’புரட்சி’கள் ஒருநாள் ஃபேஷனில் போய் முடியும் என்பதற்கு ஏராளமான சாட்சியங்கள் உண்டு.சந்தேகத்திற்கு இடமில்லாத சான்று ஜீன்ஸ்.1850ஆம் வருடம். சான்பிரான்சிஸ்கோவில் தங்கம் கிடைக்கிறது என்று புரளி. சாரிசாரியாக ஜனங்கள் அந்தத் திசையை நோக்கித் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். கூடாரம் அமைத்துக் குழி தோண்டிக் கொண்டிருந்தார்கள். அங்கே மூட்டை முடிச்சுக்களுடன் வந்து சேர்ந்தான் ஓர் இளைஞன். தங்கம் எடுக்க அல்ல. கூடாரத் துணி விற்க.
கொண்டு வந்த கூடாரத் துணி எதிர்பார்த்தபடி போணியாகவில்லை. மண் தோண்டுகிற வேலையாக இருப்பதால் ஆடைகள் சீக்கிரம் கிழிந்து விடுகின்றன, கெட்டித் துணியாக இருந்தால் தேவலை என்று பலர் பேசிக் கொள்வது காதில் விழுந்தது.பளிச் சென்று ஒரு யோசனை. ஒரு டெய்லரைப் பிடித்துக் கொண்டு வந்த கித்தான்களில் பேண்ட் தைத்து விற்க ஆரம்பித்தான். அள்ளிக் கொண்டு போயிற்று, அந்தக் கித்தான்தான்,டெனிம். அதுதான் ஜீன்ஸ்
70களில் அது ’புரட்சி’க்காரர்களின் அடையாளம். படிய வாரிய தலை, பளபளக்கும் ஷூ, மடிப்புக் கலையாத சூட், மாட்சிங்காக டை என்று அந்தஸ்தை பிரகடனப்படுத்தும் வகையில் மகன்கள் ஆடை அணியவேண்டும் என்ற அப்பாக்களின் அதிகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, சாலை போடுகிறவர், மரம் அறுக்கிறவர், ரயில் ஓட்டுநர் என்று உழைக்கும் வர்க்கம் உடுத்தும் ஜீன்ஸ்களை அணிய ஆரம்பித்தார்கள் பிள்ளைகள்.
அமைதியாகச் செய்திகளை ஆடைகள் அறிவித்துக் கொண்டுதான் இருக்கின்றன.” நான் தலையிலே பஞ்சாபிகளைப் போலப் பாகை கட்டிக் கொள்வது வழக்கம். ’15 ரூபாய்க் குமாஸ்தா’க்களுக்கென்று பிரத்தியேகமாக அழகு, அந்தம், ஆண்மை எதுவுமின்றி ஏற்பட்டிருக்கும் கும்பகோணத்துப் பாகை நான் கட்டிக் கொள்ளுவதில்லை.” என்று பாரதியாரின் பாத்திரம் ஒன்று பீற்றிக் கொள்கிறது. கதர் அணிவது நாட்டுப்பற்றின் அடையாளம் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. காலர் இல்லாத ஜிப்பா, (இங்க், வெற்றிலைக்) கறைபடிந்த வேட்டி என்ற எழுத்தாளர்களின் அடையாளத்தை, கட்டம் போட்ட ஸ்லாக், காது வரை கிருதா என்ற தோற்றத்தால் துடைத்தெறிந்தார் ஜெயகாந்தன். டிசைனர் ஆடைகள் தேர்தல் பிரச்சாரத்தில் மோதிக்குக் கை கொடுத்தன. கரை வேட்டி கட்டிய அரசியல்வாதி என்றாலே இளைய தலைமுறை எள்ளலோடும் ஏளனச் சிரிப்போடும் பார்ப்பதை உணர்ந்து கொண்ட ஸ்டாலின் தனது நடைப்பயணத்தை உடைப் பயணமாகவும் மாற்றிக் கொண்டார். காக்கி அரை டிரவுசர்களை கால்சாராயாக மாற்றிவிடலாமா என ஆர்எஸ்எஸ் அமைப்புக்குள் விவாதம் நடக்கிறது.
மார்கரெட் தாட்சர் அணிந்த ஆடைகள், அணிகலன்கள் அண்மையில் ஏலம் போடப்பட்டன. அந்த இரும்பு மனுஷிக்கு ஹை ஹீல் காலணி அணிந்து கொள்ளப் பிடிக்காது. சோவியத் தலைவர் யூரி ஆந்த்ரப்போவ் இறுதி ஊர்வலத்திற்குப் போனார் தாட்சர். சாதாரண ஷூ அணிந்துதான். ஆனால் ஒரு பிரதமர் அவர் இஷ்டத்திற்கு உடுத்த முடியுமா? ஹை ஹீல் காலணிகள் அவரது மெய்க்காப்பாளர் பேண்ட் பைக்குள் பத்திரமாக கூடவே வந்தன. வெளியே தெரியாமல் பைகளுக்குள் புடைத்துக் கொண்டு நின்ற அந்த ஹை ஹீல் காலணிகளை ஏதோ பயங்கரமான துப்பாக்கி என்று சோவியத் காவலர்கள் எண்ணிக் கொண்டார்கள் என்று அவரது மெய்க்காவலர் அண்மையில் பேட்டி அளித்திருக்கிறார்.
செருப்பை மறைத்துக் கூட கோவிலுக்குள் கொண்டு போகக் கூடாது என்று நமக்குத் தெரியும். ஆனால் எப்படி உடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று தெரியுமா? இந்தப் புத்தாண்டிலிருந்து தமிழக ஆலயங்களில் ஆடைக் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. நோ ஜீன்ஸ்!. நோ லெக்கின்ஸ்!. இது உயர்நீதிமன்ற உத்தரவு. புரட்சியோ, பேஷனோ வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள் என்கிறது கோர்ட். எனவே புது வருடத்தன்று கோவிலுக்குப் போகும் முன் பழைய வேட்டியைத் தேடி எடுங்கள்.