தோழி -16

maalan_tamil_writer

“அக்கா கூப்பிடறாங்க!”

உள்ளறையிலிருந்து வந்த சித்ரா முன்னறையில் அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்த சாமிநாதனிடம் சொன்னாள். கையை உயர்த்தி சைகையால் இரு இரு என்றான் சாமிநாதன்

“அவசரமா வரச் சொன்னாங்க!” என்று நெருக்கினாள் சித்ரா.

போனைத் துண்டித்துவிட்டு உள்ளே விரைந்தான் சாமிநாதன்

“மேடம், கூப்பிட்டிங்களா? சித்ரா சொன்னா”

“மிஸ்டர் சாமிநாதன், முதலில் பெண்களை மரியாதையாகப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.இது இங்கு, கலா நிலையத்தில், எழுதப்படாத சட்டம். வயதில் பெரியவர்கள், சிறியவர்கள், வேலைக்காரர்கள், சக ஊழியர்கள் எவரையும் அவர்கள் பெண்களாக இருந்தால் ஒருமையில் பேசுகிற வழக்கம் வெளியில் சமூகத்தில் இருக்கிறது. ஆனால் அதற்கு கலாநிலையத்தில் அனுமதி இல்லை. புரிகிறதா?”

சாமிநாதன் தலையை ஆட்டினான். மனைவியை எப்படி அழைப்பது என்பதை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு திருமணமாகாத ஒரு செல்வியிடம் கற்றுக் கொள்ள வேண்டியிருப்பதை நினைத்தான். முகத்தில் அவனை அறியாமல் புன்னகை அரும்பியது.

ஆனால் வித்யா முகம் இறுகியது. கடுகடுவென்றாகியது.

“கடிதம் ஒன்று சொல்கிறேன். டைப் செய்து ஐந்து நிமிடத்தில் கொண்டு வாருங்கள். அவசரம்.”

“சரி மேடம்”

“ஒரு வரிதான். அதை அடிக்க அதிக நேரம் ஆகாது”

“சொல்லுங்க மேடம்”

“பெருமதிப்பிற்குரிய தலைவர் அவர்களுக்கு,

நான் கட்சியின் எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்கிறேன். என்னால் குழப்பம் வேண்டாம்”

சாமிநாதன் திடுக்கிட்டான்.

“மேம், என்ன இது!”

“டூ வாட் ஐ சே!” கோபத்தில் இரைந்தாள் வித்யா.

சாமிநாதன் காகிதங்களை எடுத்துக் கொண்டு வெளியேறினான். ஆனால் மனம் உள்ளூறக் குமைந்து கொண்டிருந்தது. என்ன நடக்கிறது இங்கே? அவர் கட்சியைக் கலைப்பேன் என்கிறார். இவர் ராஜினாமா என்கிறார். என்ன மனிதர்கள் இவர்கள். இப்படிப் படக் படக்கென்று முடிவெடுக்கிறார்கள்! இவர்கள் படித்தவர்கள். அனுபவசாலிகள். ஆனால் இப்படி உணர்ர்சி மேலிட முடிவெடுக்கிறார்கள். நம்ப முடியவில்ல்லையே. இதெல்லாம் நாடகமா? சொல்லி வைத்துக் கொண்டு நடிக்கிறார்களா? இல்லை குப்பையில் நெருப்பு மூட்டி மூத்திரம் பெய்து அணைக்கிற விளையாட்டா? எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நம் நிலை என்ன? வெறும் குமாஸ்தாவாகச் சாவதற்கா இங்கு வந்தோம்? அப்படிச் சாகப் பிறந்தவன் இல்லை இந்த சாமிநாதன். சிங்கங்கள் பசித்திருக்கும் ஆனால் பட்டினியில் சாவதில்லை.

 கடிதத்தில் கையெழுத்திடக் குனிந்த வித்யா கையெழுத்திடாமல் நிமிர்ந்தாள்

“எதற்கு இரண்டு?” கையிலிருந்த இரண்டு பிரதிகளைக் காட்டிக் கேட்டாள்.

“ அவருக்கு ஒரிஜினல் நமக்கு ஒரு காப்பி”

“வேண்டாம்.நமக்கு காப்பி வேண்டாம்.” என்று ஒரு பிரதியைச் சுக்குநூறாகக் கிழித்தாள். ஒன்றில் கையெழுத்திட்டாள். “இதை நீங்களே கொண்டு போய் கொடுங்கள். பெரியவரை நேரில் பார்த்துக் கொடுங்கள். எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து பார்த்துக் கொடுங்கள்.வேறு யாரிடமும் கொடுக்க வேண்டாம். என்ன ஆனாலும் சரி, இதைக் கொடுக்காமல் திரும்ப வேண்டாம்”

காரில் கிளம்பிய சாமிநாதன், தெருமுனையில் இருந்த ஜெராக்ஸ் கடையில் கடிததத்திற்கு ஒரு நகல் எடுத்து மடித்துச் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான்.

*

சாமிநாதன் கொண்டு வந்த கடிதத்தைப் பிரிக்காமலே பெரியவர் கேட்டார்: “என்ன சொல்றாங்க உங்க மேடம்?”

“நீங்களே பாருங்க!”

“உங்களுக்குத் தெரியாதா? இதையெல்லாம் தெரிந்து கொள்ளத்தானே நீங்கள் அங்கே அமர்த்தப்பட்டிருக்கிறீர்கள்?”

சாமிநாதன் மெளனமாகத் தலை குனிந்து நின்று கொண்டிருந்தான்

பெரியவர் கடிதத்தைப் பிரித்தார். கடகடவென்று சிரித்தார்.

“இரண்டு மணி நேரத்தில் எத்தனை பேரை உன்னால் திரட்ட முடியும்?” என்று சாமிநாதனைப் பார்த்தார்

ஒன்றும் புரியாமல் சாமிநாதன் அவர் முகத்தைப் பார்த்தான்

“இன்று மாலைக்குள் இறுநூறு பேர் வித்யா வீட்டின் முன் கூட வேண்டும். தலைவி வா! தலைமை ஏற்க வா! என்று கோஷம் போட வேண்டும்.முடியுமா உன்னால்?”

சாமிநாதன் முகம் மலர்ந்தது. “முயற்சிக்கிறேன்” என்றான்.

“எத்தனை ஆட்கள் என்பது முக்கியமில்லை. ஆனால் அவர்கள் வரும் போது அங்கு பத்திரிகைக்காரர்கள் இருக்க வேண்டும். அது அவசியம்”

“புரிகிறது” என்று தலையாட்டினான் சாமிநாதன்

*

பெரியவர் வீட்டிற்குள் நுழைந்த போது வித்யா தொலைக்காட்சியில் ராமாயணம் பார்த்துக் கொண்டிருந்தாள்

“ராஜ்யத்தைத் துறக்க விரும்புகிறவர்கள் ராமாயணம் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் அரசியலில் ஜெயிக்க நீ பார்க்க வேண்டியது மகாபாரதம்” என்றார் பெரியவர்.

“இந்த உபதேசத்தைக் கட்சியைக் கலைக்க நினைக்கிறவர்கள் செய்வதுதான் விநோதம்” என்றாள் வித்யா

“நீ இப்படிச் செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றார் பெரியவர்,”தைரியமான பெண், தாக்குப் பிடித்து நிற்கிற வீராங்கனை, ஜான்சிராணி, வேலு நாச்சியார் என்றெல்லாம் நினைத்திருந்தேன்”

“நீங்கள் கட்சியைக் கலைப்பதாகச் சொல்லிவிட்டீர்கள்.அப்புறம் நான் ஆளில்லாத களத்தில் வாள் சுழற்றினால் கோமாளித்தனமாக இருக்காதா?”

பெரியவர் சிரித்தார். “அப்படி ஒருஅபிப்பிராயம் இருந்தால் நான் அவகாசம் தருகிறேன், கருத்துச் சொல்லுங்கள் என்று கேட்டிருக்க மாட்டேன். யாரையும் பார்க்காமல், எவரிடமும் கேட்காமல் பத்திரிகைக்கு அறிக்கை அனுப்பியிருப்பேன்.”

“அப்படியென்றால்?”

“இது ஒரு வைத்தியம். அதிர்ச்சி வைத்தியம்:”

“யூ மீன் ECT?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. மன அழுத்தம் அதிகமானவர்களுக்கு, மனநலம் குன்றி சோர்ந்து போனவர்களுக்கு, இப்படி ஒரு சிகிச்சை கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆங்கிலப் படம் ஒன்றைத் திருடி இங்கு ஒரு படத்திற்குக் கதை பண்ணினார்கள். அதில் கதாநாயகனுக்கு மனநிலை பிறழ்ந்து விடுகிறது. அப்போது இப்படி ஒரு சிகிச்சை கொடுப்பதாகக் காட்சி வைக்கலாம் என்று யாரோ சொன்னார்கள். நான் டாக்டர்களிடம் விசாரித்தேன். அரிதினும் அரிதாகத் தேவைப்பட்டால், மருந்துகள் பயனற்றுப் போய்விட்டால்,  கரண்ட் செலுத்தி அதிர்ச்சி வைத்தியம் செய்வதுண்டு என்றார்கள். அதுவரை கரண்டில் கை வைத்தால் உயிர் போய்விடும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்”

“சரி இப்போது யாருக்கு மன நலப் பிரச்சினை?”

“கட்சிக்குத்தான். சுயநலம் அதிகரித்துவிட்டது. சரியான முடிவெடுக்கத் தடுமாறுகிறார்கள்”

“யார், முருகய்யனா?”

“நான் எந்த ஒரு தனிநபரைப் பற்றியும் யோசிக்கவில்லை. ஒட்டு மொத்தமாக நினைத்துப் பார்த்தேன்.”

“அப்படி என்ன தவறாக முடிவெடுத்துவிட்டார்கள்? ஒருவேளை முருகய்யன் சொன்ன ஆளையே நிறுத்தியிருந்தால் ஜெயித்திருப்போமோ, என்னவோ?”

“நான் இந்த இடைத்தேர்தலை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு யோசிக்கவில்லை.கட்சிக்காரர்கள், நீ உள்பட, ஒர் அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும்.ஆனால் அதில் தவறிவிட்டீர்கள்”

“என்ன?”

:இது வழக்கமான அரசியல் கட்சி அல்ல. சித்தாந்தங்களால் நாம் ஜெயிப்பதில்லை. பத்திரிகைகளால் நாம் ஜெயிப்பதில்லை. அறிவு ஜீவிகளால் நாம் ஜெயிப்ப்பதில்லை. நாம் ஜெயிப்பதற்குக் காரணம் நாம். அதாவது தலைமை தலைவர்தான் இங்கு எல்லாம். மற்றவர்கள் எல்லாம் பூஜ்யம். தலைவர் என்ற ஒன்றுக்குப் பின்னால் பூஜ்யங்கள் அணிவகுத்தால் மதிப்புக் கூடும். தலைவரை முந்திக்கொண்டு பூஜ்யங்கள் நின்றால் மதிப்புக் குறையும்.”

“கணக்குப் பிரமாதம்!”

“நான் இரண்டாவதாகச் சொன்னதுதான் இந்த இடைத்தேர்தலில் நடந்தது. அவர்கள் உன்னை முந்திக் கொண்டு நிற்க நினைத்தார்கள்.மதிப்பிழந்தோம்”

“நானா? நீங்கள்தானே தலைவர்”

“ இப்போது நான்தான். ஆனால் இனி நீதான்.மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். எதிர்பார்க்கிறார்கள். நேற்று கூட உன் வீட்டின் முன் வந்து கோஷம் போட்டார்களாமே! பேப்பரில் செய்தி வந்திருக்கிறதே!”

“ஆமாம்.அது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால் அவர்களை நான் சந்தித்துப் பேசக் கூட இல்லை.”

“ஏன்?”

“சாமிநாதன் உங்களிடம் கடிதம் கொண்டு வந்து கொடுக்கவில்லை?”

பெரியவர் தனது ஜிப்பா பையிலிருந்து கடிதத்தை எடுத்தார்.நான்காக மடக்கினார். எட்டாகக் கிழித்தார். அந்த எட்டும் சுக்குச் சுக்காகக் கிழிக்கப்பட்டது. “இனிமேல் இது போல பைத்தியக்காரத்தனம் பண்ணாதே. எனக்குப் பின் நீதான்.”

“அதை நீங்கள் சொன்னால் போதுமா? கட்சி, உங்கள் பாஷையில் சொன்னால் பூஜ்யங்கள், ஏற்றுக் கொள்ள வேண்டாமா?

“மக்கள் ஏற்றுக் கொண்டால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். நீ மக்களை நெருங்கினால் அவர்கள் உன்னை ஏற்றுக் கொள்வார்கள். அதற்கு நீ பால்கனியிலிருந்து இறங்கிக் கீழே வர வேண்டும்”

“என்னை நடுத்தெருவில் நிறுத்த நினைக்கிறீர்கள்”

பெரியவர் சிரித்தார்.

“அப்படியே வைத்துக் கொள். எனக்கென்னவோ நம் கட்சி மக்களிடமிருந்து, அடித்தட்டு மக்களிடமிருந்து விலகி வந்து விட்டது என்று கொஞ்சகாலமாகத் தோன்றிக் கொண்டிருக்கிறது. எளியவர்களாகக் கட்சிக்கு வந்து சேர்ந்தவர்கள் இன்று பணக்காரர்களாகி விட்டார்கள். பணக்காரர்கள் மற்றவர்களை அண்டவிடுவதில்லை. அவர்களுக்கு எப்போதும் அடிமனதில் ஒரு பயம். ஈட்டியதை எல்லாம் இழந்துவிடுவோமோ என்று ஒரு பதட்டம்.ஒரு அநிச்சயம். நாம் இழந்து கொண்டிருக்கும் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்” என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் ஏதாவது செய்ய வேண்டும்”

பெரியவர் எழுந்து கொண்டார். வாசல் நிலை வரை போனவர் சட்டென்று நின்றார். திரும்பிப் பார்த்தார். “இன்னொரு முறை இது போல பைத்தியக்காரத்தனம் பண்ணாதே” என்றார்.

வித்யா பதிலேதும் சொல்லாமல் சிரித்தாள்

என்ன நினைத்தாரோ உள்ளே அலங்கார மேஜை மேல் சிரித்துக் கொண்டிருந்த வித்யா அம்மாவின் படத்தை எடுத்தார்.

“சத்தியம் பண்ணு. அம்மா மேல சத்தியம் பண்ணு. எந்த கஷ்டம் வந்தாலும், எந்த சோதனை வந்தாலும் கட்சியை விட்டுப் போக மாட்டேன் என்று சத்தியம் பண்ணு” என்றார்

வித்யா தயங்கினாள். பெரியவர் அவள் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். வித்யாவின் கை மெல்ல அவள் அம்மாவின் படத்தின் மேல் படிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.