ஆளுநர் அப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று அனந்தராமன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஆளுநர் மிர்தாவின் அந்தரங்கச் செயலாளராக அனந்தராமன் பொறுப்பேற்றுக் கொண்டு ஆறுமாதங்கள்தான் ஆகிறது. ஆனால் அறம் அவர்கூடவே வந்தவன்.பத்து வருடமாகப் பக்கத்திலேயே இருந்து வருகிறான். தில்லியில் பேராசிரியர், அலகாபாத்தில் துணைவேந்தர், அசாமில் கவர்னர் என்று அவர் இடம் மாறிப் போனபோதெல்லாம் உடன் போன நிழல். கடைசியாக அவர் கங்கைக்கரையில் இருந்து இங்கே காலடி எடுத்து வைத்தபோது குடும்பம் என்று எதையும் பெரியதாய்க் கூட்டிவரவில்லை. அறம் மட்டும் அவர்கூட வந்தான். நம்பிக்கைக்குரிய உதவியாளன் என்று சொல்வது நாகரிகமாக இருக்கும். என்றாலும் எடுபிடி என்பதுதான் நிஜம். காலைக் குளியலுக்குத் தண்ணீர் விளாவி வைப்பதிலிருந்து இரவு கால் அமுக்கிவிடுவதுவரை அவருக்கு அறம்தான் செய்ய வேண்டும்.
அந்த அறம் விஷயத்தில் ஆளுநர் அப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று அனந்தராமன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
பேராசிரியர் மிர்தா பெரிய படிப்பாளி. ஆனால் பெரும் சந்தேகி. எவரையும் எளிதில் நம்பிவிட மாட்டார். எதையும் இரண்டு மூன்று முறை கேட்டுத் தெரிந்து கொள்வார். கைரேகைகள் களவு போகாமல் இருக்கின்றனவா என்று அடிக்கடி உள்ளங்கையைக்கூட அடிக்கடி உற்றுப் பார்த்துக் கொள்கிற மனிதர் என்று அவரது எதிரிகள் கிண்டல் அடிப்பதுண்டு.
சந்தேகி மட்டுமல்ல, சரியான முன்கோபியும்கூட. கங்கைத் தண்ணீர் குடித்து வளர்ந்த கனமான சரீரம் அவருக்கு. சும்மா உட்கார்ந்தாலே எகிறும். கோபம் வந்தால் .உடைத்துப்போட்டதர்பூசணிபோல், ரத்தச் சிவப்பில் முகம் ஒளிரும்.
அன்று அனந்தராமன் அவரது அறைக்குள் நுழைந்தபோது, கூரைக்கும் பூமிக்குமாகக் குதித்துக் கொண்டிருந்தார். அறத்தின் பனியனைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தார். அப்படி ஒன்றும் தலைபோகிற விஷயம் அல்ல. அற்பமானதுதான். ஆனால் அவரைப் பொறுத்தவரை புனிதமானது.
தங்கத்தில் பூண் பிடித்த ருத்ராட்சமாலை ஒன்று அணிந்திருப்பார் மிர்தா. நாலைந்து பவுன் இருக்கும். நல்லகனம். நேபாளத்திலிருந்தோ, ஜாவாவிலிருந்தோ தருவிக்கப்பட்ட ஒற்றைக் கண் ருத்திராட்சம். அவரது ஆன்மிக குரு அவருக்கென்றே தருவித்து அனுப்பி வைத்திருந்த மாலை அது. பெரும்பாலும் அது கழுத்திலேயே கிடக்கும். அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து. பலகைபோல் முதுகை நிமிர்த்தி, பத்மாசனத்தில் காலைமடக்கி, அவர் உட்காரும்போது, கழுத்தில் கிடக்கும் மாலை கைக்கு வந்துவிடும். உருட்டிக் கொண்டே ஒருமணி நேரம் ஜபம் நடக்கும்.
அதேபோல மது அருந்தும் மாலைகளில் அவர் அதைக் கழற்றி வைத்து விடுவார். வைத்து விடுவார் என்றால், கண்டஇடத்தில் வைக்கமாட்டார். அதற்கென்றே ஒரு செப்புப் பெட்டகம் உண்டு. அதைக் கண்டவர் கையில் கொடுக்கவும் மாட்டார். அவரே பெட்டகத்தைத் திறந்து வைப்பார்.அபூர்வமாக அறத்திடம் கொடுப்பதும் உண்டு.‘காற்று கருப்பு’களிடமிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் தன்னைக் காப்பாற்றி வரும் ரட்சை என்றே அதை அவர் நினைத்திருந்தார்.
அந்த ருத்ராட்ச மாலையைக் காணோம்.
கடைசியாக எப்போது கழற்றி வைத்தோம் என்று அவருக்கு ஞாபகம் இல்லை. நேற்று குளிக்கப் போகும்போது கழற்றிப் பெட்டகத்தில் வைத்தது நினைவிருக்கிறது. பூஜையின்போது உருட்டிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது .மறுபடி எடுத்து அணிந்து கொண்டது ஞாபகம் இருக்கிறது .
பின் எப்போது கழற்றி வைத்தோம்? எங்கே கழற்றி வைத்தோம்? அப்படி எங்கே வேண்டுமானாலும் கழற்றி வைக்கக் கூடிய பொருளா அது? அத்தனைக்கும் நேற்றிரவு ராஜபவனில் பார்ட்டி எதுவும் இல்லை. இரவு வெகுநேரம்வரை டெலிவிஷனில் எலக்க்ஷன் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர், ‘கடவுளே, கடைசியில் என்னைப் போய் சோதிக்கிறாயே’ என்று சொல்லிக் கொண்டே எழுந்து கனமான சட்டப் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தூங்கப் போனது ஞாபகம்இருக்கிறது… ஒருநிமிஷம்… அப்போது… அப்போது… அறம் பால் எடுத்துக் கொண்டு வந்தது நினைவிருக்கிறது. அப்போது அவனிடம் கழற்றிக் கொடுத்தோமோ? ம்…
அவனிடம் கொடுத்த மாதிரித்தான் தோன்றுகிறது… இல்லை கொடுக்கவில்லையோ?…இல்லை, அவனிடம்தான் கொடுத்திருக்க வேண்டும்.
கோபத்தில் குரல் பிசிற, கேள்வி மேல் கேள்வியாகப் போட்டு அறத்தை உலுக்கினார் மிர்தா. தெரியாது, தெரியாது என்றே திருப்பித் திருப்பிச் சொன்னான் அறம். சொல்லும்போதே அவன் குரல் நடுங்கியது. இத்தனைநாள் விசுவாசமாக உழைத்த என்னைச் சந்தேகிக்கிறீர்களே என்று மனசு ஒடிந்து போனதால் ஏற்பட்ட நடுக்கம் அது. அவன் பொய் சொல்கிறான் என்று சந்தேகப்பட்ட ஆளுநர், அவனை அறைவதற்குப் பாய்ந்தார். அனந்த் குறுக்கே புகுந்து தடுத்தான். ஏடிசி ஓடிவந்தார். “ராஜ்பவனிலேயே திருட்டா? என்ன கேவலம் !” என்று காக்கிச் சட்டையைப் பார்த்ததும் உறுமினார்.
“ அறம்தான் திருடியிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா சார்?” பணிவாகக் கேட்டான் அனந்த்.
“ அது என் சந்தேகம். கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் வேலை. இன்று சாயங்காலத்திற்குள் எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்” என்று ஆணையிட்டார். “உதைக்கிற விதமா உதைச்சா உண்மையைச் சொல்வான்” என்றார் அறத்தைப் பார்த்துக் கொண்டே.
அவன் கண்ணின் விளிம்பில் நீர் துளித்திருந்தது.
*
சிவனின் கண்ணில் நீர் துளிர்த்தது. எரிந்து சாம்பலாகிக் கிடந்த திரிபுரத்தை ஒருதரம் திரும்பிப் பார்த்தான் சிவன். எப்பேர்பட்ட ஊர்!. உழைப்பும் கனவும் கலந்து உருவான ஊர். தொழில்நுட்பம் சமைத்த ஒரு புது உலகம். எதிர்காலத்திற்குக் கட்டியம் கூறும் நிகழ்கால வசீகரங்கள்.எல்லாம் எரிந்து கிடந்தன. எங்கேயோ நடந்த தவறு எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்கியிருந்தது .தவறா? தன்னலமா? நகரம் எக்கேடு கெட்டால் என்ன, நான் நன்றாய் இருந்தால் போதும் என்ற சுயநலம் எல்லாவற்றையும் எரித்துச் சாம்பலாக்கியிருந்தது. எரிந்து கிடந்த நகரைத் திரும்பிப் பார்த்தான் சிவன். அவன் கண்ணில் நீர் துளிர்த்தது. ருத்ரன் கண்ணில் துளிர்த்த நீர் உதிர்ந்து ருத்ராட்சமாய் இறுகி உலர்ந்தது.
அதற்கு மேல் படிக்க முடியவில்லை. அனந்த் புத்தகத்தை மூடிவைத்தான். கார்டன் ஆஃப் லைப் என்ற தலைப்புக் கண்ணை ஈர்த்தது. வாழ்க்கை தோட்டமா ? வனமா?
யோசிக்க நேரமில்லை. ஓய்வில்லாமல் தொலைபேசி ஒலித்துக் கொண்டேஇருந்தது. எடுத்தான்.
“பி.ஆர்.கே ஆளுநரைப் பார்க்க விரும்புகிறார். அப்பாயின்ட்மெண்ட் வேண்டும். இன்றே கிடைத்தால் நல்லது.”
தேர்தலில் நேற்று ஜெயித்த கட்சியின் தலைவர் பி.ஆர்.கே நாடறிந்த அரசியல்வாதி. ஆனால் நாடு அவரைஅறிந்து கொண்டது.அவரது நல்ல செயல்கள் மூலம் அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பாகியிருந்ததன் காரணமாகத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்திருந்தார். அவர் விஷயத்தில் ஆளுநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று அறிந்து கொள்ள நாடே ஆவலாகக் காத்திருந்தது.
“ நான் மதிய ஓய்வுக்குப் போகும் முன் எப்போது வேண்டுமானாலும் வரச் சொல்லுங்கள்.”
“அவர் உங்களைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோர விரும்புகிறார் என்று நினைக்கிறேன். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்திருக்கிறது.”
“ஆம். நானும் கேள்விப்பட்டேன். எனக்கும் தகவல் வந்தது.”
“ என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள்?”
“ என்ன முடிவு எடுக்கலாம்?”
“ வழக்கு முடியும்வரை அவர் சற்று ஒதுங்கி இருக்கட்டும். அவர்கள் கட்சிக்குள் வேறு யாரையேனும் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவரும்படி அறிவுரை சொல்லலாம்.”
“ அது ஏற்றுக் கொள்ளப்படும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. அது அவர்களது உரிமையில் நாம் தலையிடுவதாகக்கூட அர்த்தம் செய்து கொள்ளப்படலாம்.”
“ ஆட்சி அமைக்கக் கோருவது அவர்கள் உரிமை. அதை மறுப்பது நமது கடமை.”
ஆளுநர் அவனை நிமிர்ந்து பார்த்தார்.அவர் கண்ணில் ஒரு கேள்வி இருந்தது.
“ கடமை?”
“ இப்போது பி.ஆர்.கே. பொறுப்பேற்றால் அவர் மீதிருக்கும் மற்ற வழக்குகள் என்ன ஆகும்? தவறு செய்தவர்கள் அரசியலைப் பயன்படுத்தித் தண்டனைகள் பெறுவதிலிருந்து தப்பிவிட்டால், மக்களுக்கு சட்டத்தின் ஆட்சி என்பதில் நம்பிக்கை போய்விடும். இளைய தலைமுறைக்கு அறவுணர்வுகள் மீது நம்பிக்கை போய்விடும். நாம்அரசியல்வாதிகளுக்கல்ல, எதிர்காலத் தலைமுறைக்கு அதிகம் கடமைப்பட்டிருக்கிறோம்.”
“நான் நிர்வாகச் சிக்கல் எதையும் ஏற்படுத்த விரும்பவில்லை.”
“ குற்றவாளிகள் அதிகாரம் பெறும் நிலை ஏற்படுமானால், அதிகாரிகளும் நீதிபதிகளும் காவலர்களும் தயக்கமின்றிப் பணிசெய்வதில் தடை ஏற்படும். அதுதான் பெரிய சிக்கல்.”
“அதிகம் வாதிட விரும்பவில்லை. ஆனால் வன்முறை வெடித்துவிடக்கூடாதே என்பதே என் கவலை” என்றார் ஆளுநர். அவர் கண்ணில் எங்கேயும் பஸ் எரிந்து விடக்கூடாதே என்ற பயம் தெரிந்தது.
“ வன்முறைக்குப் பயந்து நிர்வாகம் வளைந்து கொடுக்குமானால், தடிகளே இங்கு தலைஎடுக்கும். அரிவாள்களே இங்கு ஆட்சி செய்யும்.”
மிர்தாஅவனைப் பார்த்து முறுவலித்தார்.“ மக்கள் தீர்ப்பளித்திருக்கிறார்கள்” என்றார்.
“ நமது அரசியல், உணர்ச்சிகள் சார்ந்தது. சட்டம், அறிவு சார்ந்தது. ஒரு சமூகத்தை வழி நடத்த வேண்டியது உணர்ச்சிகளா?அறிவா?
ஆளுநர் பதில் சொல்லவில்லை. அவர் சாதாரண மனிதனின் கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர் அல்ல.
பத்துநிமிடத்தில் எல்லாம் முடிந்து விட்டது.பரஸ்பரம் பட்டுச் சால்வைகள், பூங்கொத்துகள், பதவி ஏற்க வரும்படி ஆளுநர் அழைப்பு விடுத்தார். மதிய ஓய்விற்கு மாடிக்குச் சென்று படுக்கையில் சாய்ந்தபோது தலையைணை உறுத்தியது. கையை விட்டுத் துழாவினார்.முரட்டு ருத்ராட்சம் கையை உறுத்தியது.
*
மாலை நடக்கவிருந்த விழாவிற்காக ஆளுநர் மாளிகை வளாகத்தில் ஒரு துணிப்பந்தல் தயாராகிக் கொண்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த அனந்தின் கண்ணில் ஒரு மரத்தினடியில் அறம் அமர்ந்திருப்பதுபட்டது. விழா மும்முரத்தில் அறத்தை எல்லோரும் மறந்து போனார்கள்,
“அறம்!” என்று கூப்பிட்டான் அனந்த். தலை நிமிர்ந்து பார்த்து, ‘சடக்‘கென்று எழுந்து நின்றான் அவன். காலை அவன் அழுத கண்ணீர் கண்ணோரம் காய்ந்து கிடந்தது.
அவன் கண்களைப் பார்த்த அந்த நிமிடம் ‘சட்‘டென்று அந்தக் கேள்விக்கு விடை தோன்றி மறைந்தது. அன்று காலை அவன் ஆளுநரிடம் கேட்ட கேள்வி :ஒரு சமூகத்தை வழி நடத்த வேண்டியது உணர்ச்சிகளா? அறிவா? உணர்ச்சித் தீவிரமோ, உலர்ந்த அறிவோ அல்ல, ஒரு சமூகத்தை வழி நடத்த வேண்டியது அறம்,
ஆனால் நம் சமூகத்தில் சாதாரண மக்கள் என்றால் வெறும் சந்தேகத்தின் பேரில்கூட தண்டனை, அரசியல்வாதிகளுக்கோ குற்றவாளிகள் என்றாலும் கூடப் பரிசு. என்ன விசித்திரம் இது? அடிப்படையில் கோளாறா? அல்லது அடிப்படையே கோளாறா?
மனதில் கேள்விகள் மொய்க்க, அந்த அரசாங்கக் கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தான் அனந்த். அங்கே அலங்காரங்கள் ஆரம்பம் ஆகியிருந்தன. அறத்தைக் காணவில்லை.
( கல்கி )