தலை நிமிர்ந்து பார்க்கும் ஓணான்
தரை படர்ந்த அருகைச் சுற்றும்
தேன் குடிக்கப் பட்டாம் பூச்சி
ஆடியைத் தவறவிட்டு
அம்மா போட்ட புடல்
சோனியாய்க் கயிற்றில் தொற்றி
வாயசைத்து வம்பிற்கு இழுக்கும்
ஒளிப் பந்தின் இழை பிரித்து
வலை பின்னிச் சுவற்றில் வீசி
குதி போடும் தண்ணீர் தொட்டி
என்ன இங்கு என்றே ஆவலாய்
வாழைப் பூ பார்க்கும் எட்டி
தோய்க்கின்ற கல் மேல் குந்தி
முழங்காலில் முகத்தைத் தைத்து
அவள் மட்டும் தனித்திருப்பாள்
அவனை எண்ணி