ஆதலினால் இனி
அன்புள்ள உமா,
உன் அமெரிக்க சிநேகிதி மூலம் அனுப்பிய புத்தகங்கள் கிடைத்தன. நன்றி. ஆனால் புத்தகங்களைப் படித்து வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள முடியும் என்ற மயக்கங்களில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன். “ மாம் ! எப்போதிருந்து இது ? ” என்ற உன் ஆச்சரியம் கலந்த கேள்வி என் காதில் விழுகிறது.
சமீபத்தில்தான். இரு, இரு, விவரமாகவே சொல்கிறேன்.
கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்கள் கழித்து, போன வாரம் கல்லூரிக்குப் போயிருந்தேன். நாம் படித்த கல்லூரியும் ஆஸ்பத்திரியும் இப்போதும் அப்படியே கல்லுக் கல்லாய் நிற்கின்றன. கொஞ்சம்கூட மாற்றமில்லை என்பதே சரி. எப்போதும் உள்ள தண்ணீர்ப் பிரச்சினை இப்போதும் இருக்கிறது. ஏப்ரல் மாத ஆபரேஷன்கள் தள்ளிப் போகின்றன. வார்டுகளில் வைக்கப்படும் சோப்புக் கட்டிகள் எப்படியோ காணாமல் போகின்றன. நடைபாதைகளில் நோயாளிகள் தூங்குகிறார்கள். ஸல்பாடைசினையும், ஏடிஸியும் தவிர வேறு மருந்துகள் ஸ்டோர்ஸில் இல்லை.
இந்த மாதிரியான ஒரு வசதிக் குறைவான கல்லூரியில் படித்துவிட்டு நீ அமெரிக்கா போய்ப் பெரிய டாக்டராகப் புகழ்வாங்கி விட்டாய். ‘ பெரிய சாமர்ஸெட் மாம் ! ” என்று நீங்கள் எல்லாம் கேலி செய்தபோதும், நான் ஸ்டெத்தை உதறிவிட்டுப் பேனாவை எடுத்துக் கொண்டு விட்டேன். வெங்கட்ராமன் இந்தக் காலேஜுக்கே அசிஸ்டென்ட் புரொபசராக வந்து விட்டான். இந்தியர்கள் வசதிகளினால் அல்ல, மூளையினாலேயே ஜீவித்திருக்கிறார்கள் என்று அமெரிக்கர்கள் சொல்வது எத்தனை சத்தியமான வார்த்தை !
வெங்கட்ராமனைப் பார்க்க, எலும்பு முறிவு ஓபியைக் கடந்து குழந்தைகள் நல வார்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன். வெடுக்கென்று யாரோ என் சட்டைத் துணியைச் சுண்டி இழுக்கிறார்கள். திடுக்கிட்டுக் குனிந்து பார்க்கிறேன். ஒரு பத்து வயதுப் பையன். இன்னும் குழந்தைதான் என்று முகத்தில் எழுதியிருக்கிறது. ரொட்டிபோல் வீங்கிய வலக்கை, வாழை மட்டையைத் தாங்கலாகக் கொடுத்துக் கட்டிய தொட்டிலில் படுத்திருந்தது.
“ சார் இரண்டு ரூபா கொடு சார் ! ”
அவன் குரல் இறைஞ்சுகிறது. முகத்தில் இப்போது குழந்தைத் தனத்தை காணோம்! ஐம்பது வருடம் வாழ்ந்து அடிப்பட்டுக் களைத்தவன் மாதிரி இருக்கிறது.
“ சார் ! இரண்டு ரூபா கொடு சார் ! கட்டுப் போடணும் சார் ! ”
ஆஸ்பத்திரிக்குள் திருட்டுப் போவது யுகம் யுகமாக நடந்து கொண்டிருக்கிறது. மதிலோரமாகச் சாராயம் விற்கப்படுவதும் மர நிழலில் கஞ்சா விநியோகம் நடப்பதும் நமக்கெல்லாம் தெரியும். விபசாரம் நடக்கிறது என்ற வதந்திகள் உண்டு. இப்போது பகிரங்கமாகப் பிச்சையா ? நான் கற்றுக் கொண்ட தொழில், படித்த நிறுவனம் எல்லாவற்றையும் இந்தக் பகிரங்க பிச்சைக்காரன் சிறுமைப்படுத்துவதுபோல் தோன்றுகிறது. ஏனோ தெரியவில்லை. என்னுள் புசுபுசுவென்று கோபம் பொங்குகிறது.
“ ஆஸ்பத்திரிக்குள் பிச்சையா எடுக்கறே ! ராஸ்கல் ! தொலைச்சுப்புடுவேன் ! போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்றியா ? ”
“ இல்லை சார் ! இல்லை சார் ! நான் பிச்சைக்காரன் இல்லை சார் ! ” பையன் கண்ணில் கரகரவென்று நீர் பெருகுகிறது. இடக்கையைச் சட்டைப்பையில் நுழைத்து ஒரு சீட்டை எடுக்கிறான். எட்டாய் மடங்கிக் கசங்கிய சீட்டு.
பிரித்துப் பார்க்கிறேன். முன் கையில் காம்ப்பௌண்ட் ஃப்ராக்சர். விசும்பிக் கொண்டே கதைச் சுருக்கம் சொல்கிறான் பையன்.
இவன் பிச்சைக்காரன் இல்லை. தொழிலாளி. காய்கறிக் கடையில் எடுபிடி. விடிகாலையில் சைக்கிளில் போய் மொத்த மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கடைக்குக் கொண்டு வரவேண்டும். நேற்று மார்க்கெட்டில் இருந்து திரும்புகையில், பின்னால் பெருங்குரலெடுத்து ஹார்ன் பிளிற வேகத்தில் வந்த லாரிக்கு மிரண்டு ஓரம் ஒதுங்க, அரை நொடியில் விழுந்தான் பையன். வெள்ளைப் பூசணி உடைந்து இடற, தக்காளி நசுங்கி இறைய, காய்கறிகள் நஷ்டம். சைக்கிளுக்கு காயம். முன்னங்கை சேதம்.
“ இதற்கு ஏனப்பா பணம் கேட்கிறே, இலவசமாகக் கட்டுப் போடுவாங்களே ? ”
“ இரண்டு ரூபா கேட்கிறாங்க, சார் ! ”
எனக்குப் புரிகிறது. இது அரசாங்கத் தர்மாஸ்பத்திரி. ஆனாலும் இந்த இரண்டு ரூபாய் இங்கே மாமூல், தொன்று தொட்டுப் புழங்கும் லஞ்சம்.
நொடி நேரத்தில் இதை எதிர்த்துப் போராடுவது என்று உறுதி கொண்டேன். பையனை அழைத்துக்கொண்டு ஓபி ரூமிற்குள் நுழைந்தேன். இரண்டு இளைஞர்கள் ஸ்டெத்தாஸ்கோப்பை அங்கவஸ்திரம் போல் தோளில் கிடத்தியிருந்தார்கள். எக்ஸ்ரே படத்தைப் பொருத்திப் பார்க்கும் விளக்கு வெறுமனே ஒளிர்ந்து கொண்டிருந்தது. “ எஸ் ? ” என்று என்னைப் பார்த்துத் திரும்பினர்.
நான் எழுத்தாளன் என்று அறியப்பட்ட பின்னர் எங்கேயும் என்னை டாக்டர் என்று சொல்லிக் கொண்டதில்லை. இங்கே சொன்னேன்.
“ இந்தச் சிறுவனுக்கு ரேடியஸ் எலும்பில் காம்பௌண்ட் ஃபிராக்சர். ”
“ பார்த்தோம். கட்டுப் போடச் சொல்லிச் சீட்டுக் கொடுத்திருக்கிறோமே ? ”
“ உங்களுடைய நர்ஸிங் ஆர்டர்லிகள் கட்டுப் போட மறுக்கிறார்கள். ”
உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே டாக்டர், நர்சிங் ஆர்டர்லியைக் கூப்பிட்டார். அவர்கள் வருவதாகத் தெரியவில்லை. இவரே எழுந்து போனார். என் முன்னால் அழைத்து வந்தார். “ கட்டுப் போட மாட்டேன்னீங்களா ? ”
“ மாட்டோம்னு சொல்லலை சார். பிளாஸ்டர் இல்லை. பிஓபி ஆர்டர் பண்ணனும். வெளியே இருந்து வாங்கிட்டு வந்தா போட்டுடலாம். ”
பொய். விசாரணை என்று வந்தவுடன் சாமர்த்தியமாகப் பேசுகிறார்கள். இரண்டு ரூபாய் தர மறுத்ததற்காக இருபது ரூபாய் செலவிற்கு வழி செய்கிறார்கள்.
“ பிளாஸ்டர் வாங்கிட்டு வந்திடறீங்களா ? ”
“ டாக்டர், நானும் இந்தக் கல்லூரியில் படித்தவன்தான். தொழில் செய்யாவிட்டாலும் டாக்டர்தான். பிளாஸ்டர் இல்லாமலா எலும்பு முறிவு வார்டு நடக்கிறது ? ”
‘ டாக்டர், நாங்க சீட்டுத்தான் கொடுக்கலாம். கட்டும் நாங்களே போட முடியுமா ? தட்ஸ் நாட் அவர் ஜாப். இந்த ஒரு கேஸிற்காக மொத்த ஆர்டர்லிகளையும் பகைச்சுக்க முடியாது. நாளைக்கு ஸ்டிரைக்னு வந்து ஆஸ்பத்திரி மொத்தமும் நாறிரும். நீங்க பதில் சொல்வீங்களா ? வேணும்னா நீங்க சீஃப்பை பாருங்க. ”
சீஃப் என்ன, டீனையே பார்ப்பது என்று தீர்மானித்தேன்.
டீனைப் பார்ப்பது எளிதாய் இல்லை. ஒரு மணி நேரம் காத்திருந்த பின், உள்ளே அனுப்பிய சீட்டு, என்ன விஷயம் என்று கேட்டுத் திரும்பி வந்தது. வெறுமனே அவசரம் என்று மாத்திரம் எழுதி அனுப்பினேன். அவருடைய உதவியாளர் ஆர்.எம்.ஓ. வைப் பாருங்கள் என்று ஆலோசனை சொன்னார். அரை நிமிடம்தான் யோசித்தேன். சட்டென்று ஒரு முடிவு எடுத்தேன். “ சார், சார், சார் என்று உதவியாளர் பதற அவரைத் தள்ளிக் கொண்டு டீனின் அறைக்குள் நுழைந்தேன்.
டீன் முகத்தில் கோபம் தெறித்தது. மாலைச் சூரியன் போன்ற பொன்னிற முகத்தில் சிவப்பு ஏறியது. “ யெஸ் ! ” என்றார் பாதி அதட்டலாக.
“ இந்தப் பையனைத் தற்செயலாக எலும்பு முறிவு வார்டில் பார்த்தேன். ரேடியஸ் எலும்பில் காம்பௌண்ட் ப்ராக்சர் ” என்று ஆரம்பித்துக் கதைச் சுருக்கம் சொன்னேன்.
“ பையன் உங்களுக்கு உறவா ? ”
“ இல்லை. ”
“ தெரிஞ்சவனா ? ”
“ இல்லை. ”
“ பின்னே என்ன அக்கறை ? ” என்கிற மாதிரி என் முகத்தை பார்த்தார்.
“ ஸார் ! நான் இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவன். இன்று நான் டாக்டராகத் தொழில் செய்யாவிட்டாலும் என்னை உருவாக்கிய கல்லூரி இது என்ற பெருமை எனக்குள் எப்போதும் உண்டு. இதன் குறைபாடுகள் குறித்து நான் அலுத்துக் கொள்வதுண்டு. ஆனால் வெறுப்பதில்லை. படிப்பறிவு, நவீன நாகரிகம் இவையேதும் இல்லாவிட்டாலும் நம் அம்மாவை நாம் நேசிப்பதில்லையா ? எத்தனையோ ஊனங்கள் இருந்தும் நாம் நம் தேசத்தை விரும்புவதில்லையா ? இதுபோல் இது என் கல்லூரி என்பதில் எனக்கு ஒரு விதமான பெர்சனல் பிரைடு (pride) உண்டு. அதுதான் என்னை உங்கள் முன் வரை இழுத்து வந்திருக்கிறது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ”
டீன் ஏதும் பேசவில்லை. உருட்டிக் கொண்டிருந்த பேப்பர் வெயிட்டை நிறுத்திவிட்டுக் கண்ணுக்குள் கூர்ந்து பார்த்தார். பக்கத்து டிரேயில் இருந்து ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்தார். பரபரவென்று நான்கைந்து வரிகள் எழுதினார். “ என் நிறுவனத்தைப் பற்றி நானும் பெருமைப்படவே விரும்புகிறேன், என்று சொல்லி நீட்டினார். மணியடித்து பியூனை அழைத்து எங்களை வார்டுக்குக் கூட்டிப் போகச் சொன்னார்.
வார்டில் இந்தமுறை ராஜோபசாரம் நடந்தது. தீர்ந்து போய்விட்டதாக சொல்லப்பட்ட பிளாஸ்டர் மாவு எங்கிருந்தோ எழுந்துவந்தது. பையன் கட்டுடன் வெளியேறும்போது மணி பன்னிரெண்டைத் தொட்டிருந்தது.
இடி இடியென்று சிரித்தான் வெங்கட். “ முட்டாள் ! முட்டாள் ! என்று மேஜை மீது இரண்டு தரம் ஓங்கித் தட்டினான்.
“ இத்தனை பெரிய தேசத்தில் இது இத்துனூண்டு நகரம். அதிலுள்ள பற்பல நிறுவனங்களில் ஆஸ்பத்திரி ஒன்று. அதில் ஒரு வார்டு. அதிலும் ஒரே ஒரு கேஸ். அதற்காக ஒரு அரை நாள் போராடியதன் மூலம், நீ தேசத்தை விட்டே லஞ்சத்தைத் துரத்தி விட முடியும் என்றே நம்புகிறாயா ? ”
“ இந்த கேலக்ஸியில் உள்ள எத்தனையோ கிரகங்களில் பூமி ஒன்று. பூமியில் கோடிக்கணக்கான மக்கள். அவற்றில் ஒருவன் நீ. எத்தனை சிறியவன் நீ என்று ஒரு தத்துவம் சொல்வார்கள் கேட்டிருக்கிறாயா? அந்தத் தத்துவத்தில் உண்மை உண்டு. ஆனால், நான் ஒரு மனிதன் என்ற அகங்காரம்தான் – pride தான் – பென்சிலினைக் கண்டுபிடித்தது. லேசரைக் கண்டுபிடித்தது. ”
“ ஸோ ? ”
“ ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், நான், நமது தெரு, நமது தேசம் என்ற pride ஏற்பட்டுவிட்டால் அதுவே வெற்றிதான். ”
“ புத்தகம் படித்துப் படித்து நீ ஏட்டுத் தத்துவவாதியாகப் போயி விட்டாய், மாம். ”
புத்தகத்தில் படித்த தத்துவங்கள் என்னைப் போராடத் தூண்டவில்லை. சட்டையைச் சுண்டி இழுத்த வாழ்க்கைதான் என்னை ஏதாவது செய் என்று உந்தியது. ”
“ எனக்கு நம்பிக்கையில்லை. என்றாலும் நீ வெற்றி பெற வாழ்த்துக்கள். ”
“ நான் தோற்றுக் கூடப் போகலாம். ஆனாலும் அப்போதும் நான் முயற்சித்தேன் என்ற சந்தோஷம் எனக்கு இருக்கும். ”
எங்கள் சர்ச்சை முடியவில்லை. உனக்குத் தெரியும் அது என்றைக்குமே முடிந்ததில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் தெளிவாய் இருக்கிறேன். இனி புத்தகம் படிப்பது இல்லையென.
வைத்திக்கும் குழந்தை ராஜிக்கும் என் அன்பு.
ப்ரியங்களுடன்
மாம்…
( குமுதம் )