எல்லா நாளையும் போலத்தான் விடிந்தது 1941ஆம் ஆண்டின் டிசம்பர் ஏழும். அதற்கு முந்தைய இரவில் கிறிஸ்துமஸை எதிர்நோக்கிய கொண்டாட்டங்களில் திளைத்துக் களைத்துப் போயிருந்தது, ஹவாயில் உள்ள பேர்ள் ஹார்பரில் இருந்த அமெரிக்கக் கப்பல் படை. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாவகசமாக எழுந்து சோம்பல் முறிப்பதற்குள், காலை மணி 7:48க்கு, தடதடவென்று, ஒன்று இரண்டல்ல, 353 ஜப்பானிய விமானங்கள் அலை அலையாக வந்து குண்டு வீசின. அமெரிக்கக் கப்பல் படையின் நான்கு கப்பல்கள் மூழ்கிப் போயின. மற்ற நான்கும் சேதமடைந்தன. 2403 அமெரிக்கப் படை வீரர்கள் இறந்து போனார்கள்.1,178 பேர் காயமடைந்தார்கள்.
இத்தனை பெரிய இழப்பு ஏற்பட்டதற்குக் காரணம் பேர்ள் ஹார்பரில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல் எதிர்பாராத தாக்குதல். ஏன் எதிர்பார்க்கவில்லை? அது ஜப்பான் அமெரிக்காவோடு அமைதிப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தது. பேச்சு வார்த்தை முறிந்து விட்டால் அடுத்த முப்பதாவது நிமிடம் போர் தொடுப்பதாக அறிவித்துவிட்டு உடனே தாக்குதலைத் தொடங்க அது திட்டமிட்டிருந்தது. அதற்காக அமெரிக்க அரசிடம் கொடுக்கச் சொல்லி 5000 வார்த்தைகளில் அறிவிப்பு ஒன்று வாஷிங்டனில் இருந்த ஜப்பான் தூதரகத்திற்கு டோக்கியோவிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு ஜப்பானிய மொழியில் இருந்தது.
ஜப்பானிய மொழியிலிருந்த அந்த அறிவிப்பை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க உரிய நேரத்தில் சரியான ஆள் கிடைக்கவில்லை. ஜப்பானிய தூதரக அதிகாரிகள் தட்டுத் தடுமாறி மொழிபெயர்த்துக் கொடுப்பதற்குள் கெடு நேரம் கடந்து விட்டது. அறிவிப்புக் கொடுக்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையில் தாக்குதலை தொடங்கிவிட்டது ஜப்பான்.
ஒரு அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளர், டைப்பிஸ்ட் என்பவர்கள் முடிவெடுக்கும் முக்கிய அதிகாரிகள் அல்ல. சிறிய ஆட்கள்தான். ஆனால் அந்தச் ‘சிறிய ஆள்’ கிடைக்காதால் நான்கு போர்க் கப்பல்கள் மூழ்கின. மேலும் நான்கு சேதமடைந்தன. 2403 அமெரிக்கப் படை வீரர்கள் இறந்து போனார்கள்.1,178 பேர் காயமடைந்தார்கள்!
சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை விளக்க இரண்டாம் உலகப்போரில் நடந்த இந்த சம்பவத்தை உதாரணமாகச் சொல்வதுண்டு. “ஆணி இல்லாததால் குதிரைக்கு லாடம் அடிக்க முடியவில்லை. லாடம் அடிக்க முடியாமல் போனாதால் குதிரை போர்க்களம் செல்லவில்லை. குதிரை செல்லாததால் வீரன் வரவில்லை. வீரன் வராததால் போரில் தோல்வி. தோல்வி கண்டதால் ராஜ்யம் போயிற்று என்று பெஞ்சமின் ஃபிராங்களின் சொன்னதைச் சொல்லி, “ஒரு ஆணி மட்டும் கிடைத்திருந்தால்..” என்றும் சிலர் நினைவு கூர்வார்கள்.
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது நானும் ஆணி மட்டும் கிடைத்திருந்தால் என்றுதான் நினைத்தேன். ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த தேர்தல் வரை பாஜகவிற்கும் ஜார்க்கண்ட் அனைத்து மாணவர் சங்கம் (AJSU) என்ற அமைப்பிற்குமிடையே கூட்டணி இருந்தது. இந்த முறை தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரசினைகள் காரணமாக இரண்டும் கூட்டணி அமைக்காமல் தனித்தனியாகப் போட்டியிட்டன.
பாஜக என்கிற தேசியக் கட்சியோடு ஒப்பிடுகிற போது AJSU மிகச் சிறிய கட்சிதான். அது என்ன பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடப் போகிறது என்று பாஜகவின் தலைமை நினைத்திருக்கக் கூடும். ஆனால் பாஜகவும் ASJUவும் இணைந்து போட்டியிட்டிருந்தால் அந்தக் கூட்டணி 40 இடங்களை வென்றிருக்கும் என்று தொகுதி வாரியாகப் பதிவான வாக்குகளின் அடிப்படையில் தேர்தல் முடிவுகளை ஆராய்கிற வல்லுநர்கள் சொல்கிறார்கள். 81 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் இது பெரும்பான்மை அல்ல என்பது உண்மைதான். ஆனால் இப்படிக் கூட்டணி அமைந்திருந்தால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா–காங்கிரஸ்- ஆர் ஜே டி கூட்டணிக்கு 34 இடங்கள்தான் கிடைத்திருக்கும் என்கிறார்கள் அந்த வல்லுநர்கள். அதனால் ஆட்சி அமைப்பதற்கான முதல் அழைப்பு பாஜக- ஏ எஸ் ஜெ யூ கூட்டணிக்குக் கிட்டியிருக்கும் என்கிறார்கள்.
பாஜக மீது அபிமானம் கொண்டவர்கள், இப்போதும் அங்கு பாஜகதான் பெரிய கட்சி நாங்கள் 33.37 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறோம் ஆனால் ஆட்சி அமைக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 18.72 சதவீத வாக்குகளைத்தான் பெற்றிருக்கிறது என்று சொல்லித் தங்களைத்தானே சமாதானம் செய்து கொள்ளலாம். ஆனால் நம் தேர்தல் முறையில் இந்த சதவீதக் கணக்குகள் உதவாது. இடங்கள்தான் ஆட்சியைத் தீர்மானிக்கும். பறவை என்றால் பறக்க வேண்டும். பார், பார் அதற்கு வண்ணமயமான் இறக்கை இருக்கிறது, அழகான கொண்டை இருக்கிறது, கொட்டைகளை உடைத்து விடும் கூர்மையான அலகு இருக்கிறது அதன் குரல் இனிமையானது, அது இப்போது பாடும் பார் என்பதில் பிரயோசனமில்லை.
கடந்த 15 மாதங்களில் 5 மாநிலங்களில் ஆட்சியை இழந்திருக்கும் பாஜக சால்ஜாப்புகளிலும் சமாதானங்களிலும் நம்பிக்கை வைக்காமல் தன்னைத் தானே ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது.
இந்திய அரசியலில் சிறு கட்சிகள் முக்கியத்துவத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது. குறிப்பாக சிறு மாநிலங்களில் என்பதை ஹரியானாவிலும் பார்த்தோம். மாநில பிரச்சினைகளை முன்னிறுத்தியும், உணர்ச்சிகளைச் சீவி விட்டும், ஜாதி அல்லது குழு அடையாளங்களில் வாக்குகளைச் சிதறாமல் சேகரித்துக் கொள்ளவும் அவை ஆற்றல் கொண்டவை. மாநிலச் சட்டமன்றங்களுக்கு நடைபெறும் தேர்தல்கள் அவற்றிற்கு வாழ்வா சாவா என்பதைத் தீர்மானிக்கும் களம் என்பதால் அவை அதில் முழு பலத்தையும் காட்டி இறங்கும்.
மொத்த இந்தியாவையும் மனதில் கொண்டு , தேசிய அளவில் பாஜக எடுக்கும் சில முடிவுகள் அடித்தளத்தில் இருக்கும் வாக்காளரின் வாழ்விலோ, மனதிலோ பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை அல்ல என்பதை பாஜக தலைமை உணர்ந்து கொள்ள வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு அளித்த சலுகைகளிலிருந்து கஷ்மீரை விடுவித்ததை தமிழ்நாட்டில் உசிலம்பட்டியில் உள்ள ஒரு வாக்களார்கள் பெரிய சாதனையாக எடுத்துக் கொள்வார்கள் என்று கருத இடம் இல்லை. கஷ்மீர் 370 கீழ் சலுகைகளைப் பெற்றதால் அவர் பாதிக்கப்படவில்லை. அதை நீக்கியதாலும் அவர்கள் பாதிக்கப்படவில்லை. அவர்களுக்கு அது ஒரு நாள் தொலைக்காட்சிச் செய்தி. அவ்வளவுதான்..
ஆனால் மாநிலங்களில் நடக்கிற தேர்தல் பிரசாரத்தில் பாஜக தனது சாதனைகளாக 370 நீக்கம், முத்தலாக், ராமர் கோயில், குடியுரிமைச் சட்டம் போன்றவற்றை முன்னிறுத்தி பிரசாரம் செய்கிறது. அதைக் குறித்துப் பெரும்பான்மை மக்களுக்கு எதிர்மறையான கருத்துக்கள் இல்லை. அதனால்தான் பாஜக இப்போதும் கணிசமான வாக்குகளையும் இடங்களையும் பெற்று வருகிறது.
ஆனால் ஒரு அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது அவர்கள் வாழ்வில் பொருளாதார ரீதியாக முன்னேற்றம். சுலபமான பணப் புழக்கம். குறைவான வரி விதிப்பு. உயர்கல்வியை தங்கள் குழந்தைகள் எளிதாக அணுகுவதற்கான வாய்ப்பு.படித்த இளைஞர்களுக்கு நியாயமான சம்பளத்தில் வேலை. இதை எல்லாவற்றையும் சுருக்கி ஒற்றை வார்த்தையில் சொல்வதானால் வளர்ச்சி.
இதை நோக்கி சில நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்திருக்கிறது, எடுத்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவை மக்களால் உணரத் தக்கதாக இல்லை (Not perceptible)
மாறாக அச்ச உணர்வு, சந்தேகம், அவநம்பிக்கை எளிதாகப் பரவுகிறது. யானை விழுவதுதான் செய்தி, நடப்பது அல்ல என்ற மனோபாவத்தில் இருக்கும் ஊடகங்கள் எதிர்மறைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவது காட்டுத் தீ பரவும் போது வீசும் காற்று போல் ஆகிவிடுகிறது.
பாஜக அரசு தனது செயல்களின் முன்னுரிமைகளை (Priorities) மாற்றியமைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். நிர்வாக இயலில் இதை -course correction – பயணத்தைச் சரி செய்து கொள்ளல் என்பார்கள்.
என்னைக் கேட்டால் தேசியக் குடியுரிமைப் பதிவேடு –NRC- போன்ற விஷயங்களைச் சற்றுத் தள்ளி வைக்கலாம். குடியுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் –CAA- தேவைதான். அது நாடாளுமன்றத்தில் நிறைவேறியும் விட்டது. மற்ற விஷயங்களைச் சற்று ஆறப் போடலாம். தேர்தல் முடிவுகளைக் கருத்தில் கொண்டல்ல, நாட்டின் அமைதியைக் மனதில் கொண்டு இதைச் சொல்லுகிறேன்.
புத்தாண்டு அமைதியையும் சுபிட்சத்தையும் கொண்டு வரட்டும்.- எல்லோருக்கும்!
8.1.2020 . .