கதை என்ற சொல்லாடல் தமிழில் புனைவு என்பதாகவே காலங்காலமாக வழங்கப்பட்டு வருகிறது. ‘பிள்ளைக் கதைகள் பேசுகிறாய்’ என்ற பாரதியின் கவி மொழியாகட்டும், “யார் கிட்ட கதை விடுகிற” என்று காவலர்கள் மிரட்டும் அதிகார மொழியாகட்டும் கதை என்பது புனைவுதான். ‘பொருள் மரபிலாப் பொய்மொழி என்ற புறநானுற்று வாக்கியத்தின் ஒற்றைச் சொல்தான் புனைவு. வியப்பளிப்பது என்னவென்றால் சங்ககாலத்துச் சொல்லான ‘பொய்மொழி’யும் புனைவைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Fiction என்பதும் ஒரே பொருளைக் குறிப்பது. Fictitious என்ற சொல்லுக்கு Created, Not genuine, False எனப் பல சொற்களில் அகராதிகள் பொருள் சொல்லும். இரு வேறு கலாச்சாரங்களிலும் ஒரே பொருளில் புனைவுக்கான சொற்கள் பயில்வது ஒன்றைத் துலக்கமாகச் சொல்கின்றன. உலகெங்கும் புனைவு என்பது பொய்மொழி
இந்தத் தாளடியும் ஒரு புனைவுதான். இன்னும் சொல்லப்போனால் மரபிலாப் பொய்மொழி. அதாவது வழக்கமாக நாம் அறிந்த கதை சொல்லல் மரபிலிருந்து விலகி நிற்பது. இந்தப் புனைவின் வசீகரங்களில் அதுவுமொன்று. நான் சிறு பிள்ளையாக இருந்த போது பொழுதைக் கொல்ல நான் ஒரு கண்ணாடிக் குவளையில் நீரை எடுத்துக் கொண்டு, அதில் என் பேனாவின் கழுத்தைத் திருகி ஒரு சொட்டு, ஒரே ஒரு சொட்டு மசியை அதில் சிந்த வைப்பது. (அப்போது ஊற்றுப் பேனாக்கள் பயன்பாட்டில் இருந்தன) அந்த மசித் துளி நீரில் புகை போலத் தன்னை விசிறிக் கொண்டு இறங்கும் கோலம் ஒரு கவிதைக் கணம். வியப்பு என்னவென்றால் எல்லாத் தருணங்களிலும் ஒன்றே போல அந்தக் கோலமிராது. ஒவ்வொன்றும் கண நேர ஓவியம்.
தாளடி என்ற இந்தப் புனைவின் மொழியும் அப்படித்தான். சொற்சித்திரங்களை வரையும் கவிதை மொழி, அரசியல் உரை, திருமுறையிலிருந்து மேற்கோள், மக்களின் பேச்சு மொழி, கதாசிரியனின் விவரிப்பு மொழி எனப் பல இழைகள் இந்தப் புதினத்தில் விரவிக் கிடக்கின்றன.
எந்தப் புனைவும் நிஜங்களின் எதிரொளிதான். ராஜாஜி சுதந்திராக் கட்சியைத் தொடங்கிய போது நேரு அதை வெறும் நிழல் என்று கேலி செய்தார். நிஜம் என்ற ஒன்றில்லாமல் நிழல் என்பதில்லை (There is no shadow without substance) என அதற்கு பதிலடி கொடுத்தார் ராஜாஜி. அதுபோலப் புனைவுகள் நிஜத்திலிருந்துதான் கிளைக்கின்றன. நிஜத்தின் உக்கிரத்தை அப்படியே எதிர்கொள்ள இயலாமை, அல்லது, நீர் கொதித்து அடங்கிய பாண்டத்தைத் துணி கொண்டு பற்றுவது போல நிஜத்தை மனதிலிருந்து இறக்கி வைக்க, அந்த நிஜம் உருக் கொண்ட காரணிகள், அல்லது அதைச் செலுத்திய சக்திகள் அவற்றை நினைவு கூர, அடுத்த சந்ததிக்கு எடுத்துச் சொல்ல, அல்லது இவை ஏதுமேயில்லாமல் வரலாறு தரும் கிறக்கத்தை நாடி, ஏதோ ஒன்று நிஜத்திலிருந்து புனைவு கிளைக்கக் காரணமாகிறது.
“இந்தக் கதை கதை சொல்வதற்காக எழுதப்படவில்லை. சில தியாகங்களை நினைவூட்டி, கேள்விகளை எழுப்பி, உங்களின் பார்வைக்கு உங்கள் வாழ்வியலையே முன் வைக்கும் சிறு முயற்சிதான்” என்கிறார் சீனிவாசன்
இந்தப் புனைவு 1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் கீழ் வெண்மணியில் நாற்பத்தி நான்கு பேர் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரத்தின் நினைவில் கிளைத்தது. அந்த நாற்பத்து நான்கு பேரில் 19 பேர் குழந்தைகள், 20 பேர் பெண்கள், முதியவர் ஒருவர். குழந்தைகளில் ஒரு வயதுக் குழந்தைகள், மூன்று வயது ஐந்து வயதுக் குழந்தைகள், கூட இருந்தார்கள். பெண்களில் கர்ப்பிணிப் பெண்கள் உண்டு. எதிர்த்துப் போராட வலுவற்றவர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். உண்மையில் அவர்கள் வன்முறைக்கு அஞ்சி எட்டுக்கு ஐந்து இருந்த ஒரு குடிசையில் தஞ்சம் அடைந்தவர்கள்.
சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் ஜாலியன் வாலா பாக் கீழ்வெண்மணி. அதற்கு முன்பும் அதற்குப் பின்னரும் இத்தனை பெரிய படுகொலை நிகழ்ந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் நடந்த ஒரே வர்க்கப் போராட்டம் அதுதான். தமிழகத்தில் ஜாதி மோதல்கள் நடந்திருக்கின்றன. மத மோதல்கள் நடந்திருக்கின்றன. ஆனால் வர்க்க ரீதியாக மக்கள் எதிர் கொண்ட கொடூரம் கீழ்வெண்மணிதான். நிலச்சுவான்தார்களில், நாயுடுக்கள், வாண்டையார்கள், பிள்ளைமார்கள், பிராமணர்கள், செட்டியார்கள், தேவர்கள் என எல்லா ஜாதியினரும் இருந்தனர். இஸ்லாமியர்கள் கூட இருந்தனர் என இந்தப் படைப்புப் பதிவு செய்கிறது. எனவே இது சாதிய மோதல் அல்ல (காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை இதை சாதிய மோதல் எனப் பதிவு செய்திருந்தது)
சுதந்திரத்தோடு தோன்றிய நம்பிக்கைகள், பொற்காலக் கனவுகள் பொய்த்துப் போனதையடுத்து, நாடு முழுவதும் 1960கள் தொடங்கி 70கள் வரை அரசியல் ஒரு கொதிநிலையில் இருந்தது. தொழில்மயமாகாத, நகர்மயமாகாத இந்திய சமூகத்தில் இந்தக் கொதிப்பின் முதல் குரல் தேவை நிலச்சீர்திருத்தம் என்று எழுந்தது. 1938லிருந்தே இடதுசாரிகள் இந்தக் குரலை எழுப்பி வந்திருந்த போதிலும், விடுதலைப் போராட்ட முனைப்பில் இது பின்னால் தள்ளப்பட்டிருந்தது. சுதந்திரத்திற்குப் பின் அது வலுப்பெற்றது.
இந்தக் குரல், அன்று தமிழ்நாட்டில் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் உரத்து ஒலித்தது. அதற்கான காரணங்கள் பல. அவற்றுள் முக்கியமானது தஞ்சை மாவட்டம் என்பது ஆகப் பெரிய நிலவுடமைச் சமூகம். சோழர்கள் காலத்திலிருந்து பல தலைமுறைகளாகத் தொடர்ந்து நிலவுடமைச் சமூக அமைப்பு கெட்டி தட்டிப் போயிருந்தது. மாவட்டம் முழுவதும் காவிரி பாய்ந்ததன் காரணமாக முப்போக விளைச்சல் காணும் பகுதியாக இருந்தது. நெல் பயிரிடாத காலங்களில் உளுந்து போன்ற பணப்பயிர்கள் பயிரிடுவதும் வழக்கமாக இருந்தது. ஆனால் நூற்றுக்கணகான வேலி நிலங்கள் (வேலி: அப்போது தஞ்சையில் நடைமுறையில் இருந்த நில அளவை) சில குடும்பங்களின் கையில் இருந்தன. தனியாரிடம் இருந்ததைப் போல, சோழர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட பல ஆலயங்களின் வசமும் ஏராளமான நிலங்கள் இருந்தன
பயிர்த் தொழில் காரணமாகப் பண்ணைக் கூலிகள் முறை வழக்கத்தில் இருந்தது. வேளாண் தொழிலையன்றி வேறு எதற்கும் அவர்கள் பழக்கப்படுத்தப்படவில்லை. கூலி ரொக்கமாக அல்லாமல், பெரும்பாலும் நெல்லாகவே அளிக்கப்பட்டது. அதனால் அடித்தள் மக்களின் வாழ்வாதாரம் நிலம் சார்ந்தே இருந்தது. இந்த நிலையைப் பயன்படுத்தி அவர்களை அச்சுறுத்தி அடிமைகளாக வைத்திருக்கும் நிலையை நிலச்சுவான்தாரர்கள் பின்பற்றி வந்தார்கள். விசாலமான கூடங்கள் கொண்ட நிலச்சுவான்தார் வீடுகளில் காந்தி நேரு படங்களுக்கு நடுவில் இரட்டைச் சவுக்குகளையும் காணலாம்.
விடுதலைக்கு முன்பே உழவோருக்கே நிலம் என்ற முழக்கத்தை முன் வைத்து மணியம்மாளும், சீனீவாசராவும் தஞ்சைப் பகுதியில் விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டிக் கிராமங்களில் சங்கங்கள் அமைத்திருந்தனர். பல கிராமங்களில் செங்கொடிகள் பறந்தன.. பின்னர்,1964ல் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு பலவீனமடைந்திருந்த போதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருந்த இளைஞர்கள் சிலர், நிலச்சுவான்தாரர்களைக் கொலை செய்து புரட்சியை முன்னெடுக்கும் அழித்தொழிப்பை ஒரு கொள்கையாகக் கொண்ட நக்ஸலைட் இயக்கத்திலும் இணைந்து கொண்டிருந்தனர். (நாகை தாலுகா கம்யூனிஸ்ட் கட்சியினரைப் பற்றி “அவர்கள் பகலில் கம்யூனிஸ்ட்கள், இரவில் நக்சல்பாரிகள்” என்று அண்ணா முதலமைச்சராக இருந்த போது ஒருமுறை சட்டமன்றத்தில் குறிப்பிட்டார்) .பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் ஆதீனங்களின் வசம் பெருமளவு நிலம் இருந்ததால் நிலவுடமை அமைப்பை மாற்றுவதில் ஆர்வம் கொண்டார்கள். ஆனால் பெரியார் அப்போது காமராஜரையும், காமராஜரது காங்கிரஸ் நிலச்சுவான்தாரர்களையும் ஆதரித்ததால், அந்த இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கியோ, பெரியாரிடம் முரண்பட்டுத் தொடங்கப்பட்டிருந்த திமுகவை நோக்கியோ நகரத் தொடங்கியிருந்தனர். இன்னொருபுறம், வினோபாவேயால் முன்னெடுக்கப்பட்டு ஜெயப்பிரகாஷ் நாராயணனால் வழிநடத்தப்பட்ட சர்வோதய இயக்கமும் அங்கு அறிமுகமாகியிருந்தது
சுருக்கமாகச் சொன்னால் தஞ்சைப் பகுதியில் அரசியல் நடவடிக்கைகள் 60கள் முதல் 70கள் வரை முனைப்பாகவே இருந்தன. அவற்றின் மையப்புள்ளியாகக் கீழ்தஞ்சை திகழ்ந்தது
1961ல் தமிழகத்தில் நில உச்சவரம்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது ஏட்டிலேயே இருந்தது. சட்டத்தில் இருந்த ஓட்டைகள், அளித்திருந்த விதி விலக்குகள் இவற்றைப் பயன்படுத்தி நிலச் சுவான்தார்கள் தங்கள் உடமைகளைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். அறக்கட்டளைகள் துவக்கி அதன் பேரில் நிலங்களைப் பதிவு செய்து கொண்டார்கள். (இந்த முறையைப் பின்பற்றி, வலிவலம் தேசிகர் 600.5 ஏக்கர் நிலத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக 2003ல் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டில் நிலச் சீர்திருத்தம் முடிவடையாத கடமை என்ற சிவப்பிரகாசத்தின் ஆய்வு அறிக்கை கூறுகிறது.) 1967 வரை ஆட்சியிலிருந்த காங்கிரசோ, அதன் பின் ஆட்சிக்கு வந்த திமுகவோ இதனை செப்பம் செய்யவில்லை என்பது மட்டுமல்ல, அந்த நிலை தொடர அனுமதித்தன.
பல்வேறு சமூக- அரசியல் விசைகள் முறுக்கேற்றிய சூழலில் இருந்த முரண்கள் கூர்மை பெற்றதின் உச்சநிலை வெளிப்பாடுதான் கீழ்வெண்மணி. இவை யாவற்றையும் சீனிவாசன் இந்தத் ‘தாளடி’யில் வெவ்வேறு பாத்திரங்கள் மூலம் காட்சிப்படுத்தி நினைவுகூர்கிறார். பல பாத்திரங்களுக்கு அவர்களது இயற்பெயர்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ராமய்யா, கோபாலகிருஷ்ண நாயுடு, கோவிந்தராஜ நாயுடு, பாப்பாத்தி, வடிவேலு இவர்களெல்லாம் அந்தக் களத்தில் ரத்தமும் சதையுமாக நடமாடிய மனிதர்கள். இதன் நோக்கம் புனைவை மங்கச் செய்து நிஜத்தை முன்நிலைப்படுத்துவதாக இருக்கலாம். ஏனெனில் நாவலின் நோக்கம் நினைவு கூர்தல்
நினைவு கூர்தலுக்கான அவசியத்தைக் காலம் ஏற்படுத்துகிறது. கீழ் வெண்மணிச் சம்பவம் நடந்து ஐம்பதாண்டுகளுக்கு மேலாகி விட்டன ஒரு தலைமுறை அதன் உக்கிரத்தை அறியமாட்டார்கள். சிறிய அளவில் நினைவு நாள் கொண்டாடுவதையன்றி பெரிய தொடர் நிகழ்வுகள் இல்லை என்பதால் ஊடகங்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. அரசியல் கட்சிகளுக்குள்ளேயே இதைக் குறித்த விவாதங்கள் இல்லை..” கீழ்வெண்மணினா என்ன?” என்று தன்னிடம் தொழிற்சங்க இயக்கத்தில் இருக்கும் சிலரே கேட்டார்கள் என இடதுசாரிச் செயற்பாட்டாளர் தியாகு ஒரு இடத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால் அந்தச் சம்பவத்தை நினைவு கூர்வதுடன் நிறுத்தி விடுவதில் பயனில்லை.
கீழ்வெண்மணியை நினைவு கூர்கிறவர்கள் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டுக் கொண்டாலன்றி முன்நகர்வுகள் சாத்தியமில்லை. அந்தக் கேள்வி: கீழ்வெண்மணி இன்று எப்படியிருக்கிறது?
எந்தக் கூலிப் பிரசினை பண்ணையாட்கள் போராட்டத்தின் முகமாக இருந்ததோ அது இன்று அனேகமாக கூர் மழுங்கி விட்டது. இயந்திரங்கள் வயலுக்குள் இறங்கி விட்டன. பண்ணையாட்கள் வெளியேறிவிட்டார்கள் இந்தப் புனைவின் தொடக்கத்தில் டிராக்டர் ஓட்டும் தொழிலாளியாக அறிமுகம் ஆகும் அன்பழகனுக்கும் அவன் மனைவி தாமரைக்கும் உறவு முறிய இயந்திரத்தின் வருகையே காரணமாக இருக்கிறது. “மக்களுக்கு எதிரா இந்த மிஷின் இருக்கு அப்ப்டீனு சொல்றாளுவோ. அரிசி மில்லுக்கு மட்டும் தவுடள்ளப் போறாளுவளே, கேட்டா எட்டூரு நடவாளு வவுத்துல அடிக்கிற பொழைப்பை நான் பாக்குறனாம்” எனப் பொருமுகிறான் அன்பழகன்
ஆறு வறண்டதால் முப்போகம் என்பது வரலாறாகிவிட்டது. காமதேனுவின் மடி வற்றிவிட்டதால் நிலத்தை முன்னிறுத்திய பிணக்குகள் குறைந்து விட்டன. கல்வி பெருகியிருக்கிறது. ஆனால் கல்விச்சாலைகளிலிருந்து மாணவர்கள் அரசியலில் களத்தில் குதிப்பது குறைந்திருக்கிறது. அவர்கள் கிராமங்களிலிருந்து வெளியேறி வேலை நாடி நகரங்களுக்குப் போய்விட்டார்கள். அரசியல் கடசிகள் பொய்த்துவிட்டன. சர்வோதய இயக்கம் அனேகமாகத் தடம் இன்றி மறைந்து விட்டது. அழித்தொழிக்கும் தீவிரவாதிகள் அவிந்துவிட்டனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் அரசியலில் தங்களை பலி கொடுத்துக் கொண்டு விட்டார்கள். அவர்களின் கூட்டுப் பேர உரிமை என்பது கூட்டணிக் கட்சிகளிடம் பிரச்சாரத்திற்குப் பணம் வாங்கும் போது மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறது. சாட்டைகளும் சாணிப்பால்களும் காணாமல் போய்விட்டன. சாட்டையடி வாங்கியவர்கள் சட்டமன்ற உறுப்பினராகி தங்களுக்குச் சமமாக அமர்ந்து பேச முடியும் என்பதை ஜனநாயகம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. திராவிட இயக்கங்கள் புதிய ஆண்டைகளை உருவாக்கியிருக்கின்றன. அந்த ஆண்டைகளும் பரம்பரை ஆண்டைகளாக ஆகிவிட்டார்கள். அரசியல் என்பது பங்காளிக் காய்ச்சலாகக் குறுகி இருக்கிறது. தொலைக்காட்சிகளின் பெருக்கம், படிப்பகம், பொதுக்கூட்டம் என்ற பரப்புரைச் சாதனங்களைத் தேவையற்றதாக்கியிருக்கிறது. இதனால் அரசியல் என்பது சமூகச் செயல்பாடு என்பதிலிருந்து தனிமனிதச் செயல்பாடாக மாற்றம் கண்டிருக்கிறது.
ஆனால் இந்தத் தலைகீழ் மாற்றம் அல்லது ஏமாற்றம் வாசிப்பவனின் மனதில் அனல் மூட்டுவதாக இந்த நாவலில் வீர்யம் கொள்ளவில்லை.. குறைந்தபட்சம் எண்ணக் குளத்தில் கல்லெறிந்து வட்டச் சிற்றலைகளை எழுப்புவதாகக் கூடக் கூட விரிவு கொள்ளவில்லை. புனைவின் இறுதிப்பகுதியில், கதை முடிக்கும் அவசரத்தில், ஓர் உரையாடலில் ஒரு பத்தி அளவிற்கு மட்டுமே இடம் பிடிக்கிறது. அதில் “இரண்டு முதலமைச்சர்களும் நம்ம ஆளுங்கதான்” என்று ஒரு தோழர் கருணாநிதியையும் எம்.ஜி. ஆரையும் இடதுசாரிகளாகச் சித்தரிப்பதையும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு அண்ணா திமுக வலதுசாரிகள் கையில் போய்விட்டது என்ற வரிகள் நகைச்சுவையாக அமைந்து அந்தப் பத்தியில் வெளிப்பட்டிருக்க வேண்டிய உக்கிரத்தைக் குறுக்குகின்றன. வாரத்திற்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்களை ஆடுகளின் சொந்தக்காரர்கள் ஆக்கியதும், சுய உதவிக் குழுகள் மூலம் பெண்கள் கையில் காசு புழங்கச் செய்தது, சைக்கிள்கள் கொடுத்து அவர்களின் நகர்வுகளை லகுவாக்கியது இவற்றின் மூலம் ஆண்களைச் சார்ந்திராது பெண்களை அதிகாரப்படுத்தியது எம்.ஜி.ஆருக்குப் பின் வந்த ‘வலதுசாரி’ ஆட்சிதான். ஆனால் ஆளுக்கு இலவசமாக ஒரு ஏக்கர் நிலம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி வெற்றுரையாக நிற்கிறது.
உண்மையில் கீழ்வெண்மணிக்குப் பிந்தைய ஐம்பதாண்டுகால மாற்றம் விரிவாகவும் கூர்மையாகவும் எழுதப்பட வேண்டிய ஒன்று. நந்தன் கோபாலகிருஷ்ண நாயுடுவைக் கொலை செய்வதிலிருந்து தொடங்கி அதை எழுதலாம். தாளடி முதல் புத்தகம் என்று சொல்கிறார் சீனிவாசன். எனவே அவர் அதையும் எழுதுவார் என்றே நம்புகிறேன். காத்திருக்கிறேன்
1857ல் எழுதப்பட்டு 1879ல் வெளியான பிரதாப முதலியார் சரித்திரத்தைத் தமிழின் முதல் நாவல் எனக் கொண்டால் தமிழ் புதினம் நூற்றைம்பது ஆண்டுகளைக் கடந்து விட்டது. இந்த நூற்றைமபது ஆண்டுகளில் ஏராளமாக எழுதிக் குவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ்ப் புனைவுகளில் வகைப்பாடுகள் குறைவு. அமெரிக்க இலக்கியத்தில் தொடர்ந்து பல வகைகள் முயற்சிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று புதினமல்லாத புனைவு.(non –fiction fiction). நார்மன் மெய்லர், டாம் உல்ஃப் போன்றவர்கள் சில அந்த வகைப் படைப்புக்களைத் தந்திருக்கிறார்கள். தமிழில் அந்த முயற்சிகள் மிக அரிதாகவே நிகழ்ந்திருக்கின்றன.
சீனிவாசன் நடராஜனின் இந்த நாவல் ஒரு அரிய முன்னெடுப்பு. வடிவத்தில் ஒரு புதிய வகைப்பாட்டை வெற்றிகரமாக முயற்சித்துப் பார்த்திருக்கிறார். ஒரு வசீகரமான கதை மொழி வாய்த்திருக்கிறது. உறுத்தாத அங்கதம் ஆங்காங்கு இழையோடுகிறது. தகவல்களையும் தரவுகளையும் தேடிக் கண்டடையும் முனைப்பும் அறிந்தவற்றையெல்லாம் கொட்டிவிடாமல் அவற்றை பொருத்தமாகவும் அளவாகவும் பயன்படுத்தும் பொறுப்புணர்வும் இருக்கிறது.. இவையெல்லாம் இந்தப் படைப்பை விகசிக்கச் செய்கின்றன. நல்வாழ்த்துகள்!
‘பாரதி’ மாலன்
சென்னை -41
சீனிவாசன் நடராஜன் எழுதிய தாளடி என்ற நூலுக்கு நான் எழுதிய முன்னுரை