பிரச்சினையின் பெயர் : சந்திரலேகா

maalan_tamil_writer

ஐம்பது வருடங்களாக எங்கள் கல்லூரிச் சரித்திரத்தில் இல்லாத பிரச்சினை திடீரென்று  முளைந்திருந்தது.  பிரச்சினையின்  பெயர்  சந்திரலேகா.

சந்திரலேகா  எனக்கு ஒரு வருடம் ஜுனியர், கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் நாளே தலைப்புச் செய்திகளைத் தொட்ட தாரகை. காரிடாரில் தனியாக நடந்து கொண்டிருந்தவளைப் பார்த்து ராகிங் உற்சாகத்தில் பாண்டியராஜ்  ‘ நடையா, இது நடையா, நாடகம் அன்றோ நடக்குது ’  என்று சினிமாக் கவிதைபாட,அவனை நோக்கிக் கால் செருப்பைக் கழற்றிக் காண்பித்த வீராங்கனை, பாண்டியராஜுக்கு எதிராகப் பெருமூச்சு விடக்கூட எங்கள் கல்லூரி ஆண் பிள்ளைகள் பயந்து கொண்டிருந்த அந்தச் சகாப்தத்தில் அது பெரிய சாதனைதான். ஆனால் புத்திசாலித்தனம்தானா என்று எனக்கு இன்னும் சந்தேகம்.

பாண்டியராஜனைப் பொறுக்கி என்று சொல்வதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது. ஆனால் பயம் உண்டு. அநேகமாகக் கல்லூரியில் எல்லோரும் பாண்டியராஜின் வகுப்புத் தோழர்கள். அவனோடு சேர்ந்து படிக்கிற பாக்கியம் எல்லா பேட்ச் மாணவர்களுக்கும் கிடைத்திருந்தது. முதல் மூன்று வருடத்தில் முடித்து விட வேண்டும் என்று பெரியோர்கள் தீர்மானித்திருந்த எலக்ட்ரானிக்ஸ் அடிப்படைகளை ஆறேழு வருடங்கள் ஆழ்ந்து படித்து ஸ்பெஷலைஸ் செய்து கடைசியில் வாய்மொழித் தேர்வில் கத்தியைத் தூக்கிக் காண்பித்துப் பாஸ் செய்தது அவனுடைய முன்கதைக் சுருக்கம்.

       செருப்பைக் காண்பித்ததைவிட அபாயகரமான காரியம் ஒன்றை அறிவித்து இருக்கிறாள்  சந்திரலேகா.  அது  பாண்டியராஜை  எதிர்த்துத்  தேர்தலில்  நிற்பது.

       கல்லூரியில் தேர்தலில் போட்டியிடுவதென்பது ஒன்றும் அசாதாரணமான காரியம் அல்ல. ஆனால் எங்கள் கல்லூரியின் ஐம்பது வருடச் சரித்திரத்தில் எந்தப் பெண்ணும் தேர்தலில் நின்றதில்லை. நோட்டீஸ் அடித்து, போஸ்டர் ஒட்டி, தோரணம் கட்டி, பூக்கள் கொடுத்து வணக்கம் சொல்லி, பீர் குடித்து, வெற்றி பெற்றதால் விசும்பி அழுது, தோற்றுப் போய்த் துவண்டு நொறுங்கி – எந்தப் பெண்ணும் தேர்தலில் நின்றதில்லை.

       இப்போது சந்திரலேகா நிற்கிறாள், பாண்டியராஜனை எதிர்த்தது கவலையாக இருந்தது எனக்கு.

       “ என்னத்திற்காக நீ கவலைப்படறேன்னே எனக்குப் புரியலை. ”

       “ நிஜமாகவே புரியலையா ?  லேகா, உனக்கு ஏதாவது மூளை, கீளை இருக்கா ? ”

       “ ஏன் உனக்கு வேணுமா ? ”

“ இடக்காப் பேசறதால மட்டும் ஒருத்தர் புத்திசாலி ஆகிட முடியாது. ”

“ தெரியுமே எனக்கும். அதான் எலக்ஷன்ல நிக்கிறேன். ”

“ இதில் இருக்கிற அபாயம் புரியுதா உனக்கு ? ”

“ என்ன ? ”

“ தோற்றுப் போனால் அவமானம். வெற்றி பெற்றால் பயங்கரம். ”

“ பதற்றப்படாமல் யோசிச்சுப் பேசு. அவனை மாதிரி ஒரு பொறுக்கி நமக்கெல்லாம் சேர்மன்னு  வந்தா  அது  கல்லூரிக்கே  அவமானம்  இல்லையா ? ”

“ அது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த ரவுடித்தனத்தை நம்மாலே ஜெயிக்க முடியுமா ? ”

“ இப்படியே  பயந்துகிட்டு  நின்னா, யாராவது ஒருத்தர் மணிகட்டித் தானே ஆகணும் ? ”

“ ஆனால்  அது  எலிகளின்  வேலை  இல்லை, லேகா ”

“ எலி ! யாரு எலின்னு  பாத்திடுவோம். ”

சந்திரலேகா !  மளமளவென்று வேலைகளை ஆரம்பித்தாள்.  To meet a new Era     என்று இரண்டு வாசகங்கள் மட்டுமே கொண்ட போஸ்டர்களில் புதுமை இருந்தது. பத்துப் பதினைந்து தோழிகளைப் பட்டாளமாக சேர்த்துக்கொண்டு, புடைவையைத் தூக்கிச் செருகிக் கொண்டு தோரணம் கட்டியதில் துணிச்சல் இருந்தது. ரோஜாப் பூத்தட்டை நீட்டிக் கும்பிடுபோடுகிற ஆண்பிள்ளைகளுக்கு, சிகரெட் தட்டும் பாக்குப் பொட்டலமும் நீட்டுகிற எதிர் மரியாதையில் கோபம் இருந்தது. இந்தப் புதுமை, துணிச்சல், சரியான கோபம் எல்லாம் சிறுகச் சிறுக சேர்த்துப் புயலாகச் சுருண்டு சந்திரலேகாவின் கை உயர்ந்த போதுதான் பாண்டியராஜன் அப்படி ஒரு காரியம் செய்தான். விடலைக் குறும்பா, விஷம் தோய்ந்த வன்மமா? என்று தெரியவில்லை. இரவோடு இரவாக  Era வின்   E க்கள் எல்லாம் கரியால் B ஆக சுழிக்கப்பட, போஸ்டர்கள் எல்லாம்  To meet a new Bra – சந்திரலேகா எனக் கவர்ச்சியாய் மாறிச் சிரித்தன. கல்லூரியில் எங்கே திரும்பினாலும் விஷமப் புன்னகைகள். வேடிக்கைச் சிரிப்பலைகள். துணிச்சலாய்க் கண் சிமிட்டல்கள். வெறும் வாயை மெல்கிற விடலைப் பையன்களுக்கு விறுவிறுப்பான தீனி. என்றாலும் கல்லூரி முழுசுக்கும் கால் செருப்பைக் காட்ட முடியவில்லை.

சந்திரலேகா முதலில் குன்றிப் போனாள். பின், கோபத்தால் பொங்கினாள்.

“ பொம்பளை என்பதனால்  மிரட்டியே  மடக்கிடலாம்னு  நினைக்கிறார்களா ! இதுக்கெல்லாம்  மசிந்து  விட  மாட்டாள் இந்தச் சந்திரலேகா. இந்த மாதிரிப் பொறுக்கிகள், அயோக்கியத்தனங்கள்  இவற்றுக்கெல்லாம் சமாதி கட்டி விட்டுத்தான் ஓய்வேன் ”  என்று சபதம் செய்தாள்.

சிவில் என்ஜினியரிங் புரொஃபசருக்குப் புகார் போயிற்று. பாண்டியராஜனைக் கூப்பிட்டு விசாரித்தார். தனக்கு ஒன்றுமே தெரியாது என்று அவன் கற்பூரம் ஏற்றிச் சத்தியம்  செய்தான்.  புகாரை  நிரூபிக்கும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க சந்திரலேகாவிற்குத்  தாக்கீது  பிறந்தது.  இருளில் நடந்த அந்த நீச்சத்தனத்திற்குத் தாக்கீது பிறந்தது. இருளில் நடந்த அந்த நீச்சத்தனத்திற்குச் சாட்சிகள் இல்லை. புகார் தள்ளுபடி செய்யப்பட்டது.

சந்திரலேகா யோசித்தாள். எதை வைத்து அவமானப் படுத்தப்பட்டாளோ, அதைக் கொண்டே தன்னைப் பலப்படுத்திக் கொண்டாள்.

மறுநாள் லேடிஸ் ஹாஸ்டல் முகப்பில் மார்க் கச்சைகள் குவிந்தன. தீப்பந்தம் ஏந்திய  குட்டி  ஊர்வலம்   ஒன்று ஹாஸ்டலிலிருந்து வெளிப்பட்டது. தன் மொபட்டில் இருந்த  பெட்ரோலை  அவசர அவசரமாகச் சியாமளா எடுத்து வந்தாள். சந்திரலேகா முதல் பந்தத்தை வீசினாள். ‘ மாதர் தம்மை இழிவுபடுத்தும் மடைமையைக் கொளுத்துவோம் ’  என்று  எவரோ  கோஷமிட்டார்கள்.

திடீர் நெருப்பைக் கண்டு திமுதிமுவென்று கூட்டம் சேர்ந்தது. நெருப்பு, அதன் ஆரஞ்சுப் பின்னணியில் பொலிந்த கோப முகங்கள், பாரதியாரின் கோஷம் எல்லாம் பார்க்கிறவர்களை  எளிதில் உணர்ச்சி வசப்பட வைத்தன. பாண்டியராஜின் செயல் எத்தனை சிறுமையானது என்று யோசிக்க வைத்தன. தனது நம்பிக்கைக்காகப் பகிரங்கமாய் அவமானப்படத் தயாராய் இருக்கும் சந்திரலேகாவின் தைரியம், அவமானத்தையே பலமாய் மாற்றி வரும் சாதுர்யம் எல்லாம் எல்லோரையும் பிரமிக்க வைத்தன.

நெருப்பைப் போலச் செய்தி பறந்தது. ஒரு கும்பலோடு வந்தான் பாண்டியராஜ். எரிகிற நெருப்பு, சுற்றி நிற்கிற உற்சாகம் எல்லாவற்றையும் பார்த்தான். என்ன நினைத்தானோ தெரியவில்லை. வெறி பிடித்ததுபோல் சட்டையைக் கழற்றி வீசினான், பாண்ட் ஜிப்பைத் திறந்து கொண்டு ஆபாசமாய் ஆடத் தொடங்கினான். கெட்ட வார்த்தைகள் சரமாய்த் தொடுத்த பைலா பாட்டுக் கிளம்பிற்று. பெண்கள் விடுவிடுவென்று ஹாஸ்டலுக்குள் ஓடினார்கள். சந்திரலேகா இரண்டு இட்டு முன்னால் வந்து ‘ தூ ’ என்று உமிழ்ந்துவிட்டு உள்ளே ஓடினாள். எச்சில், காற்றில் மிதந்து பாண்டியராஜனின் முகத்தைத் தொட்டது. “ ஏய் ”  என்று ஒரு உறுமல் கேட்டது. பாட்டு நின்றது. ஆட்டம் நின்றது. பாண்டியராஜ் நெருங்குவதற்குள் லேடிஸ் ஹாஸ்டல் கதவுகள் மூடப்பட்டன. அவன் கீழ் இருந்து கல் ஒன்றைப் பொறுக்கி உள்ளே வீசினான்.

கலவரம். அந்த வருடம் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பன்னிரண்டு வருடங்கள் கழித்து நேற்றுத் தற்செயலாகச் சந்திரலேகாவைப் பார்த்தேன். குழந்தைக்கு ஃபீஸ் கட்ட என்னைப் போலவே பள்ளிக்கூடம் வந்திருந்தாள்.

“ லேகா …  லேகா  தானே  நீங்கள் ? ”

மூக்கு குத்தியிருந்ததைத் தவிர முகத்தில் பெரிய மாறுதல் இல்லை. என்றாலும் சந்தேகம். காரணம் கண்ணின் கீழே கரு வளையங்கள்.  மூப்பு ?

“ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே இப்போ ? ”  என்றேன்.

“ ஹவுஸ்  ஒஃய்ப்.  இல்லத்தரசி ! ”  சிரிக்கும்போது மட்டும் உயிர் பெறுகிற கண்கள்.

“ வேலை  பார்க்கிறியா ? ”

“ வீட்டில்  செய்வதெல்லாம்  வேலை  இல்லையா ? ”

“ காட் ! ஐந்து வருஷம் போராடிப் போராடி என்ஜினியரிங் படித்துவிட்டு இப்போது வெறுமனே மாவரைத்து, துணி துவைத்து, மூத்திரக் கிழிசல் மாற்றி …  அதுவும் நீ ! ”

“ ஆண்பிள்ளை நீ. கல்லூரிக்கு வெளியே பெண்கள் வாழ்க்கையின் வர்ணங்கள் மாறி விடுகிற ரசாயணம் சொன்னால் புரியுமா உனக்கு ? ”

“ ஆண் – பெண் என்ற குறுகிய வட்டத்தில் மனிதர்களை அடைக்கக்கூடாது என்பதுதானே உன் கட்சி ? ”

“ பாண்டியராஜன்களை ஜெயிக்கலாம் மாலன். மாமியார்களை ஜெயிப்பது சுலபமில்லை. ”

“ மாமியார் ? ”

“ கூடத்து நிலையைத் தாண்டி நிழல்  விழுந்தாலே  நிமிர்ந்து  பார்க்கும்  மாமியார். அவரோ அம்மா பிள்ளை. கல்லூரிக்குள் கலவரம் வரலாம். குடும்பத்தில்  கூடாது.  நண்பா. ”

எனக்குப்  புரியவில்லை.  ஆனால்  வருத்தமாய்  இருந்தது.

(குமுதம்)

 

 

      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.