ரொனால்ட் ஓபஸ் விரக்த்தியின் உச்சத்தில் இருந்தார். காரணம் அவர் விரும்பிய காரியம் நிறைவேறவில்லை. தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, அவர், தான் குடியிருந்த பத்தாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியே குதித்தார். அவர் கீழ் நோக்கி வந்து கொண்டிருந்த போது ஒன்பதாவது மாடியிலிருந்து வந்த துப்பாக்கிக் குண்டு ஒன்று அவர் உடலைத் துளைத்தது. முதல் ஜன்னல்களைச் சுத்தம் செய்த பணியாளர்களின் பாதுகாப்பிற்காக எட்டாவது மாடியில் ஒரு வலை கட்டப்பட்டிருந்தது. ரொனால்ட்டின் உடல் அந்த வலையில் போய் வீழ்ந்தது.
ஒன்பதாவது மாடியிலிருந்து வந்த குண்டு யாரிடமிருந்து வந்தது என்று விசாரிக்கப் போனவர்கள் அங்கே ஒரு முதிய தம்பதிகள் வசித்து வருவதைக் கண்டார்கள். அந்த தம்பதிகளிடையே எப்போது பார்த்தாலும் வாக்குவாதம், சச்சரவு, சண்டை. கோபம் உச்சத்தை எட்டும் போது அந்தக் கிழக் கணவர் துப்பாக்கியை எடுத்து ‘சுட்டுவிட்வேன்’ என்று மனைவியை மிரட்டுவது வழக்கம். அன்று அப்படி மிரட்டும் போது கை தவறி குண்டு பாய்ந்து விட்டது. முதுமையின் காரணமாக அவரால் துப்பாக்கியை நேரே உறுதியாகப் பிடிக்க முடியவில்லை.
ஆனால் அவர் குண்டு பாய்ந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவர் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பவே இல்லை. எப்போதும் வெற்றுத் துப்பாக்கியைக் காட்டி மனைவியை மிரட்டுவதுதான் வழக்கம். எனவே அவர் குண்டுகளைத் தான் நிரப்பவில்லை என்று வாதிட்டார்.
மேலும் விசாரித்ததில் அந்த தம்பதிகளின் மகன் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பியதைத் தான் பார்த்ததாக ஒருவர் சாட்சியம் அளித்தார். குண்டுகளை நிரப்பியவருக்கும் அவரது அம்மாவிற்கும் பணத் தகராறு. அம்மாவைப் போட்டுத் தள்ள நினைத்தார். ஆனால் பழி தன் மீது வந்து விடாமல் இருக்க அப்பாவின் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பி வைத்தார், அம்மாவோடு அவருக்கு சண்டை வரும், அப்போது துப்பாக்கியால் மிரட்டுவார், அதில் அம்மா சாவார் என்பது அவரது கணக்கு. ஆனால் அவரது அம்மாவிற்கும் அப்பாவிற்கும் கொஞ்ச காலமாகச் சண்டை வரவே இல்லை. அதில் அவருக்கு ஏமாற்றம்
அந்த மகன் யார் என்று பார்த்தால் ரொனால்ட் ஓபசேதான்! அவர் தற்கொலை செய்து கொள்ளக் காரணமே அவரது திட்டம் நிறைவேறாமல் போனதால் ஏற்பட்ட விரக்திதான் .
இது ஒரு கற்பனைக் கதை. அமெரிக்க இதழியல் வகுப்பறைகளில், தீர விசாரிக்காமல், ஒரு செய்தியை வெளியிட்டால் அது எப்படி தவறாகிவிடும் (Misreporting) ஆகிவிடும் என்பதற்காக இதைச் சொல்வார்கள். மாடியிலிருந்து குதித்ததின் அடிப்படையில் தற்கொலை என செய்தி வெளியிட்டால் அது முற்றிலும் உண்மை அல்ல. துப்பாக்கி குண்டு பாய்ந்ததன் அடிப்படையில் இது கொலை என்றால் அதுவும் சரியல்ல. தற்செயலாகக் குண்டு பாய்ந்ததால் அது விபத்து என்று மட்டும் எழுதவும் முடியாது. ஒருவரின் துப்பாக்கியில் வேறு ஒருவர் குண்டு நிரப்பி வைத்ததால் அதை சதி என்று சொல்லிவிடலாமா?
சரியான விடை என்ன என்றால் சம்பவம் முழுமையும் ரிப்போர்ட் செய்ய வேண்டும். பரபரப்பிற்காக. ஏதேனும் ஒரு அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ரிப்போர்ட் செய்தால் அது தவறான செய்தியாகிவிடும்.
தவறான செய்திகள் (Misreporting) பல நேரங்களில் பாரதுரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதற்கான அண்மைக்கால உதாரணம் 49 பிரபலங்களின் கடிதம். பிரதமருக்கு அப்படிக் கடிதம் எழுதுவதில் ஏதும் தவறில்லை. பிரபலமானவர்கள் மட்டுமல்ல, சாதாரணக் குடிமக்கள் கூட பிரதமருக்கு எழுதலாம். எழுதியிருக்கிறார்கள். அவர்களில் பலர் பதிலும் பெற்றிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சிலருக்கு அவர்களது தாய்மொழியிலேயே கூட பதில்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனால் பிரபலங்கள் எழுதிய கடிதம் பல தவறான செய்திகளைக் கொண்டிருந்தது.”2016ஆம் ஆண்டு 840 கும்பல் படுகொலைகள் நடைபெற்றதாக தேசிய குற்றப் பதிவுகள் அமைப்பின் (National Crime records bureau -NCRB) அறிக்கைகள் மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்ததாக” அவர்களது கடிதம் குறிப்பிடுகிறது.
இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் NCRB அறிக்கைகளில் கும்பல் படுகொலை (lynching) என்ற தலைப்பின் கீழ் தகவல்கள் வெளியிடப்படுவதில்லை. இந்தத் தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் ஜூன் 25 ஆம் தேதி புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியைச் சார்ந்த கொல்லம் எம்.பி பிரேமச்சந்திரனின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்.
அப்படியிருக்க, இல்லாத ஒரு தகவலை இந்தப் பிரபலங்கள் எப்படி அறிந்தார்கள்? அறிந்து அதிர்ச்சி அடைந்தார்கள்? அதிர்ச்சி அடைந்து கடிதம் எழுதத் துணிந்தார்கள்?
அவர்கள் இந்தச் ‘செய்தி’யை, ஏதேனும் செய்தித்தாளில், அல்லது சமுக ஊடகங்களில் வாசித்திருப்பார்கள். அல்லது தொலைக்காட்சிகளில் கேள்விப்பட்டிருப்பார்கள்.
அதனடிப்படையில் கடிதம் எழுத முற்பட்டிருப்பார்கள். இந்தப் பொய்ச் செய்தியைக் கேள்விப்பட்டவர்கள், அவர்கள் கடிதம் எழுதுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே, பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலை அறிந்திருக்கவில்லை என்பது பரிதாபகரமானது
இதில் இன்னொரு பரிதாபமான அம்சம் என்னவென்றால், NCRB அறிக்கைகள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய பொது அறிவுகூட நம் அறிவுஜீவிகளுக்கு இல்லை என்பதுதான். NCRB அறிக்கைகள் மாநில அரசுகள் அளிக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. ஏன் மாநில அரசுகள்? ஏனென்றால் அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி, காவல் துறை, பொது ஒழுங்கு என்ற விஷயங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
கும்பல் படுகொலைகள் பற்றி நம் அறிவுஜீவிகளுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் அவர்கள் மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதியிருக்க வேண்டும்.
இப்படித் தகவல்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், நாடாளுமன்ற் நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ளாமல், அரசமைப்புச் சட்டம் செய்திருக்கும் அதிகார பிரிவுகள் பற்றிய சிந்தனை இல்லாமல் நம் அறிவுஜீவிகள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்
அவர்கள் இந்தக் கடிதத்தை எப்போது எழுதுகிறார்கள்? “ காரணம் எதுவாக இருந்தாலும் கும்பல் கொலை என்பது குற்றம் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் “ (டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டி ஆகஸ்ட் 12 2018) என்றும், “ என்னைத் தாக்குங்கள், சுட வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் தலித்களைத் தாக்காதீர்கள் ( ஹிந்துஸ்தான் டைமஸ், ஆகஸ்ட் 8 2016) என்று உணர்ச்சிபட மோதி தெரிவித்த பிறகும் நம் அறிவுஜீவிகள் ஜூலை 23, 2019 அன்று, மாநில அரசுகள் எடுக்க வேண்டிய ஒரு நடவடிக்கை குறித்து இல்லாத தகவல்களின் அடிப்படையில் பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார்கள் என்றால் அந்தக் கடிதத்திற்கு வேறு நோக்கங்கள் இருக்கலாமோ எனச் சந்தேகம் வராதா?
நம் தமிழக அரசியல்வாதிகள் நம் அறிவுஜீவிகளை விட அறிவாற்றல் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். அறிவுஜீவிகளின் கடிதம் குறித்து பிகாரில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்குப் போடுகிறார். அதை விசாரித்த நீதிபதி கடிதம் எழுதியவர்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை போடுமாறு காவல்துறைக்கு ஆணையிடுகிறார். காவல்துறை வழக்குப் பதிகிறது.
வழக்கைப் போட்டது மோதி அல்ல, மத்திய அரசு அல்ல, பாஜக அல்ல. ஒரு வழக்கை வழக்குப் போட்டவர்தான் வாபஸ் வாங்க முடியும்.அல்லது நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால் திமுக, மதிமுக, விசிகவைச் சேர்ந்த நம் அரசியல்வாதிகள், மோதி தலையிட்டு வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்கிறார்கள். யார் எதில் தலையிடுவது? அரசு நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதை நம் அரசியல்வாதிகள் ஆதரிக்கிறார்களா? அதை அவர்கள் முதலில் தெளிவுபடுத்தட்டும்.
அறிவுஜீவிகள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரலாம். அல்லது நீதி மன்றத்தின் முன் ஆஜராகி அவர்கள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றிற்கான ஆதாரங்களை எடுத்து வைக்கட்டும்.
பொய்ச் செய்திக் கலாசாரம் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்.