பழைய ஜோக்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் புதுப் புதுக் கோணங்கள் காட்டும் ஜோக் அது. என்னுடைய கஷட காலம் எப்போது தீரும் என்ற கேள்விக்கு ஜோசியர் இன்னும் இரண்டு வருஷம் பொறுத்திருங்கள் எனச் சொல்வதும் அதைத் தொடர்ந்து ஜோசியம் கேட்க வந்தவர் அதன் பின் என ஆவலாகக் கேட்க, கஷ்டம் பழகிவிடும் என்று முடிப்பதுமான ஜோக்கை பல தருணங்களில் பலர் சொல்லக் கேட்டிருப்போம். டீசல் விலை இனி மாதந்தோறும் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை கேட்டதும் நம் நினைவுக்கு வருவதும் அந்த நகைச்சுவைத் துணுக்குதான்
மறுபடியும் விலை உயர்வா, என மருள்கிற மக்களுக்கு இந்த விலை உயர்வு மாதம் 50 காசுதான் என்று சமாதானம் சொல்கிறது அரசு. ஆனால் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் விலை உயர்வு மட்டுமல்ல. டீசல் விலை உயர்வு மற்ற எல்லாவற்றின் விலையையும் அதிகரிக்கச் செய்து விலைவாசியை உயரச் செய்து விடும், விலைவாசி உயர்ந்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும், இறுதியில் பொருளாதாரம் முடங்கும் என்பதால், இதுவரை டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசு தன் வசம் வைத்திருந்தது. இப்போது டீசல் விலையை அந்தந்த எண்ணை நிறுவனங்களே 50 காசு வரை உயர்த்திக் கொள்ளலாம் எனச் சொல்லியிருப்பதன் மூலம் அரசு அந்த அதிகாரத்தை எண்ணை நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டது.
இல்லை, நாங்கள் அப்படி ஒப்படைத்து விடவில்லை, அந்த அதிகாரம் இன்னும் எங்களிடம்தான் இருக்கிறது என்கிறார் அமைச்சர். கெட்டிக்காரத்தனமான சமாளிப்புத்தான். ஆனால் 2010ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி, டீசல் விலை நிர்னயத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து தளர்த்த அரசு கொள்கை முடிவு எடுத்தது என்பதை அமைச்சரால் மறுக்க முடியுமா?
இந்த மாதந்தோறும் விலை உயர்த்தும் முடிவு கூட மத்திய அமைச்சரவையில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்பதே அதிகாரம் கைமாறிய உண்மையை உடைத்துச் சொல்லும்.
இப்படி ஒரு விலை உயர்வு வரவிருக்கிறது எனத் தெரியாமல், ரயில்வே அமைச்சர் அதற்கு சில நாள்களுக்கு முன்னர்தான் ரயில்வே கட்டணங்களை உயர்த்தினார். இந்த விலை உயர்வு 4000 கோடி ரூபாய் அளவிற்கு ரயில்வேவிற்குச் சுமை ஏற்றும் என்பதால் மீண்டும் ஒரு ரயில் கட்டண உயர்வு வரக் காத்திருக்கிறது.
இந்த முடிவு உணர்த்துவது என்ன? அரசு விலைவாசியைக் கட்டுக்குள் வைக்கும் தனது பொறுப்பில் இருந்து நழுவிக் கொள்கிறது என்பதுதான். விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணை நிறுவனங்களிடம் கொடுப்பதன் மூலம், விலைவாசியையும், மக்களின் நல்வாழ்வையும், நாட்டின் பொருளாதாரத்தையும் அவர்கள் வசம் மறைமுகமாக ஒப்படைத்து விட்டது அரசு.
தங்கள் பொருளுக்கான விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரி,மையை எண்ணை நிறுவனங்களிடம் தந்திருக்கும் அரசு, அதே போல விவசாயிக்கும் தனது விளை பொருட்களுக்கான விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்குமா?