தமிழின் முதல் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்று வகுப்பறைகளில் போதிக்கப்படுவது வழக்கம். ஆனால் பிரதாப முதலியார் சரித்திரத்திற்கும் முன்பாக சேஷய்யங்கார் என்பவர் எழுதிய ஆதியோர் அவதானி என்றதோர் புதினத்தை முற்றிலும் செய்யுள் நடையிலேயே எழுதி வெளியிட்டார். “நானோவெனில் நம் வித்துவான்கள் வழக்கமாயிறங்கும் துறைகளை விட்டுக் காலத்தியற்கையைத் தழுவிப் புதுத்துறையில் தாவிவிட்டேன்” என்கிறார் சேஷய்யங்கார்.
ஓர் அந்தணர் சாதியை மறுத்துக் கலப்புத் திருமணம் செய்து கொள்வதை விவரிக்கும் நாவல் அது நிஜ மாந்தர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் அது (“பொய்ப் பெயர் பூண்டு மெய்ப் பொருள் காட்டும்”) அதை எழுதியமைக்காக சேஷய்யங்கார் பெரும் இன்னல்களுக்கு உள்ளானார். அவரது மகளின் திருமணத்திற்கென்று போடப்பட்டிருந்த பந்தல் எரியூட்டப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சேஷய்யங்கார் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்து புரசைவாக்கத்தில் வசித்தார்.
வேதநாயகம் பிள்ளை பிரதாப முதலியார் சரித்திரம் என்ற புதினத்தை எழுதியதற்குக் கதை சொல்வதை தவிர வேறொரு நோக்கம் இருந்த்து. அந்த நூலுக்கான முன்னுரையில் அவர் “ தமிழில் உரைநடை நூல்கள் இல்லை என்று ஒப்புக்கொள்ளப் படுகிறது. இக்குறைபாட்டை பற்றி எல்லோரும் வருந்துகின்றனர். இக்குறையை நீக்கும் நோக்குடன்தான் இக்கற்பனை நூலை எழுத முன்வந்தேன்” என்கிறார் பிள்ளை.
தமிழின் இன்னொரு ஆதிநாவலான மாதவய்யர் எழுதிய,சாவித்ரி சரித்திரம் 1890ல் விவேகசிந்தாமணி என்றும் இதழில் வெளிவந்தது. சிறிது கால இடைவெளிக்கு பிறகு 1903ல் அதுவே முத்துமீனாட்சி என்ற தலைப்பில் சிறிது மாற்றங்களுடன் வெளிவந்தது.
மாதவய்யர் தனது படைப்பை விவேக சிந்தாமணியில் வெளியிடுவதை நிறுத்திய பின்னரே ராஜமய்யர் தனது கமலாம்பாள் சரித்திரத்தை அந்த பத்திரிகையில் எழுதத் துவங்கினார்.
பெரும்பாலான நாவல்கள் தமிழின் இந்த மூன்று ஆதி நாவல்கள் முன்மொழியும் போக்குகளையே பின்பற்றி வந்திருக்கின்றன. அறநெறிகளிளை வலியுறுத்துவதற்காக மாயூரம் வேதநாயகம்பிள்ளை 1878 – எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம், சமூக சீர்திருத்தங்களுக்காக குரல் எழுப்பும் நோக்கில் மாதவய்யர் 1890 – ஆம் ஆண்டு எழுதிய சாவித்ரி சரித்திரம், முத்து மீனாட்சி ஆகிய நாவல்கள், அக உலகத் தேடல்களை விரித்துரைக்கும், 1893ல் வி.ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் ஆகிய மூன்று ஆதி தமிழ் நாவல்களும் மூன்று போக்குகளுக்கு தடம் வகுத்துத் தந்தன.
என்றாலும் தமிழ் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களது பார்வையை தீர்மானிப்பதில் இரண்டு மரபுகள் முதன்மை வகுக்கின்றன. ஒன்று இந்திய வைதீக சிந்தனை மரபு, மற்றொன்று மேற்கத்தியக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த சிந்தனை மரபு.
லா.ச. ராமாமிர்தம், ந. பிச்சமூர்த்தி, போன்றோரது படைப்புகளில் இந்திய வைதீக மரபின் சிந்தனை ஓட்டங்களைப் பார்க்க முடியும்.
1980களில் துவங்கி 1990 கள் வரை வெளியான படைப்புகளில், பின் அமைப்பியல், மாந்திரீக எதார்த்தவாதம், பின் நவீனத்துவம், பின் காலனியத்துவம் ஆகிய மேற்கத்தியக் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த இலக்கியச் சிந்தனை ஓட்டங்களைப் பார்க்க முடியும்.
மேலே குறிப்பிட்டுள்ள மேற்கத்திய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த நாவல்களில் சில பொது இயல்புகளைக் காண முடியும். குறியீடுகள், உருவகங்கள் கொண்ட அதீத சித்தரிப்புகள், கதை சொல்வதில் கால நேர்கோட்டுத் தன்மையை நிராகரிப்பது, காரணகாரியங்களுக்கு இடையிலான தொடர்பை சிதைப்பது, கதை நிகழ்வுகளை சிதறலாக்குவது என அந்த இயல்புகளைப் பட்டியலிடலாம்.
1947 ம் ஆண்டு சிந்தனையாளரும், எழுத்தாளருமான ‘ழான் பால் சார்த்தர்’ எது இலக்கியம் என்ற கட்டுரையில் அப்போது வெளிவந்த படைப்புகள் மீது அலுப்புற்று ஒரு கருத்தை வெளியிட்டார். வழக்கமான பாணியில் எழுதப்படும் படைப்புகள் உற்சாகம் தருவதில்லை என்றும் பரிசோதனை முயற்சிகள் வாசகனை படைப்பிலிருந்து அன்னியப்படுத்தி விடுகின்றன என்றும் அவர் கருதினார். அதற்கு பதில் சொல்லும் விதமாக ரோலண்ட் ஜெரால்ட் பார்த்தஸ் 1953 ஆம் ஆண்டு Writing Degree Zero என்ற கட்டுரையை வெளியிட்டார்.
வழக்கமான முறையில் மொழியும், நடையும் செயல்படும்போது அவை படைப்புத் தன்மை கொள்வதில்லை. மொழியையும், நடையையும், படைப்பு/படைப்பாளி தனக்கேற்ப மாற்றிக் கொள்ளும்போதுதான் தனித்துவமாக படைப்பு நிகழ்கிறது. படைப்பு என்பது மாற்றத்தையும், எதிர் வினையையும் கொண்ட ஒரு இடையறாத செயல் என்பதுதான் Writing Degree Zero அடிப்படை. இதேபோல் 1968ம் ஆண்டு பார்த்தால் முன் வைத்த இன்னொரு கருத்து “படைப்பாளி இறந்து விட்டான்” என்பது ஒரு படைப்பை படைப்பாளியின் அரசியல் பார்வை, வரலாற்று பின்னணி, மதம், இனம், உளவியல், வாழ்க்கை, இயல்புகள், சார்ந்த அடையாளங்களைக் கொண்டு அணுகும் முறையை பார்த்தஸ் விமர்சிக்கிறார். இப்படி வாசிப்பது படிப்பதற்கு எளிதாக இருக்கும் ஆனால் அது குறைபாடுகளுடையது என்பது அவருடைய வாதம்
நாவல் என்ற இரவல் வடிவம் தமிழுக்கு அறிமுகமானபோது பழைய, இந்திய வைதீக மரபின் சிந்தனைகள் அதில் ஊற்றி வடிக்கப்பட்டன. பின்னர் வடிவம் மட்டுமல்ல சிந்தனைகளும் மேற்கு உலகிலிருந்து இரவல் பெறப்பட்டன.
இந்த இரண்டு போக்குகளுமே மறுதலிக்கப்பட்டு மண் சார்ந்த பார்வைகள், அடையாளம் சார்ந்த அரசியல் இவற்றின் வழியாக உள்ளடக்கத்தை, கதை வெளியை, தீர்மானித்துக் கொள்ளும் முயற்சிகள் அண்மைக்கால நாவல்களில் மேற்கொள்ளப் படுகின்றன.
வரலாறு என்பது அதிகாரத்தில் இருப்பவர்கள் எழுதி வைப்பது என்பது மாறி, ஒடுக்கப்பட்டவர்கள் கட்டமைப்பது என்ற நிலை உருவாகி இருக்கிறது. கட்டமைக்கும் போது வாய் மொழி வழ்க்குகளிலிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. இது ஒரு வகையில் நாட்டார் மரபை சார்ந்த்தது.
பேராசிரியர் நா. வானமாமலை தென் மாவட்டங்களில் நாட்டார் பாடங்களிலிருந்து திரட்டித் தொகுத்த கட்டபொம்மன், புலித்தேவன், கான்சாகிப் ஆகியோரது சரித்திரங்கள் சாதாரணப் பொதுமக்களிடம் இத்தகைய வழக்கம் இருந்தது என்பதற்குச் சாட்சி சொல்லும்
சுருக்கமாகச் சொன்னால் மேற்குலகச் சிந்தனையாளர்களிடமிருந்து, அண்மைக் காலத்தில் படைப்பாளிகளின் கவனம், நாட்டார் மரபுகளை நோக்கித் திரும்பியிருக்கிறது.
திணைகள் தமிழுக்கே உரிய ஒரு சிறப்பு. வேத மரபு பிறப்பின் அடிப்படையில் அதிகாரப் படிநிலைக் கொண்ட ஒர் வகைப்படுத்தலை முன்வைக்கிறது (Vertical Classification) . ஆனால் பண்டையத் தமிழ் மரபு வாழ்விடம் சார்ந்த ஓர் வகைப்படுத்தலை முன்வைக்கிறது. (Horizandal Classification) தமிழின் ஆரம்பகாலக் இலக்கியங்கள் திணை சார்ந்து எழுதப்பட்டன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் படைப்புலகம் அந்த மரபிலிருந்து இரவல் வாங்குகிறது. அல்ல, அல்ல, அந்த மரபை கொண்டுத் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.
சோளகர் தொட்டி, வீரப்பன் மறைந்திருந்த தமிழகக் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காட்டில் வாழ்ந்து வரும் பூர்வ குடிகளான சோளகர்கள் எப்படிப் பல்வேறு சக்திகளால் சுரண்டப்பட்டன என்பதையும் அவர்களைக் கட்டுக்குள் வைப்பதற்காக எப்படி அவர்களது உரிமைகள் முடக்கப்பட்டன என்பதையும் பேசும் அந்த நாவல் முல்லைத் திணை சார்ந்து எழுதப்பட்ட ஒரு நாவல்.
ஆழிசூழ் உலகு தூத்துக்குடி கடல்புரத்து மக்களின் ஐம்பதாண்டு கால வாழ்க்கையை விவரிக்கும் நாவல் அந்தப் பகுதியில் நிலவிய அரசியல் சமூகப் பண்பாட்டு மாற்றங்களும், நாவலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இது நெய்தல் திணை சார்ந்த நாவல்.கீழத்தஞ்சையின் நிலவுடமை சமூக அமைப்பு அதன் சிதைவு இவற்றை பேசும் நாவல். நஞ்சை மனிதர்கள் மருதத்திணை சார்ந்த நாவல் இது.
மானுடவியலின் முக்கிய பிரிவுகளில் ஒன்று இன வரைவியல் (Ethnography) ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு, அவர்களது சமூக அமைப்பு, பண்பாடு, வரலாறு, மரபார்ந்த ஞானம் இவற்றை ஆராயும் ஒருமுறை இன வரைவியல். இந்த முறையை உள்வாங்கிக் கொண்டு அல்லது அதன் சாயலில் அண்மைக்கால நாவல்கள் எழுதப்படுகின்றன.
கொங்கு வட்டாரத்தில் நிலத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்த கவுண்டர் சமூகத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றை மையமாக கொண்டு எழுதப்பட்ட நாவல் படுகளம் கோனார் இன மக்களை ஆவணப்படுத்தும் நாவல் கீதாரி.
இன வைரைவியலைப் போன்றே மற்றொரு ஆய்வுமுறை வரலாற்று வரைவியல் ( Histriography) ஒரு குறிப்பிட அம்சத்தை எடுத்துக் கொண்டு அதை வரலாற்று ரீதியாக ஆராயும் முறை இது. இந்த முறையில் அமைந்த ஒரு நாவல் காவல்கோட்டம். மதுரை அருகே உள்ள கீழகுயில்குடி என்னும் ஊரை சேர்ந்த காவல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட இனத்தின் துயர வரலாற்றைப் பேசும் நாவல் அது.
இதேபோல மண்டைக்காடு கலவரம் நடந்த நாஞ்சில் நாட்டு பகுதியில் உள்ள கிராமங்களின் வரலாற்றை (தோள்சீலைப் போராட்டம், வைகுண்ட சாமியின் ஆன்மீகப் போராட்டம் அடிமை முறை ஒழிப்பிற்கான போராட்டம் கன்யாகுமரி மாவட்டத்தை தமிழ் நாட்டுடன் இணைக்க நடந்த போராட்டம்) ஆகியவற்றின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல் மறுபக்கம்
இந்த போக்குகளைப் போலவே பிச்சைக்காரர்கள், திருடர்கள், நாடோடிகள், அகதிகள், பழங்குடிகள், விபச்சாரிகள், அரவாணிகள் போன்ற விளிம்புநிலை மாந்தர்களை மையப் பாத்திரங்களாக கொண்ட நாவல்களும் அண்மைக் காலங்களில் எழுதப்படுகின்றன.
கோயிலுக்கு பொட்டுக்கட்டிக் கொள்ளும் கூத்துப் பறையர் இனப்பெண் ஒருத்தியின் வாழ்வை பேசும் நாவலான செடல் ஓரு உதாரணம்
அண்மைக்கால நாவல்கள் சிந்தித்து எழுந்த விருப்பின் பேரிலோ, அல்லது சித்தாந்தங்களின் உந்துதல்களினாலோ தற்செயலாகவோ, அல்லது புதுமை செய்யும் நோக்கிலோ, மூன்றாம் மரபைச் சார்ந்து படைக்கப்பட்டு வருகின்றன. உலகெங்கும் அரும்பிவரும் பின்னோக்கித் திரும்புதல் என்ற போக்கு கூட தமிழில் மூன்றாம் மரபு தழைக்க ஒரு காரணியாகயிருக்கலாம். எப்படியாயினும் மண்சார்ந்த இந்த மூன்றாம் மரபு தமிழுக்கு ஓர் தனி அடையாளத்த்தைத் இலக்கிய உலகில் ஈட்டித் தரும்
One thought on “மூன்றாம் மரபு”
வணக்கம். இக்கட்டுரையில்இடம்பெறும் உங்கள் கருத்துகளை பல இடங்களில் மேற்கோள்காட்டிப் பேசியுள்ளேன். பயனுடைய கட்டுரை. நன்றி அய்யா!