அது நாள் வரை கண்டிராத நெருக்கடியில் தாம்பரம் வான்படை விமானதளம் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஆம்புலனஸாக மாறிய ஆகாயவிமானம் அங்குதான் நிறுத்தப்பட்டிருந்தது.அங்குதான் நிறுத்தப்பட்டிருக்கிறது என்ற செய்தி பரம ரகசியமாகப் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை மோப்பம் பிடித்த பத்திரிகைகள் முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டன. அப்படி ஒரு விமானதளம் சென்னையில் இருக்கிறது என்பதை அதுநாள் வரை அறிந்திராத மக்கள் செய்தி அறிந்ததும் வழி விசாரித்துக் கொண்டு வாகனங்களிலும் கால்நடையகவும் அங்கு குவியத் தொடங்கினார்கள். இராணுவ இடம் என்பதால் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிக்க முடிந்தது. எனினும் எதிர்பாராத எண்ணிக்கையில் கூட்டம் குவிந்ததால் திணறித்தான் போனது ராணுவம். அன்பின் மிகுதியால் வருபவர்களிடம் ஏதும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டுவிட வேண்டாம் என்று இடப்பட்டிருந்த ஆணை இராணுவத்தின் கரங்களைக் கட்டிப் போட்டிருந்ததும் ஒரு காரணம்.
ஆனால் விமானத்தை யாரும் நெருங்கவிடாமல் கண்டிப்பாகக் காத்து நின்றது ராணுவம். தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த இளஞ்செழியனைக் கூட அனுமதிக்க மறுத்தது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிற நேரத்தில் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்று கவனமாக இருக்கிறோம் எனக் காரணம் சொல்லப்பட்டது.
ஒரே ஒருவருக்கு மட்டும் விலக்கு. அது வித்யா. காரணம் பிரதமர். பெரிய இடத்து சிபாரிசை மறுக்கும் திராணி எந்த வைத்தியருக்கும் இல்லை. விமானத்தில் ஏறிப் பெரியவரைப் பார்த்தாள். இள நீலப் போர்வையைக் கழுத்து வரை இழுத்துப் போர்த்தியிருந்தார்கள்.முகம் மட்டும் தெரிந்தது. ஆனால் அதுவும் முற்றிலும் தெரியவில்லை. பனிக் குல்லாய போன்று ஒன்றைத் தலையில் கவிழ்த்திருந்தார்கள். மூக்கிலிருந்து புறப்பட்ட குழாயில் சொட்டுச் சொட்டாய் ஓரு திரவம் இறங்கிக் கொண்டிருந்தது.உணவாக இருக்கலாம். மருந்தாகவும் இருக்கலாம்
கண நேரம் வைத்த விழி வாங்காமல் அந்த முகத்தையே பார்த்தாள் வித்யா. எத்தனை பேரை கிறங்க அடித்த முகம்!. இந்த முகத்தை நொடி நேரம் பார்க்க அடுப்பு வேலையை விட்டுவிட்டு வாசலுக்கு வந்து நின்ற பெண்கள் எத்தனை பேர்! ஊரை உறவை விட்டு ஓடி வந்து அவர் தோட்டத்து வாசலில் மணிக்கணக்க்காய் காத்திருந்த கண்கள் எத்தனை! ஒரு புன்னகையால் உள்ளம் கவர்ந்த கள்வன். இன்று சலனமின்றிச் சாய்ந்து கிடக்கிறார்.
இவரா என் வீடு தேடி வந்தார்? கட்சியைக் காப்பாற்று என்று கேட்டார்? என்ன ஆனாலும் அரசியலை விட்டு விலகமாட்டேன் என்று அம்மா படத்தில் சத்தியம் வாங்கிக் கொண்டார்?
அவளை அறியாமல் வித்யாவின் கண்ணீர் பெருகியது, கட்டுப்படுத்த முடியாமல் விசும்பினாள். அவள் அருகில் வந்து நின்றார் முருகய்யன். ஆறுதலாய்த் தோளில் கை வைத்தார். அவசரமாய் அடுத்த கணம் விலக்கிக் கொண்டார். “நிச்சயம் தேறி வருவார். இத்தனை பேருடைய பிரார்த்தனை வீண் போகாது. நீங்கள் தைரியமாய் இருங்கள்.” என்றார்
ஏதும் பேசாமல் வித்யா அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்
“தைரியமாய் இருங்கள். உங்கள் தோளில் ஒரு பெரும் பாரம் இருக்கிறது. நீங்கள் உடைந்தால் எல்லாம் சிதறிப் போகும்.நாம் எல்லோருமே அவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். அந்தக் கடனை எப்படித் தீர்க்கப்போகிறோம்? உறுதியாய் இருந்து ஒரு விள்ளல், ஒரு கீறல் இல்லாமல் கட்சியைக் காப்பாற்றி திரும்பி வந்த்தும் அவரிடம் கொடுப்பதைத் தவிர அந்தக் கடனைத் தீர்க்க வழியில்லை” என்றார் முருகய்யன்
கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் வித்யா. கைக் கடிகாரத்தைப் பார்த்தார் முருகய்யன். “புறப்பட நல்ல நேரம் பார்த்திருக்கிறார்கள். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது” அவசர அவசரமாக விமானத்தில் இருந்து படியிறங்கினாள் வித்யா.
வீடு திரும்பும் வழி நெடுக வீதிகளைப் பார்த்துக் கொண்டே வந்தாள் வித்யா. சாரி சாரியாக மக்கள் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தோளில் சார்த்தியிருந்த கொடி அவர்களைப் போலவே துவண்டிருந்தது. வேட்டிகளில் அழுக்கு அப்பிக் கிடந்தது. காட்டன் சேலைகள் கசங்கிக் கிடந்தன. எண்ணை காணாத் தலைகள். குளியல் காணா மேனிகள். எத்தனை நாளாய் ஆஸ்பத்ரி வாசல் மண்ணில் அமர்ந்திருந்தார்களோ? ஏதாவது சாப்பிட்டிருப்பார்களா?
“நான் என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு மேடையில், மயங்கிச் சரிந்து விழலாம். அல்லது மெளனமாகவே கூட மரித்துப் போகலாம். நான் மரணத்திற்கு பயப்படவில்லை. நான் எதையும் எடுத்துக் கொண்டு போக முடியாது என்றெனக்குத் தெரியும். ஆனால் எதை விட்டுச் செல்கிறேன் என்று எண்ணும் போது எனக்குக் கலக்கமாக இருக்கிறது. அன்றே எல்லாம் போதும் என்று ஒதுங்கி விடலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் அவர்கள், என் ஆதரவாளர்கள், அடிபட்டு ரத்தம் சொட்டச் சொட்ட என் வீட்டு வாசலில் வந்து நின்ற போது அதை அலட்சியப்படுத்திவிட்டு கடந்து போக எனக்கு முடியவில்லை. அப்படி அலட்சியப்படுத்தியிருந்தால் இன்னும் பலர் தாக்கப்பட்டிருப்பார்கள். அவர்களில் சிலர் இறந்தும் கூடப் போயிருப்பார்கள். எனக்கு உயிர் கொடுத்தவர்கள், வாழ்வு கொடுத்தவர்கள் என் அலட்சியத்தால் இறந்து போயிருப்பார்கள். அவர்களைக் காப்பாற்ற வேண்டுமானால் அதற்கு ஒரே வழி அரசியல் கட்சிதான். அனுபவத்தில் சொல்கிறேன். அதிகார முற்றங்களில் அப்பாவிப் பொது மக்களின் குரல்கள் எடுபடாது. ஆனால் அரசியல்கட்சிகளின் சிறு அசைவுகள் கூட ஆட்சிப் பீடங்களுக்கு அச்சம் தரும். அவர்களுக்காகத்தான் ஆரம்பித்தேன். அந்த அவர்கள் மெத்தப் படித்த மேதைகள் இல்லை.இலக்கியத்தில் புரண்டு எழுந்த எழுத்தாளர்கள் இல்லை. அருவி போல மேடையில் அடுக்கு மொழிகளைக் கொட்டி அசர வைக்கிற பேச்சாளர்கள் இல்லை.விவசாயம் செய்து விட்டு வீட்டுக்குப் போய் சினிமா பார்த்து இளைப்பாறுகிறவர்கள். காற்றுக்கும் கடலுக்கும் இசைந்து படகேறிப் போய் பணம் தேடுபவர்கள். அவர்கள் ஒரு நாளும் வசிக்க இயலாத கட்டிடத்திற்காகக் கல் சுமப்பவர்கள்.எட்டுமணி நேர வேலையில் இடுப்பொடிந்து போனவர்கள். அவர்கள் என்னில் தன்னைக் கண்டார்கள் எனக்குப் பிரசினை என்ற போது தங்கள் பிரசினை என்றெண்ணி என் பின் திரண்டார்கள். இப்போது நான் போய்விட்டால் அவர்கள் என்ன ஆவர்கள்? திக்குத் தெரியாத நடுக் காட்டில் சிக்கிக் கொள்வார்கள். அவர்கள் இதுநாள் வரை முழு நேர அரசியல் செய்தவர்கள் இல்லை. இனிப் பழைய வாழ்க்கைக்கும் திரும்ப முடியாது. அவர்களை வழி நடத்திச் செல்ல ஒரு தலைமை வேண்டும்.”
வீட்டிற்கு வந்திருந்த போது பெரியவர் சொன்ன வார்த்தைகள் மனதில் புரண்டன. “உங்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நான் காப்பேன்” என்று சொல்லிக் கொண்டாள் வித்யா. அவளை அறியாமல் உரக்கச் சொல்லிவிட்டாள் போலிருக்கிறது. காரை ஓட்டிக் கொண்டிருந்த டிரைவர் திரும்பிப் பார்த்து ஏதாவது சொன்னீங்களாமா அம்மா” என்று கேட்டார்.
“ஒன்றுமில்லை சீக்கிரம் போ!” என்றாள் வித்யா
கார் தெருவில் நுழையும் போது கலாநிலையத்தின் கதவருகே மாலை நேரத்து மஞ்சள் நிறத்தில் சேலை உடுத்திய நடுவயதுப் பெண் ஒருத்தி நிற்பது போலிருந்தது. யார் சித்ராவா? இல்லை இது என் பிரமையா என உற்றுப் பார்த்தாள் வித்யா
ஆம். அது சித்ராவேதான்.
“வேலு! யாரையும் உள்ளே விடாதே!” என்று சொல்லி விட்டுத் திரும்பிப் பார்ப்பதற்குள் சித்ரா அருகில் நின்று கொண்டிருந்தாள்
“நீ எங்கே வந்தே?”
“நான் வேறு எங்கே அக்கா போவேன்?”
“ஏன் உளவு பார்க்க ஊரில் வேறு யாருமே கிடைக்கவில்லையா?”
நிமிட நேரம் மெளனமாக நின்ற சித்ரா பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திடமான குரலில் சொன்னாள்: “ உளவெல்லாம் இல்லீங்க அக்கா. உங்களுக்கு உதவியா இருனு சொல்லித்தான் பெரியவர் அனுப்பிச்சாரு. உங்களுக்குப் பெரிய பொறுப்பெல்லாம் கொடுக்கப் போறேன், அவங்களுக்கு அதற்கே நேரம் சரியா இருக்கும், நீ வீட்டைப் பார்த்துக்கோ.அவங்களுக்குக் கூட மாட ஒத்தாசையா இருந்துக்கோனுதான் சொன்னாரு.”
பெரியவர் அப்படியா சொல்லியிருப்பார்? சொல்லியிருக்கலாம். முருகய்யனிடம் தன்னைப் பற்றி அவ்வளவு உயர்வாகச் சொல்லியிருக்கிறாரே! தன்னிடம் பெரும் பொறுப்புக்களைக் கொடுக்கும் எண்ணம் அவருக்கு இருந்தது என்பதை அவர் எவரிடமும் மறைக்கவில்லை. எதிரிகளிடம் கூட மறைக்கவில்லையே. வித்யா யோசனையுடன் சித்ராவின் முகத்தைப் பார்த்தாள்
“அப்படியா சொன்னார்?”
“அந்தப் பெரியநாயகி மேல ஆணையா சொல்றேன். அப்படித்தான் அக்கா சொன்னார். அவங்க கெட்டிக்காரங்க, யாரையும் புரிஞ்சுப்பாங்கனு, விசுவாசமா இருந்தா நல்லா கவனித்துக் கொள்வாங்கனு சொன்னார்”
“ஐஸ் வைக்கிறியா?”
“ஐயோ, இல்லக்கா. அவர் அப்படித்தான் சொன்னார். அது கூட இன்னொண்ணும் சொன்னார்”
“என்னென்னு?”
“அது வேணாக்கா”
“ம் சொல்லு!”
சித்ரா தயங்கினாள்.வித்யாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்து விட்டுக் குனிந்து கொண்டாள்
“சும்மாச் சொல்லு!”
“இல்லக்கா வந்து. . .”
“ம்?”
“உங்களுக்குச் சட்டுனு கோபம் வந்திரும். கோபம் வராமல் நடந்துக்கோனு சொன்னார்”
வித்யாவின் முகத்தில் புன்னகை அரும்பியது. சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். கோபம் வரத்தான் செய்கிறது.இந்தக் கோபத்தைக் கண்டு நெருங்கிப் போனவர்கள் பலர், விலகிப் போனவர்கள் . கோயிங் ஸ்டெடி என்று சீராகப் போய்க் கொண்டிருந்த ரமேஷ் பாபுவின் உறவு கூட இந்தக் கோபத்தால்தானே பொசுங்கிப் போனது! ஆனால் வேண்டுமென்றா கோபப்படுகிறோம்? அடுத்தவரை அச்சுறுத்தவா கோபப்படுகிறோம்? முட்டாள்தனத்தைப் பார்த்தால் கோபம் வருகிறது. அற்பக் காரணங்களுக்குப் பொய் சொல்கிறவர்களைப் பார்த்தால் கோபம் வருகிறது.கொடுத்த வேலையைச் செய்யாமல் டாபாய்க்கிறவர்களைப் பார்த்தால் கோபம் வருகிறது. இதற்கெல்லாம் கூடக் கோபப் படக்கூடாது, இளித்துக் கொண்டு நிற்க வேண்டுமென்றால் எப்படி? காவியைக் கட்டிக் கொண்டு எங்காவது காட்டிற்குள்தான் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும். ஆனால் விசுவாமித்திரருக்குக் கோபம் வந்ததே! துர்வாசருக்குக் கோபம் வந்ததே!
வித்யாவின் முகத்தில் அரும்பிய புன்னகையைப் பார்த்ததும் சித்ராவிற்கு நிம்மதியாக இருந்தது. இலையுதிர் காலத்திற்குப் பின் தளிர்க்கும் முதல் தளிரை, மொட்டைப் பார்க்கும் போது ஏற்படுகிற மகிழ்ச்சி ஏற்பட்டது. தன் வார்த்தைகள் பலன் தரத் தொடங்கியிருக்கின்றன என்ற ஆறுதல் பிறந்தது.
“களைப்பா இருக்கீங்க அக்கா!. காபி கலந்து எடுத்து வரவா?”
களைப்பாகத்தான் இருந்தது. ஆனால் அவள் சொல்வதை அலட்சியப்படுத்துவது போல, சமையலறையை நோக்கி, “துளசி! ஐஸ்க்ரீம் இருந்தால் கொண்டா!” என்று குரல் கொடுத்தாள் வித்யா
சித்ரா விடுவிடுவென்று சமயல்கட்டை நோக்கி நடந்தாள். அவள் உள்ளே போவதைப் பார்த்தாள் வித்யா. அதைத் தடுக்க முயலவில்லை. “என்ன ஸ்வாதீனம்! எத்தனை உரிமை! சொந்த வீட்டைப் போல தயக்கம் கூச்சம் இன்றித் தாராளமாகப் புழங்குகிறாள்! இவள் நிஜமாகவே உதவத்தான் வந்திருக்கிறாளா? இனி யாருக்காக உளவு பார்க்க வேண்டும்?பெரியவர் அமெரிக்கா கிளம்பி விட்டார். முருகய்யனும் கூடப் போய்விட்டார். இனி யாருக்கு என்னைப் பற்றிய உளவுத் தகவல் வேண்டும்?
கண்ணாடிக் கிண்ணத்தில் ஒரு கரண்டி மாம்பழ ஐஸ்க்ரீமை எடுத்து வந்தாள் சித்ரா.
“அக்கா நீங்க என்னைத் திட்டினாலும் சரி, இனி நீங்க ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது”
ஏன் என்பதைப் போலப் பார்த்தாள் சித்ரா
“ஏற்கனவே உங்களுக்குச் சர்க்கரை. இனிமே ஜாக்கிரதையா இருக்கணும். பெரியவர் படுக்கையில் விழுந்ததற்கு அப்புறம் எனக்கு எதைப் பார்த்தாலும் பயமா இருக்கு அக்கா. எப்படி இருந்தாரு! ஒரு நொடியில இப்படி விழுந்திட்டாரே!’
வித்யாவிற்கு விமானத்தில் பெரியவர் படுத்திருந்த காட்சி நினைவிற்கு வந்து போனது.
“எனக்கே உபதேசம் பண்ண ஆரம்பிச்சிட்டியா! ரொம்ப சந்தோஷம்!” என்றாள் வித்யா. அவள் வார்த்தைகளில் கேலி இழையோடியது. தொடர்ந்து அவள் ஏதோ சொல்வதற்குள் டெலிபோன் கிணுகிணுத்தது.
சித்ராதான் பாய்ந்தோடிப் போய் எடுத்தாள்
“அக்கா! தில்லியிலிருந்து பேசறாங்க. ஏதோ இந்தியில் பேசறங்க!”
வித்யா எழுந்து போய் போனை வாங்கிக் கொண்டாள் பிரதமர்தான். இரண்டொரு நாள்களில் தில்லி வர முடியுமா எனக் கேட்டார்.
இரண்டொரு நாள் எதற்கு? இன்றே வருகிறேன் என்றாள் வித்யா. மறுநாள் வீட்டில் சந்திக்கலாம் என்றார் பிரதமர். நீங்கள் மட்டும் வாருங்கள், இளஞ்செழியனை அழைத்து வர வேண்டாம் என்றார்.
பயணத்திற்குத் தயாரானாள் வித்யா. பிரதமரிடம் என்ன பேச வேண்டும் என மனம் திட்டமிடத் தொடங்கியிருந்தது. முதலில் அவர் பேச்சை ஆரம்பிக்கட்டும். நம் மனதில் இருப்பதை முதலில் கொட்டிவிட வேண்டாம்.தேர்தலைப் பற்றிப் பேசுவாரோ? பேசினால் அதற்குள் என்ன அவசரம் என்றுதான் நாம் பதில் சொல்ல வேண்டும். பெரியவர் இன்னும் இருக்கிறார். ஆனால் ஆஸ்பத்ரியில் இருக்கிறார்தான். நினைவின்றி இருக்கிறார்தான். அதனால் என்ன? இடைக்கால முதல்வர் எனபவரின் கீழ் அரசாங்கம் ஒன்று இருக்கிறதுதானே? இருக்கிறது, ஆனால் இயங்கிக் கொண்டு இருக்கிறதா? இளஞ்செழியனை ஏன் அழைத்து வர வேண்டாம் என்றார்? இளஞ்செழியனை இறங்கச் சொல்லிவிட்டு நம்மைப் பொறுப்பெடுத்துக் கொள்ளச் சொல்வாரோ? அப்படிச் சொன்னால் அதற்கு மட்டும் நாம் இணங்கக் கூடாது. பெரியவர் நினைத்திருந்தால் தன்னை மாநிலத்தில் அமைச்சராக்கியிருக்கலாம். ஆனால் ஆக்கவில்லை. அவர் தில்லிக்கு அனுப்பினார். அதற்குப் பின்னால் ஏதேனும் திட்டம் வைத்திருந்தாரோ?இல்லை அரசு இயந்திரம் எப்படி இயங்குகிறது என்று அறிந்து கொண்டு வரட்டும் எனக் கருதியிருப்பாரோ? அதை இங்கேயே அமைச்சராக இருந்து கற்றுக் கொண்டிருக்க முடியுமே? ஒரு வேளை பிரதமரைக் கண்காணிக்க அனுப்பியிருப்பாரோ?
சித்ரா தனது கழித்தல் கூட்டல் கணக்குகளில் ஒரு அம்சத்தை எண்ணிப் பார்க்க மறந்திருந்தாள் அது: அருட்செல்வன்
அவள் மறந்த இன்னொரு விஷயம், சித்ரா. அவளை இரு என்றும் சொல்லவில்லை. வெளியே போ என்றும் சொல்லவில்லை என்பது விமான நிலையத்திற்குப் போகும் போது நினைவுக்கு வந்தது. எங்கே போய் விடப் போகிறாள் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள்
வீட்டை விட்டுக் கிளம்பும் போது தற்செயலாக நிமர்ந்து பால்கனியைப் பார்த்தாள்.
கள்ளி பூத்திருந்தது.