மலை மீது இருந்தது அந்த மூலிகை. அது கிடைத்து விட்டால் ஆரோக்கியமான உடல் கிடைக்கும் மேனி பொலிவுறும். ஆயுள் நீளும். அதைக் கேள்விப்பட்ட அரசன் அதை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று நினைத்தான்.
ஆனால் அந்த மலையை எளிதில் அடைந்து விட முடியாது. அதை மறித்து நின்று கொண்டிருந்த அசுரனின் உதவி வேண்டும். சிகரத்தை அடைய விரும்புபவருக்கு அவன் இப்படிப் போ, அப்படித் திரும்பு என்று அவன் சொல்லிக் கொண்டே வருவான். ஆனால் ஒரு நிபந்தனை. எக்காரணம் கொண்டு அவனைத் திரும்பிப் பார்க்கக் கூடாது.
அந்த மூலிகையைக் கொண்டுவர அரசன் ஒரு படை வீரனை அனுப்பினான். அவனை அசுரன் வழி நடத்திக் கொண்டு போனான். ஓரிடத்தில் பின்னாலிருந்து கொலுசுச் சத்தம் கேட்டது. யாரோ ஒரு பெண் வந்திருக்கிறாள் என்று எண்ணிய வீரன், அவள் யார், அழகியா என்று அறிந்து கொள்ளும் ஆவலில் திரும்பிப் பார்த்தான். அசுரன் சிரித்தான். படைவீரன் கல்லானான்.
இரண்டாவதாக ஒரு கவிஞனை அனுப்பினான் அரசன். அசுரன் வழி நடத்த அவன் போய்க் கொண்டிருந்தான். பாதி வழியில் இனிமையான இசை அவன் காதில் விழுந்தது. இசைப்பது யார் என்று அறிந்து கொள்ள அவன் திரும்பிப் பார்த்தான். அவன் கல்லானான்
மூன்றாவதாக அரசனே கிளம்பினான். வழியில் எத்தனையோ மாயா ஜாலங்களை அசுரன் நிகழ்த்தினான். புகழ் கோஷங்கள் முழங்கின. பொன் மாரி பொழிந்தது.போதைப் பொருட்களின் நறுமணம் வீசியது. அரசன் எதையும் பொருட்படுத்தவில்லை. மேலே மேலே முன்னேறிச் சென்றான். இறுதியில் அந்த மூலிகையை அடைந்தான்.
எங்கோ படித்த கதை. இலட்சியத்தை எட்ட வேண்டுமானால் மன உறுதி வேண்டும். இடையில் கிடைப்பவற்றில் சபலமடைந்து விடக் கூடாது என்பது கதை சொல்லும் நீதி.
கேட்க நன்றாகத்தானிருக்கிறது ஆனால் நடை முறையில் இது சாத்தியமா என்று நான் எண்ணியது. ஆனால் எண்ணியது எண்ணியாங்கு எய்துவர் திண்ணியராகப் பெறின் என்பதைக் கடந்த வாரம் பிரதமர் மோதி மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.
கடந்த வாரம் தாய்லாந்தில் 16 நாடுகள் கூடின. ஆசியான் என்று அழைக்கப்படும் சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளும். சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா ஜப்பான், நியூசிலாந்து, தென் கொரியா ஆகிய நாடுகளும் தங்களுக்கிடையே ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கூடின. 2013லிருந்து 27 முறை கூடிப் பேசிய நாடுகள் இறுதியாக ஒப்பந்தத்தை முடிவு செய்து கையெழுத்திடக் கூடியிருந்தன
உலகம் இதை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தது. ஏனெனில் ஆர்செப் எனப்படும் பிராந்திய ஒட்டுமொத்த பொருளாதாரக் கூட்டு (Regional Comprehensive Economic Partnership –RECP) ஏற்படுமானால் அது உலகின் 40 சதவீத வர்த்தகத்தை உள்ளடக்கியதாக இருக்கும். அது மட்டுமல்ல, அரசியல் சதுரங்கத்தில் அது அமெரிக்காவிற்குச் சீனா வைக்கும் ‘செக்’ ஆக இருக்கும். வல்லரசுகளுக்கான இந்த விளையாட்டில் பலியாகக் கூடிய பகடைக் காயாக இந்தியா இருந்தது
அது ஏன் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் ‘தடையற்ற வர்த்தகம்’ என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு நாட்டிற்கும் தனது நாட்டிற்குள் வந்து இறங்கும் பொருட்கள் மீது இறக்குமதித் தீர்வை விதிக்கும் அதிகாரம் உண்டு. நம் நாட்டு உற்பத்தியோ, தொழிலோ, நாம் வழங்கும் சேவையோ இறக்குமதியால் பாதிக்கப்படுமானால் நாம் அந்தப் பொருள் மீது அதிக அளவில் இறக்குமதித் தீர்வையை அரசு விதிக்கும். அதன் காரணமாக நம் நாட்டுச் சந்தையில் அந்தப் பொருளின் விலை, உள்நாட்டுத் தயாரிப்புக்களை விடக் கூடுதலாக இருக்கும். தடையற்ற வர்த்தகம் என்றால் நாம் இந்த உறுப்பு நாடுகள் ஒன்றிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீதான இறக்குமதித் தீர்வையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நம் நாட்டின் சந்தை உறுப்பு நாடுகளின் பொருட்களை விற்கத் திறந்து விடப்பட வேண்டும். அதே போல் நாம் இந்த உறுப்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருளுக்கு குறைந்த தீர்வை விதிக்கப்படும். அந்த நாடுகளின் சந்தை நமக்குக் கிடைக்கும்.
இதில் பிரச்சினை எங்கு வருகிறது என்றால் இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றோமானல் சீனப் பொருட்கள் இங்கு வந்து குவியும். அவற்றின் விலை மலிவாக இருக்கும். அதனால் நம் நாட்டுத் தொழில்கள், குறிப்பாக சிறு குறு மத்திய ரகத் தொழில்கள் அடி வாங்கும். வேலை வாய்ப்புக்கள் குறையும். அன்னியச் செலாவணி கரையும்.ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் நம்மிடம் பால், மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்கக் காத்திருக்கின்றன. அவற்றோடு மிளகு, ரப்பர். தேங்காய் போன்ற பொருட்களை விற்க நாம் மற்ற நாடுகளோடு கடும் போட்டியிட வேண்டியிருக்கும்.
சுருக்கமாகச் சொன்னால் உலகச் சந்தையில் சீனாவின் கை மேலோங்கும். இந்தியாவிற்குப் பின்னடைவு ஏற்படும்
அதனால் சுதேசி ஜாக்ரண் மன்ச், பாரதிய கிசான் சங் போன்ற சங் பரிவார் அமைப்புக்கள் இதனை எதிர்த்தன. மறுபுறம் பெரும் வர்த்தக நிறுவனங்கள் நீண்ட கால ஏற்றுமதி வாய்ப்பைக் கருதி இதை ஏற்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்தன. இதற்கிடையில் சீன அதிபர் ஷி ஜிங் பிங் மாமல்லபுரம் வந்தது இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு நம் பிரதமரை இணங்கச் செய்வதற்குத்தான் என்று ஆதாரமற்ற ஊகங்கள் பரப்பப்பட்டன. இதனால் ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவது என்ற இலக்கைக் கொண்டிருக்கும் இன்றைய அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும், இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய இந்த ஒப்பந்தத்தை இந்தியா ஏற்கப் போகிறதா, பிரதமர் உள்நாட்டுப் பெருந் தொழில் அமைப்புக்கள், அமைப்பில் உள்ள மற்ற 15 நாடுகள் இவற்றின் அழுத்தத்திற்கு மசிந்து விடுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு சில நாட்களாக நிலவி வந்தது.
ஆனால் பிரதமர் அந்தக் கூட்டத்தில் தெளிவாகப் பேசினார். “ என்னுடைய மனசாட்சி இந்த அமைப்பில் இணைவதற்கு அனுமதி அளிக்கவில்லை” என்று சொல்லி இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து விட்டார். வெறுமனே பொத்தாம் பொதுவாக இதை மட்டும் சொல்லியிருந்தால் அது நவீன உலகில் நகைப்பிற்கு இடமாகக் கூட ஆகியிருக்கலாம். ஆனால் அவர் தனது வாதத்தைத் தர்க்க ரீதியாக நிறுவினார்.
“ஆர்செப் உருவாவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே எங்கள் வணிகர்கள், தொழில் முனைவோர்கள் இந்தப் பகுதியில் உள்ள நாடுகளோடு ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவற்றின் மூலம் இரு தரப்பும் வளமடைந்திருக்கின்றன. சர்வதேச விதிகளுக்குட்பட்டு இந்தப் பகுதியில் உள்ள நாடுகளிடையே தாரள வர்த்தகமும், ஒருங்கிணைப்பும் இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. விட்டுக் கொடுக்கும் மனோபாவத்தோடு அனைவருக்கும் பலனளிக்கும் விதத்தில் ஒப்பந்தம் அமைய வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால் இந்தியாவின் வேளாண்குடி மக்கள், வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்துறை ஆகியோருக்கு இது போன்ற விஷயங்களில் பங்கிருக்கிறது. அவர்கள்தான் இந்தியாவை வாங்கும் சக்தி கொண்ட சந்தையாக, உலகின் மூன்றாவது பொருளாதார சக்தியாக ஆக்கியவர்கள். இந்த ஒப்பந்தத்தை இந்தியாவின் நலனோடு ஒப்பிட்டுக் பார்க்கும் போது, இந்தியாவிற்குச் சாதகமான முடிவுகள் இல்லை. காந்தியின் கருத்துக்கள், என் மனசாட்சி ஆகியவை இந்த ஒப்பந்தத்தை ஏற்க அனுமதிக்கவில்லை”
மாநாட்டிற்கு முதல் நாள் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டத் திருக் குறளை வெளியிடும் போதே அவர் மனதை கோடி காட்டிவிட்டார். அந்த நிகழ்ச்சியில் தனது உரையை “தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு” என்ற குறளைச் சொல்லித் தொடங்கினார். அதன் பொருள்: ஒருவர் முயற்சி செய்து சேர்த்த செல்வம் தகுதி உடையோருக்கே பயன்பட வேண்டும்
இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததின் காரணமாக மற்ற நாடுகளும் கையெழுத்திடவில்லை. ஒப்பந்தம் ஏற்பட்டால் சீனம் என்ற பிரம்ம ராட்சசனைக் கட்டுக்குள் வைக்க இந்தியாவால்தான் முடியும், என்று அவை நம்பியிருந்தன. இந்தியா இல்லை என்னும் போது அவை பின்வாங்குகின்றன. அடுத்த ஆண்டு அந்த நாடுகள் கையெழுத்திட்டுவிடும் என்று சீன நம்பிக்கை தெரிவித்திருக்கிறது
இந்தியாவின் நலன்தான் முதலில், அதற்குத்தான் முன்னுரிமை என்று உறுதியோடு மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் மோதி.