அமெரிக்காவிலிருந்து மாலன்
அன்புள்ள தமிழன்,
‘நீங்கள் திரும்பி வரும் போது நீங்கள் புறப்பட்டுப் போனமாதிரி இருக்காது சென்னை விமான நிலையம்” என்று படங்கள் அனுப்பியிருந்தாய். பிரமாதமாகத்தான் இருக்கிறது. பிரதமரின் சென்னை விஜயமும் அமர்க்களமாக இருந்தது எனப் பத்திரிகைகளைப் படித்துத் தெரிந்து கொண்டேன்.
மோதியின் உரைகளில் அவர் ராமகிருஷ்ண மடத்தில் விவேகானந்தர் பற்றி ஆற்றிய உரையில் ஒரு வரி என்னை ஈர்த்தது. ராமகிருஷ்ண மடம் தமிழகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் முன்னர் தமிழ்நாடு விவேகானந்தர் மீது தாக்கம் ஏற்படுத்தியது என்ற அந்த வரி ஒரு பெரிய வரலாற்றைச் சூல் கொண்டு நிற்கிறது.
மோதி சொன்னது முற்றிலும் உண்மை. ராமகிருஷ்ண பரமஹம்சர் மறைவிற்குப் பின் இந்தியா முழுவதும் சுற்றிவிட்டு, விவேகானந்தர் 1892ம் ஆண்டு கன்னியாகுமரிக்கு வந்தார். அவர் மனதில் கேள்விகள் அலைமோதிக் கொண்டிருந்தன. இந்தியாவின் கடந்தகாலப் பெருமையும், நிகழ்கால வறுமையும் அவர் மனதில் வந்து போயின. எதிர்காலம் என்ன என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்து நின்றது. உட்கார்ந்து யோசித்தால், ஒருவேளை பதில் கிடைக்கலாம். குமரிக் கடலில் குதித்தார். நீந்தினார். இந்தியாவின் இறுதிப் புள்ளியாக இருந்த பாறை மீதேறி அமர்ந்தார். மூன்று பகல், மூன்று இரவுகள். தியானத்தில் ஆழ்ந்தார். குளிர் காற்றும் கொந்தளிக்கும் அலைகளும் அவரை அசைக்க முடியவில்லை.
1892ம் ஆண்டு டிசம்பர் 24 முதல் டிசம்பர் 26 வரை அவர் கன்னியாகுமரியில் மேற்கொண்ட தியானத்தில் தெளிவு பிறந்தது. இந்தியாவிற்குப் புத்துயிர் அளிக்கும் திட்டம் அவர் மனதில் உருவாயிற்று .இந்தியா உலகிற்கு அளிக்கும் என்று பாரதி உறுதிபட ஓங்கிச் சொன்னாரே, அந்த நன்முறை தென் கோடித் தமிழகத்தில்தான் உதயமாயிற்று. இமயமலையில் அல்ல, குமரி முனையில் உருவானது ஒரு புதிய யுகம்!
விவேகானந்தர் வரலாற்றை எழுதுபவர்கள் அமெரிக்காவைத் தொடாமல், எழுத முடியாது. அவரை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க பெரும் முயற்சி எடுத்தவர்கள் சென்னை இளைஞர்கள்.பயணத்தைத் திட்டமிடுவது, பயணத்திற்கான நிதி திரட்டுவது, அதற்கான உடைகள் தைப்பது, இவற்றையெல்லாம் செய்தவர்கள், அளசிங்கப் பெருமாள் (பச்சையப்பன் பள்ளி முதல்வர்), சிங்கார வேலு முதலியார் (கணித மேதை ராமானுஜத்தின் குரு) பிலிகிரி ஐயங்கார் (உயர் நீதி மன்ற வழக்கறிஞர்) ஜிஜி என்ற நரசிம்மாச்சாரியார், ராஜம் ஐயர் (தமிழின் முதல் நாவல்களில் ஒன்றான கமலாம்பாள் சரித்திரத்தை எழுதியவர்) போன்ற சென்னை இளைஞர்கள்.
பயணம் போவதற்கு முன் 100 முகவரிச் சீட்டுக்கள் (விசிட்டிங் கார்டுகள்) அச்சடிக்க அழைத்துப் போகிறார் அளசிங்கர். அப்போதுதான் தன்னுடைய பெயரை விவேகானந்தர் என்று அச்சிடச் சொல்கிறார் சுவாமி. அதுவரை அவரது பெயர் சச்சிதானந்தர்.
தமிழ்நாடு விவேகானந்தர் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்து இன்னொருநாள் பேசுவோம். நான் சொல்ல வந்தது விவேகானந்தர் அமெரிக்காவில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி.
இல்லை இல்லை, அந்தப் புகழ் பெற்ற சிகாகோ உரையைப் பற்றி இப்போது நான் சொல்லப் போவதில்லை.(அதைப் பற்றி நிறையப் பேர் நிறைய முறை பேசிவிட்டார்கள்)
இன்றைய தேதியில் அமெரிக்காவில் ஒன்றல்ல, இரண்டல்ல, 909 இந்து கோயில்கள் இருக்கின்றன. அனேகமாக எல்லாப் பெரிய நகரங்களிலும், ஏன் சிற்றூர்களிலும் கூட கோயில்கள் இருக்கின்றன.
இங்கு கோயில்கள் பல்கிப் பெருக முதல் விதை போட்டவர் விவேகானந்தர். 1893ல் அவர் சிகாகோவில் உரை நிகழ்த்திய பிறகு நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் வேதாந்த சங்கங்கள் (Vedanta societies) என்ற அமைப்புக்களை நிறுவினார். சான்பிரான்சிஸ்கோவில் உள்ள வேதாந்த சங்கம் 1905ல் அங்கே முதல் இந்துக் கோயிலைக் கட்டியது. ஆம் அமெரிக்காவில் நூறாண்டுக்கு முன்பாகவே இந்துக் கோயில் கட்டப்பட்டுவிட்டது. இன்றைக்கு இது பழைய கோயில் என்றழைக்கப்படுகிறது. இல்லையா பின்னே,117 ஆண்டுகள் ஆகி விட்டதே!
பின்னர் பல துறவிகள், பரமஹம்ச யோகானந்தர், சுவாமி பிரபுத்தபாதா, மகேஷ் யோகி, சுவாமி சச்சிதானந்தா போன்ற பலர், இந்தியாவின் ஆன்மீகத்தை இங்கு கொண்டு வந்தனர். ஆனால் இந்துக் கோயில்கள் பெருமளவில் வளர்ச்சி கண்டது 1965க்குப் பிறகுதான். லிண்டன் ஜான்சன் ஜனாதிபதியாக இருந்த போது குடியேற்ற விதிகளைத் தளர்த்தினார். இந்தியர்கள் பெருமளவில் இங்கு வரத் தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் கடவுள்களையும் இங்கு கொண்டு வந்தார்கள்.
அந்தக் கடவுளார்கள் ஆரம்ப காலங்களில் அந்த இந்தியர்களது வீடுகளில் ஒரு மூலையிலோ, அலமாரிக்குள்ளோ ஒண்டுக் குடித்தனம் இருந்தார்கள். வண்ணத்தில் அச்சிடப்பட்ட படம் தான் மூலவர். அதற்கு பூப்போடலாம்.பூஜை செய்யலாம். அபிஷேகம் செய்ய முடியாது.
இங்கு வந்த இந்தியர்கள் மொழிவாரியாக சங்கங்கள் அமைத்தார்கள். திருநெல்வேலித் தமிழன் ஒருவனாக இருந்தால் லாலா மிட்டாய்க் கடை வைப்பான். இரண்டு பேராக இருந்தால் யாத்திரை போவான், மூன்று பேர் சேர்ந்தால் தமிழ்ச் சங்கம் வைப்பான் என்று முன் காலத்தில் கேலி பேசினார்கள். தமிழனை மட்டும் கிண்டலடிப்பானேன். குஜராத்திகள், மலையாளிகள், வங்காளிகள், தெலுங்கர்கள் எல்லோரும்தான் சங்கம் வைத்தார்கள். பண்டிகை நாளில் கூடி கலை நிகழ்ச்சிகள் நடத்துவது இந்த சங்கங்களின் செயல்பாடு. பின் அதன் நீட்சியாக கோவில் கட்டும் சங்கங்கள் தோன்றின. இன்று 909 கோவில்கள் தோன்றியிருக்கின்றன என்றால் அது இந்த சங்கங்களின் முனைப்பு முயற்சி உழைப்பு இவற்றால்தான்
இந்த முனைப்பு, முயற்சி, உழைப்பு இவற்றால் எழுந்து நிற்கும் கோவில் ஒன்றிற்கு அண்மையில் போயிருந்தேன். நியூஜெர்சியின் புற நகரான மார்கன்வில் என்ற இடத்தில் பிரம்மாண்டாக எழுந்து நிற்கிறது கோயில் தமிழக கோயில்களைப் போலப் பெரிய கோபுரம் தொலைவில் வரும் போதே கண்ணில் படுகிறது. கோவில் எதிரே நெடிதுயர்ந்து நிற்கிறது ஒரு கொடிமரம். ஏராளமான படிகள் ஏறிப் போனால் கோயிலின் முன்வாசலை அடையலாம். ஆனால் அருகில் உள்ள சிறுவாசல் வழியே போனால் உள்ளே ஒரு லிஃப்ட் இருக்கிறது. (அமெரிக்காவில் ‘லிஃப்ட்’ கிடையாது. அதற்கு இங்கு எலிவேட்டர் என்று பெயர்)
கோவிலின் பெயர்தான் குருவாயூரப்பன் கோயில் அவர்தான் பிரதானமாக குடி கொண்டிருக்கிறார். ஆனால் சிவன், வெங்கடாசலபதி, சத்யநாராயணா, லட்சுமி நரசிம்மர், விநாயகர், முருகன், தட்சிணா மூர்த்தி, ஹயக்ரீவர், அனுமன், மகாலட்சுமி, சரஸ்வதி, துர்கை, காமாக்ஷி, நவகிரகங்கள் என சகல தெய்வங்களுக்கும் சந்நிதிகள் உண்டு. அர்ச்சனை உண்டு. அலங்காரம் உண்டு. நைவேத்தியம் உண்டு.
விழாக்காலங்களில் அவர்கள் ஊர்வலம் வர வாகனங்கள் கூட உண்டு. கருட வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் எல்லாம் தங்க முலாம் பூசிக் கொண்டு மஞ்சள் ஒளியில் தகதகவென்று ஜொலிக்கின்றன. அம்மன்கள் பட்டுடுத்திக் காட்சி அளிக்கிறார்கள். தரை முழுவதும், இரண்டாயிரம் சதுர அடி இருக்கும், கிரனைட் சுவர்களிலும் விதானத்திலும் தசாவதாரத்தைச் சித்தரிக்கும் சிற்பங்கள். குருவாயூரில் இருப்பதைப் போன்றே இங்கும் துலாபாரம் கொடுக்கலாம். அதற்கான தராசுகளையும் பார்த்தேன்
அர்ச்சகர்கள் நம்முரைப் போல கச்சம் அணிந்து, சட்டையில்லா மார்பை மேல் துண்டு கொண்டு போர்த்திக் கொண்டு பூஜை செய்கிறார்கள். ஆனால் காலில் சாக்ஸ் அணிந்திருந்தார்கள். (கிரானைட் தரை+ குளிர் சாமி!) நான் போன போயிருந்த போது பத்துப் பதினைந்து பெண்கள் துர்கையின் முன் அமர்ந்து (சிலர் முதுமையின் காரணமாக நாற்காலிகளில் ) மகிஷாசாசுர மர்த்தனி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சூழல் அரைக் கணம் நம்மூர் கோயிலுக்குள் நுழைந்து விட்டதைப் போல பிரமை தந்தது. பிரமைதான். நம்மூர் கோயில்கள் இத்தனை சுத்தமாக இராதே!
தெய்வங்களுக்கு மட்டுமின்றி மனிதனாகப் பிறந்து தெய்வ நிலையை அடைந்த மகான்களுக்கும் கோயில்கள் அமெரிக்காவில் பெருகி வருகின்றன. அமெரிக்காவில் 83 சாய்பாபா கோவில்கள் இருப்பதாக ஒரு கணக்குச் சொல்கிறது.அநேகமாக எல்லாப் பெருநகரங்களின் அருகிலும் ஒரு சாய்பாபா கோயில் இருக்கிறது. கிடைத்த இடங்களை வழிபாட்டுத் தலங்களாக பக்தர்கள் மாற்றி வருகிறார்கள். ஃபுளோரிடாவில் கைவிடப்பட்ட ஒரு களஞ்சியத்தை சாய் கோயிலாக மாற்றி இருக்கிறார்கள்..
இனி வரும் நாள்களில் இந்தக் கோயில்கள் பெருகும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற வாசகத்தை அமெரிக்க இந்தியர்கள் மெய்ப்பிப்பார்கள் என்றே தோன்றுகிறது.
ராணி 23.04.2023