அடையாளங்களுக்கு அப்பால்..
எப்போதாவது ஒரு கவிதை உங்கள் முகத்தில் அறைந்ததுண்டா?
என் நண்பர் மகளுக்குத் திருமணம். கல்யாணப் பரிசாக வழங்கக் கவிதைப் புத்தகங்களைத் தேடிப் போயிருந்தபோது ஒரு கவிதை என்னை முகத்தில் அறைந்தது:
எப்போதோ ஒரு விடிகாலையில்
நம்மை எட்டவில்லை
அவனது அமைதியான அலறலும்
துடிதுடித்த முனகலும்.
அவன் தன்னந்தனியனாக இறந்து போனான்.
யார் அழுதார்கள்?
இறந்தது ஒரு மனிதனா? தேசமா?
அரசியல் கைதி என்று தலைப்பிடப்பட்ட இந்தக் கவிதையை எழுதியவர் ஜீன் அரசநாயகம் என்றது குறிப்பு. நான் அந்தப் பெயரை அதற்கு முன் அறிந்திருந்ததில்லை. கவிதை என்னை வதைக்கத் தொடங்கியது. தேசத்தைக் காப்பதற்காக மனிதர்களைக் கொல்வது, மனிதர்களைக் காப்பதற்காக தேசத்தை சாகடிப்பது இதில் எது உயர்ந்தது? இரண்டுமே அல்ல என்பதை இலங்கையின் இரத்தம் தோய்ந்த வரலாறு நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் இல்லாத தேசத்திற்கு எதிர்காலம் இல்லை. தேசங்கள் இல்லாத மனிதர்களுக்கு நிகழ்காலம் இல்லை.
தன்னந்தனியனாய் மரித்துப் போன அந்த அரசியல் கைதி என் சிந்தனையை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டான்.அவன் சாவிற்கு ஏதேனும் அர்த்தமுண்டா? அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டியது வாழ்க்கையா? சாவா? தேடல்கள் கொண்ட மனிதனாக இருந்திருந்தால் அவன் வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தமிருந்திருக்கும். தேடல்கள் கொண்ட மனிதனாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவன் சாதாரணக் கைதி அல்ல, அரசியல் கைதி.
அந்தப் புத்தகக் கடையை விட்டு வெளியேறிய போது ஜீன் அரசநாயகத்தின் நூல்கள் பலவற்றை வாங்கியிருந்தேன். நான் புத்தகக் கடைகளில் செலவழிக்கும் சில மணிநேரங்களில் என்னை ஈர்க்கும் ஆசிரியர்களின் நூல்களை மொத்தமாக வாங்கி வந்துவிடுவேன். நூல்களை, அது எத்தனை பெரிய கொம்பனுடையதாக இருந்தாலும், விமர்சனங்களைப் படித்து நான் வாங்கத் தீர்மானிப்பது இல்லை. என் உள்ளுணர்வை நம்பித்தான் வாங்கிப் படிக்கிறேன். கெட்ட வழக்கம்தான்.ஆனால் இதுவரை அநேகமாக என் உள்ளுணர்வு என்னைக் கை விட்டதில்லை.
அன்று நான் வாங்கிய நூல்களில் எதையும் பரிசாக அளிக்கவில்லை படிக்க ஆரம்பித்தேன். ஜீனின் கதைகளை வெறும் ‘கதைகளாக’ப் படித்து விட முடியாது. அதில் இலங்கையின் சமகால வரலாறு அழுந்தப் பதிந்து கிடக்கிறது.வெறும் வரலாறு அல்ல, அவை சாதாரண மனிதர்களின் சரித்திரம். In the garden secretly என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளிலேயே நெடியது, The Crossing என்ற கதை. தென்னிலங்கை நோக்கிப் பயணம் செய்யும் தமிழ் மாணவன் ஒருவரும், கிறித்துவப் பெண்மணி ஒருவரும் மாறி மாறி விவரித்துச் செல்வதாக விரிகிறது கதை. இருவரும் எந்த அரசியல் சித்தாந்தத்திலும் பிடிப்பில்லாத சாதாரண ஜனங்கள். அந்தப் பெண்மணி தனது மகன்களைப் பார்ப்பதற்காகப் போய்க் கொண்டிருக்கிறார். மாணவனது லட்சியமெல்லாம், படித்துக் கொண்டிருக்கும் பொறியியல் படிப்பை எப்படியாவது முடித்துப் பட்டம் பெறுவது. ” மகத்தான தியாகங்கள் செய்யவோ, போர்களத்தில் என் வீரத்தை மெய்ப்பிக்கவோ, சயனைட் குப்பியைக் கடிக்கவோ நான் தயார் இல்லை. எனக்குக் கடமைகள் இருக்கின்றன. செய்ய வேண்டிய காரியங்கள் இருக்கின்றன.அப்பாவைக் கவனித்துக் கொள்ள வேண்டும். சகோதரிக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும்.”
சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் இடையே சிக்குண்டு கிடப்பது இந்த சாதாரண மனிதர்களது வாழ்க்கைதான். “இந்த இரண்டு கொடும் விலங்குகளுக்கும் இடையில் என்றென்றும் மோதல். இந்த மோதல் எங்களைக் காடுகளுக்குள் துரத்துகிறது.இங்கு அழியும் ஆபத்துக் கொண்ட விலங்கு மனிதன்தான்” என்கிறது ஒரு கதையின் வரி.”சிதைவுற்ற இந்த வீட்டில் தனியாய் நிற்கும் இந்தத் தருணத்தில் எனக்கு என் வீடு ஞாபகம் வருகிறது.இங்கு வாழ்ந்தவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் நாடு கடந்து போயிருப்பார்கள். நாங்களும்தான் நாடு கடத்தப்பட்டவர்களைப் போல வாழ்கிறோம்.நாங்கள் தலைமுறை தலைமுறையாகப் பழகிய வீட்டை, பழகிய கலாசாரத்தை,பழகிய வாழ்க்கையைத் துறந்து வாழ நிர்பந்திக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்….” யாழ்ப்பாணத்தில் ஷெல்லடிக்குப் பலியான ஒர் வீட்டில் நுழையும் சிங்களப் படைவீரனின் எண்ணம் இப்படி அலைகிறது.
தமிழனோ சிங்களவனோ சாராம்சத்தில் வாழ்க்கையில் பெரிய வித்தியாசம் இல்லை. அச்சம் நிரம்பிய வாழ்க்கை. சந்தேகமும் கவலையும் நிரம்பிய வாழ்க்கை. மிக எளிய கனவுகள் கூட கைக்கெட்டாமல் போய்விட்ட வாழ்க்கை.வன்முறை என்பது எதார்த்தமாகிவிட்ட வாழ்க்கை. பிரசினகள் முற்றி நெருக்குகிறபோது கண்ணியத்தோடு வாழ்வதற்கு ஒரு மன உரம் வேண்டும். அர்த்தமற்ற வன்முறை எனபதும் முகமற்ற மரணம் என்பதும் விரவிக் கிடக்கிற தேசத்தில், மின்மினிப் பூச்சிகளைப் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒளிர்கிற மனிதாபிமானத்தை இனம் கண்டு கொள்ளவும், அங்கீகரிக்கவும் ஓரு தரிசனம் வேண்டும். இந்த இரண்டும் ஜீனின் கதைகளில் நிரம்பிக்கிடக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் அவரது கதைகளின் மறை பிரதி (sub text) அவைதான்.
இலங்கைச் சூழலில் இது முக்கியமானது. இலங்கையிலிருந்து இன்று நமக்குக் கிடைக்கப்பெறும் பல படைப்புக்கள், தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி, ஏதோ ஒரு நிலைபாட்டை நியாயப்படுத்துகிறவைகளாகவே இருக்கின்றன. அல்லது உலர்ந்த சித்தாந்த விசாரணைகளாக இருக்கின்றன. அல்லது அடையாளங்களை வலியுறுத்துகின்றவையாக இருக்கின்றன. ஆனால் வாழ்க்கை பற்றிய தரிசனங்கள் நியாயப்படுத்தல்களுக்கும், சித்தாந்தங்களுக்கும், அடையாளங்களுக்கும் அப்பாற்பட்டவை.
அடையாளங்கள் முக்கியமாகிவிட்ட இலங்கை வாழ்க்கையில், அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட தரிசனங்களுக்கு ஜீன் முயற்சிப்பது ஒருவகையில் இயல்பானது. ஜீன் சாலமன் அரசநாயகம் ஒரு பர்கர் இனப் பெண்மணி. (ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்களுக்கும் பிறந்தவர்களை இந்தியாவில் ஆங்கிலோ இந்தியர்கள் என்று சொல்வதைப் போல இலங்கையில் டச்சுக்காரர்களுக்கும் இலங்கையர்களுக்கும் பிறந்தவர்களை பர்கர் என்று அழைக்கிறார்கள்.)தியாகராஜா அரசநாயகம் என்ற தமிழரை மணந்தவர். தேவசுந்தரி, பார்வதி என்ற இரு பெண்களின் தாய். ஆங்கில இலக்கிய மொழியியலில் எம்.லிட் பட்டம் பெற்ற ஜீன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் போதிக்கும் பேராசிரியாகப் பணியாற்றியவர். ஒரு சிறுபான்மைச் சமூகத்தில் பிறந்து, இன்னொரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவரை மணந்து வாழ்ந்து வரும் ஜீனுக்கு இன மொழி மத அடையாளங்கள் அர்த்தமற்றுப் போயிருக்கலாம். அந்த அடையாளங்களுக்கு அப்பால் மனிதர்கள் என்ற அடையாளத்தை அவர் கதைகள் வலியுறுத்துகின்றன. போரில் சிதைவுற்ற ஒரு தமிழரது வீட்டிலிருக்கும் ஏசுவின் சிலையைப் பெரும் பொக்கிஷமாகக் கருதித் தன்னுடன் எடுத்துச் செல்லும் பெளத்த படைவீரனை இவரது In the Garden Secretlyயில் சந்திக்கலாம். அம்மன் கோயிலில் தஞ்சம் புகும் கிறித்துவப் பெண்மணியை The crossing கதையில் சந்திக்கலாம்.
நூலின் தலைப்புக்கதையான In the Garden Secretly யாழ் பகுதியில் நடந்த போரின் சிதைவுகளைப் பின்புலமாகக் கொண்டது. இன்னொரு கதையான Search My Mind 1988-91 காலகட்டத்தில் தென்னிலங்கையில் நடந்த புரட்சியின் பின்புலத்தில் அமைந்தது.(கவிஞரும், பத்திரிகையாளரும், நடிகருமான ராய் டிசெளசா,கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவில் கொண்டுவருவது) Sanctuary என்ற இன்னொரு கதை 1970களில் நடந்த சே குவாரா இயக்கத்தைப் பற்றியது. Quail’s nest என்ற கதையும் எண்பதுகளில் நடந்த இனக்கலவரத்தைப் பற்றியது.
ஜீனின் நடை பல எழுத்தாளர்களின் சிலாகிப்பைப் பெற்றது. ‘கெண்டியை வைத்துக் கொண்டு மாக்கோலம் போடுவது’ என்ற ஒரு பதப் பிரயோகத்தை தி.ஜானகிராமன் கதைகளில் படித்திருக்கலாம். அந்தச் சொற்றொடருக்கு உதாரணமாகச் சொல்லக்கூடிய நடை ஜீனுடையது. கெண்டி, மாக்கோலம் இவற்றை அறியாத இளம் தலைமுறையினருக்கு: ஏராளமான விவரங்கள் நுட்பமாகப் பதியப்பட்ட மொகலாய பாணி சிற்றோவியங்களை (miniatures) பார்த்திருப்பீர்களே அதைப் போன்றவை அவரது கதைகள்.
ஆனால் முக்கியமானது நடை அல்ல. ஜீன் உசுப்பிவிடும் சிந்தனைகள்தான். ஓர் உதாரணம்:
“நீ தினம் உறங்கிய படுக்கை, நீ உட்கார்ந்திருந்த மேசை, விரித்துப் போட்ட பாய், உன் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்த அத்தனையும் ஒரு நொடியில் முக்கியமற்றதாகிவிடுகிறது. உயிர் வாழ்தல் அது ஒன்றே முக்கியம். நீ எல்லாவற்றையும் விட்டுக் கிளம்பும் போது வீடு திரும்புவாயா என்று உனக்குத் தெரியாது. ஒருவேளை வீடு திரும்ப நேரிட்டாலும் அது மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று சொல்லமுடியாது. வீடு சிதிலமுற்றிருக்கும். நீ என் வீட்டுக்கு என் வீட்டுக்கு எனப் பார்த்துப் பார்த்து சேகரித்து நிரப்பியவை எல்லாம் முகந்தெரியாதவர்களால் களவாடப்பட்டிருக்கும். அப்போது உனக்குப் உறைக்கும்: நீ ஒரு போதும் உன் பழைய வீட்டிற்குத் திரும்ப முடியாது.”
வாழ்வின் பல சோகங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.
தமிழ்முரசு சிங்கப்பூர் ஆகஸ்ட் 16 2006