காலத்தின் பரிசுகள்

maalan_tamil_writer

நெடுஞ்சாலை ஒன்றில் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தது ஒரு குதிரை. அது வரும் வேகத்தைக் கண்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டுப் போனான்.

குதிரை மீது அமர்ந்திருப்பவனைப் பார்த்துக் கூவினான்: “ஏய்! எங்கே போற, இவ்வளவு வேகமா?” அதற்குக் குதிரை மேலிருந்தவன் சொன்னான்:

“ என்னைக் கேட்டா? குதிரையைக் கேளு!”

நாம் வாழ்க்கையை நடத்துவதில்லை, வாழ்க்கைதான் நம்மை இழுத்துக் கொண்டு போகிறது என்பதை சொல்வதற்காக ஜென் பெளத்தர்கள் இந்தக் கதையைச் சொல்வார்கள்

அது சரியா தவறா என்பதைத் தனியாக ஒருநாள் விவாதிக்கலாம். ஆனால் இந்திய வரலாற்றைப் பார்த்தால் சம்பவங்கள்தான் கட்சிகளின் தலைமைகளைத் தீர்மானிக்கின்றன. விரும்பியோ, விரும்பாமலோ கட்சிகள் அந்தத் தலைமையை ஏற்றுக் கொண்டு நடக்கின்றன. பெரியாருடைய திருமணம் நடக்காமலிருந்தால் திமுக என்ற கட்சியும் அண்ணாதுரை என்ற தலைவரும் அரசியல் அரங்கில் உதயமாகியிருந்திருக்க மாட்டார்கள்.அண்ணாவின் மறைவு நிகழாது போயிருந்தால் கருணாநிதி திமுகவை வழி நடத்த வந்திருக்க மாட்டார். எம்,ஜி,ஆர். கணக்குக் கேட்காமல் இருந்திருந்தால் அதிமுக தோன்றியிராது.. 1989 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டித் தொகுதியில் ஜானகி ராமச்சந்திரன் வெற்றி பெற்றிருந்தால் ஜெயலலிதாவின் வளர்ச்சி தாமதப்பட்டிருக்கக் கூடும். சஞ்சய் காந்தியின் விமான விபத்து ஏற்படாமல் போயிருந்தால் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்திருக்க மாட்டார். இந்திரா காந்தியின் மரணம் நிகழாது இருந்திருந்தால் ராஜீவ் பிரதமர் ஆகியிருக்க மாட்டார். புஜ்ஜில் 2001ல் நிலநடுக்கம் நேராது இருந்தால், மோதி குஜராத்தின் முதல்வராகவோ பின் பிரதமராகவோ ஆகியிராமல் இருந்திருக்கக் கூடும். சம்பவங்கள் என்ற குதிரை வரலாற்றை இழுத்துக் கொண்டு ஓடுகிறது.

அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்தி போன்றோரைப் போலல்லாது ஸ்டாலின் திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வருவது முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. கருணாநிதியின் வாழ்நாளின் போதே அவருக்குப் பின் கட்சியை வழிநடத்தப் போவது யார் என்று அவரது கட்சியினருக்கு மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தே இருந்தது. ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு முன்பே அவர் கட்சியில் உயர்ந்து வருவதற்கான படிகள் அமைக்கப்பட்டுவிட்டன.

1981ஆம் ஆண்டு மதுரை ஜான்சி ராணிப் பூங்காவில் திமுக இளைஞர் அணி அமைப்பு கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது ‘ இளைஞர் அணி என்பது வாழைக்குக் கன்றல்ல, ஆலுக்கு விழுது” என்று அப்போது கருணாநிதி குறிப்பிட்டார் அன்று இந்த அமைப்பில் தலைவர், செயலாளர் பதவிகள் கிடையாது.அமைப்பாளர்களாக ஏழு பேர் நியமிக்கப்பட்டார்கள் அதில் ஸ்டாலினும் ஒருவர். அப்போது நகர அளவில் மட்டுமே இளைஞரணிக் கிளைகளை அமைக்க முடியும். 15லிருந்து 30 வயதுக்க்குள் இருப்பவர்கள் உறுப்பினராகலாம் என்று அதற்கு வரைமுறைகள் வகுக்கப்பட்டன
1989ல் இளைஞர் அணி ஒன்றிய அளவில் கிளைகள் அமைக்கலாம் என்று  அதற்கு விலக்குக் கொடுக்கப்பட்டது. இளைஞர் அணியின் உறுப்பினர்களுக்குக் கட்சி திமுகவின் உறுப்பினர்கள் என்றும் அவர்களுக்கு பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் உண்டு என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஒன்றிய அளவில் இருந்து கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் வரை ஸ்டாலினுக்கு ஆதரவாக ஒரு இணை அமைப்பு உருவாக்கப்பட்டது.

பின்னர் கட்சியின் பொருளாளர், செயல்தலைவர் போன்ற முக்கியப் பொறுப்புகள் கட்சிக்குள்ளும், சட்டமன்ற உறுப்பினர், மேயர், அமைச்சர், துணை முதல்வர் என்ற பதவிகளும் அளிக்கப்பட்டன.

எனவே கருணாநிதி மறைந்த பின் கட்சியின் தலைவராக அவர் பொறுப்பேற்றபோது எவருக்கும் ஆச்சரியம் ஏற்படவில்லை. மாறாக அவர் நெடுங்காலம் காத்திருக்க வைக்கப்பட்டார் என்ற உணர்வே ஊடகங்களில் எதிரொலித்தன.

முழு அதிகாரத்தோடு கட்சியின் தலைவராக ஸ்டாலின் பதவியேற்று கடந்த வாரம் ஓராண்டு நிறைந்தது.இந்த ஓராண்டில் அவர் கட்சியை எப்படி வழி நடத்தியிருக்கிறார்?

பொதுவாகக் கட்சிக்காரர்களிடம் மனநிறைவு நிலவுகிறது. மக்களவைத் தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றியையடுத்து கூட்டணிக் கட்சிகளிடம் நம்பிக்கை நிலவுகிறது அவர்கள் ஓராண்டில் ஸ்டாலினின் சாதனைகளாகக் கீழே உள்ள அரசியல் நடவடிக்கைகளைப் பட்டியலிடுகிறார்கள்.

1.கருணாநிதி போன்ற ஒரு பெரிய ஆளுமையின் கீழ் வெகுகாலம் இருந்த கட்சியை அவர் மறைவிற்குப் பிறகு எந்தச் சேதமும் இல்லாமல் காப்பாற்றியது

2. மூன்றாண்டுகளுக்கு முன் சட்டமன்றத் தேர்தலில் தங்களுடன் முரண்பட்டு நின்ற கட்சிகளையும் தன் பக்கம் கொண்டுவந்து ஒரு வலுவான கூட்டணியை வெற்றிகரமாக அமைத்தது.

3. மேடைப் பேச்சு நின்றுவிடாமல், காலத்திற்கு ஏற்ற வகையில் திண்ணைப் பிரசாரம் முதல் சமூக ஊடகங்கள் வரை பிரச்சாரம் செய்து நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

4.கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருக்கும் நடவடிக்கையைக் கண்டித்து கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டிக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது; டெல்லியில் தேசியகட்சிகளும் பங்குபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியது இவை பாஜக எதிராக வலுவான நிலையை திமுக எடுத்திருப்பது

ஆனால் இவற்றை “சாதனை”களாகக் கருதிவிட முடியுமா?

1.கருணாநிதி காலத்திலேயே அடுத்த தலைவர் யார் எனக் கட்சிக்காரர்களுக்குத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுவிட்டது. கட்சிக்குள் அவருக்குப் போட்டியாக எழக்கூடிய அழகிரி போன்றவர்கள் கருணாநிதியின் வாழ்நாளின் போதே விலக்கி வைக்கப்பட்டுவிட்டார்கள். ஸ்டாலின் செயல்தலைவராக நியமிக்கப்படும் முன்னரே, கருணாநிதி இருந்த போதே,அவரது ஆசியுடன், கட்சியை ஸ்டாலின் தன் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டார். எனவே கட்சியில் புரடசிகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை. கட்சியைப் பிளந்து கொண்டு போகிறவர்கள் அரசியல் ரீதியாகப் பலன் பெறுவதில்லை என்பதைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பழைய உதாரணம் வைகோ. இடைக்கால உதாரணம் வாசன் சமீபத்திய உதாரணம் தினகரன். அரசியல்வாதிகள் இவற்றையெல்லாம் அறியாத முட்டாள்கள் அல்ல.

ஸ்டாலின் கட்சியில் வாரிசு அரசியலை ஊக்கப்படுத்திவருகிறார் என்ற முணுமுணுப்புக்கள் கட்சிக்குள் இருக்கின்றன

2. இன்று திமுகவின் கூட்டணியில் உள்ள,முன்னாள் மக்கள்நலக் கூட்டணியில் இருந்த மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்கள் போன்ற கட்சிகளுக்கு திமுகவைத் தவிர வேறென்ன வாய்ப்புக்கள் இருந்தன? அவை ‘சர்வைவல்’ பிரசினையைச் சந்தித்துக் கொண்டிருந்தன. காங்கிரசும்தான்.இந்தச் சூழ்நிலையை ஸ்டாலின் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

3. ஸ்டாலின் பிரச்சாரம் மக்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அலங்காரமான நடையில், ஆங்காங்கே சில கிளுகிளுப்புக்களைத் தூவி மேடைகளில் பேசி ஆட்சியப் பிடித்த கட்சியிடம் ஏற்பட்டிருக்கும் காலத்திற்கு ஏற்ற மாற்றத்தை ஸ்டாலின் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டார். அதற்கு இப்போதெல்லாம் மக்கள் அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சின் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர் அவரது தந்தையைப் போல ஒரு வசீகரமான பேச்சாளர் அல்ல என்பதும் ஒரு காரணம். அவர் பேசிய நேரங்களில் கண்ணியக் குறைவான சொற்கள் இடம் பெற்றன என்பதையும் மறப்பதற்கில்லை.

தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது உண்மைதான் தமிழ்நாட்டு அரசியலில் இது போன்ற landslide வெற்றிகள் புதிது அல்ல. (1984 (37), 1989 (38) 1991 (38) 2014 (37) ஆகிய தேர்தல்களில் அதிமுக கூட்டணியும் 1996ல் (39) திமுக கூட்ட்ணியும் இது போன்ற வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. ஆனால் 1996 தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் வென்ற திமுக 1998ல் 9 இடங்களை மட்டுமே பெற்றது. இருதுருவ போக்கு நிலவும் தமிழக அரசியலின் இயல்பு இது.

ஸ்டாலினின் திறன் என்பது அவர் நாட்டில் நிலவும் சூழ்நிலைகளை எவ்வளவு தூரம் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதைக் கொண்டே அளவிடப்படவேண்டும். நாட்டில் நிலவும் யதார்த்தம் தெரியாமல் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது; தேர்தல் மேடைகளில் மாநில அரசு கவிழும் எனச் சொல்லித் தோல்வி கண்டது இவை கள நிலைமைகளைப் புரிந்து கொள்ளும் தலைவராக ஸ்டாலின் பரிணமித்திருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்புகிறது.

4.அகில இந்திய அளவில் திமுக பாஜகவிற்கு எதிரான நிலை எடுப்பது ஒன்றும் வியப்பிற்குரியது அல்ல. ஆனால் அகில இந்திய அரசியலில் திமுகவின் நிலை எப்போதும் நிரந்தரமாக இருந்ததில்லை. 1976ல் எமெர்ஜென்சியின் போது காங்கிரஸை எதிர்த்த திமுக, அடுத்த தேர்தலில்,1980ல் காங்கிரஸோடு கூட்டு வைத்துக் கொண்டது. 1989ல் காங்கிரஸை எதிர்த்து தேசிய முன்னணி. 1998ல் பாஜகவோடு கூட்டணி 2004ல்  பாஜகவிற்கு எதிராக மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில். காங்கிரஸ் மேலும் பலவீனப்பட்டால், அல்லது பாஜக மேலும் வலுப்பெற்றால் திமுகவின் பாஜக எதிர்ப்பு நீடிக்குமா எனப் பார்க்க வேண்டும்

ஸ்டாலினின் ஓராண்டு சாதனைகள் என்று சொல்லப்படுபவையெல்லாம் காலம் அவருக்கு அளித்துள்ள பரிசுகள்.அதை அவர் தக்க வைத்துக் கொள்வதையும் அது கண்காணித்து வரும்  

12.92019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.