இருள் என்பது குறைந்த ஒளி. மகாகவி பாரதியின் மாணிக்க வரிகளில் ஒன்று இது. வெளிச்சம் குறைந்தால் இருட்டு என்பது சின்னக் குழந்தைக்கும் தெரிந்த உணமை. அதைதான் சொல்கிறாரா பாரதி? இந்த எளிய கருத்தைச் சொல்ல மகாகவியா வர வேண்டும்? உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்ற அவரது வார்த்தைகளை அறிந்தவர்களுக்கு அவர் வேறு எதையோ உணர்த்த முற்படுகிறார் என்பது புரியும். அது என்ன? அது இதுதான்: அறிவில் ஒளி குறையுமானால் மனதில் இருள் தோன்றும்.

அந்த இருள் அச்சமாக இருக்கலாம். ஆணவமாக இருக்கலாம். அறியாமையாக இருக்கலாம். சுயநலமாக இருக்கலாம். பொறாமையாக இருக்கலாம். இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஒளி குன்றிய அறிவு. இதுவே இன்றைய பல பிரச்சினைகளுக்குக் காரணம்.

சரியோ தவறோ இன்று நம் வாழ்க்கை மின்சாரத்தைச் சார்ந்ததாகிவிட்டது. கைத் தொலைபேசியை ‘சார்ஜ்’ செய்வதிலிருந்து தொழிற்சாலைகளை இயக்குவதுவரை நமக்கு மின்சாரம் வேண்டியிருக்கிறது. உணவு,உடை, வீடு, காற்று, நீர் போல அதுவும் ஓர் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது.

ஆனால் மின் உற்பத்தியில் பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த சில நாட்களாக இந்தப் பற்றாக்குறை கடுமையாகி இருக்கிறது. காரணம் தெலுங்கானாவில் நடந்து வரும் கிளர்ச்சி. ஒடிஷாவில் ஏற்பட்ட வெள்ளம்.தமிழகம் இந்த இரு மாநிலங்களிலிருந்தும் கணிசமான அளவு மின்சாரம் பெற்றுவருகிறது. கடந்த ஆண்டில் தமிழகத்தின் மின் உற்பத்தி 25784 மில்லியன் யூனிட்கள் (மி.யூ). அதே ஆண்டில் தமிழகம் மற்ற மாநிலங்களிலிருந்தும், மத்தியத் தொகுப்பிலிருந்தும் வாங்கிய மின்சாரத்தின் அளவு 49206 மி.யூ. அதாவது நாம் உற்பத்தி செய்ததைவிட வாங்கிய மின்சாரத்தின் அளவு ஏறத்தாழ இருமடங்கு

தமிழகம் மின்பற்றாக்குறையிலிருந்து விடுபட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி மின் உற்பத்தியை அதிகரிப்பதுதான். அதுவும் கணிசமான அளவு பெருக்குவதுதான். தமிழகத்தின் பாயும் நதிகளின் நீர்வரத்து அண்டை மாநிலங்கள் அனுமதிப்பதைப் பொறுத்து இருக்கிறது. காற்று ஆண்டு முழுதும் கிடைக்காது. சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்வது அதிக செலவும், இடமும் பிடிக்கும். இவை எதைக் கொண்டும் கணிசமான அளவு மின்னுற்பத்தி செய்ய இயலாது. நிலக்கரி, பெட்ரோல் வளி மண்டலத்தில் கரிப்படலங்களை ஏற்படுத்தி பருவ நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும். இந்தச் சூழலில் அணு மின்சாரம்தான் கணிசமான அளவில் உற்பத்திக்கான வழி.

அணு மின்சார உற்பத்தி ஆபத்தானது என்று பிரச்சாரம் நடக்கிறது. ஆனால் உலகம் முழுதும் 31 நாடுகளில் 440 அணு உலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் முப்பது வருடங்களில் 4 விபத்துக்கள்தான் நடந்திருக்கின்றன. இந்தியாவில் பெரிய அளவில் விபத்துக்கள் நடந்ததில்லை.

ஓடுகிற ஆறு, ஓசையிடும் கடல், வீசுகிற காற்று, அடுப்பில் எரியும் நெருப்பு, கண்ணுக்குத் தெரியாத மின்சாரம், அன்றாடம் புழங்கும் போக்குவரத்து, உறபத்திக்கு உழைக்கும் இயந்திரங்கள், ஏன் உணவில் கூட, விபத்துக்கான சாத்தியங்கள், பக்க விளைவுகள் உண்டு. அதற்காக அவையே வேண்டாம் எனச் சொல்லி விடுவோமா? தினம் சாலை விபத்துக்களைப் படிக்கிறோம். பயணங்களை நிறுத்தி விட்டோமா? ரயில்கள் விபத்திற்குள்ளாகின்றன எனத் தெரிந்தும் ஏன் முன்பதிவில் இத்தனை முண்டியடித்தல்? செல்போன் கதிரியக்கங்களைப் பற்றிப் படிக்கிறோம். அதை ஏன் மார்பில் சுமந்து திரிகிறோம்?

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டு உற்பத்தியில் இறங்குவதுதான் நடைமுறைக்கு ஏற்றது. கூடங்குளப் போராட்டக் குழுவினர் எந்த மாதிரியான பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டுப் பெறட்டும். அதை விட்டு பேச்சு வார்த்தையே நடத்தமாட்டோம், வல்லுநர்கள் உட்பட யார் சொன்னாலும் அதற்கு செவி மடுக்கமாட்டோம், அணு மின் நிலையத்தை மூடியே ஆக வேண்டும் எனக் கோருவது நியாயமானதல்ல.

புதிய தலைமுறை 20 .10. 2011