அமி புஜ்தே பார்ச்சி நா.
என்னடா, ’ஒன்றுமே புரியலை’ என்பதை இளந்தமிழன் எப்படி வங்கமொழியில் சொல்கிறான் என்று முழிக்கிறீர்களா? அதற்கு விடை அப்புறம்.
இப்போ எங்க ஒர் கதை ஒன்று கேளுங்க. ஒரு கல்யாணம். கல்யாணம்னா வாழ்த்துச் சொல்ல ஆளிருப்பது போல வயிறெரியறவங்களும் இருப்பாங்கள்ல.
அப்படி ஒரு வயித்தெரிச்சல் பார்ட்டி, கல்யாணத்தை ‘எப்படியாவது’ நிறுத்திடணும்னு நினைச்சு, என்ன செய்யலாம்னு ரூம் போட்டு யோசிச்சது. கடைசியில் அவர்கள் எடுத்த முடிவு மணப்பெண் தலை சீவப் பயன்படுத்தும் சீப்பை ஒளித்து வைப்பது.
பார்த்தீங்களா, கதையை முடிக்கும் முன்பே, ‘முட்டாப்பசங்க’னு சிரிக்கிறீங்க. அப்படித்தான் நானும் சிரிச்சேன், உங்களைப் பார்த்து.
கோபப்படாதீங்க. உங்கள் மாநிலத்தில் உள்ள பள்ளிப் புத்தகங்களிலிருந்து கார்ல் மார்க்ஸ் பற்றின பாடங்களையெல்லாம் அகற்றிடணும்னு சொல்லியிருக்கீங்களே, அதற்கும் கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்து வைத்த ’புத்திசாலித்தனத்திற்கும்; என்ன பெரிய வித்தியாசம்?
கார்ல்மார்க்ஸ் உலக வரலாற்றில் ஒரு நாயகர். ஓளித்து வைக்க முடியாத சிந்தனையாளர். அவரை ஏற்றுக் கொள்கிறோம் அல்லது எடுத்து வீசுகிறோம் என்பது வேறு விஷயம். ஆனால் அவரை அறிந்து கொள்ளாமல் ஒரு மூளை முழு வளர்ச்சி காண முடியாது
காரத் (பிரகாஷ்) மீதுதான் உங்களுக்குக் கடுப்பு. கார்ல் மார்க்ஸ் மீது என்ன காண்டு? கம்யூனிஸ்ட்கள் மீது மட்டுமல்ல, கம்யூனிசத்தின் மீதே உங்களுக்கு கசப்பு என்றே வைத்துக் கொண்டாலும், ஒரு சித்தாந்தத்தை முறியடிக்க சிறந்த வழி இருட்டடிப்பு இல்லை அக்கா. வாதிட்டு ஜெயிப்பதுதான் வழி. அதற்கு அந்த சித்தாந்தத்தை அறிந்து கொள்வது என்பதுதான் ஆரம்பப் பாடம். அறிவைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு, எல்லோருமே உங்களைப் போல தெருவில் இறங்கித் தாண்டவமாடுவது என்று ஆரம்பித்தால் ஊர் என்னாகும்?
சித்தாந்தங்களுக்கு அப்பால் மார்க்ஸ் என்ற மனிதனின் வாழ்க்கையிலிருந்து அறிந்து கொள்ள ஒன்றுமே இல்லையா? பத்திரிகையாளனாகத் தனது சுதந்திரத்திற்கு அவர் போராடியதைப் படிக்கும் எந்த எழுத்தாளனுக்கும் சொரணை பிறக்கும். ஜென்னி மீது அவர் கொண்டிருந்த காதலைப் படிக்கும் போது நெஞ்சு நெகிழும். எங்கல்சோடு அவர் நடத்திய கடிதப் போக்குவரத்துக்களில் நட்பு மிளிரும். ’அவள் பிறந்த போது தொட்டில் வாங்க வசதியில்லை, அவள் இறந்த போது சவப்பெட்டி வாங்கக் காசில்லை’ என்று குழந்தை இறந்த போது எழுதிய வரிகளைப் படிக்கும் போது இதயம் கசியும்.
நம்மை அடுத்து வருகிற தலைமுறை நம்மை விட மேம்பட்டது என்பது அறிவியல். அந்த நம்பிக்கை இருப்பவர்கள் இளைஞர்களுக்கு எல்லாவற்றையும் அறிமுகப்படுத்துவார்கள். எல்லாவற்றையும் அறிந்து கொள்கிற உரிமையையும், அவற்றிலிருந்து சிறந்ததைத் தேர்ந்து கொள்கிற சுதந்திரத்தையும் அவர்களுக்கு அளிப்பார்கள்.
இன்று எதையுமே ஒளித்து வைக்க முடியாது என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். இணையம் என்ற ஓர் பாற்கடல் நம் முன் விரிந்து கிடக்கிறது. ஆம். பாற்கடல். அமுதும் விஷமும் ஒரு சேரக் கிடக்கிற கடல் கூகுள், விக்கிப்பீடியா என்ற மத்துக்களை விட்டுக் கடைந்தால் அதற்குள்ளிருந்து எல்லாம் ஊர்வலமாகப் புறப்பட்டு வரும்.
நீங்கள் மேலே படித்த வங்க மொழி வரி கூட அப்படிக் கிடைத்ததுதான்.
நீங்கள் வகுப்பறையிலிருந்து மார்க்ஸை வெளியேற்றலாம். ஆனால் இணையத்திலிருந்தும் ஒரு தலைமுறையின் இதயத்திலிருந்தும் எடுத்து எறிந்து விட முடியாது. அவர்கள் அடுத்த தலைமுறைக்கு அவரை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள்.
உங்கள் தாகூருக்கு நிகராக ஒரு மகாகவி எங்கள் ஊரிலிருந்தும் இருந்தான். அவன் உங்களைப் போன்ற ஆட்சியாளர்களுக்காக ஒரு கவிதை எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறான்.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; வெந்து தணிந்தது காடு
மறந்து விடாதீர்கள் மார்க்ஸ் ஒரு அக்கினிக் குஞ்சு. மறைத்து வைக்க நினைத்தால் விளைவுகள் விபரீதமாகிவிடும்.
அன்புடன்
இளந்தமிழன்