பாரதியை மீட்டெடுத்த விவேகானந்தர்

maalan_tamil_writer

நாம் நம் வாழ்நாளில் ஒருமுறை கூட நேரில் சந்தித்திராத ஒருவர் நம் வாழ்க்கை முழுவதும் நிலைத்திருக்கும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முடியுமா? முடியும் என்கிறது பாரதியின் வாழ்க்கை.

பாரதியும் விவேகானந்தரும் வாழ்வில் ஒருமுறை கூட நேரில் சந்தித்துக் கொண்டதில்லை. விவேகானந்தர் பாரதிக்கு 19 ஆண்டுகள் மூத்தவர். விவேகானந்தர் மறைந்த போது (1903 ஜூலை) பாரதி காசியில் இருந்திருக்க வேண்டும். அல்லது அந்த சமயத்தில்தான் எட்டையபுரத்திற்குத் திரும்பியிருக்க வேண்டும். விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய 1893 செப்டம்பரில் பாரதிக்கு வயது 11. அப்போது அவர் எட்டையபுரத்தில்தான் இருந்தார். ஆனால் விவேகானந்தரின் அந்தப் புகழ் பெற்ற உரை பற்றி இந்தியப் பத்திரிகைகளில் உடனே செய்தி வெளியாகவில்லை. ஹிண்டு நாளிதழ், பாஸ்டனில் வெளியான ஒரு மாலைப் பத்திரிகையை மேற்கோள் காட்டி, 1893 நவம்பர் 17அன்றுதான், விவேகானந்தர் உரையாற்றிய இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான், செய்தி வெளியிட்டது.(வங்காளத்திலிருந்து வெளியான ஸ்டேட்ஸ்மேன் அதற்கும் பின்னர் டிசம்பரில்தான் செய்தி வெளியிட்டது!) எட்டையபுரத்திலிருந்த பாரதி இந்தச் செய்தியை வாசித்திருக்க வாய்ப்பில்லை. வாசித்திருந்தாலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அப்போது அவர் வயது 11தான்.

ஆனால் பாரதியை நாத்திகத்திலிருந்து மீட்டெடுத்தது, 22 வயதில் அவருக்கு அறிமுகமான விவேகானந்தரது கருத்துக்கள்தான். அவற்றை அவருக்கு அறிமுகப்படுத்தியவர்கள் விவேகானந்தர் மீது பற்றுக் கொண்ட சில நண்பர்கள். குறிப்பாக மண்டயம் குடும்பத்தினர்.

வடநாட்டிலேயே தங்கி விட விருப்பம் கொண்ட பாரதி, எட்டையபுர மன்னரின் அழைப்பின் பேரில் எட்டையபுரம் திரும்பினார்.ஆனால் மன்னருடன் பிணக்கு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறினார். இனி என்ன செய்வது என்ற கேள்வி எதிர் நிற்க வேலை தேடத் தொடங்கியவருக்கு மாதம் பதினேழரை ரூபாய் சம்பளத்தில் மதுரை சேதுபதி பள்ளியில் ‘தமிழ்ப் பண்டிட்’ வேலை கிடைத்தது. அது தற்காலிக வேலை. 1904ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலைக்குச் சேர்ந்தவர் நவம்பர் 10ஆம் தேதிவரைதான் அங்கு வேலையில் இருந்தார்.

தமிழாசிரியராகப் பணியாற்ற வந்த அவருக்கு, மதுரையில் அப்போது   இயங்கி வந்த ‘மதுரை மாணவர் செந்தமிழ்ச்  சங்கம்’ என்ற அமைப்பு அறிமுகமாயிற்று. அவர் பணிக்கு வருவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்புதான் (5 மே 1901) அது தொடங்கப்பட்டிருந்தது. அதன் நிறுவனர் மா.கோ என்று அழைக்கப்பட்ட புலவர் மா.கோபாலகிருஷ்ண ஐயர். சிகாகோ உரைக்குப் பின் விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது அவரை பாம்பனில் இராமநாதபுர அரசர் பாஸ்கர சேதுபதியோடு சேர்ந்து வரவேற்றவர்.

மா.கோ.வின் நட்பு பாரதிக்கு விவேகானந்தர் என்ற சாளரத்தைத் திறந்து விட்டது. அதற்கு முன் பாரதி விவேகானந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்திருக்கலாம்.ஆனால் அவரது கருத்துக்களைப் பற்றிய விரிவான தரிசனம் அவருக்கு அந்த நட்பின் விளைவாகத்தான் சாத்தியமாயிற்று. அதன் விளைவாக நாத்திக எண்ணங்கள் சூழ்ந்திருந்த மனதில் மெல்ல மெல்ல ஒளி புகலாயிற்று விவேகானந்தரின் கருத்துக்களின் சாரம் இவைதான்: “சணடையிடாதே, உதவு” (Help, not fight)“ சிதைக்காதே, ஜீரணித்துக் கொள்”“ (Assimilation, not destruction)  “விலகாதே, அமைதியும் நல்லிணக்கமும் கொள்” (Harmony and Peace not dissention)  (இவை விவேகானந்தரே சொல்லியவை) இந்த மூன்றையும் பாரதியின் பல படைப்புகளில் பார்க்கலாம் (ஓர்: உதாரணம்: ‘பகைவனுக்கு அருள்வாய் நன் நெஞ்சே”).

மா.கோ.வின் மற்றொரு நண்பர் சுதேசமித்ரன், ஹிண்டு நாளிதழ்களின் ஆசிரியரான ஜி.சுப்ரமணிய ஐயர். அவரும் விவேகானந்தர் மீது பெரு மதிப்புக் கொண்டவர். விவேகானந்தர் சிகாகோவிலிருந்து திரும்பிய பின் 1894 ஆம் ஆண்டு சென்னையில் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் விவேகானந்தரின் சிகாகோ உரையை பாராட்டிப் பேசியவர் ஜி.சுப்ரமணிய ஐயர். மேடையில் விவேகானந்தருக்கு அருகில் அமர்ந்திருந்திருந்து உரையாடும் வாய்ப்பும் பெற்றவர்.அதன் பின் தனது ஹிண்டு நாளிதழில் விவேகானந்தர் பற்றி தலையங்கமும் எழுதினார். பரவலாக வரவேற்கப்பட்ட தலையங்கம் அது. விவேகானந்தருக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான (விவேகானந்தர் இவரது இல்லத்தில் தங்கியிருக்கிறார்) பேராசிரியர் கே.சுந்தரராம ஐயர் இந்தத் தலையங்கம் பற்றி மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார். (காண்க: K. Sundarama Iyer, Reminiscences of Swami Vivekananda, by His Eastern and Western Admirers, pp. 79-80, Advaita Ashrama, Calcutta) 1894-95ஆம் ஆண்டுகளில் விவேகானந்தர் பற்றி ஹிண்டு தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தது (ப்ரூக்லின் ஸ்டாண்டர்ட் பத்திரிகைச் செய்தியின் மறு பிரசுரம் (23பிப்ரவரி), பாஸ்டன் ஈவ்னிங் செய்தி (28 ஜூன்) டெட்ராய்ட் ஈவ்னிங் நியூஸ் வெளியிட்ட செய்தி (27 ஆகஸ்ட்), இண்டர் ஓஷன் செய்தி (14 நவம்பர், இவையன்றி பிர்ட்டீஷ் இதழ்களான சண்டே டைமஸ், பால் மால் கெசட், எக்கோ இண்டியா, ஆகியவை விவேகானந்தரின் இங்கிலாந்துப் பயணம் குறித்து எழுதியவை, கும்பகோணத்திலும் பெங்களூரிலும் நடந்த பாராட்டுக் கூட்டம் பற்றிய செய்தி (27 ஆகஸ்ட்) கல்கத்தாவில் நடந்த பாராட்டுக் கூட்டம் பற்றிய செய்தி (13 செப்டம்பர்) சென்னைக் கூட்டத்தில் விவேகானந்தர் ஆற்றிய பதிலுரை (12, 15 நவம்பர்) என்று அது குறித்து  ஒரு நீண்ட பட்டியல் இட முடியும். ஜி.சுப்ரமணிய ஐயர் விவேகானந்தர் மீது கொண்டிருந்த பற்றின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு அவர் இந்து ஆசார சீர்திருத்த சபை என்ற அமைப்பில் 1897ஆம் ஆண்டு எழுப்பிய கேள்வி. அந்தக் கேள்வி இதுதான்: “விவேகானந்தரை ஏன் சங்கராச்சாரியாராக நியமிக்கக்கக் கூடாது?” என்று கேட்டதாக இந்தியன் சோஷியல் ரிஃபார்ம் கூறுகிறது (G.Subramania Iyer in 1897 had, wistfully perhaps, asked The Madras Hindu Social Reform Association,” Cannot the reformers install Swami Vivekananda or some spiritual hero like him into a reform Sankarachari as there was a second Pope for some time in Europe!” Indian Social Reform, IV 363)

காசி வாசத்தின் காரணமாக பாரதிக்குப் பலமொழிகள் பரிச்சயமாகி இருந்தன. ஆனால் தமிழ் இலக்கணத்தில் அவர் பெரிய பயிற்சி கொண்டிருக்கவில்லை.அதுவும் தவிர முதல் முதலில் வேலைக்குச் செல்லும் 22 வயது இளைஞனுக்கு முதல் சில மாதங்களில் ஏற்படும் குழப்பங்களும் மெலிதான பதற்றங்களும் அவருக்கு இருந்திருக்கலாம். அவை பற்றி  அவர் மா.கோவிடம் பகிர்ந்து கொண்டிருக்கலாம்.

விவேகானந்தாரின் விசுவாசியான மா.கோ. இவற்றை விவேகானந்தரின் இன்னொரு அன்பரும்,தனது நண்பருமான ஜி.சுப்ரமணிய ஐயரிடம் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஹிண்டுவில் வெளியிட்டதைப் போல சுதேசமித்திரனிலும் அயல்நாட்டுச் செய்திகளை வெளியிடக் கருதியிருந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் மொழிகள் பல அறிந்த பாரதியை சுதேசமித்திரனுக்கு அழைத்துக் கொண்டார். 1904ஆம் ஆண்டு இறுதியில் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். முதல் ஓராண்டுக்கு அவருக்குப் பெரிதும் மொழிபெயர்ப்புப் பணிகளே கொடுக்கப்பட்டன.

ஜி.சுப்ரமணிய ஐயர் தனது பத்திரிகைகளுக்கு அப்பால் திருவல்லிக்கேணி இலக்கிய சங்கம், சென்னை இந்து ஆசார சீர்த்திருத்த சங்கம் ஆகிய அமைப்புகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அந்த அமைப்பின் கூட்டங்களுக்கு பாரதியும் சென்றிருக்கக் கூடும். அங்கு அவருக்கு வாழ்நாள் முழுவதும் துணை நிற்கக் கூடிய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் மண்டயம் குடும்பம்.

மண்டயம் என்பது இன்று மாண்டியா என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகத்தில் மைசூருக்கு 45 கீ.மீ. தொலைவில், உள்ள சிறுநகரம். அங்கு வசித்த, ராமானுஜர் மரபில் வந்த தென்கலை வைணவக் குடும்பங்களில் ஒன்று, புகழ் வாய்ந்த மண்டயம் குடும்பம். அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் அப்பழுக்கற்ற தேசபக்தர்கள். தனித்தனியாகப் பார்த்தாலும் ஒவ்வொருவரும் அவரவர் துறைகளில் சிறப்பானவர்கள்.

முதலில் சுல்தான்களிடமும் பின் அவர்களிடமிருந்து பிரிட்டீஷாரிடமும் பறிபோன மைசூர் அரசை உடையார்கள் மீட்க உதவியவர் திருமலாராவ். மைசூர் அரசில் முதன்மை அமைச்சராகப் பதவி வகித்தவர் என்பதால் பிரதான் திருமலாராவ் என்றழைக்கப்பட்டவர். அவரது மகன் கிருஷ்ணமாச்சாரியார் நவீன கன்னட மொழிக்கு இலக்கணம் இயற்றிய மொழி அறிஞர். அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். யோகி பார்த்தசாரதி என்றழைக்கப்பட்ட அவரது மகன், வழக்கறிஞர், யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியர், வேதாந்த அறிஞர். காலப்போக்கில் மறைந்து போன சமஸ்கிருதச் சுவடிகளைத் தேடி எடுத்துப் பதிப்பித்தவர். சர் கோலி ஹர்மன், சர் ஆடம் பிட்டில்ஸ்டோன் என்ற ஆங்கிலேய நீதிபதிகளுக்கு சமஸ்கிருதம் கற்பித்தவர். காந்தி, திலகர் ஆகியோரது நண்பர். அவர் இந்தி பயிற்றுவிக்க ஒரு நிறுவனத்தைத் தொடங்கிய போது அதன் முதல் ஆசிரியாராகச் சேர்ந்தவர் காந்தியின் மகன்

அவரது சகோதரி பெருந்தேவியின் மகன்தான் அளசிங்கப் பெருமாள். விவேகானந்தரை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கான எல்லா முயற்சிகளையும் -இருமுறை நிதி திரட்டுவது. ஒருமுறை குடும்ப நகைகளை விற்று அமெரிக்காவிற்குப் பணம் அனுப்புவது உள்பட- எல்லா முயற்சிகளையும் செய்தவர். “இதெல்லாம் உங்களால்தான் சாத்தியம் ஆயிற்று” என்று விவேகானந்தர் அவருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார். அளசிங்கரைப் பற்றி தனியாக ஒரு நூலே எழுதலாம்.

அளசிங்கரின் தங்கை சிங்கம்மாவின் கணவர் நரசிம்மய்யங்கார், கோதாவரியில் அணைகட்டியவர் என்பதால் அந்தப் பகுதி மக்களால் கோதாவரி சாமி என்றழைக்கப்பட்டவர். சிங்கம்மாவின் மகன் எம்.பி.டி ஆச்சாரியாவின் வாழ்க்கை சாகசங்கள் நிறைந்த ஒரு வீரனின் வாழ்க்கை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு விதை ஊன்றியவர் அவர்.

அளசிங்கரின் தாய் பெருந்தேவியின் உடன் பிறந்த சகோதரி வேடம்மாவின் மகன்கள்தான் மண்டயம் திருமலாச்சாரியார், ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோர். இவர்கள்தான் இந்தியா பத்திரிகையைத் தொடங்கியவர்கள். அவர்களது உறவினர்களான அளசிங்கப் பெருமாளும், எம்.பி.டி ஆச்சார்யாவும் அதற்குத் துணை நின்றார்கள். எம்.பி.டி.ஆச்சாரியா சில காலம் அதன் பதிப்பாளராக இருந்தார். இந்தியா இதழ் முதலில் சில காலம் அளசிங்கப் பெருமாள் நடத்தி வந்த பிரம்மவாதின் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வந்தது.

இவர்கள் அனைவருமே விவேகானந்தரின் சீடர்கள். அவர்களது இன்னொரு ஆதர்சம் திலகர். 1898ல் சிறையிலிருந்து விடுதலையான சில நாட்களுக்குப் பின் சென்னை வந்த திலகர் மண்டயம் குடும்பத்தினருடன்தான் தங்கியிருந்தார்.தன்னுடைய நூல் ஒன்று வரைவு நிலையில் இருந்த போது அதை அளசிங்கரிடம் கொடுத்துக் கருத்துக் கேட்குமளவிற்கு திலகருக்கு அந்தக் குடும்பத்தோடு நெருக்கம் இருந்தது.

1893ல் விவேகாநந்தர் சிகாகோவில் ஆற்றிய உரை படித்த இந்தியர்களிடையே ஒருவித விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. அவர்களிடையே இந்தியா இந்துமதம் குறித்தபெருமித உணர்வு துளிர்த்ததிருந்தது. அந்தச் சூழ்நிலையில் திலகர், இந்துக்களை ஒருங்கிணைப்பது என்ற நோக்குடன் விநாயகர் ஊர்வலம் (1893) சிவாஜி ஊர்வலம் (1895) நடவடிக்கைகளைத் தொடங்கி ஒரு பெருந்தலைவராக உருவாகிக் கொண்டிருந்தார். 1901 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றிருந்த போது அவர் விவேகானந்தரை சந்தித்தார். (விவேகானந்தர் சிகாகோ செல்லும் முன் இந்தியா முழுக்க யாத்திரை மேற்கொண்டிருந்த காலத்தில் புனேயில் திலகரது இல்லத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஒரு சந்நியாசி என்று மட்டும் கூறிக் கொண்டு சில நாள்கள் தங்கியிருந்திருக்கிறார்) கல்கத்தாவில் நடந்த அந்த சந்திப்புக்குப் பின் திலகர் சுதேசி என்ற கருத்தை முன்னெடுக்கத் தொடங்கியிருந்தார்.

விவேகானந்தராலும் திலகரினாலும் பாரதியின் நண்பர்களான மண்டயம் குடும்பத்தினரும், வ.உ.சியும் ஈர்க்கப்பட்டதைப் போலவே பாரதியும் திலகரின் பால் ஈர்க்கப்பட்டார். திலகர் தனது கருத்துக்களை தனது பத்திரிகைகள் மூலம் பரப்பி வந்தார். அவரது தலையங்கங்கள் காரணமாக பிரிட்டீஷ் அரசால் கைது செய்யப்பட்டு ஓராண்டு தண்டனையும் பெற்றார். அந்த சிறைவாசத்திலிருந்து விடுதலை அடைந்த போதுதான் சென்னை வந்து மண்டயம் குடும்பத்தினரோடு தங்கியிருந்தார்.

1905ல் கர்சன் அறிவித்த வங்கப் பிரிவினை திலகரின் அரசியலை வேகம் பெறச் செய்யதது. அந்தப் பிரிவினை குறித்து கொதித்தெழுந்த பாரதி கர்சனை எதிர்த்த வங்க இளைஞர்களைப் பாராட்ட சென்னை  கடற்கரையில் 1905ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ஒரு பொதுக்கூட்டம் நடத்தி அதில் வங்கமே வாழிய என்ற கவிதையையும் பாடினார். அது அதற்கு மறுநாள் சுதேசமித்திரனில் வெளியாயிற்று. அதுதான் சுதேசமித்திரனில் வெளியான பாரதியின் முதல் படைப்பு.

திலகரின் கருத்துக்களைத் தமிழரிடம் பரப்ப ஒரு பத்திரிகை வேண்டும் என்று பாரதி நினைத்தார். அந்த எண்ணத்தை நிறைவேற்ற மண்டயம் சகோதரர்கள் முன் வந்தார்கள். அவரை ஆசிரியராகக் கொண்டு 1906 ஆம் ஆண்டு மே 9 அன்று இந்தியா வார இதழாக சென்னையில் மலர்ந்தது.  திருமலாச்சாரியார் இந்தியா இதழை பாரதியின் பொருட்டே தொடங்கியதாக பாரதியுடன் சுதேசமித்திரன் இதழில் துணையாசிரியராக இருந்தவரும் , தேசியத்தலைவர்கள் பலருடைய வரலாற்றை எழுதியவருமான எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் ‘சுப்பிரமணிய பாரதியார்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்

இலக்கியவாதியாகத் தொடங்கிய பாரதி அரசியலில் அடியெடுத்து வைத்தது இந்தியா இதழ் மூலம்தான். இந்தியாவும், அதையடுத்து வந்த மண்டயம் சகோதரர்களின் இதழ்களும் பாரதி வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிது.

அது அடுத்து வரும் இதழ்களில்

கலைமகள் ஜூன் 2024

One thought on “பாரதியை மீட்டெடுத்த விவேகானந்தர்

  1. ஆஹா! அருமை! அருமை!! அருமை!!!
    அற்புதம் தகவல்கள்.
    பகிர்விற்கு மிக்க நன்றி._/\_ 😇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.