டிரம்ப்பை கிண்டலடிப்பது என்றால் அமெரிக்கப் பத்திரிகைகளுக்கு குஷி. அவரைப் பற்றி அண்மையில் உலவிய ஜோக்குகளில் இது ஒன்று:
மரணப்படுக்கையில் இருந்த தனது கட்சிக்காரர் ஒருவரைக் காணப் போனார் டிரம்ப். அவர் டிரம்ப்பின் கட்சியான குடியரசுக் கட்சியின் நீண்ட நாள் விசுவாசி. மரணப் படுக்கையில் இருந்த தனது கட்சிக்காரரிடம் டிரம்ப் சொன்னார், “ நீ ஜனநாயகக் கட்சிக்கு மாறிவிடு!” நம்மூரில் திமுக அதிமுக போல் அமெரிக்காவில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரெதிரான பெரிய கட்சிகள்.” ஐயோ! என் ஆயுசு முழுக்க நான் நம் கட்சிக்கே விசுவாசமாக இருந்திருக்கிறேனே. இப்போது சாகப் போகிற நேரத்தில் எதிர்க்கட்சிக்கு மாறச் சொல்கிறீர்களே!” என்றார் கட்சிக்காரர்.
“அட, நீ செத்துவிட்டால், ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களில் ஒருவர் குறைந்து விடுவார், நம் கட்சிக்கு ஒண்ணும் பாதிப்பிருக்காதே!”என்றாராம் டிரம்ப்.
இந்த ஜோக்கைச் சொல்லிச் சொல்லி ஜனநாயக் கட்சிக்காரர்கள் சிரிப்பார்கள். ஆனால் கடந்த செவ்வாய் அன்று அவர்கள் சிரிக்கக் கூட நேரமில்லாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்திருப்பார்கள்
இந்தாண்டு இறுதியில் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது.அமெரிக்காவில் அதிபர் பதவிக்குப் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் முதலில் கட்சி தங்களை வேட்பாளாரக அறிவிக்கக் கோரிக் கட்சிக்குள் போட்டியிட வேண்டும். கட்சிகளின் சார்பில் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியின் தேசிய மாநாடு ((National Convention) ஒன்றில், தீர்மானிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ((delegates) அந்த தேசிய மாநாட்டில் வாக்கெடுப்பின் மூலம் தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்த்தெடுப்பார்கள். உதாரணமாக ஜான் என்பவரும், ஜோசப் என்பவரும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஜானை நிறுத்துவதா அல்லது ஜோசப்பை நிறுத்துவதா என்பதை ஜனநாயகக் கட்சியின் டெலிகேட்கள் தேசிய மாநாட்டில் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிப்பார்கள்.
சரி, இந்த டெலிகேட்களைத் தீர்மானிப்பது யார்? நம் மாநிலத்திலிருந்து யார் யார் டெலிகேட்களாகப் போவது என்று முடிவு செய்ய மாநில அளவில் கட்சிக்குள் தேர்தல் நடக்கும். இதைப் ‘பிரைமரி’ என்பார்கள். பெரும்பானமையான டெலிகேட்களின் ஆதரவைப் பெற்றவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பதால் எந்த வேட்பாளைரை ஆதரிக்கும் டெலிகேட்கள் அதிக அளவில் பிரைமரிகளில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அந்த வேட்பாளர் கட்சியின் வேட்பாளாராக இறுதியில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படுவார் என்பது வெள்ளிடைமலை; உள்ளங்கை நெல்லிக் கனி. அதாவது மாநிலப் பிரைமரிகளில் ஜானின் ஆட்கள் அதிகம் பேர் டெலிகேட்களாகத் தேர்வு செய்யப்பட்டால், தேசிய மாநாட்டில் ஜான் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு மிக மிக அதிகம்
கடந்த செவ்வாய்க்கிழமை, 14 மாநிலங்களில், ஜனநாயகக் கட்சியின் பிரைமரி நடந்தது. ஜூலை மாதம் நடக்கவிருக்கும் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் மொத்தம் 3979 டெலிகேட்கள் பங்கேற்பார்கள் இவர்களில் 1357 டெலிகேட்களைத் தேர்ந்தெடுக்கும் பிரைமரிகள் இந்த மாதம் மூன்றாம் தேதி நடந்தது.
சுருக்கமாகச் சொன்னால் இம்மாதம் மூன்றாம் தேதி, செவ்வாய்க் கிழமை நடந்த பிரைமரிகளின் முடிவு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் வாய்ப்புக் கொண்டது. எனவே அந்த செவ்வாய் ‘சூப்பர் செவ்வாய்’ என்று அமெரிக்க அரசியலில் அழைக்கப்படுகிறது
களத்தில் நான்கு பேர் இருக்கிறார்கள். ஆனால் முக்கியப் போட்டி பெர்ன் சாண்டர்ஸ் (BERNE SANDERS) என்பவருக்கும் ஜோ பைடன்(JOE BIDEN) என்பவருக்கும்தான். சூப்பர் செவ்வாய்க்கு முன் நடந்த பிரைமரிகளில் சாண்டர்ஸை ஆதரிக்கும் டெலிகேட்கள் 56 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். ஜோவை ஆதரிக்கும் பிரதிநிதிகள் 48 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர். சாண்டர்ஸ் கை ஓங்கியிருந்தது. ஆனால் 8 பிரதிநிதிகள்தான் வித்தியாசம் என்பது போட்டி கடுமையாக இருக்கிறது என்பதைக் காட்டியது.ஆனால் சூப்பர் செவ்வாயில் ஜோ பைடன் முந்தி விட்டார். அநேகமாக அவரே டிரம்ப்பை எதிர்த்துக் களம் இறங்குவார் எனத் தெரிகிறது.
சாண்டர்ஸ் இடதுசாரி சிந்தனை கொண்ட ‘முற்போக்குவாதி’ (Left Liberal). அமெரிக்க மக்கள் இடதுசாரிக் கருத்தியல்களை ஆதரிப்பதில்லை என்பதால் அவர் டிரம்போடு மோதும் சூழல் ஏற்பட்டிருந்தால் டிரம்ப் எளிதாக வெல்வார் என்று கருதப்படுகிறது. அதனால் ஜனநாயக் கட்சியின் நிர்வாகிகளின் ஆதரவு (Party establishment) அவருக்கு இல்லை எனச் சொல்கிறார்கள்.
சாண்டர்ஸ் இந்தியாவிற்கு சாதகமான கருத்துக்கள் கொண்டவர் அல்ல. அண்மையில் இந்தியா வந்திருந்த டிரம்ப், சிஏஏக்கு எதிரான போராட்டங்கள் பற்றிக் கடுமையாக எதுவும் சொல்லவில்லை. “அது இந்தியாவின் விஷயம்” (it is up to India) என்று கூறி நிறுத்திக் கொண்டார்.
சாண்டர்ஸ் அதை விமர்சித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், “இந்தியாவில் 20 கோடி இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.இந்தியா முழுக்க அவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன.27 பேர் இறந்து போயிருக்கிறார்கள். ஆனால் டிரம்ப் அது இந்தியாவின் விஷயம் என்கிறார். இது மனித உரிமைகள் குறித்த தலைமைப் பண்பின் தோல்வி” என்று குறிப்பிட்டிருந்தார். சாண்டர்ஸின் தேர்தல் பிரசார நிர்வாகி ஃபெயிஸ் ஷகீர் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஜோ பைடன், ஒபாமா ஜனாதிபதியாக இருந்த போது, 2009 முதல் 2017 வரை துணை ஜனாதிபதியாக இருந்தவர். மிதவாதி என்று அறியப்படுபவர். அவர் இந்தியாவுடன் நெருக்கம் பாராட்டுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் அவரது தேர்தல் பணிகளைக் கவனித்து வருபவர்களில் ஒருவருமான அமித் ஜானி மோதியின் ஆதரவாளர். அமித்தின் தந்தை சுரேஷ் ஜானி, குஜராத்தைச் சேர்ந்தவர். தனது இளம் வயதில் மோதியுடன் இணைந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றியவர். 1990ல் மோதியின் அமெரிக்கப் பயணத்தை ஏற்பாடு செய்தவர்.
விரும்பியோ, விரும்பாமலோ அமெரிக்கத் தேர்தலில் இந்திய பாகிஸ்தான் பிணக்குகள் நிழலிட்டுள்ளன.
எதிர்முகாமில் நடந்து கொண்டிருந்தவற்றை தொடர்ந்து கவனித்து டிரம்ப் டிவிட்டரில் நேரடி வர்ணனை செய்து கொண்டிருந்தார். ஜோ பைடனை தூங்கு மூஞ்சி (sleepy joe) என்று கிண்டல் செய்தார். சாண்டர்ஸை அவரது கட்சித் தலைவர்களே மீண்டும் தோற்கடித்து விட்டனர் என்றார் (கடந்த முறையும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிற்க விரும்பி கட்சிக்குள் போட்டியிட்டார் சாண்டர்ஸ். ஆனால் கட்சி ஹிலாரி கிளிண்டனைத் தேர்ந்தெடுத்தது. ஜோ, சாண்டர்ஸ் இவர்களோடு எலிசபத் வாரன் என்ற ஒருவரும் போட்டியிட்டார். ஆனால் அவர் பரிதாபமாகத் தோற்றுப் போனார். சொந்த மாநிலத்திலேயே அவருக்கு செல்வாக்கு இல்லை. வெற்றிக் கோட்டின் பக்கத்திலேயே நெருங்க முடியாத அவர் ஓய்வாக தனது கணவருடன் உட்கார்ந்து ஜில் என்று பீர் குடிக்கலாம் (She didn’t even come close to winning her home state of Massachusetts. Well, now she can just sit back with her husband and have a nice cold beer) என்று கமெண்ட் அடித்தார்.
இன்று உள்ள சூழல்களை வைத்துக் கணித்தால், அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்த முறையும் மீண்டும் டிரம்ப்பே வெற்றி பெற அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறது. ஜனநாயகத்தில் ‘வாய்திறக்காத பெரும்பான்மை’ (Silent Majority) என்று ஒன்று உண்டு. அது டிரம்பின் பக்கம் நிற்கிறது என்றுதான் தோன்றுகிறது