அறிதலும் அறிந்து கொள்ளப்படுவதுமே வாழ்க்கை. அதுதான் நட்பிற்கும்.
வாருங்கள், என்னோடு சற்று நடக்கலாம். என் நண்பர்களும் காத்திருக்கிறார்கள், உங்களைச் சந்திக்க.
யாவரும் கேளிர்
1. பாலகுமாரன்
“நாளைக்கு மாலை இலக்கியச் சிந்தனைக் கூட்டத்திற்கு வாருங்கள், நிறைய நண்பர்களைச் சந்திக்கலாம்” என்றார் ராஜாமணி. குரலில் ஒரு குழைவும், முகத்தில் ஓர் இயலாமையும் தெரிந்தது. குழைவுக்குக் காரணம் நட்பு. இயலாமைக்குக் காரணம் பணி. ராஜாமணி வேலை செய்து கொண்டிருந்தது அலிடாலியா என்ற விமான நிறுவன அலுவலகத்தில். இத்தாலிய நிறுவனம். என்றாலும் இரண்டு மூன்று பேர்தான் இருப்பார்கள். தீப்பிடித்தது போல அலுவலகத்தில் எப்போதும் ஒரு பரபரப்பு. இடைவிடாது அழைக்கும் தொலைபேசி. மேசையில் எப்போதும் ஒரு காகிதக் கத்தை. இதற்கு இடையில் எதிரில் உட்கார்திருப்பவனோடு பேச அவகாசம் இராது. அடுத்த அறையில் இடையறாது லொட லொடத்துக் கொண்டிருக்கும் டெலக்ஸ்தான் பேச்சுத் துணை
மதுரையில் படிப்பை முடித்து விட்டு ஸ்பென்சரில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். ராஜாமணியின் அலுவலகம், மத்திய நூலகத்திற்கு அருகில் இருந்தது. அதாவது கிட்டத்தட்ட அடுத்த வீடு. மதியம் உணவு வேளைகளில் ராஜாமணியைப் பார்க்கப் போவேன். அப்போதுதான் இலக்கியச் சிந்தனை பற்றி ராஜாமணி சொன்னார்.
இலக்கியச் சிந்தனைக் கூட்டங்கள், மாதத்தின் கடைசி சனிக்கிழமைகளில் ஒரு கடிகார ஒழுங்கோடு நடந்து கொண்டிருந்தது. திரு. ப.லஷ்மணன் வரவேற்புரை சொல்லித் தொடங்கி வைக்க, திரு. ப. சிதம்பரம் அல்லது பாரதி நன்றி நவில இவற்றிற்கிடையில் இலக்கியத் தலைக்கட்டுகளில் ஒருவர் பேச, இன்னொருவர் முந்தைய மாதம் வெளியான கதைகளை அலசி, தேர்தல் கருத்துக் கணிப்பு போல ஒன்றைத் தேர்ந்தெடுக்க, கூட்டம் நடந்தேறும். கூட்டத்தை விட கூட்டம் முடிந்த பின் அரங்கிற்கு வெளியே அவிழும் அரட்டைக் கச்சேரிகள் வெகு சுவாரஸ்யமானவை. அங்கு கடிகார ஒழுங்கு கிடையாது. ஆழ்ந்த ஆராய்ச்சிப் பார்வை இராது. நாவடக்கிப் பேச வேண்டிய சபை நாகரீகத்திற்கு அவசியமில்லை. அதனால் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை
பாலகுமாரனை அங்குதான் முதலில் சந்தித்தேன். அருகில் சுப்ரமண்ய ராஜு. நான் சந்தித்த மாதத்தில் 1972 ஏப்ரல் என்று ஞாபகம், அந்த மாதக் கணையாழியில் என் கவிதை பிரசுரமாகியிருந்தது. அதற்கு அடுத்த பக்கத்தில் சுப்ரமண்ய ராஜுவின் கவிதை. இதுவே எங்களுக்குள் தோழமை ஏற்படப் போதுமானதாக இருந்தது.
அந்த முதல் சந்திப்பில் என்ன பேசினோம் என்று இன்று நினைவில்லை. ஆனால் எங்களுக்குள் ஓர் இயல்பான ஈர்ப்பு இருந்ததை உணரமுடிந்தது. அதன் பின் எத்தனையோ சந்திப்புக்கள், உரையாடல்கள், விவாதங்கள், சர்ச்சைகள். ஆனால் எல்லாம் சந்தோஷங்கள்.
கோடம்பாக்கத்தில் கொஞ்ச காலம் என் குடும்பம் குடியிருந்தது. சற்று உள்ளடங்கிய வீடு. முன்னால் சற்றுப் பெரிய தோட்டம். கேட்டைத் திறந்து கொண்டு பதினைந்து அடியாவது நடந்துதான் முன்கதவிற்கு வர முடியும். ஒரு நாள் என்னைப் பார்க்க வந்திருந்தார் பாலா. நான் வீட்டில் இல்லை.எங்கள் வீட்டில் ஒரு நாய் வளர்ந்து கொண்டிருந்தது. அல்சேஷன். ஆனால் குட்டி. அனுமதியில்லாமல் கதவைத் திறந்ததும் பாலா மீது பாய்ந்து விட்டது. ஆடு சதையிலோ , தொடையிலோ வாய் வைத்து விட்டது. அந்த சம்பவத்திற்குப் பின், ஒரு மாதத்திற்கு பாலாவின் மனைவி கமலாவிடமிருந்து இரண்டு நாளைக்கொரு முறை போன் வரும். எடுத்தவுடன் அவர் கேட்கும் முதல் கேள்வி, “நாய் நல்லாயிருக்கா?” என்பது. நாய் மனிதனைக் கடித்தால், தொப்பூழைச் சுற்றி ஊசி போட வேண்டும் என்பது மட்டுமல்ல, நாய்க்கு வெறிபிடிக்காமல் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும் என்று யாரோ சொல்லியிருப்பார்கள் போலும். போன் வந்தால் பெரும்பாலும் என் தங்கைதான் எடுப்பாள். கொஞ்ச நாளில் அவளுக்குக் கமலாவின் குரல் பழகிவிட்டது. போனை எடுத்தவுடன், “நாய் நல்ல செளக்கியம். நாங்களும்தான்!” என்று சொல்லிச் சிரிப்பாள்
அப்போது நான் வாசகன் என்றொரு இலக்கியச் சிற்றிதழை நடத்தி வந்தேன். சென்னை வெறுத்துப் போன ஒரு தருணத்தில், தஞ்சாவூரில் வேலை தேடிக் கொண்டு இடம் பெயர்ந்தேன். பின் வந்தன எமெர்ஜென்சி நாள்கள். பாரதியார் கூடப் பயங்கரவாதியாகப் பார்க்கப்பட்ட காலம். காந்தியார் கலகக்காரராகக் கருதப்பட்ட நேரம்.
முன்னறிவிப்பில்லாமல் ஒரு பகல் பொழுதில் பாலகுமாரன் தஞ்சாவூரில் என் பணியிடத்திற்கு வந்தார். உடனே புறப்படு என்றார். வாசலில் ஒரு டாக்சி தயாராக இருந்தது. “என்ன விஷயம்?” என்றேன். “க்யூ பிரிவிலிருந்து உன்னை விசாரிக்க வருவார்கள். மாட்டிக் கொள்ளாதே” என்றார். க்யூ பிரிவு என்பது காவல்துறையின் உளவுப் பிரிவு. “என்னை எதற்கு விசாரிக்க வேண்டுமாம்?” என்றேன். வாசகன் என்றார் சுருக்கமாக.
வரட்டும் பார்த்துக் கொள்கிறேன். என்று அந்த நிமிடமே பயத்தை உதறினோம். பக்கத்து ஊர்களைப் பார்த்து வரலாம் என்று கிளம்பினோம். திருவையாறில் நின்றோம். காவிரி சுழி போட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. பார்க்கும் போதே கிறக்கமாக இருந்தது. இனித் தாளாது தண்ணீரில் குதித்தே ஆக வேண்டும் என்று தவித்தது மனது. எந்த வித முன்னேற்பாடும் செய்து கொள்ளவில்லை. போட்டிருந்த உடையைத் தவிர வேறு ஆடைகளை எடுத்து வரவில்லை. அவ்வளவு ஏன் , துவட்டிக் கொள்ளக் கூட துண்டு கிடையாது. தியாகராஜர் சன்னிதியில் பூஜை செய்து கொண்டிருந்த வேதியரிடம் இரண்டு துண்டு இரவலாக வாங்கிக் கொண்டோம். இறங்கி விட்டோம் காவிரியில். குளித்தோம். அது குளியல் அல்ல. ஒரு களியாட்டம். பாலகுமாரனுக்கு நீச்சல் தெரியும். துளைந்து துளைந்து நீரில் அளைந்தார். நான் அந்தப் பக்கம் போகாதே என அலறிக் கொண்டிருக்க, சுழல் பக்கம் போய்ச் சீண்டிப் பார்த்தார்.
கரையேறினோம். பசி. பயங்கரப் பசி. கும்பகோணம் போய் கிடைத்ததைத் தின்றோம். சாப்பிட்டு முடித்து ஜானகிராமன் கதைகளில் திளைத்த ஞாபகத்தில் கடையொன்றில் ‘வடயம்’ வாங்கி மெல்லத் தொடங்கினோம். வாய் வெந்து விட்டது. அத்தனை சுண்ணாம்பு.
ஆசிரியர் சாவி சொந்தமாக வார இதழ் தொடங்கியபோது பாலா, ராஜூ, நான் மூவரும் ஒரு இழையில் கோர்க்கப்பட்டோம். கவிதையிலிருந்து பாலாவின் கவனம் புதினத்தின் பக்கம் திரும்பியிருந்தது. இதழியலை நோக்கி என் ஆர்வம் கிளைத்திருந்தது. இருந்தாலும் பாலா பேட்டிகள், கட்டுரைகள், எழுதுவார். நான் கதைகளும் எழுதி வந்தேன்.
சாவி ஒரு ஜனநாயகம் அறிந்த ஆசிரியர். என்ன செய்யலாம், புதிதாக என்ன செய்யலாம் என்று யோசனைகளைத் தூண்டிக் கொண்டே இருப்பார். அதன் பொருட்டு அவ்வப்போது ஆசிரியர் குழு கூட்டம் நடக்கும். அநேகமாக அவர் வீட்டு மொட்டை மாடியில். இராச் சாப்பாடும் இருக்கும். அந்த மாதிரிக் கூட்டம் ஒன்றில்தான், நாங்கள் மூவரும் ஆளுக்கொரு நாவல் எழுதலாமே என்றார் சாவி. பாலா பரவசமானார். அவர் முகத்தில் பூத்த வெளிச்சத்தைப் பார்த்த நான், பாலா ஆரம்பிக்கட்டும் முதலில் என்றேன். சாவி சாருக்கு அதில் ஆட்சேபம் ஏதுமில்லை. எல்லோருக்கும் சந்தோஷம்.
பாலாவின் மனம் கதையை நெய்ய ஆரம்பித்து விட்டது. ஆனால் தலைப்புத்தான் சிக்கவில்லை. ஒருநாள் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தோம். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் அப்போது சோடியம் விளக்குகள் அறிமுகமாகியிருந்தன. பாலா திடீரென்று, ஆர்கமெடீஸ் உற்சாகத்தோடு மெர்க்குரிப் பூக்கள் என்றார். முதல் நாவலுக்குத் தலைப்புக் கிடைத்து விட்டது.
கமலாவின் போன் அழைப்புகளுக்கு பதில் சொல்லி வந்த என் தங்கை, சில ஆண்டுகளுக்குப் பின் அகால மரணமடைந்தாள். ஒரு அதிகாலையில் செய்தி வந்தது. திருநெல்வேலிக்குப் புறப்பட்டாக வேண்டும். அப்போது சாவி இதழின் பொறுப்பு என்னிடமிருந்தது. பத்திரிகைக்கான பக்கங்களை இறுதி செய்ய வேண்டும். சினிமா விமர்சனம் பாக்கி இருந்தது. முதல் நாள் ஒரு தலை ராகம் பார்த்து விட்டு வந்திருந்தேன், அந்த துக்கத்திற்கு நடுவில் உட்கார்ந்து அவசர அவசரமாக எழுதினேன். அந்த அதிகாலையில் அதை எடுத்துக் கொண்டு நான் தேடிச் சென்ற நபர் பாலா. கையில் இருந்த எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைத்தேன். “, இனி நீ பார்த்துக்க” என்று குரல் கம்மச் சொன்னேன். “இதுக்கு இப்ப என்ன முகூர்த்தம் எனக் கடிந்து கொண்டு ” உடனே புறப்படு” என்று முதுகில் ஆறுதலாகத் தட்டினார் பாலா. அதற்குத்தான் காத்திருந்ததோ மனது. குபுக் என்று உடைந்து விட்டேன். தோளில் சாய்ந்து அழுதேன். அங்கு அழுததுதான். அதற்குப்பின் 14 மணி நேரம் பயணித்து நெல்லை வந்த போதோ, அவளை எரித்து விட்டுத் திரும்பிய போதோ அழவில்லை. இதை எழுதும் போது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கண்கள் கசிகின்றன.
பாலாவைப் பற்றி நெஞ்சில் படர்ந்திருக்கும் நினைவுகள் பல ஈரமானவை. கால வெள்ளம் அவரை ஆன்மீகத்தின் பக்கம் இழுத்துக் கொண்டு போய் விட்டது. மனம் உள்நோக்கித் திரும்பி விட்டது. ஆனந்தத்திலோ, அமைதியிலோ திளைக்கிறார் அவர், அன்று காவிரியில் துளைந்தாடியதைப் போல
இந்த ஜூலையில் அவருக்கு எழுபது. அவரை இன்று குரு என்று கும்பிடுகிறார்கள். யோகி என்று நமஸ்கரிக்கிறார்கள். ஆனால் தாபமும், தவிப்பும், கோபமும் கனிவும், வெற்றி காண வேண்டும் என்ற வேகமும் வீழ்ந்துவிடுமோ என்ற அச்சமும் கொண்ட ஓர் இளைஞன் அவருள் இருந்தான், அந்த இளைஞன் என்றைக்கும் எனக்கு நண்பன்