அபத்தத்திற்கும் ஓர் அளவில்லையா?
தாங்க முடியாத தலைவலி என்று மருத்துவரிடம் போனார் ஒருவர்.அவருக்கு மருத்துவர் சொன்ன யோசனை: ”தலையை வெட்டி எடுத்து விடலாம்!”
இதைப் படிக்கும் போது இதழோரத்தில் புன்னகை பூக்கிறதா? ஆனால் ஏறத்தாழ இதைப் போன்ற யோசனையை கடலோரக் காவல்படை தெரிவிக்கும் போது நமக்குச் சிரிப்பு வருவதில்லை. முட்டாள்தனமாக இருக்கிறதே எனச் சினம்தான் எழுகிறது.
பாக் நீரிணையில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அடிக்கடி, அநேகமாக தினமும், இலங்கைக் கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாவதையடுத்து அவர்களுக்கு, அவர்கள் இந்தியக் குடிமக்கள் என்ற முறையில் இந்தியக் கடலோரக் காவல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டப் பொது நல வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த கடலோரக் காவல்படை, இந்திய –இலங்கைக் கடல் எல்லையிலிருந்து ஐந்து கடல்மைல் தூரத்திற்கு மீன் பிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதி என அறிவித்து விட்டால் இந்தப் பிரசினை தீர்ந்து விடும் எனத் தெரிவித்திருக்கிறது. இந்தப் பகுதியில் நம் கடல் எல்லை 12 கடல் மைலில் அமைந்திருக்கிறது. அதில் ஐந்து கடல் மைலைத் தடை செய்யச் சொல்கிறது கடலோரக் காவல்படை!
இதில் என்ன வேடிக்கை என்றால் இந்திய இலங்கை அதிகாரிகளைக் கொண்ட குழு (Joint working group) இரு நாட்டு மீனவர்களும் இந்தப் பகுதியில் இரு தரப்பு மீனவர்களின் பரஸ்பர ஒப்புதலின் பேரில் மீன் பிடிக்க வகை செய்யும் திட்டம் ஒன்றை விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய நீதி மன்றத்தில் கடலோரக் காவல்படை இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறது.
இது நம் மத்திய அரசு செயல்படும் விதம் குறித்துச் சில கேள்விகளை எழுப்புகிறது. மத்திய அரசின் அதிகாரிகளும், கடலோரக் காவல்படை அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் முரணான கருத்துக்களைத் தெரிவித்திருப்பது அரசுத் துறைகளிடம் ஓர் ஓருங்கிணைந்த அணுகுமுறை இல்லை என்பதை அப்பட்டமாகத் தெரிவிக்கிறது. சரி, ஏன் ஒருங்கிணைப்பில்லை. இந்தப் பிரச்சினையில் எல்லாத் தரப்பும் ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு அமைப்பை/ ஏற்பாட்டை மத்திய அரசு உருவாக்கியிருக்கவில்லை. ஏன் அது உருவாக்கப்படவில்லை? மத்திய அரசு இந்தப் பிரச்சினையை ‘சீரியஸாக’ அதாவது தலை போகிற பிரச்சினயை எடுத்துக் கொள்வதில்லை என்பதைக் காட்டுகிறது.
இது போன்ற விஷயங்களில் மாநில அரசின் கருத்தை அது கேட்டு அறிந்து கொள்ளவோ, அல்லது மாநில அரசே முன் வந்து கருத்துத் தெரிவித்தாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது. ஆட்சிக்கு வந்ததும் ஜூன் 14ம் தேதி மன்மோகன் சிங்கை ஜெயலலிதா நேரில் சந்தித்துக் கொடுத்த மனுவில் இதைப் பற்றி விளக்கமாகவே தமிழக அரசின் நிலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதைப் போன்ற மனோபாவம் நம் அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொண்டிருக்கும் கூட்டாட்சிth தத்துவத்திற்கே (Federal structure) விடப்படும் சவால்.
மத்திய அரசு மீனவர்களைக் காப்பது இருக்கட்டும். மத்திய அரசின் அலட்சியத்திலிருந்தும் ஆணவத்திலிருந்தும் நாட்டைக் காக்க வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது.