“நாம் ஏன் நம்முடைய தேன்நிலவை வித்தியாசமாகக் கொண்டாடக் கூடாது?” என்று கேட்ட கணவனை வியந்து பார்த்தாள் புது மனைவி.
“வித்தியாசமாக என்றால்?”
“நட்சத்திர ஹோட்டலுக்குப் பதிலாக நாம் ஹனிமூனை ஒரு புல்வெளியில் வைத்துக் கொள்வோம்”
“புல்வெளியா?” திகைத்தாள் மனைவி
“முழுதும் கேள். பச்சைப் பசேல் என்ற புல்வெளி. பக்கத்தில் பளிங்கு போல் ஓர் ஓடை. அதுனுள் துள்ளி விளையாடும் வெள்ளி மீன்கள். தூரத்தே முகில் தழுவிய குன்றுகள். ஆங்காங்கே சில பூ மரங்கள். அவற்றில் அமர்ந்து பாடும் குயில்கள். தலைக்கு மேல் தங்க நிலவு. அதைச் சுற்றி கண் சிமிட்டும் தாரகைகள். இப்படி ஓர் இடத்தில் நாம் கூடாரம் போட்டுத் தங்கலாம். கொண்டாடலாம் நம் தேனிலவை.”
கணவன் விவரித்த காட்சிகளை மனக்கண்ணில் சித்திரமாக ஓட்டிப் பார்த்தாள் மனைவி. அவளுக்கும் அது பிடித்திருந்தது
நான்கு புறமும் முளை அடித்துக் கயிறு கட்டி, நடுவில் கம்பத்தைச் செருகித் தூக்கும் போது முதல் தவறு நடந்தது. கம்பம் துணியைப் பொத்துக் கொண்டு துருத்திக் கொண்டு வெளியே வந்தது. கூடாரத் துணியின் உச்சி கிழிந்து ஓட்டை விழுந்தது. மாலையில் மழை வந்தது. தரையெல்லாம் சேறாகியது.ஆறு கலங்கி ஓடியது. கலங்கிய ஆற்றில் மீன்களைக் காண முடியவில்லை. மழை வழியே தூரத்துக் குன்றுகளைப் பார்க்க முடியவில்லை.பறவைகள் ஏதும் வெளியே தலைகாட்டவில்லை. கருமேகங்கள் சூழ்ந்த வானில் நிலவும் நடசத்திரங்களும் காணாமல் போயின
காதல் கணவனின் நோக்கம் என்னவோ உயர்ந்ததுதான். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில்தான் சொதப்பல்.
அரசாங்கத் திட்டங்களை நம் நாட்டில் நடைமுறைப்படுத்தும் போது நிகழ்வதைப் போல.
நீட் தேர்வுக்குப் பின் எவ்வளவு உயரிய லட்சியங்கள் இருந்தன. தகுதிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொள்ளைக் கூடங்கள் ஆகிவிடக்கூடாது. நாடு பணமில்லை என்ற காரணத்தால் திறமை மிக்க மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுவிடக் கூடாது. சமூக நீதியும் காப்பாற்றப்பட வேண்டும். நாடு முழுக்க ஒரு சீரான வளர்ச்சி மருத்துவக் கல்வியில் ஏற்பட வேண்டும். இப்படி எத்தனையோ உயர்ந்த நோக்கங்கள் அதன் பின் இருந்தன. ஆனால்-
அண்மைக்காலமாக வாசிக்கும் செய்திகள் நம்மை அதிர வைக்கின்றன. இரு முறை எழுதியும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத தன் மகனை ‘எப்படியாவது’ டாக்டராக்கிவிட வேண்டும் என்ற பேராசை கொண்ட ஓர் அரசு மருத்துவர் 25 லட்சம் கொடுத்து வேறொரு நபரை ஏற்பாடு செய்து நீட் தேர்வை எழுதச் செய்கிறார். ஆள் மாறாட்டம் செய்தவர் தேர்வில் வெற்றி பெற, மாணவர் சேர்க்கை வரை அது தொடர, அந்தப் பணக்கார வீட்டுப் பையன் மருத்துவக் கல்லூரியில் சேரவும் செய்து விடுகிறான்.
இந்தச் செய்திக்குப் பின் என்னவெல்லாம் புதைந்திருக்கின்றன?
1. ஆயிரம் கட்டுப்பாடுகள், விதிமுறைகள், சோதனைகள் இவற்றுக்கு அப்பாலும் ஆள் மாறாட்டம் செய்ய முடிகிறது.
2. அதற்கென ஆட்களும், அவர்களைப் பிடித்துத் தர தரகர்களும் இருக்கிறார்கள்
3. ஒரே ஒரு முறை ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதச் சுளையாக 25 லட்சம் ரூபாயை எடுத்து வீசும் அளவிற்கு அரசு மருத்துவராகப் பணியாற்றுகிறவருக்கு வசதி இருக்கிறது.
4எத்தனையோ தகுதி வாய்ந்தவர்களின் கனவுகளைக் குறுக்கு வழியில் புகுந்து களவாடுகிறோமே என்ற குற்ற உணர்வு கூட இல்லாமல் படித்த வர்க்கம் இங்கே இயங்கிக் கொண்டிருக்கிறது.
இது ஓர் உதாரணம். பனிப்பாறையின் நுனி. இதைத் தீவிரமாக ஆராயப் போனால் இன்னும் எத்தனை சிக்குமோ? இப்போதே இன்னும் சில பெயர்கள் அடிபடுகின்றன. அவர்களில் ஒருவர் அயல்நாட்டுக்குத் தப்பிவிட்டதாகச் செய்திகள் கசிகின்றன
இந்தச் செய்தி வந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு செய்தியும் நாளிதழ்களின் முதல் பக்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. அது சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியின் சில செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த சிபிஐக்குத் தலைமை நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார் என்கிறது அந்த செய்தி. அந்த விசாரணைக்குக் காரணம் அவர் சென்னையில் சுமார் மூன்றரைக் கோடி ரூபாய்க்கு வீடுகள் வாங்கியிருப்பதில் எழுந்திருக்கும் சந்தேகம் மட்டுமல்ல, சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து வந்த அமர்வைக் கலைத்து அவர் இட்ட உத்தரவும் கூட என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா. அவரது இடம் மாற்றச் செய்திகள் வந்த போது, பாஜக அரசால் அவர் பழி வாங்கப்படுகிறார் என்று ஆதாரமே இல்லாமல் எண்ணையில் விழுந்த பணியாரம் போல இரைச்சலுடன் தொலைக்காட்சிகளில் பதைபதைத்தவர்கள் இன்று எங்கே போனார்கள்?
அரசின் திட்டங்கள் எதிர்பார்த்த அளவிற்குப் பலனளிக்காமல் போவதற்குக் காரணம், அரசு மட்டுமல்ல. நீதியற்ற மனிதர்களாக மாறிவிட்ட மத்திய தர வர்க்கமும்தான். பேராசையும் சுயநலமும் அவர்களது பிடரியைப் பிடித்து உந்திக் கொண்டிருக்கிறது. தங்களது விருப்பங்கள் நிறைவேற அவர்கள் எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறார்கள். பணபலமோ, அதிகார பலமோ அதை அறமற்ற வழிகளில் பயன்படுத்தித் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் தயங்குவதில்லை.
போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் ராங்சைடில் சென்று ஏற்கனவே முன்னால் நின்று கொண்டிருப்பவர்களை மறிப்பது, அத்தி வரதர் தரிசன வரிசையில் காத்திருக்க விருப்பமின்றி காசை வீசிக் கள்ள டிக்கெட் வாங்கிக் கொண்டு சென்று பார்ப்பது என்ற சிறிய விஷயத்தில் தொடங்கி காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவது வரை, பொது ஒழுங்கைக் குலைத்துக் கொண்டு சுயநலம் பேணுகிற மனோபாவம் இயல்பாகி வருகிறது. காய்கறிக்காரர்கள், பழைய பேப்பர் வியாபாரிகளிடம் நடந்து கொண்டிருந்த சில்லறைப் பேரங்கள், இன்று எம்.எல்.ஏக்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளக் கோடிகளைப் பேசுகிற கொள்ளைப் பேரமாகப் பிரம்மாண்டமாகிவிட்டன. இதில் பெருங் கொடுமை எனில் அறம் பிறழ்ந்து நடக்கிறோம் என சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தெரிந்த போதும், அதைக் குறித்த கூச்சமோ, குற்ற உணர்வோ கிடையாது.
இப்படிப்பட்ட சமூகத்தில், எவ்வளவு உயர்ந்த நோக்கம் கொண்டிருந்தாலும் அதை நடைமுறைப்படுத்த எந்த அரசாலும் முடியாது. ஓட்டைக் குடங்களைக் கொண்டு நீர் நிறைத்தவர்கள் உலகில் எங்கும் இல்லை
மனசாட்சி மரித்துப் போன தேசத்தில் அரசாட்சி என்பது ஓர் அலங்காரமே