நான் கட்டுப் பெட்டி அல்ல. நிச்சயம் கட்டுப்பெட்டி அல்ல. என் அம்மாவோடும், அத்தையோடும் ஏன் என் தங்கையோடும்தான்.ஒப்பிடும் போது நான் முற்போக்கானவள்தான். அதற்காக அவன் விரும்புவது போல நான் முழங்கால் தெரிய ஸ்கர்ட் அணிந்து கொள்ள வேண்டுமா என்ன?
“எப்பவும் சூடிதாரிலேயே இருக்கிறாயே, நாளைக்காவது ஸ்கர்ட் அணிந்து வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்று வாட்ஸப்பில் செய்தி அனுப்பியிருந்தான். நேரில் சொல்லத் தயக்கமாக இருக்கும் விஷயங்களை வாட்ஸப்பில் செய்தியாக அனுப்பிவிடலாம். ஆண்களுக்கு அது ஒரு வசதி. அவர்கள் போடுகிற இதயக் குறியீடுகளின் நோக்கம் அவர்களுக்குத் தெரியும். எங்களுக்கும் தெரியும். என்றாலும் தெரியாதது போல எல்லோரும் பாவனை செய்து கொண்டிருக்கிறோம்.
எனக்கு அவனிடம் பிடித்ததே அவனிடம் பாவனைகள் குறைவு என்பதுதான். ஆங்கிலத்தில் “Wearing the heart on the sleeve” என்று சொல்வார்களே அதைப் போல இதயத்தை தோளில் சூடியவன். கைதட்டலுக்காகப் பேசுகிறவன் அல்ல. நினைத்ததை மென்று முழுங்காமல், பூசி மெழுகாமல், வெளிப்படையாகப் பேசுவான். அதனால் அவன் பேஸ்புக்கில் நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டுமிருக்கிறான். அதைப் படிக்கும் போதெல்லாம் எனக்குப் பாவமாக இருக்கும்.
ஆனால் அவனுக்கு என்னிடம் ஒரு மென்மையான தயக்கம் உண்டு. தயக்கமா அல்லது மிரட்சியா? நான் கவிஞர் என்று தெரிய வந்த போது தலைக்கு மேல் கை உய்ர்த்தி ஒரு கும்பிடு போட்டான்.
“எதற்குக் கும்பிடு?”
“எழுத்துலகில் கவிஞர்கள் தனிப் பிரகிருதிகள்”
“பிரகிருதி என்றால்?”
“Poets are a different species among writers. பொற்கொல்லர்கள் நமக்குத் தெரியும். அது போல் சிலர் சொற்கொல்லர்கள். சிலர் சந்தப் பிரியர்கள்.சிலர் சத்தப் பிரியர்கள். சிலர் தீவட்டி ஏந்தியவர்கள். அது எரிப்பதற்காகவும் இருக்கலாம். சுடர் ஏற்றவும் இருக்கலாம். சிலர் வணிகர்கள் சிலர் காதலர்கள். தங்களைத் தாங்களே காதலிப்பவர்கள்.”
“சிலர் சமூக விரோதிகள் என்று சொல்லாதவரை சந்தோஷம்”
“சொல்லியிருப்பேன். ஆனால் நீ கவிதை எழுதுபவள் என்று சொன்னதால் அதைத் தவிர்த்துவிட்டேன்”
இந்த செல்ல இடக்குதான் என்னை அவனிடம் ஈர்த்ததோ? இல்லை அவனது நாற்காலியா? உயரமான இடத்தில் உட்கார்ந்திருந்தான். அவனும் நல்ல உயரம்தான்.சந்தன நிறம்.மீசை வேறு வைத்திருந்தான். இல்லை ஈர்த்தது அவனது கண்ணியமா? முப்பத்தி ஐந்து வயதில் தனியாக வாழும் பெண் என்றால் அவள் ‘அவைலபிள்’, அழைத்தால் வந்துவிடுவாள் என ஜாடைமாடையாகவும் நேரடியாகவும் பேசுகிற ஆண்களுக்கு நடுவில் அவன் கண்ணியமானவன்தான். தனியாக இருக்க நேர்ந்த சந்தர்ப்பங்களில் கூட கையைப் பற்றிக் கொள்ள முனைந்ததில்லை.
எனக்கும் என் மனதை வாய்விட்டுச் சொல்ல முடியாமல் ஏதோ ஒரு தயக்கம். காரணம் தெரியவில்லை. காதலுக்குக் காரணங்கள் இல்லை. காரணங்களும் தேவை இல்லை. ஆனால் இது காதலா?
அதை அவனும் இன்னும் வாய் திறந்து சொல்லவில்லை. வாய் திறந்து சொல்லவில்லை என்றாலும் எனக்குத் தெரியும். அவனுக்கும் என் மீது ஈர்ப்புண்டு. சில மாதங்களாக அதன் சமிக்ஞைகள் தெரிகிறது.முப்பத்திஐந்து வயதுப் பெண்ணால் புரிந்து கொள்ளக் கூட சமிக்ஞைகள். ஆனாலும் அவன் வாய் திறக்கவில்லை. அந்த மென்மையான தயக்கம் அல்லது மிரட்சி அல்லது கண்ணியம் அல்லது எல்லாமும் சேர்ந்து அவனைக் கட்டிப் போட்டிருக்க வேண்டும்.
அவன் நாளைக்கு ஏதோ முக்கியமான சொல்லப் போவதாகச் சொல்லியிருக்கிறான், முக்கியமான விஷயம்? என்னவாக இருக்கும்?
நான் அந்த வாட்ஸப்பைத் திறந்து செய்தியை மீண்டும் பார்த்தேன்: “எப்பவும் சூடிதாரிலேயே இருக்கிறாயே, நாளைக்காவது ஸ்கர்ட் அணிந்து வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!”
நான் அவனை போனில் அழைத்தேன்
“நாளைக்கு என்ன?”
“நாளைக்கு பிப்ரவரி 20. உன் பிறந்தநாள்”
“ ஆமாம். ஆனால் அதற்கென்ன?”
“ உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்”
முக்கியமான விஷயம்! காதலைச் சொல்லப் போகிறானோ?
“என்ன விஷயம்?”
“அதை நாளைக்குச் சொல்கிறேன்”
“இன்னிக்கு சொல்லக் கூடாதா?”
“ம்ஹூம், நாளைக்குத்தான்”
“இருக்கட்டும் இருக்கட்டும். அது சரி, ஏன் ஸ்கர்ட்?”
“சும்மாதான். பெரிய இடத்திற்குப் போகப் போறோம். டிரெண்டியா, மார்டனா இருக்கட்டும்தான்”
பெரிய இடமா? அவனுடைய அப்பா அம்மாகிட்ட அழைச்சுக்கிட்டுப் போகப்போறானா?
நான் ஸ்கர்ட் அணிந்து கொள்ளவில்லை. அது எந்த இடமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் நானாகத்தான் இருப்பேன். ஆனால் சுடிதாரும் அணிந்து கொள்ளவில்லை. ஜீன்சும், ரத்த சிவப்பில் ஒரு டாப்ஸும் போட்டுக் கொண்டேன். கிழித்து விட்டுக் கொள்ளப்படாத வெளிர் நீல ஜீன்ஸ். இறுக்கமாக இருந்தது. கழற்றிவிட்டு புடவையைச் சுற்றிக் கொள்ளலாமா என்று நினைத்தேன். இடுப்புத் தெரியும் வேண்டாம். அந்த ரத்தச் சிவப்பு டாப்ஸ்க்கு லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டால் நன்றாகத்தானிருக்கும். ஆனால் என்னிடம் லிப்ஸ்டிக் இல்லை. நான் பயன்படுத்துவதில்லை. தலையை தளர ஒதுக்கி விட்டுக் கொண்டேன். காதோரம் தெரிய ஆரம்பித்திருந்த ஒன்றிரண்டு வெள்ளி முடிகளை உள்ளே தள்ளி மறைத்தேன். பொட்டு வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்து பின் கைவிட்டேன் எனக்குப் பிடித்த பெர்ஃப்யூமை குறுக்கும் நெடுக்குமாகச் சீறவிட்டேன்.கிளிப்பச்சையில் வெள்ளைக் குறும் பூக்கள் போட்ட, சின்னச் சின்ன கண்ணாடிகள் பதித்த துணியால் ஆன பவநகர் கைப்பையை எடுத்துக் கொண்டேன். பொருத்தமாக இல்லைதான். ஆனால் அதற்குள் அந்த அயல்நாட்டு சாக்லேட்டை மறைத்து எடுத்துப் போக முடியும்.
அவன் சூட் அணிந்து வந்திருந்தான். டை கட்டியிருக்கவில்லை.சற்றுத் தளர்வான வெள்ளைச் சட்டை அணிந்திருந்தான். தளர்வான சட்டையும் கோட்டும் அவன் வயதைக் கூட்டிக் காட்டியது. ஆனால் காதுக்குப் பின் வெள்ளியிழைகள் ஓடும் 35 வயதுக்காரிக்கு அது பரவாயில்லை
அவன் சொன்ன பெரிய இடம் ஊரை விட்டுச் சற்றுத் தள்ளியிருந்த ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல். அதன் மொட்டை மாடியை உணவகமாக மாற்றியிருந்தார்கள். செயற்கைப் பூக்களைக் கொண்டு வளைவுகள் அமைத்திருந்தார்கள். அவற்றில் ஆங்காங்கே ஆழ்ந்த ஊதாப் பூக்கள் தென்பட்டாலும் இளஞ்சிவப்பும் வெள்ளையும்தான் அதிகம் இருந்தன. தூரத்தில் கடல் தெரிந்தது.காற்று வந்து தலையைச் சிலுப்பியது. ஈரத்தலையை விரித்துப் போட்ட இளம் பெண் மாதிரி வானில் இருள் பரவிக் கிடந்தது. நட்சத்திரங்கள் மினுங்கத் தொடங்கின.
இடம் எனக்குப் பிடித்திருந்தது. இனம் புரியாத ஓர் உல்லாசம் மனதில் புரண்டது. ‘இடம் ரொம்பவும் ரொமாண்டிக்காக இருக்கிறது’ என்றேன்
அவன் பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தான். கண், கன்னத்து சதை எல்லாம் சேர்ந்து சிரித்தது. ஆளை அடித்துப் போடும் மென் சிரிப்பு.
உணவகத்தில் அதிகம் பேர் இல்லை. இன்னொரு ஓரத்தில் ஓர் இளம் தம்பதி இரு குழந்தைகளோடு அமர்ந்திருந்தார்கள். அவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருக்க குழந்தைகள் மேசை மீதிருந்த முள்கரண்டியையும் கத்தியையும் எடுத்துச் ‘சண்டை’ போட்டுக் கொண்டிருந்தார்கள். அவன் குழந்தைகளை நோக்கிக் கை அசைத்தான். அவை சண்டையை நிறுத்தி விட்டுத் திரும்பிப் பார்த்தன. அவை திரும்பிப் பார்ப்பதைக் கண்ட அந்தத் தம்பதிகளும் திரும்பிப் பார்த்தனர்.
நோ! இது எனக்கான தருணம். எனக்கே எனக்கான தருணம். வேறு யாருக்கும் இடமில்லை. அவன் கவனத்தைத் திருப்ப கைப்பையிலிருந்து சாக்லேட்டை எடுத்து நீட்டினேன்.
அதன் மேல் இருந்த இளம் சிவப்பு ரிப்பனைப் பிரித்து, அதன் மேலுறையை உரித்துக் கொண்டே “உனக்குதானே பிறந்தநாள்! எனக்கு சாக்லேட்டா?” என்றான்.
“ஜப்பானில் ஒரு வழக்கம் உண்டு. காதலர் தினத்தன்று பெண்கள் அவர்களது இணைக்கு சாக்லேட் கொடுப்பார்கள்.”
இணை என்ற வார்த்தைக்குப் புன்னகைத்தான். “ம்”
“ஒரு மாதம் கழித்து, மார்ச் 14 அன்று ஆண்கள் தங்கள் காதலிக்கு ஒரு ரிட்டன் கிஃப்ட் கொடுக்க வேண்டும்”
“இன்று வேலண்டைன்ஸ் டேயா?”
“எனக்கு என்னமோ அப்படித்தான் தோன்றுகிறது!”
சாக்லேட்டின் ஒரு முனையை உடைத்து என் உதட்டில் வைத்தான். நான் தடுக்கவில்லை
“சாக்லேட்கள் உன்னை மாதிரி. வெளியே கெட்டி. உள்ளே மென்மை. இனிமையும் கூட”
“எப்போது சமூக விரோதியாக மாறினாய்?”
“நானா? சமூக விரோதியா?”
“கவிதை சொல்கிறாயே!”
அவன் தலையை அண்ணாந்து கொண்டு கடகடவென்று சிரித்தான். அதுவும் அழகாகத்தான் இருந்தது. நான் அவன் கைகளை எடுத்து என் விரல்களைக் கோர்த்துக் கொண்டேன்.
“ஏதோ சொல்லணும்னியே!”
““ம். சொல்றேன் சொல்றேன். சொல்லணும்னுதான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்.ஊருக்குள்ள எந்த ரெஸ்டாரண்டிலும் பிரைவசி கிடையாது”
அவன் தன் கோட்டை விலக்கி உள் பையிலிருந்து நீளமாக எதையோ எடுத்தான். என்ன கொடுக்கப் போகிறான்? ரோஜாப்பூவா?
இல்லை. அது ஒரு புல்லாங்குழல்.
“ உனக்கு என் எளிய பரிசு. வாழ்வில் இனிமை என்றும் ஒலிக்கட்டும்”
நான் குழலை எடுத்துப் பார்த்தேன். காட்டில் தன்னிஷ்டத்திற்கு நெடு நெடுவென்று உயர்ந்து வளர்ந்து கொண்டிருந்த ஒரு இளம் பச்சை மூங்கிலை வெட்டி எடுத்திருப்பார்கள். அதன் உள்ளே குடைந்து ‘சுத்தம்’ செய்திருப்பார்கள். கூழாங்கற்களிடையே ஓடும் ஆற்றுத் தண்ணீரில் போட்டு மென்மையாக்கியிருப்பார்கள். சூட்டுக் கோலால் துளைகள் இட்டிருப்பார்கள். அதன் பின்தான் அது இனிமையாகப் பேசும். அதுவரைக்கும் அது முள் சுமந்துதான் நிற்கும். நான் குழலைக் கையில் எடுத்துப் பார்த்தேன். வெளிப்புறம் முரடாக கடினமாக இருந்தது. அந்தச் சாக்லேட் போல. என்னைப் போல.
“இரண்டு வாரத்திற்கு முன் அசாம் போயிருந்தேன். குவஹாத்தி இல்லை. ஜோர்ஹட்.” அவன் பேச ஆரம்பித்தான்
“ஆபீஸ் இன்ஸ்பெக்க்ஷன். நகரின் விளிம்போரம் ஒரு ரிசார்ட்டில் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.இறங்கி சிறிது தூரம் நடந்தால் காடு ஆரம்பிக்கிறது. இரவு, சாப்பிட்டு உட்காந்திருந்தேன். திடீரென்று காதில் தேன் பாய்ந்தது. எங்கிருந்தோ வந்த அந்தப் புல்லாங்குழல் இசை என்னுடன் பேச ஆரம்பித்தது. இனிமை. குழலை வாசிக்கிறானா? உயிரை உருக்கி ஊற்றுகிறானா? எனக்கு உன் ஞாபகம் வந்தது. ஏன் என்று கேட்காதே. உள்ளே இனிமை நிறைந்த அந்த முரட்டுப் புல்லாங்குழல் ஏதோ சொல்ல முனைகிறது. ஆனால் உன்னைப் போல் தயங்குகிறது.
இசை வந்த திசை நோக்கி நடந்தேன். விடுதி சமையல்காரரும் துணைக்கு வந்தார். காட்டின் விளிம்பில் ஒரு குடிசை. அதன் முன்னால் அமர்ந்து அவன் வாசித்துக் கொண்டிருந்தான். எலும்பும் தோலுமாக இருந்தான். தலை பரட்டை. முகத்தில் முள் மண்டிக் கிடந்தது. மரம் வெட்டுகிறானோ, மண் வெட்டுகிறானோ தெரியவில்லை, இடுப்பு வேட்டியில் ஏகப்பட்ட அழுக்கு. என்னைப் பார்த்ததும் வாசிப்பதை நிறுத்தினான். குழலை எடுத்து இடுப்புக் கச்சையில் செருகிக் கொண்டான்.
நான் அவனைப் பார்த்துச் சிரித்தேன். அவன் சிரிக்கவில்லை. இசை அறுந்து போன கோபமாய் இருக்கும். அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிழவி எழுந்து வணங்கினாள் அவன் தாயாக இருக்கும்.
நான் “சாப்ட்டீர்களா?” என்று கேட்டேன்.
இல்லை என்று அந்தப் பெண்மணி தலை அசைத்தாள். நான் இருநூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். அவன் மறுத்தான். அந்தப் பெண்மணி வாங்கிக் கொண்டாள்
“வாசி!” என்றேன். அவன் மெளனமாய் தலை குனிந்து கொண்டான். அவன் தாய் அவர்கள் மொழியில் ‘வாசிப்பா’ என்றாள். அவன் முறைத்தான்
“இந்தக் குழலை எனக்குக் கொடுக்கிறாயா?” என்று கேட்டேன் அவன் இடுப்புக் கச்சையை கையால் இறுக்க பொத்திக் கொண்டான். நான் பறித்துக் கொள்வேன் என்று நினைத்தானோ என்னவோ? நான் ஐந்நூறு ரூபாய் எடுத்து நீட்டினேன். அவன் தலையை வேகமாக அசைத்து மறுத்தான்.
நான் இன்னொமொரு ஐநூறு ரூபாய் எடுத்து ஆயிரம் ரூபாயாக நீட்டினேன். அந்த அம்மாளின் கண்கள் விரிந்தன/ சமையல்காரர் கை நீட்டி மறித்தார். “வேணாம் சார். இது அதிகம் நாளைக்கு சந்தையில் நூறு ரூபாய்க்கு கிடைக்கும். நான் பார்த்து வாங்கிக் கொடுக்கிறேன்” என்றார்
“இல்லை எனக்கு இதுதான் வேண்டும்!” என்றேன். சமையல்காரர் என்னை ஒருகணம் பார்த்தார். பின் அந்தப் பெண்மணியிடம் போய்ப் பேசினார். அந்தப் பெண்மணி அவனிடம் போய் ஏதோ சொன்னாள். அவன் அவளை நிராகரித்து மறுபடியும் தலையை ஆட்டினான். அவள் கையிலிருந்த பணத்தைக் காட்டி ஏதோ சொன்னாள். மன்றாடுவது போல் தெரிந்தது. அவன் இடுப்பிலிருந்து குழலை உருவி வெறுப்புடன் தரையில் எறிந்தான். அவள் எடுத்து வந்து பணிவாய் என்னிடம் நீட்டினாள். இந்தக் குழலை உனக்காகத்தான் வாங்கினேன்.” என்று குழலை எடுத்து நீட்டினான்
“ வாங்கினாயா?”
“ம்”
“வாங்கினாயா?” என்றேன் மறுபடியும்
“ஆமாம் உனக்காகத்தான் வாங்கினேன். உன்னைப் போன்ற குழல்”
வாங்கினாயா, இல்லை நீ பறித்துக் கொண்டாய். மனசு மளுக் என்று முறிந்தது
“என்னை எதனாலும் வாங்க முடியாது!” என்றேன். சொல்லும் போதே என் குரல் உடைந்தது.
*