குதிரை படம் ஒன்றை வரையச் சொன்னார் ஆசிரியர்.வகுப்பில் இருந்த மாணவர்கள் மும்முரமாக வரைய இறங்கினார்கள்.ஒரு மாணவன் மட்டும் கையைக் கட்டிக் கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தான். ஆசிரியர், “என்னப்பா வரையலையா?” என்று கேட்டார். வரைஞ்சாச்சு சார் என்றான். ஆசிரியர் அவனது தாளைப் பார்த்தார். அது காலியாக இருந்தது. “குதிரை எங்கே?” என்றார் ஆசிரியர். “புல்லு தின்னுது சார்!” என்றான். “அப்படியா, புல்லு எங்கே?” என்றார் ஆசிரியர். “குதிரை தின்னுடுச்சி சார்” என்றான். ஆசிரியர் ஒரு கணம் அசந்து போனார். “சரி, குதிரை எங்கே?” என்றார். மாணவன் சளைக்காமல்,” சார் நீங்க வந்த போது குதிரை புல்லு தின்னுட்டிருந்தது. இப்போ அது தின்னுட்டதால நகர்ந்து போயிட்டு” என்றான், கெட்டிக்காரத்தனமாக.
இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்ல ஒன்று கற்பனை வேண்டும். அது இருந்தது என்று விடாமல் சாதிக்க, கெட்டிக்காரத்தனம் வேண்டும். நம் தொலைக்காட்சி ஊடகங்கள் கெட்டிக்காரத்தனம் வாய்ந்தவை
பல உதாரணங்கள் உண்டு. சமீபத்திய உதாரணம் துக்ளக் 50ஆவது ஆண்டுவிழாவில் ரஜனியின் பேச்சை அவை கையாண்ட விதம்.ரஜனி அந்த விழாவில் 12 முதல் 15 நிமிடங்கள் பேசினார். பல செய்திகளைச் சொன்னார். நம்மை எல்லாவற்றிற்கும் அடிப்படை சோ சாரின் பெருமைகளை நினைவூட்டுவது.
எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை சொன்னார்.”வாசிக்கிறவர்கள் மனதில் என்ன இருக்கிறதோ, அதை நீ சொன்னால், அவர்களுக்கு அதைச் சொல்ல வாய்ப்பு இல்லை என்பதால், அவர்கள் உன்னைக் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். நீ பிரபலமாகிவிடுவாய்” .ஆங்கிலத்தில் இதை பிளேயிங் டு தி காலரி என்பார்கள். ஜெயிப்பதற்கு சில பந்துகளே இருக்கும்போது, இவர் சிக்ஸர் அடிக்க மாட்டாரா என்று பார்வையாளர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது ஆட்டக்காரர் பவுண்டரி அடித்தாலும் அரங்கமே எழுந்து நின்று கைதட்டுமே, அது ஓர் உதாரணம்.
ஆனால் எதிர்ப்புக்களுக்கு நடுவே வளர்ந்தவர், இயங்கியவர் சோ. அவரை முடக்க நினைத்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அதிகாரம் கையில் வைத்திருந்தவர்கள். ஆள் பலம் கொண்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஊடக பலம் கொண்டவர்கள். வாதங்களை வாதங்களால் வெல்ல முடியாமல், தனிப்பட்ட தாக்குதலுக்கு, அதிலும் ஜாதியைச் சொல்லித் தாக்க வெட்கப்படாதவர்கள். அவர்களது எதிர்ப்புக்கு அஞ்சாமல், கைதட்டலுக்காகப் பேசவொ எழுதவோ செய்யாமல், தன் மனதுக்குச் சரி என்று தோன்றியதைப் பகிரங்கமாகச் சொல்லத் தயங்காதவர் சோ.
அதைத்தான் உதாரணங்களோடு எடுத்துக்காட்டிப் பேசினார் ரஜனி. அவருக்கு ஊடகங்கள் சித்தரிப்பது போல், பெரியாரையோ வேறு எவரையுமோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கும் நோக்கமோ எண்ணமோ இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவர் முதலில் எடுத்துக் கொண்ட உதாரணம், காங்கிரஸ்காரரான பக்தவத்சலம். நாடக உலகில் சோ பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த போது, அன்று முதல்வராக இருந்த பக்தவத்சலம் அவரது சம்பவாமி யுகே, யுகே நாடகத்தைத் தடை செய்ததையும் சோ அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடி வென்றதையும் சொன்னார். (இன்றுவரை காங்கிரஸ்காரர்கள் யாரும் இதற்காக ரஜனியை விமர்சித்து, தாக்கி, மிரட்டி கருத்து ஏதும் சொல்லவில்லை என்பது கவனிக்கத் தக்கது)
பின் சேலத்தில் தி.க. நடத்திய மாநாட்டுச் செய்திகளையும் படங்களையும் மற்ற இதழ்கள் வெளியிடத் தயங்கியபோது துக்ளக் வெளியிட்டதையும், அந்த இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் உதாரணமாகச் சுட்டிக் காட்டினார்.
இதைத்தான், ராமர் படத்தை பெரியார் செருப்பால் அடித்தார் என்று ரஜனி பேசியதாகச் சொல்லி ஊடகங்கள் விவாதங்கள் நடத்தின. பெரியார் மீது வீசப்பட்ட செருப்பு, அவர் வந்த வாகனத்திற்குப் பின்னால் இருந்த வாகனத்தில் விழுந்தது, அதைக் கொண்டு பெரியாரின் தொண்டர் ராமர் படத்தைச் செருப்பால் அடித்ததாகத் தற்காப்பு விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.
ஆனால்-
பெரியார் ராமரைச் செருப்பால் அடித்தார் என்று ரஜனி பேசவே இல்லை!
சொல்லாத ஒன்றை வைத்துக் கொண்டு இத்தனை கும்மி!
நான் அந்தக் கூட்டத்திற்குப் போயிருந்தேன்.அதன் வீடியோவையும் பார்த்தேன். உண்மையில் ரஜனி சொன்னது என்ன? இதோ, அவரது வார்த்தைகளையே தருகிறேன்
“நைன்டீன் செவன்டி ஒன்ல, சேலம்ல, பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்தர மூர்த்தி-சீதை உடையில்லாம, செருப்புமாலை போட்டு ஒரு ஊர்வலம் போனாங்க” (சந்தேகம் இருப்பவர்கள் வீடியோவைப் போட்டுக் கேட்டுக் கொள்ளலாம். விடீயோ யூடியூபில் கிடைக்கிறது. (https://www.youtube.com/watch?v=4k6b6PGZ_IU&feature=youtu.be&fbclid=IwAR1l-_Cmtr5hcfpE_l5QXoh93MyDCnK5rfMA7vdLFidySQeauW8q-bBye1o )
இதில் எங்காவது பெரியார் ராமரைச் செருப்பால் அடித்தார் என்று ரஜனி சொல்லியிருக்காரா? செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள் என்றுதானே சொல்லி இருக்கிறார்?
ரஜனி இந்த வரிகளில் மூன்று தகவலகளைச் சொல்கிறார்
1. 1971ல் சேலத்தில் பெரியார் ஒரு ஊர்வலம் போனார்..
அதை திராவிடக் கழகத்தினர் மறுக்கவில்லை.அது அவர்கள் நடத்திய ஊர்வலம்தான் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்
2. இந்துகளின் தெய்வங்களுக்குச் செருப்பு மாலை போடப்படிருந்தது, அப்படிச் செருப்புமாலை போடப்பட்டதா?
இதைக் குறித்து செய்தியளர்களிடம் அன்றைய முதல்வர் கருணாநிதி பேசியதை 1.2.1971 அன்று தினத்தந்தி வெளியிட்டிருக்கிறது. அதில் கருணாநிதி, “அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது,1967ல் நடைபெற்ற தேர்தலில் கும்பகோணத்தில் சங்கராச்சாரியார் (மகா பெரியவர் என்று இந்துக்களால் வணங்கப்படுபவர்) படத்திற்கு திராவிடர் கழகத்தினர் செருப்பு மாலை போட்டு வைத்ததை அப்போதிருந்த காமராஜரும் கண்டிக்கவில்லை.ஆட்சியும் கண்டிக்கவில்லை. அப்போது பார்த்துக் கொண்டிருந்ததைப் போல் இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று போலீசார் எண்ணிவிட்டார்கள் போலும்” (இது இன்றைய தினத்தந்தியில் மீள் பிரசுரம் ஆகி உள்ளது)
கருணாநிதி சொல்வதிலிருந்து என்ன தெரிகிறது?
அ.வணக்கத்திற்குரியவர் என்று இந்துக்கள் கருதுபவர்களுக்குச் செருப்பு மாலை போடும் வழக்கம்/கலாசாரம் தி.க.வில் உண்டு
ஆ.அப்போது (1967ல்) செய்ததைப் போல இப்போதும் (1971லிலும்) செய்தார்கள். அதைப் போலீஸ் பார்த்துக் கொண்டிருந்தது
3. இந்துக் கடவுள்கள் ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டார்கள். ஆபாசம் இருந்ததா?
அதற்கும் அந்த சந்திப்பில் கருணாநிதியே பதில் சொல்லியிருக்கிறார்
“மதவாதிகள் மனம் புண்படும்படியாக ராமர் சிலை போன்றவைகளை சேலம் மாநாட்டு ஊர்வலத்தில் ஆபாசப்படுத்தியதாகவும் வந்த செய்திகண்டு நான் வருத்தப்படுகிறேன்”
ரஜனி சொன்னது உண்மை என்பதை, ஈ.வே.ரா.வின் சீடரும், அன்றைய முதல்வருமான கருணாநிதியின் கூற்றுக்களே நிரூபிக்கின்றன. ரஜனி எதையும் மிகைப்படுத்தியோ, திரித்தோ, தவறாகவோ கூறவில்லை என்பது இதில் தெளிவாகப் புலனாகிறது.
ஈ.வே.ரா என்ற பெயரைக்கூட பெரியார் அவர்கள் என்று மரியாதையாகத்தான் ரஜனி தனது உரையில் குறிப்பிடுகிறார். அவரைப் பற்றி விமர்சனமாகக் கூடச் சொல்லவில்லை. ஒரு வரலாற்றுத் தகவலைக் குறிப்பிடுகிறார்,அவ்வளவே. அதற்கே இத்தனை அமளி. நீதிமன்றத்தில் சந்திப்போம் என்ற வீரமணியின் மிரட்டல். பல இடங்களில் காவல்நிலையத்தில் புகார். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ரஜனிக்கு எதிரான மனநிலையைக் கட்டமைக்க ஊடகங்கள், சொல்லாததைச் சொன்னதாகக் கூறி இராக் கச்சேரிகள் நடத்துகின்றன. (அதில் வெளியான ஓர் உண்மை, தி.க.வினர் இந்துக் கடவுள் படங்களைச் செருப்பால் அடித்தது)
இதற்குப் பின்னால் ரஜனியின் மீதான வன்மம் வெளிப்படுவதாகவே நான் கருதுகிறேன். அவர் தேர்தல் களத்தில் இறங்கினால், ஆட்சிக்கு வருகிறாரோ இல்லையோ திராவிடக் கட்சிகள், அவற்றைச் சார்ந்து இயங்கும் கட்சிகள் கடும் சவாலைச் சந்திக்க நேரும் என்று அஞ்சுகின்றன என்பது வெளிப்படை.
துக்ளக் கூட்டத்தில் ரஜனி இன்னொன்றும் சொன்னார்: நம்முடைய எதிரிகளே சில நேரங்களில் நாம் உயர்வதற்குக் காரணமாக அமைந்துவிடுவர்கள் என்றார் அவர்.
அந்த நேரம் இப்போது அவருக்கு வாய்த்திருக்கிறது!.
5.2.2020