தாராபுரம் கோவைக்கு அருகில் இருக்கும் ஓர் சிறிய ஊர். அந்த ஊருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு சாலைவழியாகப் பயணம் செய்ய நேர்ந்தவர்கள், ஊர் ஆரம்பமாகும் இடத்தில் ஒரு குறுகிய பாலத்தைக் கவனித்திருகலாம். சில நேரங்களில் எதிரே வண்டி வந்தால் ஒதுங்க இடமிருக்காது என்பதால் அந்தப் பாலத்தின் அருகில் கார்கள் காத்திருக்க வேண்டியிருக்குமாதலால் அந்த வழியாகப் போகிறவர்கள் அந்தப் பாலத்தை நிச்சியம் பார்த்திருக்க முடியும்.
அந்தப் பாலத்திற்குப் பின்னால் ஒரு சோகக் கதை இருப்பது பலருக்குத் தெரியாது. பிரபலமான ஒரு நடிகர், அவருடைய தொழிலில் உச்ச கட்டத்தில் இருந்தார்.ஒரு நாளைக்குப் பதினைந்து மணி நேரம் நடித்துக் கொண்டிருந்தார். அவர் இல்லாமல் தமிழ்ப் படமே இல்லை என்ற நிலை இருந்த நேரம் அது. அவர் சென்னையிலிருந்து தள்ளி வெளிப்புறப்படப்பிடிப்பில் இருந்தபோது, அவரது அம்மா இறந்துவிட்டதாக செய்தி வந்தது. படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டுக் கிளம்பினார்.
அந்தநாள்களில் சிற்றூர்களில் யாராவது இறந்து விட்டால், இறந்தவர் எரியூட்டப்படுகிறவரை, ஊரில் உள்ளவர்கள், குறைந்தபட்சம் தெருவில் உள்ளவர்கள், சாப்பிட மாட்டார்கள். அதனால் நேரம் ஆக ஆக உடலை எடுத்துச் செல்வதற்கான நிர்பந்தம் அதிகரித்துக் கொண்டிருக்கும்.
அந்த நடிகருக்கும் அது தெரியும். அந்த ஊரில் வளர்ந்தவர்தானே. அதனால் தாயின் முகத்தைக் கடைசி முறையாகக் காண விரைந்து கொண்டிருந்தார். மாலை மறைந்து இருள் சூழத் துவங்குகிற நேரத்தில் ஊரின் விளிம்பை அடைந்துவிட்டார்.
பாலத்தில் கட்டை வண்டிகள் ஆடி அசைந்து போய்க் கொண்டிருந்தன. ஒன்றல்ல, இரண்டல்ல, 50 வண்டிகள்! வண்டிகள் கடந்து செல்வதற்காக, நடிகர் பாலத்தின் இந்தக் கரையில் காத்துக் கொண்டிருக்கும் போதே மறுபுறத்தில் அவரது அன்னையின் உடல் எரியூட்டப்பட்டுவிட்டது. அவர் இந்த முனையில் காத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரியாமலே.
இப்படி ஒரு துயரத்தைத் தன் வாழ்வில் சந்தித்த அந்த நடிகர், ஒரு நகைச்சுவை நடிகர். அவர் நாகேஷ்.
நாகேஷுக்கு சிறிய வயதில் நல்ல அழகான முகம்தான். அடுத்தடுத்து மூன்று முறை அம்மை வார்த்ததில் முகம் பல்லாங்குழி மாதிரி ஆகிவிட்டது. அந்த முகத்தை வைத்துக் கொண்டு சினிமாவில் ‘சான்ஸ்’ தேடி அலைந்து கொண்டிருந்தார். தற்செயலாக பாலாஜியின் நட்புக் கிடைத்தது. பாலாஜி அப்போது தயாரிப்பாளராக ஆகவில்லை. படங்களில் ‘பிசி’யாக நடித்துக் கொண்டிருந்தார். தன்னை ஒப்பந்தம் செய்ய வருகிறவர்களிடம், எனக்குக் கிடைக்கிற சம்பளத்தில் ஒரு தொகையைக் கழித்துக் கொள்ளுங்கள். அதற்கு பதில் நாகேஷுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்பாராம். சரி வரச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று பதில் வரும். ஆனால் நாகேஷின் முகத்தைப் பார்த்ததும் அவர்கள், நாகேஷையும் வைத்துக் கொண்டே, பாலாஜிக்கு போன் செய்து, உங்களுக்கு வேண்டுமானால் சம்பளத்தைக் கூட்டித் தருகிறோம்,ஆனால் இந்த மாதிரி மூஞ்சியை எல்லாம் அனுப்பி வைக்காதீர்கள் என்று சொல்வார்களாம்.
ஆனால் அந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர் நிகழ்த்திய சாதனைகள் பல. தமிழ் திரைப்பட உலகில் நான்கு காட்சிகளை காலம் காலமாக நினைவு வைத்துக் கொண்டு பேசிவருகிறார்கள். பராசக்தித் திரைப்படத்தின் நீதிமன்றக் காட்சி, வீரபாண்டிய கட்டபொம்மனில் நிகழும் கட்டபொம்மன் -ஜாக்சன் சந்திப்பு, திருவிளையாடலில் வரும் தருமி- சிவபெருமான் உரையாடல், நாயகனில் வரும் ‘அவனை முதல்ல நிறுத்தச் சொல்லு’ காட்சி. அப்படி ஒரு அழியாத இடத்தைப் பெற்ற காட்சியில் நடித்த நாகேஷ், திருவிளையாடல் வெற்றி விழாக் கொண்டாடியபோது அதற்கு அழைக்கப்படவில்லை!. அதுதான் சினிமா உலகம்!
அப்படிப் பொத்தாம் பொதுவாக சொல்லிவிடவும் முடியாது. அதன் இன்னொரு முகத்தை சிவக்குமார் நினைவு கூர்ந்தார். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வைத்தி பாத்திரத்தில் நடிக்க நாகேஷை அழைத்தார் ஏ.பி.நாகராஜன். ஒரு நண்பர் மூலம் அவருக்கு முன்பணம் கொடுத்தனுப்பப்பட்டது. வாங்க மறுத்துவிட்டார் நாகேஷ். டைரக்டரை என்னிடம் பேசச் சொல்லுங்க என்றும் சொல்லி அனுப்பிவிட்டார்.ஒருவேளை பணம் குறைவு என்று நினைக்கிறாரோ என்று எண்ணிய ஏ.பி.நாகராஜன், நாகேஷைத் தொடர்பு கொண்டார்.
நாகேஷ் மீது அப்போது ஒரு கொலைவழக்கு நடந்து கொண்டிருந்தது. அவர் எந்த நேரமும் கைதாகலாம் என்று வதந்திகள் உலவிக் கொண்டிருந்தன. ஏ.பி.நாகராஜனிடம் நாகேஷ் சொன்னாராம்," படம் முழுக்க வருகிற ஒரு முக்கியபாத்திரத்தில் நடிக்க என்னை அழைக்கிறீர்கள். நான் எந்த நேரமும் கைதாகி உள்ளே போகலாம். அப்படி நடந்து விட்டால் படம் நின்று போய்விடும். அல்லது மறுபடியும் காட்சிகளை படம் பிடிக்க வேண்டும். உங்கள் நன்மையை உத்தேசித்துத்தான் நடிக்க மறுக்கிறேன்" என்று தன் நிலையை விளக்கிச் சொன்னாராம்.
ஆனால் ஏ.பி.நாகராஜன் தன் நிலையில் உறுதியாக இருந்தாராம். "சரி அப்படியே கைதாகி உள்ளே போகிறாய் என்றே வைத்துக் கொள்வோம். சிறையில் எவ்வளவு நாள் இருப்பாய்? ஆறுமாதம்? ஒரு வருடம்? எத்தனை வருடமானாலும் சரி.நான் காத்திருக்கத் தயார். நீதான் வைத்தி. நீ வந்தால்தான் படம்"
நாகராஜனின் நம்பிக்கைக்கு எந்த லாஜிக்கும் கிடையாது. ஆனால் அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. தில்லானா மோகனாம்பாள் ஒரு ‘கிளாசிக்’ என்ற புகழுடன் நிலைத்துவிட்டது.
நடிக்க வாய்ப்புத் தேடி அலைந்த காலத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் (வெண்ணிற ஆடை), கவிஞர் வாலி, நாகேஷ், தாராபுரம் சுந்தரராஜன் ஆகிய நால்வரும் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்தவர்கள். நாகேஷ் அப்போது நாடகங்களிலும் நடித்து வந்தார். புகழ்பெற்ற நட்சத்திரமாக ஆகிவிடவில்லை. ஆனந்த விகடனில் வெளியான ஜெயகாந்தனின் கதையான ‘யாருக்காக அழுதான்’ கதையைப் படித்துவிட்டு அதை நாடகமாக்க விரும்பினார் நாகேஷ். ஜெயகாந்தன் அப்போது மிகப் பிரபலமாக இருந்த நேரம். நாகேஷுக்கு அப்போது ஜெயகாந்தனை நேரிடையாக அறிமுகம் கிடையாது. ஆனால் வாலிக்கு அறிமுகம் உண்டு. வாலியை அழைத்துக் கொண்டு ஜெயகாந்தனைப் பார்க்கப் போனார் நாகேஷ். நாடகமாக்கும் ஆசையைச் சொன்னார். ஜெ.கே அவரிடம் எதுவும் சொல்லவில்லை. வாலியைப் பார்த்து . " என்ன ரங்கா, பொழுது போகாம ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாயா?" என்று கேட்டாராம். வாலி ஒன்றும் புரியாதமாதிரி, ஜெ.கேயைப் பார்க்க, ‘ நாடகம் போடறேன்னு யார் யாரைக் கூட்டிக் கிட்டு வந்து நிக்கிறியே, அதான் கேட்டேன்’ என்றாராம். நாகேஷுக்கு முகம் விழுந்து விட்டது. சில நாட்களில் வாலிக்கு ஒரு அஞ்சலட்டை வந்தது. அதில் ஒரே வரி. ‘OK’ என்று எழுதப்பட்டு கீழே ஜெகே என்று போட்டிருந்ததாம்.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாகேஷின் நடிப்பைப் பார்த்து பின்னாளில் ஜெகே தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் யாருக்காக அழுதான் படமானபோது, அதில் நாகேஷ்தான் ‘ஜோசப்’ஆக நடித்தார். பின்னர் சிலநேரங்களில் சில மனிதர்களில் எழுத்தாளர் வேடத்திலும் நடித்தாரே.(அந்தப் படம் வந்தபோது அந்த எழுத்தாளர் ஜெ.கேதான் என்று பரவலாகப் பேச்சு இருந்தது. அதாவது தன் பாத்திரத்திலேயே நாகேஷை நடிக்க வைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்)
நாகேஷின் பல திறமைகள் வெளியே தெரியாது என்றார் வாலி. கேரம் போர்ட் ஆட உட்கார்ந்தால், அவருக்குக் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே 9 காய்களையும் போட்டுவிடுவார் என்று ஒரு தகவல் சொன்னார். டேபிள் டென்னிஸ்,கிரிக்கெட் ஆகிய விளையாட்டுக்களையும் நன்றாக ஆடுவாராம்.
நாகேஷின் நடிப்பைப் பற்றிப் பேசுகிறவர்கள்தவறாமல் திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல் காட்சிகளைச் சொல்வார்கள். ஆனால் எனக்கு என்னவோ மகளிர் மட்டுமில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு அபாரமானது என்று தோன்றுகிறது. அதில் அவருக்குக் கிடைத்த பாத்திரம், செத்த பிணம். பிணத்திற்கு வசனம் பேசும் வாய்ப்புக் கிடையாது. முகத்தில் பாவங்களைக் காட்ட வாய்ப்புக் கிடையாது. கையைக் காலை ஆட்ட சந்தர்ப்பம் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு என்னமாக நடித்தார்!
கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவான படம் அது என ஞாபகம். ம். பாம்பின் கால் பாம்பறியும்!