ஆம், நம்மால் முடியும்
Yes We can
இருண்ட வானில் சரசரவெனெ ஏறி பச்சை நட்சத்திரங்களை உதிர்த்து ஓய்கிறது ஒரு வாணம். காசு கரியாகிறது என அங்கலாய்க்கிறார் அதைப் பார்த்துக் கொண்டிருந்த என் நண்பரின் மனைவி. காசு ஒளியாகிறது எந்த் திருத்துகிறார் என் நண்பர். நான் புன்னகைக்கிறேன்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பயணம் ஒளியா, கரியா?
ஒளி உமிழும் ஒரு வாணத்தின் வசீகரங்களை அது கொண்டிருந்தது உண்மை. கனலேறிய் கரியாக உலை ஏற்ற அது உதவுமா என்பதற்கு இன்று விடை இல்லை. எதிர்காலம் பதில் சொல்ல வேண்டிய எண்ணற்ற கேள்விகளில் இதுவும் ஒன்று.
எந்த விடுதி எதிரிகளால் தாக்குண்டு எரிந்ததோ அந்த தாஜ் ஹோட்டலில இருந்து தனது பயணத்தைத் த்வக்கினார் ஒபாமா.அது ஒரு அடையாளம். அர்த்தமுள்ள அடையாளங்களும் வாழ்க்கைக்கு வேண்டும்தான்..இந்திய மக்களின் வலிமை, துயரங்களை உதறி மீண்டெழும் மன் உறுதி இவற்றிற்கு சாட்சியாக நிற்கிறது இந்தக் கட்டிடம் எனச் சொன்னபோது அதில் உணமை ஒளிர்ந்தது..மலை போன்ற துன்பம் மடி மீது வந்து விழுப் போது மனம் கலங்கிப் போனாலும், பின் தலை தூக்கி எழுந்த பின்னர் அந்த நாட்களை நினைத்துப் பார்த்தால் உள்ளே ஒரு விம்மல் ஒலிக்குமே அது அந்த வார்த்தைகளில் ஒலித்தது.
ஆனால் ஒரு ஏமாற்றமும் ஏற்பட்டதென்னவோ உணமை. அலுவலகத்தில் இருந்து திரும்பிக் கொண்டிர்ருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது அடியாட்களை ஏவித் துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தானைப் பற்றி ஒரு வார்த்தை கூட அந்தக் கூட்டத்தில் உதிர்க்கவில்லை அவர்.
பயங்கரவாததின் ஊற்றுக் கண்ணாக இல்லாவிட்டாலும் உறைவிடமாக இருக்கிறது பாகிஸ்தான். இது உலகம் ஒப்புக் கொண்ட உண்மை. ஆனால் அதை ஊரறியச் சொல்வதில் அமெரிக்க அதிபருக்கு ஏனோ தயக்கம். ஒருவேளை இதைப் பற்றி நாடாளுமன்ற உரையின் போது பேசிக் கொள்ளலாம் என அவர் ஒத்தி வைத்திருந்திருக்கலாம். ஆனால் அடுத்த நாளே அவர் பேச வேண்டிய தருணம் வந்தது.
அந்த நிலையில் அவரைக் கொண்டு வந்து நிறுத்தியது இளைய தலைமுறை..அடுத்த நாள். கல்லூரி மாணவர்களிடம் கலந்துரைய்ட வந்து நின்றார் ஒபாமா. எதிர்காலம் உங்கள் கையில் என்ற வழக்கமான வசனத்தை உதிர்த்துவிட்டு, பருவ நிலை மாற்றம், தொழில்நுட்ப முன்னேற்றம், இரு நாடுகளுக்கிடையே ஆன நெருக்கம் இவற்றை பேசிப் பிரிந்துவிடலாம் என அவர் கருதியிருக்கலாம். இளைய தலைமுறைக்கு அரசியலில் அக்கறை இருக்காது எனக்கூட எண்ணியிருந்திருக்கலாம், ஆனால் உலகின் மிகச் ச்கதி வாய்ந்த மனிதர் என பிரமித்து மயங்காமல், திக்கித் திணறாமல், மென்று முழுங்காமல் ’நச்’சென்று கேல்வியை வீசினார் ஒரு இளம் பெண்.” பாகிஸ்தானை ஏன் அமெரிக்கா பயங்கரவாத நாடாக அறிவிக்கவில்லை? அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் எந்த அளவு முக்கியம்?” என்ற கேள்வியை எழுப்பினார்.
“நல்ல கேள்வி” என்றார் ஒபாமா. ஒருவர் நல்ல கேள்வி என்று பதில் சொல்ல ஆரம்பித்தால் அவர் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்றும், பதில் சொல்ல அவகாசம் தேடி மழுப்புகிறார் என்பது என் அனுபவம். ”நல்ல கேள்வி, இதை நான் எதிர்பார்த்தேன்” என்று ஆரம்பித்த ஒபாமா அந்தப் பெண்ணின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லவில்லை. ”ப்யங்கரவாதத்திற்கெதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் “நாம்” எதிர்பார்த்த வேகத்தில் முன்னேறவில்லை என்று ஒப்புக் கொண்ட ஒபாமா, இந்தப் ’புற்றுநோயை’ ஒழிக்க பாகிஸ்தான் அரசுடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும். என்றும் சொன்னார்.ஒபாமா.
’புற்றுநோயை ஒழிக்க’ ஒபாமா செயல்பட வேண்டியது பாகிஸ்தான் அரசுடன் அல்ல, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக
இந்திய பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாத அமைப்புக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளித்ததாக சில வாரங்களுக்கு முன் சொன்னவர் யாரோ ஊர் பேர் தெரியாதவர் அல்ல- முன்னாள் அதிபர் முஷராப். பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட நிதி உதவி இந்தியாவிற்கு எதிராகத் திருப்பிவிடப்பட்டதை அமெரிக்க நாடாளுமன்றம் ஆவணப்படுத்தியிருக்கிறது..பாகிஸ்தான் அரசின் அமைப்பான ஐஎஸ்ஐ, மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு பயிற்சி அளித்தது என்று அமெரிக்க அரசின் பிடியில் இருக்கும் டேவிட் ஹெட்லி சொன்னதை அமெரிக்க முன்னணி செய்தி நிறுவனமான அசோசியட் பிரஸ் வெளியிட்டு (அக்டோபர் 19 2010) இன்னும் ஒரு மாதம் கூட ஆக்வில்லை.. ஒபாமாவிற்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் 50 வயது நிறைவடைகிறது. ஆனால் அதற்குள் செலக்டிவ் அம்னீஷியாவா?
ஆனால் அவர் எந்த விஷ்யத்திற்காக இந்தியாவிற்காக வந்தாரோ அவர் அதை மறக்கவில்லை. இரு நாடுகளுக்குமிடையே உள்ள நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அவர் வருவதாக இந்திய வெளியுறவுத் துறை செயலர் திருமதி.நிருபமா ராவ் சொல்லியிருந்தார். ஆனால் ”ஆசியாவிலும், உலகில் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளிலும் நம் பொருட்களை விற்க ஏதுவாக அவற்றைத் திறக்கச் செய்வது, அதன் மூலம் அமெரிக்காவில் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது ஆகியவை இந்தியப் பயணத்தின் முதல் நோக்கம்” என்று நவம்பர் 4ம் தேதி வாஷிங்டனில் விமானம் ஏறும் முன் அமெரிக்கப் பத்திரிகையாளர்கலிடம் தெரிவித்திருந்தார் ஒபாமா.
அதற்கேற்ப வந்த முதல்நாளே 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபார ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அமெரிக்கர்களுக்கு 50 ஆயிரம் வேலைகள் உருவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியாகியுள்ளன.
ஆனால் இந்தியர்களுக்கு முக்கியமான அவுட்சோர்சிங் மீதான தடைகளை நீக்குவது பற்றி எதுவும் சொல்லவில்லை. மாறாக அயல்பணிகளை ஒப்படைப்பது (back office) அமெரிக்கர்களது வேலைகளைப் பறித்துவிடும்..வியாபாரத்தில் ஒரு வழிப் பாதையை நாங்கள் விரும்பவில்லை” என்று சொல்லியிருக்கிறார். அயல்பணிகள் மூலம் ஒப்படைப்பதன் மூலம் இந்தியர்களின் வேலைகளைப் பறித்துக் கொள்ளவில்லை. ஐரோப்பாவில் பல நாடுகள் இந்த முறையைப் பின்பற்றுகின்றன.” என்று ஒபாமாவின் எதிர்கட்சியான குடியர்சுக் கட்சியின் த்லைவர்களில் ஒருவரான மெக்கெயின் அதற்கு முன்தினம்தான் பேசியிருந்தார்.
ஒபாமாவின் வருகையில் ஏற்படும் பொருளாதாரப் பலன்கள் எந்த அளவு நமக்கு சாதகமானது என்பது விவாதத்திற்கு உரியது. ஆனால் அது ஒரு ஆக்கபூர்வமான விளைவைத் தந்திருக்கிறது. ”இந்தியா வளர்ச்சி அடைந்து வரும் நாடல்ல, அது வளர்ந்த நாடு”, ”21ம் நூற்றாண்டை இந்தியா அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் வடிவமைக்கும்” என்ற இனிப்பான வார்த்தைகள இந்தியாவைக் குறித்த் ஒரு மன எழுட்சியை இளைய தலைமுறையிடம் ஏற்படுத்தியிருக்கிறது. நாளை நீங்கள் ஒரு விஞ்ஞானியாக உருவாகலாம். ஆனால் இந்தியாவின் சிறந்த விஞ்ஞானியாக வேண்டும் என நினைக்காமல், உலகின் சிறந்த விஞ்ஞானியாக வேண்டும் என எண்ணுங்கள்” என்று இளைஞர்களிடம் அவர் சொன்ன வார்த்தைகள், நிச்சியம் அவர்களுக்கு எழுட்சிதரும். அனாவசியமான அலட்டல்கள் இல்லாமல் மிகச் சாதாரணமாக ஒரு தொலைக்காட்சி அறிவிப்பாளர் போல கணுக்கை வரை சுருட்டிவிடப்பட்ட முழுக்கைச் சட்டையுடன் இளைஞர்களுடன் உரையாடியது எல்லாம் அவர்களை ஈர்த்திருக்கிறது. அது இந்தியத் தலைவர்களிடம் காணாதது.
அமெரிக்கா நட்புப் பாராட்டினாலும் பாகிஸ்தான் முதுகில் குத்தினாலும் எதிர்கால உலகில் இந்தியா நிச்சியமாக ஓர் முக்கியமான சக்தியாக விளங்கும். அது அமெரிக்காவிற்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அது நிஜமாவது. நம் நம்பிக்கையில் உழைப்பில் இருக்கிறது.. தீதும் நன்றும் பிறர் தர வாரா.. ..