ரசிகர்கள் தொடர்ந்து கைதட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் – அந்தக்
கரவொலிகளைக் கண்ட இசைக் கலைஞர் கையில் முகம் புதைத்துக்
கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார். ஏன்?
முதுகுத் தண்டு சிலிர்த்தது.
விடிகாலைப் பனியில் கிணற்றடி ஈரத்தில் கால் வைத்த மாதிரி,
கடைவாயில் பாலொழுக புன்னகைக்கும் குழந்தையின் சிரிப்பைக் கண்ட
கணம்போல, விடைபெற்றுப் போகிற தருணத்தில் சற்றும் எதிர்பாராமல்
கன்னத்தில் பதிந்த காதலியின் முத்தம் போல, சிலிர்ப்பில் நனைந்து மனம்
இளகியது.
எல்லாம் அந்த சிம்பொனி செய்த வேலை. உள்ளம் சிலிர்த்து விம்ம
சிம்பொனி முடிந்த நொடி கூட்டம் எழுந்து நின்றது. அரங்கம் அதிர கரவொலி
எழுப்பியது. அதை ஏற்றுக்கொள்ள இசையமைப்பாளர், பார்வையாளர்களை
நோக்கித் திரும்பவில்லை. அவரது நண்பர்கள் மேடைக்கு ஓடி வந்தார்கள்.
அவரை அரங்கை நோக்கித் திருப்பினார்கள். அப்போதும் ரசிகர்கள் தொடர்ந்து
கைதட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால்- அந்தக் கரவொலிகளைக் கண்ட
இசைக் கலைஞர் கையில் முகம் புதைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி
அழுதார். ஏன்?
அத்தனை ஆயிரம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த அந்த இசையையோ,
அந்தக் கைதட்டல்களையோ அவரால் கேட்க முடியாது. அவர் காதுகள்
கேட்கும் திறனை இழந்து சில வருடங்கள் ஆகிவிட்டன.
ஓர் இசைக்கலைஞன் செவித் திறனை இழப்பது எத்தனை பெரிய துயரம்!
அதிலும் உலகம் முழுக்கக் கொண்டாடும் தனது இசைக்கோலத்தை, தான்
மட்டும் கேட்க முடியாது போவது எத்தனை பெரிய கொடுமை!
அந்த இசைக் கலைஞன் பீத்தோவன்.
பீத்தோவனின் துயரம் கேட்கும் திறனை இழந்தது மட்டுமல்ல, அவர்
வாழ்வில் இழந்தது அநேகம். தன் மகன் ஆறு வயதில் கச்சேரி செய்து
இன்னொரு மொசார்ட் ஆக வேண்டும் என்ற வெறியில் அடித்து வளர்த்த
அப்பாவிடம் இழந்தது சுதந்திரம். பதினேழு வயதில் அம்மாவைப் பறி
கொடுத்தபோது இழந்தது அரவணைப்பு. அம்மா போனபின் குடிகாரராய்
மாறிய அப்பாவினால் இழந்தது குடும்ப மானம். தம்பி மகனைத் தன் மகனாக
வளர்க்க முற்பட்டபோது நீதிமன்ற வழக்குகளில் இழந்தது பணம்.
மாணவியாய் வந்து காதலியாய் மாறிய பெண்ணிடம் இழந்தது மனம்.
“இவள் ஜோசபின். என் இரண்டாவது மகள்” என்று தன் மகளை நோக்கிக்
கை காட்டினார் அன்னா. அவர் ஹங்கேரி தேசத்துப் பிரபு ஒருவரின்
மனைவி. “நேற்று உங்கள் கச்சேரிக்கு வந்திருந்தேன். என்ன நுட்பம்! என்ன
ஏற்ற இறக்கம்! உணர்ச்சிகள் ஒவ்வொன்றும் உருவம் பெற்று வந்ததைப்போல
இருந்தது”
அந்தப் பாராட்டின் ஒவ்வொரு வார்த்தைகளும் பீத்தோவனைக்
கிளர்ச்சியுறச் செய்தன. மிகையில்லாத,தேர்ந்தெடுத்த வார்த்தைகள். அதன்
பின் உண்மை. பேசும்போது ஒலிக்கும் ஓர் உறுதி. உள்ளத்தில் உண்மை ஒளி
உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்.
ஒளியைப் போலத்தான் இருந்தாள் அவள். அப்படி ஓர் அழகு. கண்ணுக்குள்
ஒரு கடல். இதழில் எப்போதும் ஒரு முறுவல். வாலிபம் அவள் மீது
வசந்தத்தை வாரி இறைத்திருந்தது. செல்வம் அந்த மேனிக்கு மெருகு
பூசியிருந்தது.
“இவளுக்கு நீங்கள் இசை சொல்லிக் கொடுக்க முடியுமா?” அன்னாதான்
கேட்டார்.
“தாராளமாக. ஆனால் ஹங்கேரிக்கு வருவதென்றால் கஷ்டம். இங்கே
நிறைய வேலைகள் இருக்கின்றன”
“நீங்கள் அங்கு வர வேண்டியதில்லை. நாங்கள் இங்கு வியன்னாவிற்கு
வந்து விட்டோம். இங்கேயே இரண்டு வருடங்கள் தங்கலாம்
என்றிருக்கிறோம்”.
பாடங்கள் துவங்கின. பீத்தோவனின் நுட்பங்கள் ஜோசபினுக்கு
பிரமிப்பூட்டின. ஆனால், அவை எளிதில் பிடிபடவில்லை. பீத்தோவன்
பியானோவில் வாசிக்க… அவள் அந்த ஸ்வரத்தை வாங்கி வயலினில்
வாசிக்க முற்பட்டாள். முடியவில்லை. “எழுதிக் கொள்!” என்றார் பீத்தோவன்.
எங்கேயோ தேடி ஒரு பென்சிலை எடுத்து வந்தாள். அருகருகே அமர்ந்து
பியானோவில் விரல்களை ஓட விட்டார்கள். ஸ்பரிசமும் பருவமும்,
இசையும் இளமையும் இணைந்து அங்கே ஒரு ரசாயனத்தைச் செய்தன.
அமிலம் போன்ற வீரியமும் ஐஸ்கட்டியைப் போன்ற குளிர்ச்சியும் கொண்ட
அதன் பெயர் காதல்.
காதல் கற்பனைப் பெட்டகத்தின் கதவுகளைத் தகர்த்தெறிந்தன. இசைக்
கோர்வைகள் இதயத்தில் பீறிட்டெழுந்தன.அதில் அவள் கரைகிறாள் எனத்
தெரிந்த போது அவளை அசத்த இன்னும் இன்னும் புதுப் புதுச்
சங்கீதங்களைப் புனைந்தார் பீத்தோவன்.
பால் பொழியும் ஒரு பௌர்ணமி இரவு. மரங்கள் குடை விரித்திருந்த
சாலையில் இருவரும் நடக்கத் துவங்கினார்கள். மெல்ல மெல்ல இடைவெளி
குறைந்தது. விரல்கள் பின்னிக் கொண்டன. “இப்படியே உங்களோடு
நடந்துகொண்டே இருக்க வேண்டும்” என்றாள் ஜோசபின். “நீ கூட
வருவதானால் உலகின் விளிம்பு வரை நடக்கலாம்” என்றார் பீத்தோவன்.
மனதில் மோக ராகங்கள் மோதிப் புரண்டன. இழுத்து இறுக்கி இதழில்
முத்திரையிட்டார் பீத்தோவன். கண்கள் செருக அவளும் அதை ஏற்றுக்
கிறங்கினாள். அத்தனைக்கும் சாட்சியாக உச்சத்தில் சந்திரன். அந்த இரவில்
உருவானதுதான் பீத்தோவனின் பிரபலமான மூன்லைட் சோனடோ.
அவளை நன்றாகத் தயார் செய்திருக்கிறீர்கள், நன்றி” என்றார் அன்னா.
அவரோடு அவரது கணவரும் – அந்த ஹங்கேரியப் பிரபு- வந்திருந்தார்.
“நேற்று அவளுக்கு நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளைக்கு அவள் ஓர் இசைக்
கோர்வை வாசித்துக் காட்டினாள். கிறங்கிப் போய்விட்டார் அவர்” அன்னா
தொடர்ந்து பேசிக்கொண்டே போனார்.
மாப்பிள்ளை? நான் சரியாகத்தான் காதில் வாங்கிக் கொண்டேனா?
குழப்பத்துடன் ஜோசபினின் கண்களைப் பார்த்தார் பீத்தோவன். அந்தக்
கடலில் சலனம் இல்லை.
“ஜோசபினுக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறது. மாப்பிள்ளை பேரும்
ஜோசப். எங்கள் தேசத்தில் இன்னொரு பிரபுக்கள் குடும்பத்துப் பையன்”
பீத்தோவனுக்குச் செவிட்டில் அறைந்ததைப் போலிருந்தது.
வசந்தத்திற்குப் பின் வருகிற இலையுதிர் காலத்தில் எல்லாவற்றையும்
இழந்துவிடும் விருட்சங்களைப்போல ஜோசபின் திருமணத்திற்குப் பின்
பீத்தோவன் ஏதுமற்றவனாகத் தன்னை உணர்ந்தார். அவளோடு பேசிய
வார்த்தைகள் எல்லாம் கல்வெட்டுக்களைப்போல இதயத்தில் இறுகிக்
கிடந்தன.
“ஜோசபின், கொஞ்ச நாளாகவே எனக்கு காது மந்தமாகி வருகிறது.
இப்படியே போனால் நாம் எப்படிப் பேசிக்கொள்ளப் போகிறோம் எனக்
கவலையாக இருக்கிறது”
“இதயம் பேசுவதைக் கேட்கக் காதுகள் எதற்கு? நாம் இசையாலே பேசிக்
கொள்வோம்” என ஜோசபின் சுட்டிக் காட்டிய பியானோ இப்போது கை
கொட்டிச் சிரித்தது. அவளுக்காகப் புனைந்த இசைக்கோலங்கள் இப்போது
அர்த்தமிழந்து போலியாகப் புன்னகைத்தன.
‘என் தேவதையே! என்னின் எல்லாமானவளே! நீ கொடுத்த
பென்சிலில்தான் எழுதுகிறேன். தியாகங்கள் இல்லாமல் நம் காதல் வாழுமா?
நீ முழுவதுமாக என்னுடையவள் இல்லை. நான் முழுவதுமாக
உன்னுடையவன் இல்லை. அதை உன்னால் மாற்ற முடியுமா? காதல்
எல்லாவற்றையும் கேட்கிறது. எனக்காக உன்னையும், உனக்காக என்னையும்
கேட்கிறது. நீ சுலபமாக அதை மறந்து விட்டாய். ஆனால், நான் வாழ
வேண்டும். உனக்காகவும், எனக்காகவும். நான் விரைவில் உன்னைச்
சந்திப்பேன். கடந்த சில நாட்களாக நான் என்னை எப்படி உணர்கிறேன்
என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நம் இதயங்கள் எப்போதும்
நெருக்கமாகவே இருந்திருந்தால் எனக்கு இந்த எண்ணங்கள் எழுந்திராது.
உன்னிடம் சொல்ல என் இதயம் முழுதும் ஏராளமான எண்ணங்கள். சில
சமயங்களில் மொழி என்பது ஒன்றுமேயில்லை எனத் தோன்றுகிறது.
எப்போதும் என் காதலியாகவே இரு. எனக்கு எல்லாமுமாக இரு. நான்
உனக்கு இருப்பதைப் போல. மற்றவை கடவுள் விருப்பம்.
-எப்போதும் உன் – லுட்விக் பீத்தோவன்’
‘படுக்கையில் படுத்திருக்கும் இப்போதும் என் எண்ணங்கள், அழியாத
அன்பே, உன்னை நோக்கிப் பாய்கின்றன. அவ்வப்போது மகிழ்ச்சி. ஆனால்
எப்போதும் துயரம். விதி நமக்குப் பதில் சொல்லட்டும் எனக்
காத்திருக்கிறேன். வாழ்ந்தால் முழுவதுமாக உன்னுடன் வாழ்வேன்,
இல்லையெனில் இல்லை. ஆம், நான் முடிவு செய்துவிட்டேன். ஒரு நாள்
முழுவதுமாக உன்னிடம் வந்து சேரும் வரை, சற்று தூரத்திலிருந்தே
உன்னைச் சுற்றிக் கொண்டிருப்பேன்
– என்றும் உன், என்றும் என், என்றும் நம் லுட்விக்’
ஜோசபினைப் பிரிந்த பின் 25 வருடங்கள் திருமணமே செய்துகொள்ளாமல்
வாழ்ந்தார் பீத்தோவன். அவர் இறந்த பின்பு அவர் ஏதாவது உயில் எழுதி
வைத்திருக்கிறாரா என்பதை அறிந்துகொள்ள அவரது அலமாரிகளைக்
குடைந்தபோது அகப்பட்ட கடிதங்கள் இவை. பென்சிலால் பீத்தோவனின்
கிறுக்கலான கையெழுத்தில் பத்துப் பக்கங்களுக்கு நீளும் கடிதங்கள்
கிடைத்தன. சில பக்கங்களில் வெறும் குறிப்புக்களைப்போல முற்றுப் பெறாத
வாக்கியங்கள் காணப்பட்டன. ஒரு பக்கத்தில் குறுக்கே கோடிட்டு
அடிக்கப்பட்டிருந்தது.
‘அழியாத அன்பிற்கு’ என அழைக்கப்பட்ட முகவரி இல்லாத, அஞ்சலில்
அனுப்பப்படாத அந்தக் கடிதங்கள் யாருக்கு எழுதப்பட்டவை என்பது பெரும்
புதிராகவே இருந்தது. ஆனால் அந்தக் காகிதங்களில் இருந்த வாட்டர்
மார்க்கைக் கொண்டு அவை எப்போது எழுதப்பட்டிருக்கலாம் என்பதைக்
கண்டுபிடித்தார்கள். அந்தக் கால கட்டத்தில் பீத்தோவன் எங்கு வாழ்ந்தார்
என்பதை வைத்துப் பார்க்கும்போது இவை ஜோசபினுக்கு எழுதியதாக
இருக்கும் என வரலாற்றாசிரியர்கள் முடிவு செய்தனர்.
தன் உள்ளத்து உணர்ச்சிகளைக் காதலியிடம் சொல்ல நினைத்த
பீத்தோவன், ஏனோ சொல்லாமல் தயங்கி மருகியதற்குச் சாட்சியமாகத்
திகழும் இந்தக் கடிதங்கள் இப்போதும் பெர்லின் அரசு நூலகத்தில்
இருக்கின்றன.
ஜோசபினைப் பிரிந்த பிறகு சிலகாலம் குடியிலும், விலைமாதர்களிடமும்
வாழ்க்கையைக் கழித்தார் பீத்தோவன். அப்போது தொற்றிக் கொண்ட
பால்வினை நோய், அவர் பின்னாளில் கேட்கும் திறனை முற்றிலுமாக
இழக்கக் காரணமாயிற்று.