ஆண்டும் ஆள்வோரும்
தமிழர்களுக்கு சர்ச்சை என்றால் சக்கரைப் பொங்கல். தையோ, சித்திரையோ எல்லாத் தொலைக்காட்சியிலும் ஏதோ ஒரு தலைப்பில் ஏதோ ஒரு வடிவில் முட்டி மோதும் பட்டி மன்றங்களே இதற்கு சான்று. . இந்தத் தமிழ்ப் புத்தாண்டிலும் பட்டி மன்றங்களுக்குக் குறைவில்லை. ஆனால் அவை எல்லாவற்றிலும் முதலிடம் பிடித்தது தமிழ்ப் புத்தாண்டு சித்திரையா? தையா என்ற பட்டி மன்றம்தான்
2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் தேதி, கருணாநிதி முதல்வராக இருந்த போது, தமிழகச் சட்டமன்றம் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்றும், திருவள்ளுவர் ஆண்டு என்பது தை முதல்நாளன்றுதான் துவங்குகிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. இப்போது முதல்வர் ஜெயலலிதா அதை முன்பிருந்தது போல சித்திரைதான் தமிழ்ப்புத்தாண்டு என மாற்றி அறிவித்திருக்கிறார்.
கருணாநிதி, ஜெயலலிதா இருவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் இந்த அறிவிப்புகளின் பின் உள்ளன என்பது ஊரறிந்த ரகசியம். கருணாநிதி ஆட்சியில் இருந்த போது எடுத்த முடிகள் எல்லாவற்றையும் ரத்து செய்ய வேண்டும், மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் ஜெயலலிதா முனைப்புக் காட்டி வருகிறார் என்பதைப் பல விஷயங்களில் தமிழகம் கண்டுவிட்டது. கருணாநிதி தமிழ்ப் புத்தாண்டை தைக்கு மாற்றியதும் அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில்தான்.
தன்னுடைய வாதங்களுக்கு ஆதாரமாக இலக்கியங்களைச் சுட்டுகிறார் ஜெயலலிதா. அவர் சுட்டிக் காட்டும் சீவக சிந்தாமணிக்கு வெகு காலம் முந்தைய தொல்காப்பியர் காலத்தில் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்பட்டது (நச்சினார்கினியர் உரை). கோடைதான் ஆண்டின் முதல் பருவம் என்ற ஜெயலலிதாவின் வாதத்தை ஏற்றுக் கொள்வதில் பிரச்சினைகள் இல்லை. ஆனால் கோடை எப்போது துவங்குகிறது என்பதுதான் கேள்வி. 23.44 பாகை சாய்ந்து சுழலும் பூமிக் கோளத்தின் வடபகுதியை நோக்கிச் சூரியன் பயணிக்கும் காலத்தில் உலகெங்கும் புவியின் வட அரைக் கோளம் (Northern Hemisphere) முழுவதும் வெயிலில் திளைக்கிறது. அதே நேரம் புவியின் தென் அரைக் கோளத்தில் வெப்பம் குறைந்து குளிர் பரவுகிறது . (அதனால்தான் தமிழகத் தமிழர்கள், ’ஸ்ஸ்ஸ் ப்பா! என்ன வெயில், இப்பவே கண்ணைக் கட்டுதே!’ என முனகும் அந்த நாட்களில் ஆஸ்திரேலியத் தமிழர்கள் கம்பளி ஆடைகளை வெளியில் எடுக்க முனைக்கிறார்கள்) வெயில் அதிகரிக்கும் அந்தக் கோடைக்காலம் சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தில் துவங்குகிறது என்றால், தை மாதம்தான் கோடை துவங்குகிறது. ஏனெனில் சூரியனின் வட திசைப்பயணம் அப்போதுதான் துவங்குகிறது.
பண்டைத் தமிழர்கள் வானியலில் வல்லுநர்களாக விளங்கினார்கள். பருவங்களைப் பெரும் பொழுது எனவும் ஒரு நாளைச் சிறு பொழுது எனவும் வகைப்படுத்தி அவற்றை ஆறாகப் பிரித்து வைத்திருந்தார்கள். இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்பவைப் பருவங்கள். வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்ற ஒரு நாளின் ஆறு பொழுதுகளும் கழிய 60 நாழிகைகள் ஆகும் என்றார்கள். ஒரு நாழிகை என்பது 24 நிமிடம். அந்த 1440 நிமிடங்கள்தான் நாம் இன்று சொல்லும் 24 மணி நேரம்!
வானியலில் தமிழர்கள் வல்லுநர்களாக இருந்தாலும் அவர்கள் புத்தாண்டு கொண்டாடியதற்குச் சான்றுகள் இல்லை. அவர்களது விழாக்களில் புத்தாண்டு என்பது ஒன்றாக இருக்கவில்லை.அதே போல அவர்கள் ஆண்டுகளை வருடக் கணக்கில் குறித்தார்களா என்று வரலாற்றின் பக்கம் திரும்பினால், கல்வெட்டுகள் மன்னர்கள் பட்டத்திற்கு வந்த இத்தனாம் ஆண்டில் இது நடந்தது எனப் பதிந்திருக்கின்றனவே தவிர ஆண்டுக்கு ஒரு எண் கொடுத்துப் பதியவில்லை.
சுழற்சி முறையில் வரும் அறுபது ஆண்டுகளுக்குப் பதில் எண்களால் குறிக்கப்படும் தொடர் ஆண்டு ஒன்று வேண்டும் எனச் சிலத் தமிழறிஞர்கள் குறிப்பாக மறைமலை அடிகள் அவர்கள்- நினைத்தார்கள். இது இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய சிந்தனை. அந்த ஆண்டு திருவள்ளுவர் பெயரால் குறிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினார்கள்.
இந்த விருப்பம்தான் "மறைமலை அடிகள் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள், 1921-ஆம் ஆண்டு சென்னை–பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி, தமிழர்களுக்கென ஒரு ""தனி ஆண்டு” தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவது என்றும், அதையே "தமிழ் ஆண்டு‘ எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தார்கள்” என்று 2008ம் ஆண்டு ஜனவரி 23-ஆம் நாள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் குறிப்பிடப்படுகிறது..
ஆனால் 1921ம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் அப்படி ஒரு கூட்டம் நடந்ததா? 19121ம் ஆண்டு எந்த மாதம் கூட்டம் நடந்தது என அர்சின் குறிப்பில் இல்லை. மறைமலை அடிகளின் வரலாற்றை எழுதிய அவரது மகன் மறை.திருநாவுக்கரசு 1921ம் ஆண்டு மார்கழி –தை மாதங்களில் மறைமலை அடிகள் யாழ்ப்பாணத்தில் சுற்றுப் பயணம் செய்ததாகவும், அங்கு தமிழர் நாகரீகம் என்னும் தலைப்பில் உரையாற்றியதாகவும், அந்தப் பயணத்தில் தானும் அவருடன் சென்றதாகவும் எழுதியிருக்கிறார்.
ஒரு வேளை அதற்குப்பின், 1921ல் வேறு மாதங்களில் , சென்னைப் பச்சையப்பன் கல்லூரிக் கூட்டம் நடந்திருக்கலாம் என்று கொண்டாலும் கூட அதைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கவில்லை.
ஆனால் 1935ம் ஆண்டு மே மாதம் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ஒரு கூட்டம் நடந்திருக்கிறது. தொ.பொ. மீனாட்சி சுந்திரம் பிள்ளை, எஸ்.வையாபுரிப் பிள்ளை, மே.வீ. வேணுகோபால்பிள்ளை, போன்ற தமிழறிஞர்கள் அதில் கலந்து கொண்டிருக்கின்றனர். மறைமலை அடிகள்தான் தலைமை தாங்கியிருக்கிறார். மே18, 19 (தமிழ் மாதம்: வைகாசி) ஆகிய இரண்டு நாள்கள், திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக திருவள்ளுவர் திருநாள் கழகம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டம் அது.திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தன்று பிறந்தார் என்பது மறைமலை அடிகளின் நம்பிக்கை. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 31 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பதும் அவர் கருத்து.
ஆனால் அந்தக் கூட்டத்தில். தையைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பு இல்லை.
தமிழர்களுக்கென்று திருவள்ளுவர் பெயரால் ஒரு தொடர் ஆண்டு என்பதை மட்டும் கருணாநிதி வலியுறுத்தியிருந்தால் அது குறித்து இத்தனை விவாதங்கள் இருந்திருக்காது. இன்னும் சொல்லப்போனால் அது உலகெங்கும் உள்ள தமிழர்களால் வரவேற்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த ஆண்டு தையில் தொடங்குகிறது என்பதையும் பிணைத்துப் பேசுவதுதான் இத்தனை சர்ச்சைக்கும் காரணமாகி விட்டது. சுருக்கமாகச் சொன்னால் அவர் தன் வழக்கமான பாணியில் அல்லாமல் பெரியாரைப் போல் பேசியிருந்திருக்க வேண்டும்
பெரியார் எப்படிப் பேசினார்?
“இனியாவது தமிழர்கள் இந்த 60 வருஷ முறையைக் காரித் துப்பிவிட்டு கி.பி.யையோ, ஹிஜரி யையோ, கொல்லத்தையோ, விக்கிர மாதித்தனையோ, சாலிவாகனனையோ அல்லது வேறு ஏதாவது ஒரு சனியனையோ குறிப்பு வைத்துக் கொள்ளுவார்களா? என்றும் அவ்வளவு சூடு சொரணை தமிழனுக்கு உண்டா என்றும் கெஞ்சிக் கேட்கிறோம்” என்று 1944ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி பெரியார் குடியரசு இதழில் தமிழ்ப் புத்தாண்டு பற்றிய கட்டுரையில் எழுதுகிறார்.
பெரியாரிடமிருந்து கருணாநிதி கற்க வேண்டியது இன்னும் ஏராளம் இருக்கிறது.