வாசல் தெளித்து மீந்த வாளித் தண்ணீரைப் பருக வந்தமர்கிறது காகம்.விடிந்து வெகு நேரமாகிவிடவில்லை.அதற்குள் அதற்கு தாகம். காரணம் தகரம் போல் தகதகக்கும் வெள்ளை வெயில்.
அந்தக் காகத்தைக் காணும் போது எனக்கு நேற்றுப் பார்த்தக் காவலரின் ஞாபகம் வருகிறது. பரபரப்பான போக்குவரத்து சிக்னலில் காத்துக் கொண்டிருக்கும் போது காரிலிருந்து என் ஜன்னலுக்கு வெளியே அந்தக் காட்சியைப் பார்த்தேன். விளக்கு மாறியதும் வில்லில் இருந்து விடுபட்ட அம்பு போல எதிர்திசையில் சீறிக் கொண்டு புறப்பட்டன வாகனங்கள். அப்படிப் பாய்ந்தோடி வருகிற வாகனங்களில் ஒன்றைக் கை அசைத்து ஓரங்கட்டினார் போலீஸ்காரர். வாகனம் ஓட்டி வந்தவர் திகைத்தார். குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே என்ற பாணியில் நிமிர்ந்து பார்த்தார். திகைப்பு நொடி நேரத்தில் புன்னகையாக மலர்ந்தது. அவர் ஏற்கனவே காவலருக்கு அறிமுகமானவராக இருக்க வேண்டும். அந்த இரு சக்கர வாகனத்தின் முன்னால் மாட்டியிருந்த ஷாப்பிங் பைக்குள், அல்லது சாப்பாட்டுப் பைக்குள் உரிமையோடு கையை நுழைத்தார் காவலர். உள்ளிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தார். இவ்வளவுதானா என்பது போல இரு சக்கர ஓட்டியின் இதழகளில் ஒரு நிம்மதிப் புன்னகை. காவலர் தலையை அண்ணாந்து கொண்டு தண்ணீரைத் தூக்கிப் பிடித்தார். தூக்கிப் பிடித்த அவரது கரங்களிலிருந்து துள்ளிக் கொண்டு ஒரு சிறு அருவியைப் போல பாட்டிலில் இருந்து அவரது தொண்டைக்குள் பாய்ந்தது நீர். பாவம் எத்தனை மணிநேரத் தாகமோ? நீரை அவர் பருகிய நேரத்தில் தொண்டைக் குழியில் இருந்த கோலி இதயத் துடிப்பைப் போல வேகவேகமாக ஏறி இறங்கியது. மடக் மடக் என்று நீரைப் பருகிய அவர் உள்ளங்கையைக் கிண்ணமாக்கி ஒரு சில நீர்க் கிண்ணங்களை முகத்தில் அறைந்து கொண்டார். ஈரம் சொட்டும் முகத்தோடு தண்ணீர் புட்டியைத் திருப்பித் தந்தார். அவர் இதழில் இருந்து ஒரு புன்னகை சொட்டிக் கொண்டிருந்தது. நன்றிப் புன்னகை.
காவல்ர்களது வாழ்க்கைதான் எத்தனை கடுமையானது! அவர்கள் வேலைக்கு நடுவில் வெயிலில் சில மணி நேரம் நிற்பது சிறிய துயரம்தான். அதைவிடப் பெரும் சிரமங்களை அவர்கள் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜாதிக்கலவரத்திற்கு நடுவில் கடமையாற்றப் போகும் காவலர்களை நினைத்துப் பாருங்கள். நியாய அநியாயங்களை மறந்து உணர்ச்சிகளால் உந்தப்பட்டு நிற்கும் மக்களை எளிதில் அடக்கவும் முடியாது. அதற்காக நெட்டை மரங்களைப் போல நிகழ்வதைப் பார்த்துக் கொண்டும் இருக்க முடியாது.
காலையில் கிரிமினல்கள் முகத்தில் விழிப்பதில் –அரசியல்வாதிகளைச் சொல்லவில்லை, அவர்கள் அவ்வப்போது தரும் அழுத்தம், அது வேறு ஒரு இம்சை- இருந்து இரவு கட்டையைச் சாய்க்கும்வரை எத்தனை பணிகள்! குற்றப் புலனாய்வு, கூட்டத்திற்கு பந்தோபஸ்து, பெருந்தலைகளுக்கு, அதாங்க விஐபி, பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, நீதிமன்றத்தில் குற்றவாளிகளைக் கொண்டு நிறுத்திக் கூட்டி வருவது, என அவர்கள் பணிகளில் பாறைச் சில்லுகளைப் போல ஓர் ஒழுங்கற்ற கடினம். ஆனால் அவர்கள் பட்டை தீட்டப்பட்ட வைரங்களைப் போல ஒளிர வேண்டும் என சமூகம் விரும்புகிறது. எதிர்பார்ப்புக்கும் யதார்தத்திற்கும் இடையே சிக்கி நசுக்குண்ட ஜீவன்கள் நம் காவலர்கள்.
நெளிந்து போன அவர்கள் வாழ்க்கையில் நேரக் கணக்கில்லை. பணிநேரம் எவ்வளவு? பத்து மணியா? பனிரெண்டா? பதிநான்காகக் கூட அது விரியலாம். அதைத் தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்கள் காலண்டரில் சனி ஞாயிறுகள் இல்லை. அவர்கள் வாழ்க்கையில் தீபாவளி, தைப் பொங்கல் எனத் திருநாள்கள் இல்லை. இல்லை என்பதைக் குறித்து முணுமுணுக்கும் அதிகாரம் கூட அவர்களுக்கு இல்லை. தொழிற்சங்கத்திற்கு அனுமதி இல்லாத ஒரு பணி அவர்களுடையது.
அவர்களது பணியின் அழுத்தம் அவர்களது குடும்பத்தின் மீதும் குழந்தைகள் மீதும் அமர்கிறது என்பதுதான் துன்பத்துள் பெருந்துன்பம்.
சில மாதங்களுக்கு முன் நான் பயணித்த இரயில் பெட்டியில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் பயணித்தார்கள். சிறு கிராமங்களில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர் நிலையில் உள்ள கீழ்தட்டு அதிகாரிகள். தொலைக்காட்சியில் தோன்றிய முகம் என்பதால் அவர்கள் என்னிடம் அரசியல் பேச ஆசைப்பட்டார்கள். எனக்குள் இருந்த எழுத்தாளன் அவர்களின் குடும்ப வாழ்க்கை குறித்துக் குறிப்பெடுத்துக் கொள்ள விருப்பம் கொண்டான்.
குழந்தைகள் இருக்கா எனக் கேள்வியைத் துவக்கினேன்.
”ஒரே பையன். இந்த இரண்டு வருஷத்தில் நாலு ஸ்கூலுக்குப் போயிட்டான். ஏன்னா எனக்கு டிரான்ஸ்ஃபர். என் பையன் என்ன படிக்கிறான்னு கேளுங்க?”
” என்ன படிக்கிறார்?”
“ எல்.கே.ஜி”
“எல்.கே.ஜி.யிலா நாலு ஸ்கூல்?. அதுக்கு நீங்க வீட்டிலேயே வைச்சுச் சொல்லிக் கொடுக்கலாமே?”
“கொடுக்கலாம். ஆனா நான் அதுக்கு வீட்டில இருக்கணும்ல?”
நான் உச்சுக் கொட்டினேன்
“நீங்க என்ன செய்வீங்க. அது போலீஸ்காரன் தலையெழுத்து!” என்றார் என் பரிதாபத்தைப் பார்த்து
“உங்க வீட்டில இதையெல்லாம் புரிஞ்சுக்கிறாங்களா?” என்று கேட்டேன்.
“புரியும். புரியணும். போலீஸ்காரனுக்கு வாக்கப்படறவ என்னிக்கு வேணாலும் மூட்டையைக் கட்டிக்கிட்டுக் கிளம்பத் தயாரா இருக்கணும். முடியாதா வேறு வேறு ஊரில வாழாவெட்டியைப் போல விலகிப் போய் வாழணும்” என்றார் விரக்தியாக.
நம் காவலர்கள் மூர்க்கமான விலங்குக் குணங்களும் முட்டாள்தனமாக கோமளிக் குணங்களூம் ஏதோ ஒரு விகிதத்தில் கலந்து செய்த உயிரினங்கள் என நம் சினிமாக்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால் அவர்களுக்குள்ளும் ஒரு மனிதன் இருக்கிறான். அடுத்த முறை சந்திக்கும் போது அவருக்கு ஒரு குவளைத் தண்ணீராவது கொடுங்கள்.
அது அவர்களது தாகத்தைத் தணிக்க அல்ல. அது அவர்களது துன்பங்களை நீங்கள் அறிந்து கொண்டீர்கள் என்பதன் அடையாளம்