கதவைத் திறப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்ததைப் போல. என் ஜன்னலுக்கு வெளியே இருந்து வந்து அமர்ந்தது அந்த வண்ணத்துப் பூச்சி. மஞ்சளும் கறுப்பும் கலந்த மலரைப் போல இருந்தது. காகிதத்தில் செய்ததைப் போன்ற சிறகுகள் கண்ணாடியைப் போலப் பொலிந்தன.என் மனதில் ஓர் கவிதை சுரந்தது
முதலில் அது நாற்காலியின் முதுகில் உட்கார்ந்து உரையாட அழைத்தது. இறக்கையைச் சிலுப்பிக் கொண்டு. எதிர் சுவரில் தொற்றி வண்ணத்தை ஆராய்ந்தது.புத்தகங்களை பூக்கள் என்றெண்ணியதோ?அவற்றின் மீது தத்தித் தத்தி இலக்கியம் படித்தது. குழல் விளக்கில் பால் குடிக்க முயன்றது. வானொலியின் மீதமர்ந்து இசை பயின்றது. வீட்டுக்குள் வந்த விமானம் இறங்க இடம் தேடியது போல எல்லா இடமும் சுற்றித் வந்தது. எனக்கோ அது என் மனதைப் போல எதனிலும் வசம் கொள்ளாது எதையோ தேடித் திரிவதைப் போலத் தோன்றிற்று
விடிந்து விட்டது, விளையாடிக் கொண்டிருக்க நேரமில்லை என்பதால் நான் என் நடையணிகளை மாட்டிக் கொண்டு கடற்கரைக்குப் புறப்பட்டேன். காத்திரு, வருகிறேன் எனச் சொல்லிக் கிளம்பினேன்.
இளங்காலைக் காற்று இதமாக இருந்தது. என்றாலும் என் இதயத்தில் இன்னமும் வண்ணத்துப் பூச்சிப் படபடத்துக் கொண்டிருந்தது. வந்திருந்த விருந்தாளிக்கு வரவேற்புக் கொடுப்பதற்காக, வீடு திரும்பும் வேளையில் வீதியோரம் பூத்திருந்த பெயர் தெரியாப் பூவொன்றைப் பறித்து எடுத்து வந்தேன்.
கதவின் முனகல் கூட அதன் காதில் இடி ஓசையாக இறங்கும் என்றெண்ணி கவனமாகத் திறந்தேன். காணோம்! வீடெங்கும் தேடினேன். அந்த விடிகாலை விருந்தாளி விடைபெறாமலேயே புறப்பட்டிருந்தார். எதிர்பாராமல் வந்த சந்தோஷம் சொல்லிக் கொள்ளாமல் போவதுதான் வாழ்க்கை என்று என்னைத் தேற்றிக் கொள்ள முயன்ற போது சொத் என்ற சத்தம் வாசலில் வந்து விழுந்தது.
நாளிதழ்தான். நாட்டு நடப்புகளையெல்லாம் வார்த்தைகளில் வடித்தெடுத்த அந்தக் காகிதக் கணையை வீடு தோறும் வீசி விட்டுப் போய்க் கொண்டிருந்தார் ஒருவர். அதை எடுக்கக் குனிந்த போது என் நெஞ்சில் ஈட்டிகள் பாய்ந்தன. செய்தித் தாளுக்குக் கீழே செத்துக் கிடந்தது என் வண்ணத்துப் பூச்சி. கண்ணாடிச் சிறகுகள் நொறுங்கிக் கிடக்க, தண்ணீரில் சிந்திய வண்ணத்தைப் போல சிறகின் நிறங்கள் கலைந்து குழம்பி இறந்தது கிடந்தது, அந்த மலர். காம்பெளண்ட் கதவில் வந்த உட்கார்ந்ததை இந்தக் காகிதக் கணை தாக்கியிருக்க வேண்டும்.
மனம் கனத்தது.எழுதத் துவங்கிய கவிதை இடையிலேயே கலைந்ததைப் போல ஓர் சங்கடம் நெஞ்சை நிரப்பியது.
மறக்க நினைத்து நாளிதழைத் திறந்தேன். இசையைப் போல இளைப்பாறுவதற்கான இடமில்லை நம் நாளிதழ்கள். பலசரக்குக் கடைப் பட்டியலைப் போல தேசத்தின் துயரங்கள் அங்கே அணி வகுத்திருந்தன. அங்கே இறைந்து கிடந்த வார்த்தைகளுக்கு இடையேயும் ஓர் மலர் கசங்கிக் கிடந்தது,
அந்த வண்ணத்துப் பூச்சியைப் போல.
13 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட செய்தியைப் பார்த்து அரை நொடி அதிர்ந்து போனேன். அவருக்கு அடைக்கலம் தந்திருந்த தாய்மாமனே அந்தக் கொடுமையைச் செய்தார், அவரோடு சேர்ந்து 5 பேர் வன்புணர்வு செய்தார்கள், அவர்களிலே ஒருவரது வயது 72 எனச் சொன்ன செய்தி என் இதயத்தில் தீ வைத்தது. எண்ணத்தில் பொறிகள் கிளம்பின.
பத்து வயதுப் பெண்ணிலிருந்து, பல்லுப் போன கிழவி வரை எல்லாப் பெண்களையும் காமப் பொருளாகக் காண்கிற கலாசாரத்தை எங்கு பயின்றது இந்தச் சமூகம்? செக்ஸ் ஒன்றே சுகம் அதற்காக உறவு முறை கூடப் பாராமல் உடல்களை மேயலாம் என்றொரு ஒழுக்கம் எப்படி இங்கே முளை விட்டது?
தன் சகோதரியின் சாயலை அந்தச் சிறுமி முகத்தில் கண்டிருந்தால், அவர் அவளைப் படுக்கைக்கு அழைத்திருக்க மாட்டார். தமிழ்ச் சமூகத்தில் தகப்பனுக்கு நிகரானவர் தாய்மாமன். குழந்தையாக அவளைக் கொஞ்சிய தருணங்கள், நிமிட நேரம் கூடவா நினைவுக்கு வரவில்லை? அந்தச் சிறுமியை அவர் மகளாகப் பார்த்திருந்தால் வன்புணர்வில் இறங்கியிருக்க மாட்டார். மகளாகப் பார்க்கவில்லையென்றாலும் ஒரு மனுஷியாகக் கூடவா பார்க்க முடியவில்லை?
ஆண் பெண் உறவுக்கான அடிப்படையே, ஆணிவேரே, இங்கு அழுகிப் போய்க் கிடக்கிறது. இரு பாலாருக்கிடையே காதல் உறவைத் தவிர எதுவும் சாத்தியமில்லை என எண்ணுகிற அளவிற்கு மனங்கள் திரிந்து கிடக்கின்றன.
போன வாரம் கல்லூரி நிகழ்ச்சிக்கு நடுவராகப் போயிருந்தேன். அண்டை மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மாணவி ஒருவர் சொன்னாது மனதில் இன்னும் ஒலிக்கிறது: இங்கே காலை எட்டுமணிக்கு இருக்க வேண்டும் எனச் சொல்லியிருந்தார்கள். எனவே இருள் பிரியாத நேரத்தில் புறப்பட்டு வந்தேன். என் அண்ணனும் துணைக்கு வந்தார். ஆனால் பேருந்தில் இருந்த கண்கள் எல்லாம் எங்களை சந்தேகத்தோடு துளைத்தன. எனக்கு அவமானமாக இருந்தது தூக்கில் தொங்கி விடலாமா எனத் தோன்றியது”
ஆணுக்கும் பெண்ணிற்கும் நடுவில் ‘அது’ மட்டும்தான் இருக்க முடியும் என்ற எண்ணம் அநேகம் பேர் அடிமனதில் ஆழப் புதைந்து கிடக்கிறது. நம் எல்லோருக்கும் அன்னை உண்டு, அக்காளும் தங்கையும் இருக்கலாம். வீட்டிற்கு வந்து விளக்கேற்றிய அண்ணியும் மருமகளும், மடிமீது அமர்த்திக் கொஞ்சிய மகளும் இருக்கிறார்கள். பெறாமல் பெற்ற பேறுகளாய் பெண் குழந்தைகளும், தோழிகளும் சேர்ந்து கொள்ள முழுமை பெறுகிறது வாழ்க்கை. நம் அனுபவங்கள் அப்படி இருந்தும் அடிமனதில் இப்படி ஓர் அழுக்கு சேர்ந்து கிடக்கிறதே அது எப்படி?
ஊடகங்கள் ஊட்டி வளர்த்த விஷம் இது என உள்மனம் சொல்கிறது. திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும், இலக்கியம் என்ற பெயரில் எழுதப்படுபவையும் மதுவிற்கும் காமத்திற்கும் முக்கியத்துவம் தருகிற போக்கின் விளைவாக முறையற்ற உறவுகள் குறித்து நமக்குக் குற்ற உணர்வு குன்றி விட்டது. வெட்கம் விடை பெற்றது. அவமானப்பட வேண்டியவற்றிற்கெல்லாம் பெருமிதம் கொள்கிற சமூகமாக ஆகிப் போனோம்.
உறவுகளிடமிருந்தும் ஊடகங்களிலிருந்தும் நம் குழந்தைகளைக் காக்க வேண்டிய ஒரு துயரம் காலத்தின் கட்டளையாக நம் முன்னே நிற்கிறது. ஆம் துயரம்தான், அறிவூட்ட வேண்டியவர்கள் எல்லாம் வெறியூட்டுகிறவர்களாக மாறிப் போவதை ஆனந்தம் என்றா சொல்ல?
புதிய தலைமுறை பிப்பரவரி 28 2013