும். கலைஞரிடம் இவை ஏதும் கிடையாது. அதுவும் தவிர செயல்திறனும் மக்களை வசீகரிக்கும் பேச்சாற்றல், எழுத்தாற்றல் உள்ள ஒருவரை உங்கள் கட்சியில் வளரவிடமாட்டீர்கள். உங்கள் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிகளை அவ்வப்போது சமன் செய்கிற முயற்சியில் ஆர்வமும் கமிட்மெண்டும் உள்ள ஒருதொண்டரை முடக்கி வைக்கத் தயங்க மாட்டீர்கள். உங்களைப் பொருத்தவரை உள்கட்சி ஜனநாயகம் என்பது கட்சித் தேர்தல்களை நடத்துவது அல்ல. கோஷ்டிகளை சமனப்படுத்துவது.”

 

அண்ணா தலைமையில் திமுக இருந்த காலத்தில், காங்கிரசிற்கும் திமுகவிற்கும் இடையே இருந்த பெரும் வித்தியாசம் இந்த உள்கட்சி ஜனநாயகம்தான். திமுகவின் கிளைக்கழகத்திலிருந்து மாவட்டக் கழகம் வரை உள்கட்சித் தேர்தல்கள், கட்சி மேலிடத்தின் தலையீடு இல்லாமல் நடந்த காலம் ஒன்றுண்டு. திமுக இளைஞர்களை ஈர்த்ததற்கு அது ஒரு முக்கிய காரணம். அண்ணாவின் மறைவிற்குப் பின் முதல்வரைத் தேர்ந்தெடுக்க நடைபெற இருந்த தேர்தலில் கூட போட்டியிருந்தது.

 

ஆனால் இன்று திமுக உள்கட்சி ஜனநாயகத்தைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.இப்போது அங்கு ஜனநாயகம் பின்பற்றப்படவில்லை, நிர்வகிக்கப்படுகிறது. யார் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற முன்தீர்மானித்த முடிவின்படி வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.

 

ஒரு குறிப்பிட்ட ஜாதியில் அல்லது குலத்தில் பிறப்பதனாலேயே ஒருவருக்கு சில உரிமைகளும் சலுகைகளும் உண்டு.தகுதிகள் உள்ள  ஒருவர் வேறு குலத்தில் பிறந்திருந்தால், அவருக்குத் தகுதி இருந்தாலும் அந்த உரிமைகளும் சலுகைகளும் கிடையாது என்ற கருத்தாக்கம்தான் வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதால் அந்தக் கருத்து அநீதியானது என்ற நோக்கில் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்து எழுட்சியுடன் போராடி வளர்ந்தது திமுக. ஆனால் இன்று, ஒருவர் கலைஞர் குடும்பத்தில் பிறந்தவர் என்ற தகுதி ஒன்றே ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராகவோ, மத்திய அமைச்சாரகவோ போதுமானது என்று அந்தக் கட்சியின் மேலிடம் கருதுகிறது. அதாவது, பகுத்தறிவு இயக்கமாக அரும்பிய திமுக இன்று வர்ணாசிரம தர்மத்தை வேறு ஒரு வடிவில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

 

உட்கட்சி ஜனநாயக விஷயத்தில், திமுகவை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை. அநேகமாக இன்று எல்லா அரசியல்கட்சிகளும் இப்படித்தான் இருக்கின்றன. இன்று  காங்கிரசிலோ, திமுகவிலோ, அதிமுகவிலோ, பா.ம.க.விலோ ஒருவர் உயர் பதவிக்கு வர வேண்டுமானால்,கட்சியின் கொள்கைகளுக்கு மட்டுமல்ல, கட்சித் தலைமைக்கும், கட்சித் தலைமயின் குடும்பத்திற்கும் விசுவாசமானவர்களாக இருக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியோ, ஆர்.எஸ்.எஸ். பிடியில் இருக்கிறது. அதன் தலைமையை அதுதான் நேரடியாகவோ மறைமுகமாகவோ தீர்மானிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று கலந்து பேசி, கருத்தொருமித்த முடிவுன் அடிப்படையில் கட்சிப்பதவிகளைத் தீர்மானிக்கிறது. அப்படித் தீர்மானிக்கும் போது சீனியாரிட்டிக்கு அதிக மதிப்பு.

 

இப்படிப்பட்ட கட்சிகளிடமும், தலைவர்களிடமும்தான் நாம் ஜனநாயகத்தை விட்டு வைத்திருக்கிறோம்!

 

ஜனநாயகம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையே, மக்கள் ஆள்கையில் பங்கேற்பது. (participation in governance). பாரதியின் வார்த்தைகளில் கூறினால். குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு. ஆனால் அதை நாம் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அரசியல் கட்சிகளிடம் விட்டுவிட்டோம். அதை மீட்டெடுக்காத வரையில் இந்திய ஜனநாயகம் எழுந்து நடக்க முடியாத சப்பாணியாகவே நகர்ந்து செல்லும்.

புதிய பார்வை  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.