எதிர்காலத்தைக் கணிப்பது எளிதல்ல. ஜோசியர்களுக்கு மட்டுமல்ல, தொழில்நுட்ப உலகிலும் அப்படித்தான். உலகின் முன்னோடிக் கணினி நிறுவனமாக மதிக்கப்படும் IBM நிறுவனத்தின் தலைவர் தாமஸ் வாட்சன், 1943ஆம் வருடம் ஒரு கருத்தை வெளியிட்டார். இன்று அதை வாசிக்கும் போது பெரிய ஜோக் போல் தோன்றுகிறது. அவர் சொன்னது இதுதான். “மொத்த உலகத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் கூட ஐந்து கம்ப்யூட்டர் வரை வேண்டுமானல் விற்கலாம் என்று நான் நினைக்கிறேன்!” (“I think there is a world market for maybe five computers.”) இன்று நம் ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் போன் வடிவில் ஒரு சின்ன கம்ப்யூட்டர் உட்கார்ந்து கொண்டிருக்கிறது!
டிவெண்ட்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் என்பது உலகப் புகழ் பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். அதன் அதிகாரி டேனியல் ஜாருக் 1946ல் சொன்னார்: “இந்த டெலிவிஷன் என்பதெல்லாம் ஆறு மாதத்திற்கு மேல் தாக்குப் பிடிக்காது. எவன்யா ராத்திரி பூரா உட்கார்ந்து அந்த பிளைவுட் பொட்டியைப் பார்த்துக் கிட்டு இருப்பான்?” இன்று டெலிவிஷனிலிருந்து மக்களைப் பிய்த்து எடுத்துக் கொண்டு வர வேண்டியிருக்கிறது
“வீட்டுக்கு எதுக்குய்யா கம்ப்யூட்டர்?” இது 1977ல் . கேட்டவர் டிஜிட்டல் எக்யுப்மெண்ட் கார்ப்போரேஷன் தலைவர் கென் ஆல்சன். நம் மடியில் அமர்ந்து கொண்டு கணினிகள் காலத்தைப் பார்த்துச் சிரிக்கின்றன
“எல்லோரும் இந்த இண்டர்நெட்டை அடிப்படையாக வைத்து எதிர்காலம் பற்றிய கணிப்புகளோடு திட்டம் போடுகிறார்கள். இண்டர்னெட் விரைவில் நொறுங்கி (crash) விடும்” இதி 1995. ராபர்ட் மெட்கால்ஃப் என்ற வல்லுநரின் கருத்து
இவை எதுவும் நடக்கவில்லை. இத்தனைக்கும் இந்தக் கணிப்புக்களைச் செய்தவர்கள் அவரவர் துறைகளில் ஜாம்பவான்கள். நீண்ட அனுபவம் வாய்ந்தவர்கள். அப்படியிருந்தும் இந்த கணிப்புகள் ஏன் பொய்த்தன?
இவை பொய்த்ததற்குக் காரணம் அவர்கள் பார்வை வழக்கமான அணுகுமுறைக்கு (conventional approach) அப்பால் விரியவில்லை. பழகிப் போன ஒன்றை மீறி அவர்கள் சிந்திக்கத் தலைப்படவில்லை.
பழகிப் போன ஒன்றிற்கு அப்பால் சிந்திப்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்குத் துணிவு மாத்திரம் அல்ல தன்னை முன்னிறுத்தாமல் மற்றவர்களைக் கருத்தில் கொண்டு சிந்திக்கும் கரிசனமும் வேண்டும்.
வெள்ளையர்களை அதிகாரத்திலிருந்து அகற்ற முன் நின்று போராடிய காந்தி, சுதந்திரம் அறிவிக்கப்பட்ட பின், காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட வேண்டும் என்று சொன்னது அப்படிப்பட்ட மரபு மீறிய சிந்தனை. அதை அவர் அன்று சொன்ன போது கட்சிக்குள் கொந்தளிப்பு ஏற்பட்டது.
கடந்த வியாழனன்று ரஜனிகாந்த் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் பரவலாக விவாதத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளன. சிலருக்கு ஏமாற்றமும் ஏற்பட்டிருக்கிறது. அவை வழக்கமான, நமக்குப் பழகிப் போன அரசியலிலிருந்து வித்தியாசமானவை என்பதால் அத்தகைய எதிர்வினைகள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை.
அவர் தனக்குத் தமிழக முதல்வராக ஆகும் எண்ணமில்லை என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார். அவருக்கு அந்த எண்ணம் எப்போதுமிருந்ததில்லை. “நாளைய முதல்வர்” என்று அப்பட்டமாகத் தங்கள் பதவி ஆசையைப் பறைசாற்றிக் கொண்டு அதற்காகவே அரசியல் கட்சி தொடங்குகிறவர்கள், அரசியல் கட்சி நடத்துகிறவர்கள் உள்ள தமிழகத்தில்ரஜனிகாந்தின் இந்த அறிவிப்பைப் புரிந்து கொள்வது எளிதல்ல.அட, முதல்வர் பதவி வேண்டாம், எம்.எல்.ஏ பதவியோ எம்.பி பதவியோ கூடப் போதும், அதற்காகக் கொள்கையில் முரண்பட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்வது, அவர்களது கட்சிச் சின்னத்திலேயே தேர்தலில் நிற்பது, அந்தக் கட்சிகளுக்கு நன்கொடை என்ற பெயரில் பணம் கொடுத்து சீட் வாங்குவது, ஒரு தேர்தலில் ஒரு கட்சியை எதிர்த்துவிட்டு, சில ஆண்டுகளுக்குள்ளாகவே மறு தேர்தலில்அந்தக் கடசிகளிடம் கோடிக் கணக்கில் பணம் வாங்கிக் கொள்வது என்ற அரசியல் கலாசாரம் நிலவும் தமிழகத்தில் ஒருவர் தனக்கு முதல்வராக ஆகும் ஆசை இல்லை என்று சொல்வது விசித்திரமாகத்தானிருக்கும்
மொத்த அரசியல் கலாசாரத்தையும் மாற்ற வேண்டும் என்று விரும்புகிறார் ரஜனிகாந்த். அவர் முன் வைக்கும் மூன்று திட்டங்களும் அதை நோக்கியதுதான்:
1. இளைஞர்களின் பங்கேற்ப்பு 2. கட்சியில் குறைந்த அளவு பதவிகள். 3. ஆட்சி வேறு கட்சி வேறு
இன்று இளைஞர்கள் அரசியலில் அதிகமாகப் பங்கேற்பதில்லை என்பது ஊரறிந்த உண்மை. அரசியல் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் யார் என்று பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் ‘அரசியல் குடும்பத்தில்’ இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அவர்களது நோக்கம் பதவி. கட்சிக்குள்ளோ ஆட்சிக்குள்ளோ பதவி. இதற்கு உதாரணங்கள் உதயநிதி, ரவிந்திரநாத். அரசியல் குடும்பத்தைச் சாராத, எளிய பின்னணியிலிருந்து மேலெழுந்து வந்த, நன்கு கற்ற், பட்டியலினத்தைச் சேர்ந்த 43 வயது இளைஞர் எல்.முருகனைத் தமிழகத் தலைவராக நியமித்திருக்கிறது பாஜக. ஆனால் இது அரிய விதிவிலக்கு, விதிவிலக்குகள் விதிகள் ஆகா.
விசித்திரமான முரண் என்னவென்றால், வாக்காளர்களில் கணிசமானவர்கள் இளைஞர்கள். அவர்களைப் பிரதிநிதிப்பவர்கள் இளம் பருவத்தைக் கடந்தவர்கள். தங்களது இளம் வயதில் பதவிகளைப் பெற வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த இளைஞர்கள் அரசியல் செயல்பாடுகளிலிருந்து விலகி நிற்கிறார்கள். அவர்களது அரசியல் செயல்பாடு என்பது சமூக ஊடகங்களில் எல்லோரையும் கிண்டலடித்து மீம்ஸ் போடுவதுதான். இந்த முரண்பாட்டைத் தீர்க்காதவரையில் புதிய சிந்தனைகள், புதிய பார்வைகள், கால மாற்றத்திற்கேற்ற புதிய அணுகுமுறைகள் அரசியல் நடவடிக்கைகளில் இடம் பெறாது. இதை மாற்ற இளைஞர்கள் கணிசமாக அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் எனக் கருதுகிறார் ரஜினி. அவர்கள் பங்கேற்க வேண்டுமானால் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது அவரது சிந்தனை
பதவியை முதன்மைப்படுத்திய அரசியலில் கட்சி என்கிற அமைப்பு பூதாகரமாக உருவெடுக்கிறது. தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளில் கிளைச் செயலாளர், பகுதிச் செயலாள்ர் என்று ஆரம்பித்துத் தலைமைக் கழகம் வரை 50 ஆயிரம் பதவிகளுக்கு மேல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பதவியைப் பெற பண பேரம், ஜாதிச் சண்டை. போட்ட பணத்தை எடுக்க அரசு காண்டிராக்ட். சுருக்கமாகச் சொன்னால் இன்று அரசியல் கடசியில் இருப்பது என்பது முழுநேரத் தொழில். அதாவது அது பிழைப்பு. சேவை அல்ல. பிழைப்பு என்று வந்து விட்டால் காசு பணம் தேடுவது, கூழைக் கும்பிடு, பொறணி பேசுவது, தனிமனித வழிபாடு எல்லாம் கூடவே வந்து குடியேறும். இதை மாற்றாவிட்டால் அரசியலை சீர்படுத்த முடியாது.
இதனுடைய நீட்சிதான் ஆளும் கட்சியின் தலைவரே ஆட்சித் தலைவராக இருப்பது. அதாவது சர்வ அதிகாரமும் ஒருவர் கையில். பாஜக, கம்யூனிஸ்ட் போன்ற ஒன்றிரண்டு கட்சிகள் தவிர இந்தியாவில் உள்ள எல்லாக் கட்சிகளிலும் இதுதான் யதார்த்தம். தனிமனித வழிபாட்டின் ஆரம்பமே இங்கிருந்துதான் தொடங்குகிறது. வாரிசு அரசியலுக்கான வேரும் இதுதான்.
இது கடந்த 50 வருடத்தில் வந்த சீக்கு. இது வாரிசு அரசியலை வளர்த்தெடுக்க விரும்பிய தலைவர்கள் கொண்டுவந்த நடைமுறை. இன்னும் துல்லியமாகச் சொன்னால் திமுகவில் கருணாநிதியும் காங்கிரசில் இந்திராவும் ஆரம்பித்து வைத்த அறம் பிறழ்ந்த செயல்களில் இதுவும் ஒன்று. திமுகவில் அண்ணா கட்சியின் பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனைப் பதவி ஏற்க அழைத்ததுண்டு. காங்கிரசில் வெகுகாலம் வரை கட்சியின் தலைவராக ஒருவரும் பிரதமராக இன்னொருவரும் இருந்ததுண்டு.
இன்றைய இந்திய அரசியலின் நோய்க் கூறான ஊழல், வாரிசு அரசியல், பதவி வெறி, யதேச்சதிகாரம், இவற்றைக் களைய இதுவரை இல்லாத ஓர் அணுகுமுறையை வழக்கத்திற்கு மாறான சிந்தனையை ரஜனிகாந்த் முன் மொழிந்திருக்கிறார். அதைப் புரிந்து கொள்ளாதவர்கள் அன்றைய ஐபிஎம் தலைவர் கம்ப்யூட்டரின் சந்தை அளவைப் பற்றி சொன்னதைப் போல அதைக் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டு கேலி பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நல்ல அரசியலை விரும்புகிறவர்கள் அதை வரவேற்று வலுப்படுத்த வேண்டும். அது ஒரு சமூகக் கடமை.
25.3.2020