“பெரியார் இல்லாதிருந்தால் தமிழ் நாடு எப்படி இருந்திருக்கும்?” இப்படி ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார் நண்பர்.
எனக்கு ஒரு பழக்கம். தனிமையில், அல்லது நெடுநேரம் செய்வதற்கு ஏதும் இல்லாமல் ‘சும்மா’ இருந்தால் -பயணங்களின் போது இருப்பதைப் போல- ஒரு யோசனை குறுக்கே ஓடும். ‘இப்படி நடந்திராவிட்டால்?’ என்று ஒரு கேள்வியை எடுத்துக் கொண்டு யோசிக்கத் தொடங்கிவிடும் மனம். இந்தியா பாகிஸ்தான் பிரிந்திராவிட்டால்? கிளைவிற்கும் துய்ப்ளேவிற்கும் நடந்த போரில் துய்ப்ளே ஜெயித்திருந்தால் சென்னை எப்படியிருந்திருக்கும்? காந்தி சுட்டுக் கொல்லப்படாமல் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தால்? கருணாநிதிக்குப் பதில் நெடுஞ்செழியன் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால்? எமெர்ஜென்சி இன்னும் கொஞ்ச காலம் நீடிக்கப்பட்டிருந்தால்? இப்படிஅல்லது இதைப் போல ஒரு கேள்வியை எடுத்துக் கொண்டு வரலாற்றில் பயணம் செய்வது எனக்கு சுவாரஸ்யமாக இருக்கும். அதன் நீட்சியாகப் புத்தகங்களைத் தேடிப் போனதுமுண்டு. அதைத் தெரிந்து கொண்டுதான் நண்பர் இப்படிக் கேட்கிறாரோ என்று நினைத்தேன்.
ஆனால் அவர் தமிழ் நாட்டின் இன்றைய அரசியல் நிலையையோ அல்லது பெரியாரின் நூல் ஒன்றை அல்லது அவரைப் பற்றிய பேஸ்புக் பதிவொன்றைப் படித்து விட்டோ இந்தக் கேள்வியை வீசுகிறார் என்பது தொடர்ந்த உரையாடலில் புரிந்தது.
இந்தக் கேள்விக்கு பதிலாக எனக்குள் ஓர் எதிர் கேள்வி எழுந்தது? பெரியார் இருந்த தமிழ் நாடு எப்படி இருந்தது? பெரியார் இருந்த தமிழ் நாட்டில் (1879 -1973) கடவுள் நம்பிக்கை வேரூன்றியிருந்தது. இன்றும் அது வலுக்குறையாமல் இருப்பதைக் கோயில்களில் நாம் காணும் கூட்டமும் உண்டியல் வருமானங்களும் சொல்கின்றன (வருமானம் அடிப்படையில், பழனி கோவில் இந்தியாவில், மூன்றாவது பெரியது)
அன்று அறிவுக்குப் பொருந்தா நம்பிக்கைகள் பரவலாக இருந்தன. இப்போதும் மண்சோறு சாப்பிடுதல், மொட்டை அடித்துக் கொள்ளல், தீமிதி, அலகு குத்தல் எனப் பலவும் தழைத்திருக்கின்றன. இந்தித் திணிப்பு இருந்தது. இப்போதும் இருக்கிறது. ஆங்கில மோகம் இருந்தது. இப்போது அதிகமாக இருக்கிறது அப்போதும் இட ஒதுக்கீடு இருந்தது ( முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை எண் 613 , செப்டம்பர் 16, 1921) இன்று அது விரிவுபடுத்தப்பட்டு பலனும் அளித்திருக்கிறது.
அப்போதும் அமைச்சர்கள் அரசியல் வாதிகள் சொகுசாக வாழ்ந்தார்கள் நீதிக் கட்சி ஆட்சியில் இருந்த போது அமைச்சர்களது மாத சம்பளம் ரூ. 4,333.60; (இதோடு ஒப்பிடுகையில் அருகிலிருந்த மத்திய மாகாணங்களின் அமைச்சர்கள் பெற்ற ஊதியம் ரூ. 2,250). அப்போதும் திராவிட இயக்கங்களில் பிளவுகள் ஏற்பட்டன .பெரியார் தலைமையில் திராவிடர் கழகம், பி.டி.ராஜன் தலைமையில் நீதிக் கட்சி)
அன்றும் அமைச்சர்கள் செயல்திறம் அற்றவர்களாக, மக்களின் நம்பிக்கையைப் பெறாதவர்களாக இருப்பதாக பத்திரிகைகள் எழுதின. “இந்த மாகாணத்தின் மக்களைப் பீடித்த பிளேக் நோய்போல் நீதிக்கட்சி செயல்படுகிறது; அதன் பால் மக்களின் நெஞ்சங்களில் நிரந்தர வெறுப்பு உருவாகிவிட்டது. … கிராமங்களில் வாழும் கிழவிகள் கூடப் பொபிலி அரசரின் ஆட்சி எப்போது முடியும் என்று கேட்கிறார்கள்” என்று அக்டோப ர் 2 5,1935 ல் ஜமீன் ரயாட் பத்திரிகை எழுதியது (பேராசிரியர் கே.ஏ. மணிக்குமார் எழுதியுள்ள A colonial economy in the Great Depression, Madras (1929–1937) என்ற நூலில் எடுத்தாளப்பட்டுள்ள மேற்கோள் பக் 191 ( Orient Blackswan வெளியீடு)
அன்றும் ஊழல் இருந்தது. நீதிக்கட்சிக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்த மெட்ராஸ் மெயில் இதழ் கூடப் பொபிலி அரசின் ஊழலையும் கையாலாகாத்தனத்தையும் சாடியது. அன்றும் ஜாதி அடையாளம் சார்ந்த பெருமிதங்களும், ஜாதிக் கலவரங்களும் இருந்தன.
அப்போதும் அரசு தலித்களுக்குச் செல்லம் கொடுப்பதாக முணுமுணுப்புக்களும் புகார்களும் இருந்தன. “இவ்வளவு மோசமான நிலை உருவாகக் காரணம் தொழில் துறை அரசு அலுவலர்கள் ஆதி திராவிடர் தலித்துகளுக்கு அளவுக்கு அதிகமாகச் செல்லம் கொடுத்ததும் சில காவல்துறை அதிகாரிகள் தங்களை அறியாமலே தலித்துகளை ஊக்குவிப்பதும் தான் எனப் பொது மக்கள் கருதுகின்றனர்” என்று ஜஸ்டிஸ் இதழ் எழுதியது. (யூஜின் .F. இர்ஷிக் எழுதியுள்ள Political and Social Conflict in South India; The non-Brahmin movement and Tamil Separatism, 1916–1929 என்ற நூல் .யூனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா பிரஸ் வெளியீடு)
அன்று பெரியார் வாழ்ந்த காலத்தில் இருந்ததெல்லாம் இன்றும் இருக்கின்றன.. பெரியார் இருந்த போதும், இல்லாத போதும் தமிழ்நாட்டின் அரசியல் கலாசாரத்தில், சமூக வழக்கங்கள்ல் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை. சம்பவங்கள் மாறியிருக்கலாம். ஆனால் சாராம்சம் ஒன்றுதான். ஆட்சி மாறியிருக்கலாம். ஆள்கள் மாறியிருக்கலாம். அளவும், வீர்யமும் மாறி இருக்கலாம். ஆனால் அடிப்படையில் பெரிய மாற்றம் இல்லை. அதாவது பெரியாரின் வாழ்க்கை, சிந்தனை , இவை தமிழ்ச் சமூகத்தின் செயல்பாடுகளில், தமிழக அரசியலின் இயங்கு முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடவில்லை.
இதையொட்டி இன்னொரு கேள்வியும் எழுகிறது. அது: பெரியாரைப் பற்றிப் பேசும் போது நாம் எந்தக் காலத்துப் பெரியாரைப் பற்றிப் பேசுகிறோம்? ஏனெனில் காங்கிரசில் இருந்த பெரியாரும் நீதிக் கட்சியில் இருந்த பெரியாரும் ஒரே அரசியல் நிலைப்பாட்டில் இல்லை. குடியரசு தொடங்கிய பெரியாரும் விடுதலை தொடங்கிய பெரியாரும் ஒரே குரலில் பேசவில்லை. 1938ல் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்ட பெரியாரும், 1965ல் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைக் கண்டித்த பெரியாரும் ஒருவர்தானா?
பெரியாரின் கொள்கைகள் என்று நமக்குச் சொல்லப்படுபவை, திராவிட நாடு, கடவுள் மறுப்பு, ஜாதி மறுப்பு, இந்தி எதிர்ப்பு, சடங்காசர நிராகரிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, பெண்விடுதலை, சமூக நீதி எனப்படும் இட ஒதுக்கீடு ஆகியவை. இதிலே சிலவற்றை அவருக்கு முன்பே தமிழகத்தில் முன்னெடுத்திருக்கிறார்கள்.
ஆனால் தான் நம்பிய கருத்துக்களுக்காகப் பெரியார், தமிழ்நாடங்கும் பயணம் செய்து பரப்புரைகள் மேற்கொண்டார். கொள்கைப் பிடிப்பும் செயல்திறனும் கொண்ட இளைஞர்களை ஈர்த்தார் என்பது அவரை அவருக்கு முன் சில சமூக லட்சியங்களை முன்னெடுத்தவர்களிலிருந்து தனித்துக் காட்டுகிறது. என்ற போதிலும், அவர் வாழ்ந்த காலத்திலேயே, அவர் தொடர்ந்து 50, 60 ஆண்டுகள் தமிழ் நாடங்கும் பிரசாரம் செய்து வந்த காலத்திலேயே அவரின் கொள்கைகளில் பல நடைமுறையில் மக்களால் ஏற்கப்படாமல் புத்தக சித்தாந்தங்களாக, மேடைப் பேச்சுகளாக முடிந்தன.
திராவிட நாடு:
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவிலிருந்து வெளியேறுவது என்று முடிவான பின்னர், அவர்கள் வெளியேறிய பின்னர் இந்தியாவை ஆளுவது யார் என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்தது. பல்வேறு லட்சியங்கள், சித்தாந்தங்கள், ஆசைகள், கொண்டிருந்த பல அரசியல் தலைவர்கள் தங்கள் இலக்குகளை எட்ட அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முனைந்தனர். அவர்கள் அதுநாள் வரை பின்பற்றி வந்த அரசியலில் நீட்சியாக அவர்களது முனைப்புக்கள் அமைந்தன.
முஸ்லீம்களுக்குத் தனி நாடு கோரி 1940ல் இயற்றப்பட்ட லாகூர் தீர்மானத்தைச் செயலுக்குக் கொண்டுவருவதற்கான தருணம் கனிந்து விட்டது என்று ஜின்னா எண்ணினார் .1938ஆம் ஆண்டு நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் 14ஆம் மாநாட்டில் திராவிடநாடு தீர்மானத்தை முன் மொழிந்த, 1939ல் சர் ஸ்டாபோர்ட் கிரிப்ஸை சந்தித்து திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்த பெரியாரும் அவ்விதமே எண்ணியிருக்க வேண்டும். ஏனெனில் அப்போது ஜின்னா பெரியாரிடையே நல்லுறவு நிலவியது. டிசம்பர் 22, 1939 நாளை “விடுபடும் நாளாக” (the Day of Deliverance) – அதாவது காங்கிரஸ் அரசாங்கங்களிடமிருந்து விடுதலை பெற்ற நாளாக முஸ்லீம்களை ஜின்னா கொண்டாடச் சொன்னபோது, திராவிடர்களும் அந்த நாளைப் பெருமளவில் கொண்டாட வேண்டும் என பெரியார் அழைப்பு விடுத்தார். அந்தக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு ஜனவரி 1, 1940 அன்று ஜின்னா காந்திக்கு எழுதிய கடிதத்தில் ,” “காங்கிரஸை சாராத பல ஹிந்துக்கள் மற்றும் நீதிகட்சி தலைவர்கள், செட்யூல்ட் சாதியினர், பாரசீகர் முதலியோரும், “விடுபடும் நாள்” என்ற எங்களது கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர் என்பது உண்மை.” என்று குறிப்பிடுகிறார்
பிறகு அந்த வாரத்திலேயே ஜனவரி 8, 1940 அன்று மும்பையில் ஜின்னா, அம்பேட்கர், பெரியார் மூவரும் சந்தித்துப் பேசுகின்றனர்.அதன் பின் அதே ஆண்டு மார்ச்சில் லாகூரில் நடைபெற்ற முஸ்லீம் மாநாட்டில் பாகிஸ்தான் தீர்மானமும் ஆகஸ்ட்டில் திருவாரூர் மாநாட்டில் திராவிடஸ்தான் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன. அதற்குப் பிறகு, எட்டு மாதங்களுக்குப் பின் 1941 ஏப்ரல் 11 அன்று முஸ்லீம் லீகின் 28வது வருடந்திரக் கூட்டத்திற்காக சென்னை வரும் ஜின்னா,” இந்த இடத்தில், மற்றொரு நாடுள்ளது, அது “திராவிடஸ்தான்” என்று முழங்குகிறார்.பின்னர் அதை அண்ணா விளக்கமாகவே, “மேலே பாகிஸ்தான்! தெற்கே திராவிடநாடு: இடையில் இந்துஸ்தான்” கூட்டங்களில் பேசுகிறார்.
ஆனால் ஜின்னாவால் அவரது லட்சியமான பாகிஸ்தானை அடைய முடிந்தது. இஸ்லாமியர்களோடு மிக நெருக்கமாக, ‘ஆங்கிலேயரும்-ஆரியரும் ஒரே இனம், இனத்தோடு இனம் சேருகிறது! திராவிடரும்-இஸ்லாமியரும் ஒரே இனம், இனத்தோடு இனம் சேருகிறது! பாகிஸதானுக்குட்பட்டு வாழ்ந்தாலும் வாழலாமே ஒழிய, ஆரியருடன் வாழக் கூடாது’ எனக் கோவை மாநாட்டில் பகிரங்கமாக அறிவித்த போதும் பெரியாரால் அவரது லட்சியமான திராவிட நாட்டை அடைய முடியவில்லை. ஏன்?
“நாம் பம்பாய் மற்றும் தில்லியில், பாகிஸ்தான் மற்றும் திராவிடஸ்தான் பற்றிய நமது விவாத-உரையாடல்களையும் மற்றும் இரண்டும் ஒன்றே என்ற ரீதியில் தாம் கோரிக்கை எழுப்புவீர் என தாங்கள் தந்த உத்திரவாதத்தையும்” நினைவுபடுத்தி ஆகஸ்ட் 9 1944 அன்று ஜின்னாவிற்குக் கடிதம் எழுதுகிறார் பெரியார். ஆனால் ஜின்னா கையை விரித்து விடுகிறார். அதற்குப் பெரியாரைத்தான் காரணம் காட்டுகிறார் ஜின்னா. ஆகஸ்ட் 17 1944 அன்று பெரியாருக்கு பதிலளித்து எழுதும் கடிதத்தில், ” உமது நடவடிக்கைகள், இது வரையிலும், தீர்மானமற்ற நிலையில் இருந்து வருவதை, நான் கவனித்து வருகிறேன். உண்மையிலேயே, உமது மாகாண மக்கள் திராவிடஸ்தானை அடைய ஆசைப் பட்டால், பிறகு அவர்கள் தான் அதனை உறுதி செய்யவேண்டும்” என்கிறார் ஜின்னா.
தனது லட்சியத்தில் பெரியார் ‘தீர்மானமற்ற நிலையில்’ இருந்தார் என் ஜின்னா சொல்வது ஏன்? பிரித்தானிய அரசின் போர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் ஆகஸ்ட் 10, 1941 அன்று பெரியார் திராவிடநாடு போராட்டத்தைக் கைவிட்டார். சிலர் அவரது கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பு இருந்தது எனச் சிலர் சொல்கிறார்கள். இந்து மத எதிர்ப்பு என்பது வேறு, இஸ்லாமியர்களோடு உறவு என்பது வேறு சிலர் கருதினார்கள் எனச் சொல்கிறார்கள். அவரது திராவிட நாட்டுக் கொள்கைக்கு தென்னிந்தியாவில் எல்லாத் தரப்பினரிடம் வரவேற்பு இல்லை, தமிழ்நாட்டிலேயே முழுமையான ஆதரவு இல்லை. அதனால், காந்தி, ஜின்னா, அம்பேட்கரை சில குழுக்களின் தலைவர்கள் என்று கருதி அவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திய ஆங்கில அரசு பெரியாருக்கு அத்தகைய நிலையை அளிக்கவில்லை.
காரணங்கள் எதுவோ, பெரியாரின் திராவிட நாடு கொள்கை அவரது வாழ்நாளிலேயே, அவரது கண்ணெதிரேயே குற்றுயிரும் குலை உயிருமாகச் சரிந்தது. 1963 ல் அண்ணா திராவிட நாடு கோரிக்கையை, ‘அதற்கான நியாயங்கள் இருந்த போதும்’ , கை விட்ட போது அது அதன் இறுதி மூச்சை விட்டது. ஆனால் அவ்வப்போது அங்குமிங்குமாக ‘தமிழ் தேசியம்’ என்ற முனகல்கள் எழுந்து கொண்டு இருக்கின்றன. அதற்குக் காரணம் பிரபாகரன். பெரியார் அல்ல.
இந்தியாவில் தனி நாடு கோரிக்கையை முன் வைத்த பெரியார், இலங்கையில் தமிழர்கள் தனி நாடு கோரிய போது எப்படி எதிர்வினையாற்றினார்? இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான த.சபாரத்தினம், இலங்கைத் தமிழர்கள் தந்தை என அழைக்கும் செல்வா (சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்)வின் அரசியல் நடவடிக்கைகளை அருகிருந்து கவனித்து ரிப்போர்ட் செய்தவர் .அவர் செல்லாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு , இலங்கை நாளிதழ் தினகரனில் 1997 மார்ச்சில் தொடங்கி ஓராண்டு காலத்திற்கு, நீண்ட தொடர் ஒன்றை எழுதினார். கா.சிவத்தம்பியின் முன்னுரையோடு ‘தந்தை செல்வா -ஓர் அரசியல் வாழ்க்கைச் சரிதை என்ற பெயரில் (பதிப்பு : குமரன் பதிப்பகம் 2006) வெளிவந்திருக்கும் அந்த நூலில், இலங்கைத் தமிழர்களின் உரிமைப் பிரச்சினைக்கு ஆதரவு கோரி செல்வா, 1972 பிப்ரவரியில் தமிழகத்திற்கு மேற்கொண்ட பயணத்தை விவரித்திருக்கிறார்.
செல்வா அந்தப் பயணத்தின் போது அன்றைய முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், காமராசர், பெரியார் போன்ற தலைவர்களைச் சந்திக்கிறார். “எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது நடந்த சம்பவம் இது. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றித் தந்தை சொன்னதும் அவர் உணர்ச்சி வசப்பட்டார். உங்களுக்கு என்ன வேண்டும், பணமா? ஆயுதமா? என்று கேட்டார். தந்தை நெகிழ்ந்து போனார்.எட்டி எம்.ஜி.ஆரின் கைகளைப் பற்றியபடி, “இரண்டும் வேண்டாம். உங்கள் ஆதரவும் ஆசிர்வாதமும்தான் தேவை” என்று சொன்னார். என்று எழுதுகிறார் சபாரத்தினம் (பக் 288). ஆயுதம் தாங்கிய போராட்டம் செல்வாவின் நோக்கம் இல்லை. தர்ம யுத்தம்தான் அவரது அணுகுமுறை. காமராஜரைச் சந்தித்த போது தர்ம யுத்தம் எப்படி அமைய வேண்டும் என விரிவாக விவாதிக்கப்பட்டது. “காந்திஜி பின்பற்றிய வழிகளையே தான் பின்பற்றப் போவதாக தந்தை சொன்னர். அதை மகிழ்ச்சியுடன் ஆமோதித்த காமராஜர், இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் தான் கலந்து கொண்ட சத்தியாகிரகங்கள் பற்றிய விவரங்களைக் கூறினார். சாத்வீகப் போராட்டத்திற்கு உள்ள பலம் ஆயுதப் போராட்டத்திற்கு இல்லை என்பது எமது அனுபவம் என்றார் காமராஜர்” என்று காமராஜருடனான சந்திப்பை விவரிக்கிறார் சபாரத்தினம். (பக்.289)
ஆனால் இந்த நூலில் தந்தை பெரியார் தந்தை செல்வாவிடம் என்ன பேசினார் என்ற தகவல் இல்லை. பெரியார் நம்பிக்கையூட்டும் விதமாக ஏதேனும் சொல்லியிருந்தால் அது இடம் பெற்றிருந்திருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. அவரை புறக்கணிக்க அல்லது இருட்டடிப்பு செய்ய சபாரத்தினத்திற்கு முகாந்திரம் இல்லை. இணையத்தில் வாசிக்கக் கிடைக்கும் சில குறிப்புகள், ” ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவி செய்ய இயலாது” என்று பெரியார் சொன்னதாகச் சொல்கின்றன. அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் பெரியார் தனது அரசியல் நிலைபாடுகளை மாற்றிக் கொண்டதற்கு அவர் வாழ்வில் பல சான்றுகள் இருக்கின்றன.
இந்தி எதிர்ப்பு:
முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் 1938ல் நடைபெற்றது. சோமசுந்தரபாரதி, மறைமலையடிகள், பாரதிதாசன், கி.ஆ.பெ.விஸ்வநாதன் ஆகியோர் முன்னெடுக்க திருச்சியில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அதில் பலதரப்பினரும் பங்கு பெற்றார்கள். அதைக் குறித்து தியாகு சொல்கிறார்: “அந்த முதல் மொழிப் போரில் களம் கண்டவர்களில் அனைத்துப் பிரிவுத் தமிழர்களும் இருந்தார்கள். தமிழறிஞர்கள் இருந்தார்கள். நம் தெய்வநாயகம் இருந்தார். நீதிக் கட்சியினர் மட்டுமல்ல, காங்கிரசாரும் இருந்தார்கள். சுயமரியாதைக்காரர்கள் மட்டுமல்ல, இறையன்பர்களும் இருந்தார்கள். இசுலாமியர்கள் இருந்தார்கள். பார்ப்பனர்களும்கூட இருந்தார்கள். பழைய நீதிக்கட்சிக்காரர்கள் இருந்தார்கள், நீதிக்கட்சியை எதிர்த்த காங்கிரசுக்காரர்களும் இருந்தார்கள்.” (2014 செப்டெம்பர் 20 அன்று சென்னை எழும்பூரில் நடந்த கூட்டம் http://www.visai.in/2015/01/09/periyar-and-tamil-nation-com-thiyagu/ ) ராஜாஜியைக் குறி வைத்து நடத்தப்பட்ட போராட்டம் அது. அதனால் அவரை எதிர்த்த சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ்காரர்களும் பங்கேற்றார்கள். பெரியார் அதில் பங்கேற்றதில் வியப்பில்லை.
ஆனால், 1965ல் மாணவர்கள் பங்கேற்ற இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் போது பெரியார் எப்படி நடந்து கொண்டார்? அதையும் தியாகுவே விவரிக்கிறார்: ” நான் அப்போதெல்லாம் மாணவன். என்ன நடந்தது என்று நேரிலேயே பார்த்தேன். பெரியார் எந்த அளவுக்குப் போனார் என்றால், பக்தவத்சலத்தின் காட்டாட்சியை நியாயப்படுத்தித் துப்பாக்கிச் சூடுகளை ஆதரிக்கும் அளவிற்குப் போனார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்து எழுதுகிற ஏடுகளுக்கு பெட்ரோல் ஊற்றித் தீவைக்கச் சொன்னார். சட்டத்திற்குட்பட்ட கத்தியும் பெட்ரோல் கலனும் வைத்துக் கொள்ளச் சொன்னார். காவல் துறையின் அடக்குமுறை மிகுந்து போய் அதற்கு எதிரடியாக நடந்த சில வருந்தத்தக்க நிகழ்வுகளில் காவல் துறையினர் ஓரிருவர் கொல்லப்பட்ட போது அதை வன்மையாகக் கண்டித்து, காலித்தனம் என்று சாடினார். ஆனால் அரசுப் படைகள் நிகழ்த்திய படுகொலைகளைக் கண்டித்தாரில்லை.
தந்தை என்று நாம் போற்றுகிற ஒரு தலைவர், தமிழ்த் தேச வரலாற்றிலேயே மிகப் பெரிய எழுச்சியாகிய 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது அதற்கு எதிராக நின்றார் என்பது வருந்தத்தக்க உண்மை. அவரது மொழிக் கொள்கை தவறானது, ஆங்கிலம் படிக்கச்சொன்னார், பேசச் சொன்னார், உன்னிடம் யார் இந்தியைத் திணிக்கிறார்கள் என்று கேட்டார் என்பதெல்லாம் தனிச் செய்தி…. பெரியாரின் இந்த நிலைப்பாட்டிற்குப் பல காரணங்கள் சொல்லி விளக்கமளிக்கலாம். ஆனால் நியாயப்படுத்த முடியாது. திமுக மீதான எதிர்ப்பு, காமராசர் மீதான பற்றுதல் எனப் பல காரணங்கள் இருக்கலாம்.” (மேலது)
பெரியாரின் இந்தி எதிர்ப்பு மொழி சார்ந்தது மட்டுமல்ல. அவர் யாரை ஆதரிக்கிறார் அல்லது எதிர்க்கிறார் என்பதையும் பொருத்ததோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
கடவுள் மறுப்பு:
பெரியாரின் அரசியல் நிலைகளில் முரண்பாடுகள் இருந்தாலும் அவர் கடவுள் மறுப்பு என்பதில் உறுதியாக இருந்தார் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவரது குடியரசுப் பத்திரிகையைத் தொடங்கி வைத்தவர் மழித்த தலையும் மார்பில் சிவலிங்கமும், நெற்றியில் நீறும், கழுத்தில் உருத்திராட்சமும் அணிந்த திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடம் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள். தேசாபிமானம், பாசாபிமானம், சமயாபிமானம் ஆகிய கருத்துக்களை வளர்க்கும் நோக்குடன் குடியரசு தொடங்கப்படுவதாக பெரியார் எழுதுகிறார்.
“நாங்கள் கடவுள் இல்லையென்று சொல்லுபவர்கள் அல்ல.கடவுளை நம்ப வேண்டாம் என்று சொல்லவும் இல்லை….அன்பான கடவுள், கருணையுள்ள கடவுள், ஒழுக்கமுள்ள கடவுள் நான் வேண்டாமென்று சொல்லவில்லை” (விடுதலை செப்டம்பர் 10, 1956)
“கடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்தவன், முஸ்லீம் மாதிரி கும்பிடு” (விடுதலை மே 4,1949)
“கடவுள் இல்லை என்று சொல்லவரவில்லை. யோக்கியமான ஒரு கடவுளைக் கும்பிடுங்கள், வேண்டாம் என்று கூறவில்லை” (விடுதலை ஜூன் 4 1959)
இவையெல்லாமும் பெரியார் எழுதியவைதான். பேசும் போது இன்னும் ஒருபடி மேலே போய், கடவுளுக்குப் பயப்படுங்கள் என்றும் கூடச் சொன்னார்:
“நான் சாமி வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் கற்பனைக் கடவுள்கள் நம்மைப் பாப்பராக்கி (பிச்சைக்காரர் ஆக்கி) விடுகின்றனவே என்றுதான் நொந்து கொள்கிறேன். கடவுளிடம் பக்தி செலுத்துங்கள், அன்பு செலுத்துங்கள்.கடவுளுக்குப் பயப்படுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. கடவுள் மனிதர்களாக இருக்கிறார். நடமாடும் ஜீவன்களாக இருக்கிறார். நீங்கள் மனிதர்களிடம் காட்டுகிற அன்பைக் கடவுள் இருந்தால் ஏற்றுக் கொள்வார்” (24 டிசம்பர் 1954 அன்று மலேயாவில் உள்ள கிளாங் நகரில், புக்கிட் ராஜா லட்சுமி தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில்)
பெண் சுதந்திரம்
இன்று பெண்களின் நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்குக் காரணம் பெரியார்தான், அவருக்கு முன் ஆண்கள் பெரிதும் பெண்களின் நிலை பற்றி யோசிக்கவில்லை என்று ஒரு அறிவுசீவி அம்மாள் பேஸ்புக்கில் எழுதியிருப்பதை வாசிக்க நேர்ந்தது.
பெரியாருக்கு முன் பெண்களுக்கான சுதந்திரம், பெண்கல்வி பற்றி பாரதியார் ஏராளமாக எழுதியிருக்கிறார். தமிழக, இந்திய நிலைமைகள் மட்டுமன்றி, துருக்கி, சீனம், ஜப்பான் , இங்கிலாந்து, ருஷ்யா என எங்கெல்லாம் பெண்விடுதலைக் குரல்கள் ஒலிக்கின்றன, எவ்விதம் ஒலிக்கின்றன என்பதைத் தேடித் தேடிப் படித்து அவற்றைத் தமிழுக்கு மாற்றித் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். பெண்கல்வி, திருமணச் சீர்திருத்தம் ஆகியவற்றை இலக்குகளாகக் கொண்டு,சென்னை இந்து சமூக சீர்திருத்தச்சங்கம் என்ற ஓர் அமைப்பில் தான் ஒரு உறுப்பினர் எனப் பாரதியார் இந்து பத்திரிகைக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பாரதியார் பெண் விடுதலைக்கான ஆரம்பப் படிகள் என்று கீழ்க்கண்டவற்றை எழுதுகிறார்:
1.பெண்களை ருதுவாகும் முன் விவாகம் செய்து கொடுக்கக் கூடாது
2.அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது
3.விவாகம் செய்து கொண்ட பின் அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.
4.பிதுராஜ்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு சமபாகம் கொடுக்க வேண்டும்.
5.புருஷன் இறந்தபின் ஸ்திரீ மறுவிவாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது
6.விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம் கைத்தொழில் முதலியவற்றால் கெளரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரிகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடம் கொடுக்க வேண்டும்
7.பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக்கூடாது என்றும் பழகக் கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விட வேண்டும்
8.பெண்களுக்கு ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்
9.தகுதியுடன் அவர்கள் அரசாடசியில் எவ்வித உத்தியோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது
பெரியார் அரசியலில் நுழைந்தது 1919ல். பாரதியார் இதை எழுதியது அதற்கும் முன்பு (பாரதியார் இறந்தது 1921)
பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற ஆதாரமாய் அமைந்தது பெண் கல்வி. . பெண்கல்விக்கான குரல் பெரியாருக்கு முன்பே, இந்தியாவில், குறிப்பாக தமிழ்ச் சமூகத்தில் எழுந்து விட்டது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை , திரு.வி.க. போன்ற (வேதநாயகம் பிள்ளை பெரியார் காலத்திற்கு முந்தையவர்) பேசி எழுதியவர்கள். கிறிஸ்துவ மதப் பிரச்சாகர்களும் (ஆங்கிலேய ஆட்சியின் உதவியோடு) பெண்கல்வியை முன்னெடுத்தனர். சென்னை தொடக்கக் கல்வி சட்டம், 1920 ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தியது. தொடக்கக் கல்விக்கு நிதி ஒதுக்கீட்டையும் அதிகரித்தது. குழந்தைகளைப் பள்ளிகளிலிருந்து விலக்கிக் கொள்ளும் பெற்றோரைத் தண்டிக்கவும் வழிவகுத்தது. ராமகிருஷ்ண மிஷின் இன்னொரு புறம் களப்பணி செய்தது. நாடு விடுதலை பெற்ற பின் பெண் கல்வி வேகம் பெற்றது. பெண்கள் உரிமை பெற முக்கியக் காரணமாக அமைந்தது கல்வி அவர்களுக்குத் தந்த விழிப்புணர்வு, வேலை வாய்ப்பு வெளி உலகத் தொடர்பு ஆகியவை. அது பெரியாரின் மேடைப் பேச்சுக்களால் மட்டும் நிகழ்ந்த மேஜிக் அல்ல.
அப்படி பெரியாரின் பேச்சு பெண்களை மாற்றியிருக்குமானால் இன்றுவரை அவர்கள் அவர் முன் வைத்த மற்ற கருத்துக்களை – தாலி மறுத்தல், ஜாதி மறுத்தல், சடங்குகள் மறுத்தல், கடவுள் மறுத்தல், கற்பு பற்றிய விளக்கங்கள் – ஆகியவற்றை ஏற்கவில்லை? தனது மனைவி நாகம்மை, மேலை நாட்டுப் பெண்களைப் போல கிராப் வெட்டிக் கொண்டு பேண்ட் சட்டை போட்டுக் கொள்ளவேண்டும் என்று 1930களிலேயே சொன்னார் என்று ஒரு பேஸ்புக் பதிவு சொல்கிறது. ஆனால் நாகம்மையார் அப்படி அணிந்தார் என்று சொல்லும் குறிப்புகளோ, படங்களோ காணக் கிடைக்கவில்லை.
வளர்த்துக் கொண்டு போகவிரும்பவில்லை. அவர் இறை மறுப்பு வாதங்களை தமிழகக் கோயில் உண்டியலில் குலுங்கும் சில்லறைக்ள் சிரித்துக் கொண்டே மறுக்கின்றன. அவரது இதிகாச புராண எள்ளல்களை, திராவிடக் குடும்பங்கள் நடத்தும் டிவிகளில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மறுக்கின்றன. சடங்காசார எதிர்ப்பை கோயில் திருவிழாக்கள் மறுக்கின்றன. ஜாதி மறுப்பை ஜாதி சங்கங்கள் ஹோமங்களும் யாகங்களும் மறுக்கின்றன, வடவர் எதிர்ப்பை அரசியல் கூட்டணிகள் மறுக்கின்றன. திருக்குறள் மீதான விமர்சனத்தை கன்யாகுமரிக் கடல் நடுவே நிற்கும் 133 அடி வள்ளுவர் மறுதலிக்கிறார்.தாலி மறுப்பை திராவிட இயக்கக் குடும்பத் திருமணங்கள் நிராகரிக்கின்றன. இடஒதுக்கீடு சமூக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மைதான். அதுகூட அவரால் கண்ணீர் துளிகள் என்று எள்ளி நகையாடப்பட்டவர்களாலும், அவரது இறை மறுப்புக் கொள்கையைக் கைவிட்டவர்களாலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிதான். இன்று இடஒதுக்கீடு உரிமையும் அல்ல, சலுகையும் அல்ல, ஒரு வாய்ப்பு, தேர்வின் மதிப்பெண்கள் வழியே அடையத்தக்க வாய்ப்பு என்ற .இடத்தில் இடத்தில் வந்து நிற்கிறது. போட்டித் திறனுடன், போதிய மதிப்பெண்கள் பெறாவிட்டால் இடஒதுக்கீடு இருந்தும் பயனளிக்காது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. காட்டு மிராண்டி பாஷை என்று அவரால் கருதப்பட்ட தமிழ்தான் இன்று தமிழக அரசின் ஆட்சி மொழி!.
“பெரியார் இல்லாதிருந்தால் தமிழ் நாடு எப்படி இருந்திருக்கும்?” என்று கேட்பவர்கள் அவர் இருந்த காலத்து அரசியல் எப்படி இருந்தது, அந்தக் கலாச்சாரத்தை, சமூக வழக்கங்களை எவ்வளவு தூரம் அவரால் மாற்ற முடிந்தது, என்ற கேள்விகளோடு, அவர்கள் குறிப்பிடுவது எந்தக் காலப் பெரியார் என்ற காலக்குறிப்பையும் சேர்த்து, கேடக வேண்டும். ஏனெனில் அவர் கருத்துக்கள் காலம் தோறும் மாறி வந்திருக்கின்றன.
அதில் வியக்கவோ சினமடையவோ ஏதும் இல்லை. “நீ யார் என்பது நீ உன்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்பதைப் பொறுத்ததன்று. நீ யாராக அல்லது எதுவாக இருக்கிறாய் என்பதை நீ வாழும் புறச் சூழல்தான் தீர்மானிக்கிறது.” இதைச் சொன்னவர் மார்க்ஸ்!
***
அம்ருதா ஜூலை 2017