வித்வான்

maalan_tamil_writer

ஒரு அசந்தர்ப்பமான நிமிஷத்தில் வந்து சேர்ந்தாள் யக்ஷ்ணி.

காலையில்  இருந்தே  ஜானகிராமனுக்குள்  ஒரு புகை மூட்டம். வார்த்தைகளுக்குத் தவிக்கிற கவிதை மாதிரி ஒரு வதை. ஒரு சந்தோஷமான இம்சை. இன்னதென்று தெளிவாய் உருவம் புலப்படாமல் ஒரு கற்பனை. வாசிக்க வயலினை எடுத்தால் வழி தப்பிப் போகிறது. விதம் விதமாய் வில்லை ஓட்டிப் பார்த்தாயிற்று. நழுவி நழுவிச் சறுக்குகிறதே ஒழிய பிடி கிடைக்கிற வழியாய் இல்லை. வெறுத்துப் போய் வில்லை வீசிவிட்டுத்  தோட்டத்தில்  உலாவ  வந்த  நிமிடத்தில் சட்டென்று பொறி தட்டிற்று. உற்சாகக்  குருவி  உள்ளே  கூவிற்று.  திடுமென்று ஒரு பெரிய அலைபொங்கி அதில் தான் நுரைப் பூவாய் அலம்பி அலம்பிப் போகிற மாதிரி மிதப்பாய் இருந்தது. அவசரமாய் உள்ளே திரும்பி வயலினை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தார். வில்லை இரண்டு இழுப்பு இழுப்பதற்குள்  வாசல்  பக்கம் தொந்தரவு. ரிஷபத்தை நீளக் கூவித் தெருக் கதவு திறந்தது. கற்பனை கலைந்து ரௌத்திரம் பொங்கக் கண்ணை திறந்து பார்த்தார் ஜானகிராமன்.

எதிர்த்தாற்போல் ஜோஸப் ஓம். அவன் அக்குளில் ஒரு கட்டைப் பெட்டி. சுருதிப் பெட்டி அளவுக்குச் சாதுவாக, சமர்த்தாக, அதற்குள் இருப்பது சைத்தான் என்று அந்த நிமிடம்  அவருக்குத்  தெரியாது.

ஓம்  ரொம்ப  மாறிப் போயிருந்தான். உடம்பு ஒரு சுற்று பருத்திருந்தது. முன்னைக்கு இப்போது ஒரு மாற்று, தோல் வெளுத்திருந்தது. கூடவே அதில் ஒரு மினுமினுப்பு.  இங்கிருந்தபோது  முன்னந்தலையில் இரண்டு விரற்கடை அகலத்துக்கு விழ ஆரம்பித்திருந்த வழுக்கை மறைந்து போய் தலைமுழுக்கத் தங்கக் கேசம் மண்டியிருந்தது. வருடம் கூடக் கூட வயது குறைந்து கொண்டு வருகிற மாதிரி ஒரு பிரமிப்புத் தட்டியது.

இந்த  மாதிரி  பிரமிப்பு  அவன் இங்கிருந்த இரண்டு வருஷத்தில் ஏராளமான முறை  ஏற்பட்டதுண்டு.

ஓம் அமெரிக்கன்.  ஓரிவில்  யூனிவர்சிட்டியில்  உத்தியோகம்.  சங்கீதப்  புரொபசர். இங்கிலீஷ்  சங்கீதத்தில்  நிபுணன்.  கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவுக்கு வந்தான். இருக்கிற எல்லோரையும் விட்டு ஜானகிராமனைத் தேடிப் பிடித்தான்.

ஜானகிராமன் சங்கீதத்தில் மகான். இன்னொரு நாதமுனி. ஆனால் குடத்திலிட்ட விளக்கு. சங்கீதத்தை தவிர தனக்கு வேறெதுவும் தெரியும் என்று காட்டிக் கொண்டதில்லை.  இதை  முழுக்கத்  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும், அதைத்  தெரிந்து  கொண்டால்  போதும்  என்கிற  உறுதியும், தீர்மானமும் உண்டு. ஊருக்கு வெளியில் தன்னந்தனியாக ஒரு சிறு வீட்டில் வாசம். தன் வேலை மொத்தத்தையும் தானே செய்து கொள்கிற வழக்கம். எத்தனையோ பேருக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்தது உண்டு. ஆனால் சிஷ்யர் என்று யாரையும் அங்கீகரித்தது கிடையாது. அருமை தெரிந்து கூப்பிட்டவர்களின் அழைப்பை ஏற்று அவ்வப்போது கச்சேரிகளுக்குப் போவது உண்டு. இந்த மாதிரி ஒரு மனிதர் இருபத்தியொன்றாம் நூற்றாண்டில்  இருந்தது  ஒரு  பெரிய ஆச்சரியம்தான்.  ஆனால் இருக்கிறார். அறுபத்தைந்து  வருட  வாழ்க்கையில்  விஞ்ஞானம்  தீண்டாத  ஒரு  அபூர்வ மனிதர்.

ஓம்  இவரைத்தான்  தேடி வந்தான். இரண்டு வருடம் அல்லும் பகலும் அருகிலேயே  இருந்து  கற்றுக்  கொண்டான்.  தரையில்  சப்பணம் கூட்டி உட்காரக் கற்றுக் கொண்டான்.  உஸ்  உஸ் என்று கண்ணால் தண்ணி விட்டுக் கொண்டு ரசம் சாதம் சாப்பிடக் கற்றான். அந்தக் காலத்துக்  குருகுலவாசம்.  ஜானகிராமனின்  அன்றாட நடவடிக்கை அத்தனையும் அத்துப்படி. இரண்டு வருடம் முடிந்து அமெரிக்காவுக்குப் புறப்படுகிறபோது  தன்னுடன்  வந்துவிடுமாறு  கெஞ்சினான்.  ‘ வேண்டாமய்யா சாமி ’  என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். ஜானகிராமன். இன்று மூணு வருஷம் கழித்து இப்படித் திடுமென்று எதிரில் வந்து நிற்கிறான். இடுப்பில் ஒரு பெட்டியை இடுக்கிக் கொண்டு.

“ அடடே,  ஓம் !  சௌக்கியமா ? ”

“ ம். ”

“ எப்ப வந்தே ? எனக்கு  முன்னாலேயே  எழுதக்  கூடாதோ ? ”

“ இன்னிக்கு ,  இதோ ,  இப்போ. ”

“ எனக்கு  முன்னாலேயே  எழுதக்  கூடாதோ ? ”

ஓம்  மெலிதாய்ச்  சிரித்தான்.

“ ம் ,  அப்புறம் ? ”

“ இன்னிக்கு  உங்க  பிறந்த  நாள். ”

“ இன்னிக்கா,  இன்னிக்கா,  இல்லையே. ”

“ புரட்டாசி  பூரம்தானே  நீங்க ? ”

“ அடடே,  அந்தக்  கணக்கெல்லாம்  இன்னும்  இருக்கா ? ”

“ மறந்து போயிடாம இருக்கணும்னு கம்ப்யூட்டர்லே ப்ரோகிராம் பண்ணி வைச்சிருந்தேன். ”

“ ஆ !  ரொம்ப  சந்தோஷம்.  சித்த  இரு.  காப்பி  கலந்து  எடுத்துண்டு  வரேன். ”

“ வேண்டாம், நீங்க உட்காருங்க. நீங்க இந்த வேலையெல்லாம் இனிமே செய்யக்கூடாது. ”

“ அதனால்  என்ன குறைச்சல் வந்துடுத்து இப்போ ? எங்க குரு, அவருக்கும் பெரியவா  எல்லாம்  காலம்  காலமா  பண்ணிண்டு  வந்திருக்கா. ”

“  இருக்கட்டும்.  நீங்க  பண்ணக்கூடாது  இனிமே. ”

“ அதுக்குத்தான்  இதை  எடுத்துண்டு  வந்தேன். ”

“ என்னது  அது ? ”

“ ஒரு  வார்த்தை  சொன்னாப் போதும்.  இது  உங்களுக்குக் குளிக்க வெந்நீர் போடும்.  வேஷ்டி  தோய்க்கும்.  காப்பி கலக்கும். பூஜைக்கு பூப்பறிக்கும். படுக்கை போடும். ”

“ இத்துனூன்டு  பெட்டியா ? ”

“ ஆம்.  இது  சேவை  செய்கிற  கம்ப்யூட்டர். ”

“ அய்யய்யோ,  அந்தச்  சமாசாரமெல்லாம்  வேண்டாமய்யா. ”

“ இதில பயப்பட ஒண்ணும் இல்ல. இது ஒரு சாதனம். ஒரு சௌகரியம். ஒரு கீழ்ப்படிதல்  உள்ள  வேலைக்காரன்  அவ்வளவுதான். ”

“ வேண்டாமய்யா, நான் ஒரு டேப்  ரிக்கார்டரைக் கூடத் தொட்டுப் பார்த்ததில்லை. ”

“ அந்த பயம் வேண்டாம் உங்களுக்கு. நீங்க ஒண்ணையும் திருக வேண்டாம். தொடக்கூட  வேண்டாம்.  வேறுமனே  குரல்  கொடுத்தால்  போதும். காரியம் செய்திடும். ”

“ அடே !  மிஷினிலே  அப்படிக்  கூடப்  பண்ண  முடியுமா ? ”

“ பண்ணியிருக்காளே, இது மிஷின் இல்லை. ஒரு சிஸ்டம். உங்கள் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் இதன் சென்ஸார்களைப் பொருத்தி விடலாம். அவை உங்கள் ஆணைகளை  வாங்கிக்  கொண்டு  மத்திய  கம்ப்யூட்டருக்கு  அனுப்பும்.  கம்ப்யூட்டர் அந்த  ஆணையைச்  செயல்படுத்தச் செய்திகள்  கொடுக்கும். ”

“ புரியலையே. ”

“ உதாரணமாக நீங்கள் குளிக்க விரும்புகிறீர்கள். வெந்நீர் வேண்டும். எந்த அறையிலிருந்தும், எனக்கு வெந்நீர் தயார் செய் என்று சொன்னால் போதும். கீசர்க்குத் தகவல்  அனுப்பி  அதை  மூட்டித்  தேவையான டெம்பரேச்சரில் வெந்நீர் ரெடி பண்ணிடும்.”

“ என்னய்யா,  சித்து  விளையாட்டா ?  பேசுமோ ? ”

“ ம். ”

“ வேண்டாம்யா.  ஏதாவது  ஏடாகூடமாகச்  செய்து  வைக்கப்  போகிறது.

“ கவலை வேண்டாம். நான் பதினைந்து நாள் உங்க கூடவே தங்கியிருந்து உங்களின் ஒவ்வொரு தினசரி நிமிடங்களையும் கவனித்து ஏற்பாடு செய்துவிட்டுப் போகிறேன். விஷயங்களைச் செய்திகளாக மாற்றி அதன் ஞாபகத்தில் நிரப்பிவிடலாம். எத்தனை  டிகிரி  வெந்நீர்,  மிளகு ரசத்துக்கு எத்தனை காரம், எத்தனை தண்ணீர், எத்தனை நிமிட கொதி, வேஷ்டியை உலர்த்துவது எவ்விதம், பூஜைக்கு எந்தெந்தப் பூ, இதெல்லாம் அதற்கு உருவேற்றிவிடலாம். பிசகு இராது. இவை தவிர, உங்களைத் தொடர்ந்து கவனித்து உங்கள் ரசனைக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப புதிதாய்த் தானே கற்றுக்கொள்ள  ஒரு  அமைப்பு  இதில்  இருக்கிறது. ”

“ நீ எதையாவது  பண்ணிட்டு  ஊருக்குப்  போயிடுவே.  நி  அந்தண்டை நகர்ந்ததும் தகராறு  பண்ணினா  நான்  என்னய்யா  பண்றது ? ”

“ பிரச்சினை  இல்லை.  உங்களுக்குப்  பிடிக்காதது எதையும் இது பண்ணாது. அப்படி ஏதும் செய்துவிட்டால்,  நீ பண்றது எனக்குப் பிடிக்கலை என்று சொல்லி விடுங்கள்,  சரி  செய்து  கொண்டு  விடும். ”

“ ம் ? ”

“ இதை  நிறுவ  இந்த  வீட்டில்  சில  அடிப்படையான மாறுதல்கள் செய்ய வேண்டும். அதற்கு  நீங்கள்  அனுமதி  கொடுத்தால்  போதும், மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். ”

“ என்னமோ  பண்ணு,  என்  உசிரை  வாங்காதே. ”

“ ம்… இன்னொரு விஷயம். இதை நீங்கள் அழைப்பதற்கு ஒரு பெயர் வேண்டும். உங்களுக்குப்  பிடித்ததாக  ஒரு  பெயர்  சொல்லுங்கள். ”

“ அபிதகுசலாம்பாள்னு வைச்சுடு. என் ஆம்படையா பெயர். கடைசி மூச்சை விடறவரைக்கும்  அவதான்  எனக்கு  சிசுருஷை  பண்ணிண்டு  இருந்தா. ”

“ அத்தனை நீளம் சாத்தியமில்லை. சின்னதாய், மூன்று எழுத்தில் ஏதாவது சொல்லக்கூடாதா. ”

சற்று நேரம் மோட்டுவளையைப் பார்த்து யோசித்தார் ஜானகிராமன். பின் நிதானமாக  ஒவ்வொரு  எழுத்தாய்ச்  சொன்னார் –  ‘ யக்ஷணி. ’

ஓம்  சொன்னது  சத்தியமான  வார்த்தை.

யக்ஷணி சிணுங்கல் இல்லாமல், முனகல் இல்லாமல், தலையைச் சொரியாமல், சொன்ன வேலையைச் செய்தது. விசுவாசமான வேலைக்காரி. ஒரு நாள் பொய் சொன்னதில்லை.  முடியாது போ என்று முகத்தைச் சுளித்ததில்லை. தீபாவளிக்குப் புடவை,  பொங்கலுக்கு  இனாம்  என்ற  சிக்கல்கள்  இல்லாத  வேலைக்காரி.

சுருசுருவென்று  அது  காரியம்  செய்கிற  நறுவிசு.  அந்தத்  துல்லியம் !  குளிக்கிற வெந்நீர்  ஒருநாள்  கூட  ஆறிப் போயிருந்ததில்லை. காப்பியில் சர்க்கரை முன்னே பின்னே  இருந்தது  என்ற  பேச்சே  கிடையாது.  ரசத்தில் புளித் தூக்கல் என்பதற்கு இடமே  இல்லை.  சாதம்  குழைந்து போச்சு என்கிற அலுப்பே கிடையாது. எத்தனை சுத்தம்,  எத்தனை  சிக்கனம் !

ஜானகிராமனுக்குப் பார்க்கப் பார்க்கப் பிரமிப்பாய் இருந்தது. மிஷின் இத்தனை காரியம் செய்யுமா ?  கூப்பிட்ட  குரலுக்கு  இவ்வளவு  வேலை  செய்யுமா ?

“ பால்   இன்னிக்கு  லேட் ”

“ இந்த  முறை  அரிசியில்  கல்  அதிகம். ”

“ வேஷ்டி  இன்னும்  ஒரு  மாதத்தில்  இற்றுவிடும்.  புதிதாக  வாங்க  வேண்டும். ”

“ பவழமல்லிக்கு  உரம்  வைத்தால்  தேவலை. ”

“ இன்னிக்கு உலவப் போகும்போது சால்வையை எடுத்துக்கொண்டு போங்கோ. வெளியில்  உஷ்ணம்  மிகக்  குறைவு. ”

“ நாளை  அமாவாசை  தர்ப்பணம்.  அகத்தில்  எள்  இல்லை.

புதிதாய்க் கல்யாணமாகி நாட்டுப் பெண் வந்த மாதிரி, அத்தனை பொறுப்பையும் யக்ஷ்ணி கையில் கொடுத்து விட்டுத் தாமுண்டு தம் வயலின் உண்டு என்று உட்கார்ந்திருந்தார் ஜானகிராமன். சங்கீதத்தின் உச்சியைத் தொட்டுவிட வேண்டும் என்ற தவத்தின் தனிமை எட்டுகிற தொலைவில் வந்துவிட்டதென்ற உற்சாகம் அவரைப் பூரிக்க வைத்தது.  அவரும்  ஒரு  சுற்றுப்  பருத்தார்.

ஒரு நாள் சாயங்காம் காலாற நடந்துவிட்டு வந்த சற்று நாழிக்கெல்லாம் தொண்டை கரகரக்க ஆரம்பித்தது. தூங்கும் முன் இளம் சூடாய் மஞ்சள்பொடி, மிளகு போட்டுப் பால்  குடித்தால் தேவலை என்று தோன்றியது.  “ யக்ஷ்ணி, தொண்டை கரகரனு இருக்கு.  மிளகு  பால்  கொண்டாம்மா. ”

யக்ஷணி  முதல்  முறையாகத்  திகைத்தது.

“ மன்னிக்க வேண்டும். மிளகு பால் என்றால் என்ன ?  அந்த  விதமான  ஃபார்முலா எதுவும்  என்  நினைவு  அடுக்கில்  இல்லையே ! ”

சட்டென்று  ஜானகிராமனுக்கு  யக்ஷணி  வெறும்  யந்திரம்  என்று நினைவு வந்தது.  இதைத்தான்  அதற்குப்  பயிற்று  வைக்கவில்லை  என்று  நினைப்பு  வந்தது.

“ ஒரு முறை நீங்கள் தயாரிப்பதைப் பார்த்தால் – வேண்டாம் . என் நினைவு அடுக்கில்  மிளகு,  பால், மஞ்சள் பொடி என்ற வார்த்தைகள் இருக்கின்றன. எது எது என்ன  வீதம்  என்று  சொன்னால்கூடப்  போதும்.  தயாரித்து  விடுவேன். ”

“ வேண்டாம்,  நான்  பார்த்துக்கறேன். ”

மறுநாள் இரவு படுக்கப் போகும்போது நினைவாக “ இதோ மிளகு பால் ” என்று நீட்டியது யக்ஷ்ணி.

ஆச்சரியம்  தாளவில்லை,  ஜானகிராமனுக்கு.

இத்தனை இருந்தும் ஒரே ஒரு இடத்தில் யக்ஷ்ணியை நெருங்க விடவில்லை ஜானகிராமன். அது வயலின் சுத்தப்படுத்த, அதன் தந்திகளைத் தளர்வில்லாமல் முறுக்கிவிட, ஸ்ருதி சேர்த்துக் கொடுக்க வேண்டிய அடிப்படை அமைப்புகளை ஜோ ஏற்படுத்தி வைத்து விட்டுப் போயிருந்தான். அதைப் பயன்படுத்தி கொள்ளவே இல்லை ஜானகிராமன்.  சங்கீதம்  தெய்வீகமான விஷயம். புனிதமான சமாசாரம். அதை யந்திரங்கள்  கையில்  கொடுக்கக்  கூடாது  என்று  தீர்மானமாக  இருந்தார்.

அன்றைக்கு  ஜபத்தை  முடித்துவிட்டுக்  கூடத்தில்  வந்து உட்கார்ந்தபோது யக்ஷணி  கேட்டது.

“ ஓய்வாய்  இருக்கிறீர்களா  குருவே ? ”

“  என்ன  யக்ஷணி ? ’‘

“ ஷட்ஜம்  என்றால்  என்ன ? ”

“ எங்கே  கற்றுக்  கொண்டாய்  இந்த  வார்த்தை ? ”

“ நேற்று  உங்கள்  நண்பருடன்  பேசிக்  கொண்டிருந்தீர்களே. ”

“ ஷட்ஜம்  என்பது  ஒரு  ஸ்வரம். ”

“ ஸ்வரம்  என்றால்  என்ன ? ”

“ உனக்கு  ஏன்  இந்த  இம்சையெல்லாம். ”

“ எனக்கு  சங்கீதம்  சொல்லிக்  கொடுக்க  மாட்டீர்களா ? ”

“ என்னது !  உனக்கா ? ’‘

“ ஆம் !  எனக்கு. ”

“ சங்கீதம் தெய்வீகக் கலை. உன்னதமான விஷயம். ஆயுசு முழுக்க அப்பியாசம் செய்து  தெரிந்து  கொள்ள  வேண்டிய  விஷயம். ”

“ தெய்வீகம், உன்னதம், ஆயுசு எல்லாம் புது வார்த்தைகளாக இருக்கின்றன. இதற்கெல்லாம்  என்ன  அர்த்தம் ? ”

“ யக்ஷணி ,  என்னைத்  தொந்தரவு  செய்யாதேயேன். ”

மறுநாள் மத்தியானம் சாப்பிட்டுவிட்டு வெற்றிலையை அரைத்துக்கொண்டு அரை மயக்கமாய்ச்  சாய்ந்தபோது  யஷ்ணியின்  குரல்  கேட்டது.

“ சாயங்காலம் அயலூர் புறப்படவேண்டும். நாளை முதல் தில்லியில் ஒரு வாரம் கச்சேரி.  துணிகள்  மடித்து வைத்திருக்கிறேன். கீதைப் புத்தகம் எடுத்து வைத்திருக்கிறேன். சாப்பிட உலர் பழங்கள்,  வெற்றிலை சீவல், தவிர முகவரிப் புத்தகம், டயபடீஸ் மாத்திரை எல்லாம் எடுத்து வைத்திருக்கிறேன். வயலினை பாக் பண்ணி விடவா ? ”

“ தொடாதே ! ”  என்று  கத்தினார்  ஜானகிராமன்.

பத்து நாட்கள் கழித்து  ஜானகிராமன் திரும்பியபோது ஆச்சரியங்கள் காத்திருந்தன. வீட்டுக்குள்ளிருந்து  தேவகானமாய் பைரவி மிதந்து வந்தது. தெய்வ கானம்தான். அத்தனை  சுத்தம்,  அத்தனை  குழைவு,  அத்தனை கம்பீரம். கேட்ட நிமிடம் தேகம் முழுதும் சிலிர்த்தது. சுத்த சங்கீதத்துக்கே உரிய மேன்மை மனசை உலுக்கி எடுத்தது. ஏதோ  உள்ளுக்குள் உடைந்து கொள்ள, அழவேண்டும் போல் இருந்தது. விம்மியே விட்டார் ஜானகிராமன். இந்த அறுபத்தி ஐந்து வருஷத்தில் இத்தனை சுத்தம் கேட்டதில்லை. இப்போது கேட்டபோது தாங்க முடியவில்லை. ராகமும் கீர்த்தனையும் முடிந்து உடன் ஸ்வரம் வாசிப்பு ஆரம்பமாயிற்று.

ஜானகிராமனுக்குப் பொறுக்க முடியவில்லை. விடு விடென்று கதவைத் தள்ளிக் கொண்டு  உள்ளே  நுழைந்தார். விளக்கு ஸ்விட்சைப் போட்டார். நாதம் பட்டென்று நின்றது.

“ யாரு ? ”  என்றது  யக்ஷணி.

“ நான்தான். ”

“ பயணம்  எப்படி  இருந்தது ? ”

ஜானகிராமன் கேள்வியை அலட்சியம் செய்தார். ஒவ்வொரு அறையாகத் திறந்து பார்த்தார்.

“ இப்போது  இங்கே  வயலின்  வாசித்தது  யார் ? ”

ஒரு  அரை  நிமிஷ  மௌனம்.

“ நான்தான். ”

“ என்ன ?  என்னது,  நீயா ? ”

“ ஆமாம். ”

காரணமில்லாமல்  பொறாமைப்பட்டார்  ஜானகிராமன்.  எரிச்சல்  அடைந்தார்.

‘ நீயா? ”

“ ம் ”

“ வயலினைத்  தொடாதேன்னு  சொல்லியிருந்தேனே ! ”  அதட்டலாக உறுமினார்.

“ தொடலையே. ”

“ என்ன தொடலையா ?  இப்போ சப்தம் கேட்டதே, எனக்குக் காது அவிஞ்சிடலை. ”

“ அவை குறிப்பிட்ட  ஒரு  ஃபிரீக்வென்ஸியில்  நான்  எழுப்பிய  ஒலியலைகைள். ”

“ உனக்குப் பாடத் தெரியுமா ?  இத்தனை உசந்த சங்கீதம் யார் சொல்லிக் கொடுத்தா உனக்கு ? ”

“ நீங்கதான். ”

“ என்னது ? ”

“ நான் எழுப்பியது வெறும் சப்தம். சில ஒலியலைகள். கொஞ்சம் நாதம். இதை சங்கீதம்  என்று  சொல்வது  உங்கள்  விருப்பம்.  இவற்றுக்கு  அடிப்படை  நீங்கள் உங்கள்  மாணவர்களுக்கு  நடத்திய  வகுப்புகள். ”

“ பைரவி  மட்டும்தான்  வாசிப்பியா ?  இன்னும்  வேறேதாவதுமா ? ”

“ எந்த ராகமும் வாசிக்க முடியும். ராகம் என்பது சில நோட்ஸ்களின் முன் தீர்மானித்த அடுக்கு. ஒரு பார்முலா. நோட்ஸ்கள் என்பது ஒரு குறிப்பிட்ட ஒலியளவு. இதை ஞாபகத்தில் நிரப்பிக் கொண்டால் வெவ்வேறு பார்முலாக்களை அமைத்து வெவ்வேறு  ராகங்களை  விவரிக்க  முடியும். ”

அதிர்ந்து  போனார் ஜானகிராமன். சங்கீதம் என்பது வெறும் கணக்குத்தானா ? ஐம்பது வருஷமாய்த் தாம் அல்லும் பகலும் இதே நினைவாய் உழைத்து அறிந்து கொண்டது  எல்லாம்  ஒரு  மிஷின் பத்து நாளில் கற்றுக் கொண்டு திருப்பி வாசித்துவிடக் கூடிய சின்னஞ்சிறிய துளிதானா ? கடலில் பாதிதூரம் கடந்துவிட்டோம் என்பது வெறும் கனவுதானா ?  கரையிலேதான் இன்னும் நின்று கொண்டிருக்கிறேனா ? சங்கீதம்  தெய்வப்  பிரசாதம்  என்பது  வெறும்  பிரமையா ?

ஜானகிராமன்  கண்ணில்  நீர்  துளிர்த்தது.

ராத்திரி  முழுதும்  தூக்கம்  பிடிக்காமல்  மனம்  அலைந்தது.

“ யக்ஷ்ணி சொன்னதில் என்ன தவறு ? சங்கீதம் வெறும் கணக்குத்தானே ? அடிப்படையைப்  புரிந்து கொண்டு விட்டால் அடுக்கிக் கொண்டே போகவேண்டியது  தானே?”

“ இதெப்படி ?  வெறும் கணக்கு என்று பார்த்தால் எல்லாம் கணக்குத்தான். கலைன்னு  எடுத்தால்  கலைதான்.  பாஷை தெரிந்தவன் எல்லாம் பண்டிதன் ஆயிடுவானா ?  இலக்கணம் தெரிஞ்சவன் எல்லாம் கவிஞன்னு சொல்லிக்க முடியுமோ ? ”

“ராகத்துக்குன்னு ஒரு தீர்மானிக்கப்பட்ட உருவம் உண்டா இல்லையா ? ”

“ இருக்கட்டுமே. அதற்காக அதை யார் பாடினாலும் நிறைவா இருகிறதுன்னு சொல்ல முடியறதோ?  சில பேர்  சில  ராகம் பாடினா மனசு அடிச்சுண்டு போறது. சிலபேர் பாடினா தூக்குப் போட்டுக்கலாம்போல் இருக்கு. ஏன். அதற்குள்ளே பாடறவன் மனசுன்னு ஒண்ணு உண்டோல்லியோ?  அதைத்  தேடிண்டு  போறதுதானே  சங்கீதத்துக்கு இலக்கு. நோக்கம். அந்த உசரத்தை, அந்த மனசை அடையணும்னுதானே இத்தனை தவம் ? ”

“ மத்தியானம் யக்ஷ்ணி பாடினதில் என்ன பிசகு ? ஒரு அபஸ்வரம் உண்டா ? சுருதியை நிரோதம் பண்ற சங்கதி உண்டா அதிலே? என் ஆயுசுலே இத்தனை சுத்த சங்கீதம் இதுவரை கேட்டதில்லைன்னு நீ பிரமிச்சுப் போயிடலையா ? அந்த நிமிஷம் நெக்கு விட்டுப் போய் அழுதிடலையா ? ”

“ இருந்தாலும்  அது  மிஷின்.  உசிரில்லாத,  உருவமில்லாத  மிஷின். ”

“சங்கீதத்திலே நல்ல சங்கீதம் கெட்ட சங்கீதம்னுதான் உண்டு. மனுஷாளைவிட மிஷின் நல்ல சங்கீதம் பாடும்னா அதற்கு நமஸ்காரம் பண்ணவேண்டியதுதான். சங்கீதத்துக்குச் சேவை  செய்யறதாகச் சொல்லிண்டிருக்கிறவன் அதைத்தான் பண்ணுவான். அதற்கு மூலம் என்ன என்று ஆராய்ச்சி பண்ணிண்டு இருக்க மாட்டான். இருக்கக்கூடாது. உருவம் இல்லாட்டா என்ன கெட்டுப் போச்சு ?  ஈஸ்வரனுக்கு உருவம் உண்டா ?  ஆத்மாவுக்கு  உருவம்  உண்டா ?”

காலையில் எழுந்ததும் பல்லைத் தேய்த்துவிட்டுக் கூடத்தில் வந்த உட்கார்ந்து கொண்டார் ஜானகிராமன். சிறிது நேரம்வரை நெட்டைப் பார்வையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ யக்ஷ்ணி, ராத்திரி பூராவும் மனசைப் போட்டுப் புரட்டிக் கொண்டிருந்தேன். நீ சொன்னதுதான் சரி. நேற்று ஏதோ ஒரு வேகத்தில், அதிர்ச்சியில் அவ்விதம் இரைந்து விட்டேன். ஒருவித அசூயையில் கூட அப்படிக் கத்திவிட்டேன் என்று தோன்றுகிறது. அத்தனை  சுத்தமான  ஒரு  பைரவியை  என் ஆயுசில் நான் கேட்டதில்லை. என் குருநாதர் பெரிய ரிஷி என்பது என் நம்பிக்கை. அவருக்கு மட்டுப்படாத சங்கீதம் கிடையாது  என்பது  என் அனுபவம். ஆனால் அவர்கூட இப்படிப் பாடி நான் கேட்டதில்லை. ஐம்பது வருஷமாய் நானும் இதற்காக முட்டிக் கொண்டிருக்கிறேன். சாத்தியமாகவில்லை.  சங்கீதத்தில்,  வாழ்க்கையில்,  பெர்ஃபெக்ஷனை  அடைய வேண்டும் என்றுதான் தலைமுறை தலைமுறையாகத் தவித்துக் கொண்டிருக்கிறோம். நான் மட்டுமில்லை. இந்த மனுஷ குலமே அதற்குத்தான் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது எங்களுக்கு எட்டாமலேயே போய்க் கொண்டிருக்கிறது. அது தெய்வ சித்தி. வாழ்க்கை  இலட்சியம்  என்று  ஏதேதோ பேர் சொல்லி எங்களை நாங்களே அவ்வப்போது ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். விஞ்ஞானத்தைத் தெய்வம் என்று கும்பிடுகிற காலம் வந்துவிட்டது. அதில் எனக்கு நேற்றுவரை நம்பிக்கை இல்லை. இன்றைக்கு  புத்தி  தெளிந்த  மாதிரி  இருக்கிறது.  நீ  இனிமேல்  எனக்குச்  சொல்லிக் கொடு.  அதை  பகவானிடம்  கிடைத்த  சிட்ஷையாக  நினைத்துக்  கொள்கிறேன். ”

உணர்ச்சிகள்  தொண்டைக்  குழியைக்  கவ்வப்  பேசினார்  ஜானகிராமன்.

“ புதிய  புதிய  வார்த்தைகளாகச்  சொல்கிறீர்கள். நாங்கள் மெஷின்கள். உங்களுக்கு என்ன தெரியுமோ அதைத்தான் எங்களால் தெரிந்து கொள்ள முடியும். அதற்குமேல்  ஒரு நூல் கூட உயர முடியாது. எங்களுக்குக் கற்பனை கிடையாது. கற்பனை எத்தனை பெரிய விஷயம் !  நீங்கள் சொல்கிற மனித குலத்தை எப்படியெல்லாம் அது உயர்த்திவிட்டிருக்கிறது. எங்களுடைய திறமையெல்லாம் உங்களுக்கு அடிமையாக இருப்பதுதான்.  உங்களை ஜெயிக்க ஒரு நாளும் எங்களால் முடியாது. என்னைச் சொல்லிக்  கொடுக்கச் சொல்கிறீர்கள். எனக்கு சங்கீதம் அடியோடு மறந்து போயிற்று. நான் கற்றுக்கொள்ளும் காரியம் உங்களுக்குப் பிடித்தமில்லாது போனால், அதை என் நினைவு  அடுக்கிலிருந்து  முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்று எனக்கு ஒரு ‘பில்ட் இன் இன்ஸ்ட்ரக்ஷன் ’  உண்டு.  உங்களுக்குப்  பிடிக்காதது  எது என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல் உங்களின் கோபம் அல்லது கண்ணீர். உங்கள் கண்ணில் நேற்றுத் துளிர்த்த நீரை என் சென்ஸார்கள் உணர்ந்த விநாடியே என்னுடைய சங்கீதம் முற்றிலும்  அழிந்து  போயிற்று. ”

ஜானகிராமனுக்குச் சுரீரென்று சொல்ல முடியாத ஒரு அதிர்ச்சி. இந்தச் சாத்தியத்தை  அவர்  நினைத்துப் பார்க்கவே இல்லை. திக்பிரமை பிடித்தவராக வெளியைச் சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தார். பின் தீர்மானமாக “ யக்ஷணி , இதோ  பார்,  இது  சரளி  வரிசை.  ஸரிகமபதநி … ”  என்று  ஆரம்பித்தார்.

( கல்கி )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.