பகுதிகள் அனைத்தையும் கூட்டிப் பார்த்தாலும், முழுமை என்பது அவற்றை விட பெரிது (“The whole is greater than the sum of its parts”) என்று அரிஸ்டாட்டிலுடைய கூற்று ஒன்று உண்டு. புரிகிற மாதிரி சொல்வதென்றால், யானையின் கால்களைப் பார்த்தவர்கள் யானை தூண் போல இருக்கும் எனலாம். வாலைக் கண்டவர்களுக்கு அது கயிறு. வயிற்றைக் கண்டவர்களுக்கு அது சுவர்.காதைக் கண்டவர்களுக்கு அது முறம். எல்லவற்றையும் சேர்த்துத் தொகுத்துப் பார்க்கும் போது அது தூணும் அல்ல, சுவரும் அல்ல, கயிறும் அல்ல, முறமும் அல்ல. அரிஸ்ட்டாட்டிலின் கூற்றை நம் உடலில் இருந்து அரசாங்கங்கள் வரை பொருத்திப் பார்க்கலாம். அப்போது ஒரு விஷயம் தெளிவாகும். அது-
துண்டு துண்டாக நாம் பார்க்கும் சம்பவங்கள், தகவல்கள் இவற்றைவிட முழு உண்மை பெரிது
அரிஸ்ட்டாட்டிலின் இந்தக் கருத்து எதற்கு அல்லது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ மகுதூம் சாயபுக்குப் பொருந்தும்.
சி.கு.மகுதூம் சாயபு தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவர். 1887ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் நாள், திங்கள் கிழமை தோறும் பிரகடனம் செய்யப்படும் என்று அறிவித்துக் கொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியான தமிழ் இதழின் ஆசிரியர். தனது இதழ்கள் மூலம் அவர் முன் வைத்த கருத்துக்களுக்காகவும். சமூக விமர்சனங்களுக்காகவும், மதநல்லிணக்கப் பார்வைகளுக்காகவும். மக்கள் பேச்சு வழக்கிற்கருகில் இதழின் நடையைச் கொண்டு சென்றமைக்காகவும் பாரட்டப்பட வேண்டியவர். ஆனால் அண்மைக்காலம் வரை அவரைப் பற்றியோ, அவரது இதழியல் பங்களிப்புகள் குறித்தோ தமிழில் செய்யப்பட்ட ஆய்வுகளோ, பதிவுகளோ மிகக் குறைவு..
ஆனால் தமிழ் இலக்கிய உலகில் அவர் செய்யாத பங்களிப்பிற்காக நிறையவே விவாதிக்கப்பட்டிருக்கிறார்! சிங்கப்பூரின் முன்னணி எழுத்தாளர்களும் விமர்சகர்களுமான, நா.கோவிந்தசாமி, ஜே.எம்.சாலி. ஸ்ரீலக்ஷ்மி, பால. பாஸ்கரன் போன்றோர் அவரைப் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார்கள். சிங்கப்பூரின் முதல் சிறுகதையை மட்டுமல்ல, தமிழின் முதல் சிறுகதையையே எழுதியவர் மகுதூம் சாயபுதான் என்று நா கோவிந்தசாமியும், அவர் எழுதியது நாவல் என்று ஜே.எம்.சாலியும் சொல்லியிருக்கிறார்கள். ”எட்கார் ஆலன் போ, பிராண்டர் மாத்யூஸ் போன்றோரின் சிறுகதை இலக்கணத்தைப் பெற்று மிகச் சிறப்பாக சிங்கப்பூர் தமிழில் இது எழுதப்பட்டுள்ளது” என்று நா.கோவிந்தசாமி சாயபுவைக் கொண்டாடுகிறார். அவரை அடியொற்றி பலரும் சிங்கப்பூரின் முதல் தமிழ்ச் சிறுகதையை எழுதியவர் சாயபு என்றே தங்கள் ‘ஆய்வேடு’களிலும் பத்திரிகைக் கட்டுரைகளிலும் இலக்கிய வரலாற்றிலும் எழுதி வந்தனர்/வருகின்றனர் (பால. பாஸ்கரன் ஒரு விதி விலக்கு) ஆனால் உண்மை என்னவெனில்-
மகதூம் சாயபு கதை ஏதும் எழுதியதில்லை!
அவர் தனது சிங்கை நேசன் இதழில் ஐந்து “சம்பாஷணை”களை 1887. 1888. 1890 ஆகிய ஆண்டுகளில் எழுதினார். அவற்றில் இரண்டை விநோத சம்பாஷணை என்று குறிப்பிட்டார். அந்த இரண்டில் ஒன்றிற்கு A novel in Singapore Tamil என ஆங்கிலத்திலும் தலைப்பிட்டார்.
இவற்றில் மேலைநாட்டார் வகுத்த சிறுகதை லட்சணங்கள் அதாவது சம்பவம், உணர்ச்சி சார்ந்த ‘கதை’, மற்றும் வாசிப்பவரிடம் உணர்ச்சி ஒருமை (Single effect) இல்லை என்ற காரணங்களால் இவற்றைச் சிறுகதைகளாகக் கொள்ள இயலாது என்பது பால.பாஸ்கரனின் வாதம். அந்த நாள்களில் பாத்திரங்கள் சம்பவங்கள் பற்றிய அதிக விவரிப்பு இல்லாமல், சிறுகதைகளில் பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்வதை நாடகம் போல, பாத்திரத்தின் பெயரையும் அதன் முன் ஒரு அரைப்புள்ளியும் போட்டுவிட்டு வசனத்தை எழுதுகிற பாணி ஒன்றிருந்தது (சிறுகதை இலக்கணத்தை நன்கறித்த அ.மாதவையாவின் கதைகளில் இதனைப் பார்க்கலாம்.: அவரது கண்ணன் பெருந்தூது ஒரு உதாரணம்..அந்தக் கதையை உருவ வார்ப்பிற்குச் சிறந்த உதாரணம் என்கிறார் புதுமைப் பித்தன்) அதனடிப்படையில் கோவிந்தசாமி இதனைச் சிறுகதை எனக் கருதியிருக்கலாம்
சாய்புவின் விநோத சம்பாஷணை என்ற சொல்லாடலும், Novel என்ற சொல்லும் குழப்பத்தை அதிகரித்திருக்க வேண்டும். இது தொடர்பாக வேறு சில செய்திகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவை
· அன்று விநோதம் என்ற சொல் புதுமை என்ற பொருளில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.1893ல் நா.வ.ரங்கசாமிதாசனால் ‘அதிவினோதக் குதிரைப் பந்தய லாவணி’ என்ற நூல் ஒன்று சிங்கப்பூரில் வெளியாகியிருப்பதை இந்த இடத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும். லாவணி என்ற கவி வடிவம் விநோதமானது அல்ல. நாட்டார் வழக்கில் இருந்து வந்தக் கலை வடிவம் அது. அப்படியானால் அதில் ‘அதி வினோத’மானது எது? உள்ளடக்கம்தான். 1887ல் மகதூம் சாயபுவின் குரு சதாசிவப் பண்டிதரால் எழுதப்பட்டு வெளியான சிங்கை நகர் அந்தாதியில் அந்நாள் சிங்கை சமூகம் பற்றிய செய்திகளைக் காண முடியாது. ஆனால் அதி வினோத குதிரைப்பந்தய லாவணி முழுக்க முழுக்க எளிய மக்களின் கப்பல் பயணத்தை விவரிக்கும் நூல். பண்டிதருடையது கடவுளைப் பற்றியது. தாசனுடையது மக்களைப் பற்றியது. நெடிய பக்தி இலக்கிய மரபும், அரசர்களையும் ஆட்சியாளர்களையும் பற்றி எழுதும் வரலாறும் கொண்ட தமிழ் இலக்கியத்தில் மக்களைப் பற்றி எழுதுவது விநோதம் அதாவது புதுமைதானே? இந்த விநோதத்தைக் கருதித்தான் சாயபு Novel என்ற சொல்லையும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
· அரசியல் சமூக விஷயங்களை உரையாடல் பாணியில் எழுதும் வழக்கம் பத்திரிகையாளர்களிடம் அன்று பிரபலமாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், ஹிந்து, சுதேசமித்ரன் பத்திரிகைகளைத் தொடங்கியவருமான ஜி.சுப்ரமணியம் சுய அரசாட்சி வினா விடை என்ற நூலை 1883ல் வெளியிட்டுத் தமிழில் அந்தப் போக்கைத் துவக்கி வைத்தார். இதனை சாய்பு அறிந்திருக்கலாம் (முதல் காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் பற்றி சிங்கைநேசனில் சாய்பு எழுதியிருக்கிறார்) அன்று நாளிதழ் வாசிப்பு என்பது இன்றுபோல் அறைக்குள் அமர்ந்து மேற்கொள்ளும் தனிவாசிப்பாக இல்லை. பூங்கா போன்ற பொது இடங்களில் ஒருவர் வாசிக்க பலர் கூடிக் கேட்கும் வழக்கமிருந்தது. அதனால் இந்த உரையாடல் வடிவங்களுக்கு வரவேற்பிருந்தது.(ஒரு பிரதியை 25 பேர் சேர்ந்து கேட்கும் வழக்கத்தைக் கிண்டலடித்து சாயபு எழுதியிருக்கிறார்)
- மொழி பற்றி அறிவூட்ட இந்த உரையாடல் வடிவம் இதழ்களில் நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வடிவம். அண்மைக்காலம் வரை இந்து ஆங்கில நாளிதழ் Know Your English என்ற பகுதியில் இந்த வடிவத்தைப் பின்பற்றி வந்தது. “சம்பாஷணைப் பிரியரே இங்கிலீஷிலே அநேக Novels நூதனக்கட்டுக்கதைகள் பார்த்திருக்கிறீரா? அவைகள் சில விஷயங்களையுட்பொதிந்து பற்பல பாஷை நடையிலே எழுதப்பட்டிருக்கின்றன அவற்றை வாசித்து வருகில் இங்கிலீஷ் நடை நன்றாகக் கற்றுக் கொள்ளலாம். தமிழிலேயும் அப்படி அநேகக் கட்டுக்கதைகள் இருந்தும் சிங்கப்பூர் தமிழைப் பிற தேசத்தார் அறியும் பொருட்டே ஓர் சம்பாஷணையாக எழுதத் தொடங்கினோம்” என்று ஒரு வாசகருக்கு விடையளிக்கிறார் சாயபு (17 செப்டம்பர் 1888)
இந்த விளக்கமளித்தற்குப் பிறகு எழுதப்படும் சம்பாஷணையில்தான் (அந்த சம்பாஷணையில் மட்டும்தான்) Novel என்ற ஆங்கிலக் குறிப்பையும் எழுதுகிறார் சாயபு. அதுமட்டுமன்றி அந்த சம்பாஷணை மட்டும்தான் மொழிபற்றியது என்பதும் கவனிக்கத் தக்கது
**
சாயபுவின் சம்பாஷணைகள் சிறுகதையல்ல என்பதற்கான வலுவான வாதங்களை வைக்கும் பால.பாஸ்கரன், ”அவர் (மகுதூம் சாயபு) இங்கேயே (சிங்கப்பூரிலேயே) பிறந்தவர் போலத் தெரிகிறது என்று ஓர் ஊகத்தின் அடிப்படையில் எழுதுகிறார், சாயபு தமிழகத்தில் உள்ள பொறையாறு என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது அவர் அச்சிட்ட ”செவத்த மரைக்காயரின் மலாக்கா பிரவேசத் திரட்டு” (1886) என்ற நூலின் முன்னட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது மகதூம் சாய்பு ஆங்கிலம், தமிழ், மலாய், அரபி மொழிகள் அறிந்தவர். அவர் ஆங்கிலம் அறிந்தவர் என்பதை மேலே கொடுத்துள்ள, வாசகருக்கு அவர் அளித்துள்ள மறுமொழியிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. தமிழறிவைத் திருக்குறள் மீது கொண்டுள்ள பற்றின் மீதும், அவ்வையார் போன்றோரை மேற்கோள் காட்டுவதிலிருந்தும் தெரிந்து கொள்ள முடிகிறது. யாழ்ப்பாணம் சதாசிவப் பண்டிதரை அணுகித் தமிழ் கற்றவராகக் குறிப்பிடப்படுகிறார். அவரது சம்பாஷணைகளில் நிறைய மலாய், அரபி, உருதுச் சொற்களைப் பார்க்க முடிகிறது.
மொழிப்புலமை மிக்கவராக இருந்த போதிலும் பத்திரிகையின் மொழி நடையை மக்கள் பேச்சு வழக்கிற்கு அருகில் எடுத்துச் செல்ல முயன்றிருக்கிறார். “சம்பாஷணைகள்” தவிர ஆங்காங்கு ஏராளமான பழமொழிகளையும் சொலவடைகளையும் பயன்படுத்துகிறார். (“நாயின் வாலுக்குத் தடிக்கம்பு கட்டி எத்தனைநாள் வைத்த போதிலும் கூனல் நிமிருமா?”) ஆனால் இந்த முயற்சி சில நேரங்களில் உற்சாக மிகுதியில் தறிகெட்டுப் பாய்கிறது.(“ஏஸ் ஏஸ் தெரியும் தெரியும் அச்சா அச்சா பெகுத் அச்சா கடலே டால் ஆடா சாயா போலே காஸீ லுபூஞா சுக்கா பூஞா மச்சம். ஓல் றைட் பத்திரிகை உபயோகத்தைச் சொல்லும்” – பத்திரிகையின் உபயோகம் வினோத சம்பாஷணை)
மொழியறிவைக் காட்டிலும் அவரது சமூக நோக்கு கவனிக்கத் தக்கது. . சிங்கை நேசன் பேரரசி விக்டோரியா அரியணை ஏறிய நாளின் ஐம்பதாமாண்டில் அவருக்கு சமர்ப்பணம் செய்து வெளியிடப்பட்டது. ‘கவர்மெண்டு உதவியோடு’ பத்திரிகை நடப்பதாக அவரே ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். அதனால் அதன் சமகாலத்தில இந்தியாவில் வெளியாகிக் கொண்டிருந்த பத்திரிகைகளைப் போல ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கெதிரான விமர்சனங்களை சிங்கை நேசனில் எதிர்பார்ப்பதற்கில்லை. என்றாலும் ஆங்கில அரசின் நிதி நிலை அறிக்கை பற்றிய தலையங்கம் ஆங்கில அரசு நாட்டின் பாதுகாப்பிற்கும் அவர்களின் ஆடம்பரச் செலவுகளுக்கும் பெரும் பணம் ஒதுக்கப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறது.
அவரது ஆங்கில ஆட்சியாளர்கள் மீதான விசுவாசம். நீதிக் கட்சியினரைப் போல சமூக நீதியின் மீதுள்ள ஆர்வத்தினால் எழுந்தது. ஆங்கில ஆட்சியாளர்கள்தான் தாங்கள் ஆண்ட பகுதிகளில் நாடாளுமன்ற ஜனநாயக முறைகளுக்கு வித்திட்டார்கள், சமூக நீதி குறித்த சிந்தனைகளை ஊக்குவித்தார்கள், கல்வியை நிறுவனமயமாக்கினார்கள், சட்டம் ஒழுங்கை நெறிப்படுத்தினார்கள் என்பது வ்ரலாறு நமக்குச் சொல்லும் உண்மைகள். பேரரசி ஆட்சியின் பொன்விழாவைப் பற்றி நீண்டதொரு கட்டுரை எழுதும் சாய்பு, “தீவட்டிக் கொள்ளைக்காரர் எங்கே? இடக்கை வலங்கைச் சண்டை எங்கே? என ஆங்கிலேய ஆட்சியின் பலன்களை அடுக்கிக் கொண்டே போவதிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம்
கல்வி, தமிழ்ச் சமுகம் ஆகியவற்றின் மீது மிகுந்த அக்கறையோடு சாயுபு பல தலையங்கங்களையும் பத்திகளையும் எழுதியுள்ளார்.
அவரிடம் மதம் சார்ந்த குறுகிய பார்வை இருந்ததற்கான தடயங்களை அவரது எழுத்தில் காண இயலவில்லை.மாரியம்மன் கோயில் வழக்கைப் பற்றி எழுதியிருப்பதைப் போலவே சவுத் பிரிட்ஜ் ரோட் குத்துப் பள்ளிவாயிலைப் பற்றியும் எழுதுகிறார். பழுதடைந்திருக்கும் பள்ளிவாயிலைப் பழுதுபார்க்க 10 யோசனைகளை முன் மொழியும் சாய்புவின் தலையங்கம், அதை அந்தச் சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும்தான் முன்னின்று செய்ய வேன்டியதில்லை மக்களுக்குச் சேவை செய்ய விருப்பமுள்ளவர் எவரும் செய்யலாம் என்க் கூறுவது அவரது பார்வையின் விரிவைச் சுட்டுகிறது
இவை எல்லாவற்றையும்விட என்னை ஈர்த்த விஷயம். அவர் சிங்கை நேசனை நடத்துவதற்கு முன் சில பத்திரிகைகளை நடத்திக் கையைச் சுட்டுக் கொண்டவர் என்ற போதிலும் பத்திரிகைத் துறையை விட்டுவிடாத அவரது பிடிவாதம்.. அது ஒரு பத்திரிகையாளனின் இயல்பு பத்திரிகைப் பணியை விரும்பி ஏற்றுக் கொண்டுவிட்ட ஒருவன் என்ன படித்திருந்தாலும், வேறு எத்தகைய திறன்கள் இருந்தாலும் அவனால் அவற்றைக் கொண்டுப் பொருளீட்டி வாழ்கிற வாழ்வை மேற்கொள்ள முடியாது. பட்டினி கிடக்க நேர்ந்தாலும் பத்திரிகைத் தொழிலே கதி என்று மல்லுக்கட்டுவான் அது ஒரு மனோபாவம் பாரதி பத்திரிகைப் பணிக்கு வந்த பிறகு, அவரது பத்திரிகைகள் முடக்கப்பட்ட நிலையிலும் வேறெந்தத் தொழிலுக்கும் செல்லவில்லை என்பது நினைத்துப் பார்க்கத் தக்கது.
“முந்தி நம்மால் நடைபெற்ற சிங்கை வர்த்தமானி என்ற பத்திரிகைக்கு றிங்கி 500 வர வேண்டியிருந்தது அது பத்திரிகையோடு போனது .தங்கைநேசன். ஞானசூரியன் என்ற பத்திரிகைகள் நிலுவையும் அந்தந்த பத்திரிகையோடு போயின. ஆனால் சிங்கை நேசன் நிலுவையப்படி யொருகாலும் போக விட மாட்டோம் ” என்று அவர் எழுதுவதைப் படிக்கும் போது அவர் மீண்டும் மீண்டும் நஷ்டப்பட்ட போதிலும் பத்திரிகைத் தொழிலில் இருந்து வெளியேற அவருக்கு மனமில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இத்தனைக்கும் அவருக்குப் பொருளீட்ட ஓர் அச்சகம் இருந்தது. அதில் வேலைகளும் காத்திருந்தன. அவற்றை ஒதுக்கிவிட்டு பத்திரிகையில் ஆர்வம் செலுத்தினார் என்பது கவனிக்கத் தக்கது.
உலக விஷயங்களில் விரிந்த பார்வையும், சமூக விஷயங்களில் கூர்மையான விமர்சனமும், நையாண்டியும் அங்கதமும் கலந்த எழுத்தும் அவரை ஒரு சர்ச்சைக்குரிய நபராக பலரால் கருத வைத்திருக்கும் என்று எனக்குக் கருதத் தோன்றுகிறது. ஏனெனில் “இவ்வூரில் நாம் நியாயமாகவிருந்து காலங்கழிக்க வேண்டுமானால் ஒருவன் பகையைப் பெற்றுக் கொள்ளக் கூடாது புத்திமான் பகையோ ஒன்றுஞ் செய்யாது புத்தியில்ல்லாதவன் பகையதிக கொடுமையைத் தரும் என்று முதியோர் சொல்லியிருக்கிறார்கள் அறியாதவர்களுக்குச் சொல்ல வேண்டும் அறிந்தோர்க்கெப்படிச் சொல்வது?” என்று சாயபு ஓரிடத்திலே எழுதுகிறார். சிங்கை நேசன் அவரது முதல் பத்திரிகை அல்ல. 1975 ஆம் ஆண்டு, அதாவது சிங்கை நேசன் தொடங்குவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு (சிங்கை நேசனை அவர் தன் நடுவயதில் தொடங்கியிருப்பாரேயானல், அவரது இளமையில்) சிங்கை வர்த்தமானியைத் தொடங்குகிறார் சாய்பு. அது நின்று போன காரணத்தை அவர் “ அது கொஞ்சகாலம் நிலைபெற்று, குற்றஞ் சொல்லி விலகவே அது அழிந்து போனது இரண்டாவதாக தங்கை நேசன், இதுவமப்படியே முன்றாவதாக ஞானசூரியன் இதுவமப்படியே. இப்போதோ சிங்கை நேசன். இது தலையிலும் கையை வைத்து ஒருவருக்கொருவர் சள்ளுப்பட்டுவிட நினைத்தால் நமக்கென்ன யோக்கியதை இருக்கிறது?” இந்த வரிகளின் பின்னுள்ள மனம் எத்தகையது? உண்மைகளைச் சொல்ல நினைத்து உதை வாங்கிக் கொள்கிற வாழ்க்கை பத்திரிகையாளனுடையது. யதார்த்தவாதி வெகுஜன விரோதி என்பது வேறெந்தத் தொழிலையும்விட பத்திரிகைத் தொழிலுக்காக உருவாகிய சொலவம்.
*
தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவரான சிங்கை மகதூம் சாய்புவின் அறியாத முகங்களை, அவரது ஆளுமையின் போற்றுதலுக்குரிய பரிணாமங்களை கோட்டி.திருமுருகானந்தம் ”சி.கு. மகுதூம் சாயபுவும் சிங்கை நேசனும் –ஓர் ஆய்வு” என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். சிங்கை தேசிய நூலகத்தில் நுண்படச்சுருளுக்குள் பதிந்து கிடக்கும் மூன்றாண்டு கால சிங்கை நேசனின் 151 இதழ்களையும் முற்றாக வாசித்துக் குறிப்பெடுத்துத் தரவுகளைச் சேகரித்து அவற்றை மகதூம் சாய்பு மற்றும் சிங்கை நேசன் குறித்து முன்னர் வந்த ஆய்வுகளோடு ஒப்புநோக்கி, அவற்றில் உள்ள தவற்றைச் சுட்டி, வரலாற்றை நிமிர்த்தி முருகானந்தம் இந்த நூலை நமக்களித்திருக்கிறார். அந்த வகையில் அண்மையில் வெளியான இந்த நூல் ஒரு முக்கியமான ஆவணம். சிங்கப்பூர் இலக்கிய வரலாற்றில் மீண்டும் மீண்டும் தவறாகச் சொல்லப்பட்டு நிறுவப்பட்டுவிட்ட பிழையான தகவல்களைத் தரவுகள் மூலம் தகர்த்தெறியப்பட்டிருக்கின்றன.. எனவே இதழியியல் வரலாற்றிற்கு மட்டுமல்ல, இலக்கிய வரலாற்றிற்கும் இது ஓர் முக்கியமான நூல்