பெருமாளும் பெத்த பெருமாளும்

maalan_tamil_writer

தில்லைநாதன் தீவிர சிவபக்தர். சிவனைத் தவிர வேறு எவரையும் வணங்குவதில்லை என்பதில் மட்டுமல்ல, நினைப்பதும் இல்லை என்பதில் உறுதியாக இருந்தார், அவரிடத்தில் வேலைக்குச் சேர்ந்தார் ஒருவர். பெயர் பெருமாள்! இதை  இங்கிருந்து எடுத்துவா, அதை அவரிடம் கொடுத்துவா என்பது போன்ற எடுபிடி வேலைதான். ஆள் வேலையில் கெட்டி., சுறுசுறுப்பு. ஆனால் ஒரு நாளைக்கு நூறு முறை பெருமாள்! பெருமாள்! என்று வாய்விட்டுக் கூப்பிட வேண்டியிருந்தது. தில்லைநாதனுக்கு.

தர்மசங்கடத்தைத் தவிர்க்க ஒருநாள் பெருமாளைக் கூப்பிட்டு, போய் உன் பெயரை மாற்றிக் கொண்டு வா என்றார். “மாற்றலாங்க, ஆனால் அது சுலபம் இல்லீங்க!” என்றார் பெருமாள். “ஏன்?” என்றார் தில்லை. “அதுக்குக் குல தெய்வம் கோயில்ல போய் சில சடங்கு சாங்கியம்லாம் செய்யணுங்க” என்றார். “என்ன செய்வியோ எனக்குத் தெரியாது ஒரு வாரம் லீவு தரேன். போய் மாத்திக்கிட்டு வா!” என்றார். அப்போதும் பெருமாள் தயங்கி நிற்பதைக் கண்டு, “ என்ன, பணமா?” என்று கேட்டு ஒரு பெருந்தொகையும் எடுத்துக் கொடுத்தார்.

ஒருவாரம் கழித்துப் பெருமாள் திரும்பி வந்தார். “என்ன பேரை மாத்தினியா?” என்றார் தில்லை. “ஆச்சுங்க” என்றார் பெருமாள். “இப்ப என்ன பேரு?” என்று ஆவல் ததும்ப கேட்டார் தில்லை. அதற்கு வெட்கத்துடன் பெருமாள் சொன்னார் : “பெத்த பெருமாள்!”

இந்த பெருமாள் பெத்த பெருமாள் ஆன கதையை எனக்கு என் தாத்தா சொன்னார். சைவ –வைணவ பிணக்கு உச்சத்தில் இருந்த போது நிஜமாகவே நடந்தது என்றும் சொன்னார்.

அப்படியெல்லாம் நிஜமாக நடந்திருக்காது, சும்மா சுவாரஸ்யத்திற்காகச் சொல்கிறார் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத் தீர்மானத்தைச் செய்தித்தாள்களில் வாசிக்கிறவரை..

தேர்தலில் பெரும் தோல்வி கண்டதையடுத்து- அவர் முன்பு வென்ற அமேதி  உள்பட- ராகுல் காந்தி தான் வகித்து வந்த கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவைத் திரும்பப் பெறுமாறு காரியக் கமிட்டி உறுப்பினர்கள் மன்றாடினார்கள், மல்லுக்கட்டினார்கள். ஆனால் மனுஷன் மசியவில்லை. உடும்புப் பிடியாய் உறுதியாய் நின்றார். 78 நாட்கள் ஓடின. இடையில் என்னென்னவோ நடந்ததன. கர்நாடகத்தில் ஆட்சியே பறிபோயிற்று. அசைந்து கொடுக்கவில்லை. இடித்த புளியாக இருந்தார். வேறு வழியில்லாமல் காரியக் கமிட்டி கூடி 10 மணி நேரம் ஆலோசித்துத் தேர்ந்தெடுத்த தலைவர், சோனியா காந்தி! ராகுல் காந்தியின் தாயார்.

இது காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரம். அவர்கள் யாரை வேண்டுமானாலும் தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளலாம், அது அவர்கள் விருப்பம். ஆனால் இந்திய வரலாற்றை வாசித்து வருபவன் என்கிற முறையில் எனக்கு வருத்தமாக இருந்தது. ஏனெனில் சில வாரங்களுக்கு முன்னர்தான் பாரதியார் எழுதிய காங்கிரஸ் கட்சியின் வரலாற்றைப் படித்திருந்தேன். பாரத ஜன சபை என்ற பெயரில் அவர் அந்த நூலை எழுதி நூறண்டுகள் ஆகின்றன 1885ல், பம்பாயில், காங்கிரஸ் கட்சியின் முதல் கூட்டம் நடந்ததிலிருந்து தொடங்கி அதன் முதல் 20 ஆண்டுகளில் நடந்த காங்கிரஸ் கூட்டங்களின் பதிவு அது. ஆண்டுக்கு ஒரு தலைவர். அவர்கள்தான் என்ன மாதிரியான ஆளுமைகள்.! கல்வி, ஞானம், தேச நலன் இவற்றால் உந்தப்பட்டவர்கள்.

ஆனால் இன்று காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்திற்கு வெளியே ஒரு நபர் கூடத் தலைமை ஏற்கக் கிடைக்கவில்லை. தற்காலிகமாகக் கூட கிடைக்கவில்லை! எப்பேர்ப்பட்ட வீழ்ச்சி!

உண்மையில் அரசியல் அறிவும், தேர்தல், நாடாளுமன்ற அனுபவமும் கொண்ட நபர்கள் இல்லையா? மன்மோகன் சிங், ஏ.கே. அந்தோணி, மல்லிகார்ஹுன கார்கே, ப. சிதம்பரம், குலாம்நபி ஆசாத் இவர்கள் எல்லாம் ஒரு பிரம்மாண்டமான அரசை (இந்திய அரசு) பொறுப்பேற்று நடத்தியவர்கள். அவர்களால் கட்சியின் தலைமைப் பொறுப்பைத் தற்காலிகமாக ஏற்று சில மாதங்களுக்கு நடத்த முடியாதா?

வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களை எதிர்கொண்டு 2004, 2009 ஆம் ஆண்டுகளில் காங்கிரசிற்கு வெற்றி தேடித்தந்தவர் என்பதால் அவரால்தான் மோதி-அமித்ஷாவின் அரசியலைத் தாக்குப் பிடிக்க முடியும் என்று காங்கிரஸ் நண்பர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் அவர்களே இன்னொன்றும் சொல்கிறார்கள். மோதி அமித்ஷா வருகைக்குப் பிறகு இந்திய அரசியல் சூழல் மாறிவிட்டது, அன்றிருந்த நிலை இன்றில்லை என்றும் சொல்கிறார்கள். நீண்ட தேர்தல் அனுபவம் கொண்ட பீட்டர் அல்போன்ஸ், இந்தக் கருத்தை வெளிப்படையாகவே தொலைக்காட்சி விவாதங்களில் பலமுறை கூறி வந்திருக்கிறார். அந்தச் சூழ்நிலையில், சோனியாவின் தலைமை பலன் தருமா என்ற கேள்வி எழுகிறது, இதற்கு அவர்களிடம் பதில் இல்லை 

உண்மையில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சினைகள் கட்சிக்கு வெளியில் இல்லை. கட்சிக்குள்ளேயே இருக்கிறது. அண்மைக்காலமாக இந்து மக்களிடையே ஒரு எழுட்சி ஏற்பட்டிருக்கிறது என்பது வெளிப்படை. இது ஒரு வகையில் காங்கிரஸ் பின்பற்றிவந்த கொள்கைகளின் எதிர்வினை. இதைத் தேர்தல் தோல்விக்குப் பின் காங்கிரஸ் உணர்ந்திருக்கிறது. “மதச்சார்பற்ற கொள்கை குறித்து காங்கிரசிலேயே கருத்து மாறுபாடுகள் இருக்கின்றன. அதை நினைக்கும் போதெல்லாம் எனக்குக் கலக்கமும் கவலையும் ஏற்படுகின்றன” என அண்மையில் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். அரசமைப்புச் சட்டம் 370 பிரிவு பற்றி கட்சிக்குள் கருத்துத் தெரிவித்த போது இளைய தலைமுறைத் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா “நாம் மக்களின் கருத்துக்களொடு இணைந்து செல்ல வேண்டும்” என்று சொன்னதாகச் செய்திகள் வெளி வந்தன.

ஆனால் காங்கிரசில் உள்ள சில மூத்த தலைவர்கள் கட்சியின் பழைய போக்கை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. கெளரவம் பார்க்கிறார்கள் கட்சிக்குள் ஒரு கயிறு இழுப்பு போட்டி நடக்கிறது

மூத்த தலைமுறையை மாற்றும் வலிமை ராகுலுக்கு இல்லை. அதை அவர் தேர்தல் தோல்விக்குப் பின் நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். ப.சிதம்பரம், கமல்நாத், அசோக் கெல்லட் போன்ற தலைவர்கள் கட்சியின் நலனைவிட தங்கள் மகன்களின் நலன்களை முன்னிறுத்தி சீட் கொடுக்க வற்புறுத்தினார்கள்  என்று பெயர்களைக் குறிப்பிட்டு பேசினார் ( டைம்ஸ் ஆஃப் இந்தியா – மே 26 2019) அவர்களை ஏற்கவும் முடியவில்லை, நீக்கவும் முடியவில்லை என்ற நிலையில் கட்சிப்பணிகளில் ராகுல் முழுமையான ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். ராகுலை ‘கன்விஸ்’ செய்ய மன்மோகன் சிங்கிற்கு மட்டுமல்ல, சோனியாவிற்கும் இயலவில்லை

பாவம், சோனியா தன்னுடைய  மீட்புப் பணிகளை வீட்டிலிருந்தே துவக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்   

31.8.2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.