10
காந்தி இல்லை, ஹிட்லர் உண்டு
நாள் முழுக்க வேலை செய்து களைத்துப் போன ரோஸ்பார்க் வீட்டிற்குப் போவதற்காக பஸ் ஸ்டாப்பிற்கு வந்தார். நீண்ட நேரம் காத்திருந்தார். பஸ் வருவதாகக் காணோம். கடுகடுத்த கால்கள் கெஞ்சின. ஓய்வு கொடு என்று உடம்பு போராடியது. ராத்திரி சாப்பாட்டிற்கு அடுப்பு மூட்டியாக வேண்டும். வேலை வேலை, வேலையே வாழ்க்கை.
ஒரு வழியாக பஸ் வந்தது. உட்கார இடமும் இருந்தது. “இன்னிக்கு அதிர்ஷ்டம்தான்” என்று நினைத்துக் கொண்டே சீட்டில் உட்கார்ந்து ஆற அமரக் காலை நீட்டித் தடவிக் கொண்டார். பஸ்சில் தனக்குக் கிடைத்த இடம் வரலாற்றில் தனக்குக் கிடைக்கப் போகும் இடத்தின் முன்னோட்டம் என்பது அப்போது அவருக்குத் தெரியாது.
பஸ், இரண்டு நிறுத்தங்கள் தாண்டியதும் நாலைந்து வெள்ளைக் காரர்கள் பஸ்சில் ஏறினார்கள். அவர்களுக்கு உட்கார இடம் இல்லை. ரோஸ் பார்க்கை எழுந்திருக்கச் சொல்லிக் கட்டளை இட்டார்கள். காரணம், அவர் கறுப்பு மனுஷி. ரோஸ்பார்க் அசையவில்லை. மிரட்டிப் பார்த்தார்கள். அவர் சீட்டை விட்டு எழுந்திருக்கவில்லை. சர்ச்சை சண்டையாக முற்றியது. போலீஸ் வந்து ரோஸ் பார்க்கைக் கைது செய்து கொண்டு போயிற்று. வீட்டிற்குப் போய்ப் படுத்துத் தூங்கப் போகிறோம் என்று நினைத்த ரோஸ்பார்க், போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பிற்குப் போனார். காரணம், அவர் ஒரு கறுப்பர் இனத்துப் பெண்.
செய்தி பரவியது. அந்த ஊரில், சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்துகிற ஒரு பாதிரியார் இருந்தார். நிறையப் படித்த மனிதர். பஸ்சில் நடந்த சம்பவம் அவருக்குத் தென்னாப்பிரிக்காவை ஞாபகப்படுத்தியது. அங்கே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற இந்திய பாரிஸ்டர் ஒருவரை – பின்னாளில் மகாத்மா காந்தி என்று உலகம் தலைவணங்கி நின்ற ஒருவரை – கறுப்பர் என்ற காரணத்திற்காக ரயிலில் இருந்து வெளியே தூக்கிப் போட்டதும், அவர் அதை எதிர்த்துக் போராடியதும் நினைவுக்கு வந்தது. இந்தக் கறுப்புப் பாதிரியும், காந்தியைப் போல போராடத் தீர்மானித்தார். அதாவது கத்தியின்றி, ரத்தமின்றி ஆம் அஹிம்சை வழியில்.
காந்தியின் பாணியில் “புறக்கணிப்புப் போராட்டம்” அறிவித்தார். கறுப்பர்கள் தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை பஸ்சில் ஏறக்கூடாது, அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு கொடுத்தார். இதெல்லாம் நடக்கிற விஷயம் இல்லை என்று பலர் நினைத்தார்கள். காரணம், பஸ்சில் போகவில்லை என்றால் வேலைக்கு நடந்துதான் போகவேண்டும். ஏனெனில் கறுப்பர்களில் பல பேரிடம் கார் கிடையாது. அவர்கள் ஏழைகள்.
ஆனால் அந்த ஏழைகள் நடக்கிற விஷயத்தைச் செய்தார்கள். ஆம், வேலைக்கு நடந்து போகத் துவங்கினார்கள். ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல, 381 நாட்கள் ! நாளாக நாளாக போராட்டம் தளர்ச்சி காணவில்லை. மாறாக வலுப்பெற்றது. காரணம், கறுப்பு இனத்தவர்கள் கூட்டமாக நடக்கத் துவங்கினார்கள். சைக்கிளில் போகத் துவங்கினார்கள். சொந்தமாக டாக்சி ஓட்டிக் பிழைத்துக் கொண்டிருந்த கறுப்பின டாக்சி டிரைவர்கள் ஓசியில் கறுப்பின மக்கள் ஏற்றிக் கொண்டு போய் வேலை செய்கிற இடத்தில் இறக்கி விட்டார்கள். இதனால் எல்லாம் அவர்களிடையே தோழமை வளர்ந்தது. தனித்தனி நபர்களாகத் தங்களைக் கருதிக் கொண்டிருந்தவர்கள் இப்போது தங்களை ஒரு சமூகமாக உணரத் தலைப்பட்டார்கள். அதனால் போராட்டம் வலுப்பெற்றது. கடைசியில் வென்றது.
இது ஏதோ கதையல்ல, வரலாறு, நாற்பது வருடத்திற்கு மார்ட்டின் லூதர் கிங் நடத்திய போராட்டம் கறுப்பின மக்களை மட்டுமல்ல, அமெரிக்காவையே விழித்துக் கொள்ளச் செய்தது என்பது கதையல்ல, வரலாறு.
ஆனால் இன்று அது கனவாய் பழங்கதையாய்ப் போய்விடுமோ என்றுதான் தோன்றுகிறது. காரணம், இன்னும் கறுப்பு இனமக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பஸ்சில் இடம் கேட்டு அல்ல. அதிகார அமைப்பில் இடம் பிடிக்க; பிடித்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள, கல்லூரிக்குள் நுழைய, படிப்பைப் பாதியிலேயே விட்டுவிடாமல் இருக்க. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்பது பொருளாதார, வர்த்தக விஷயங்களை அலசுகிற தினசரி. அது ஒரு ‘சர்வே’ நடத்தியது. 35 , 242 நிறுவனங்களின் பணித்துறை – பெர்சனல் டிபார்ட்மெண்ட்- ஆவணங்களை ஆராய்ந்தது. இந்த நிறுவனங்கள் எல்லாம் பெரிய நிறுவனங்கள். இவை எல்லாவற்றிலுமாகச் சேர்ந்து 4 கோடி பேர் வேலை செய்கிறார்கள். இது கிட்டத்தட்ட அமெரிக்காவில் வேலை செய்பவர்களில் 30 சதவீதம் (அதனால்தான் இந்தக் கணக்கு முக்கியத்துவம் வாய்ந்தது). இந்த நிறுவனங்களில் வேலை செய்து வந்த கறுப்பர்களில் 65 சதவீதம் பேர் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் வேலை இழந்திருக்கிறார்கள். ஏன்?
“பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தளர்ச்சி” (Recession) என்று இந்தக் கம்பெனிகள் காரணம் சொல்கின்றன. அப்படியானால், அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய இனத்தவர்கள், செவ்விந்தியர்கள் இவர்களின் எண்ணிக்கை – குறையவில்லை என்பது மட்டுமல்ல அதிகரித்திருக்கிறதே அது எப்படி?
நமக்கெல்லாம் இது புதிதாகத் தோன்றலாம். ஆனால், கறுப்பு இனத்தவர்களுக்கு இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. வில்லியம் ராஸ்பெரி என்பவர், கறுப்பினப் பத்திரிகையாளர்களில் ஒருவர். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், வாரா வாரம் கட்டுரை எழுதுகிற பத்திரிகையாளர். அவர் சொன்னார் : “கறுப்பர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவது இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வேண்டுமென்றே சில சமயம் பல நேரங்களில் அந்த எண்ணத்தோடு பலர் செயல்படுவதில்லை என்று வைத்துக் கொண்டாலும், நிகர விளைவு என்னவோ அதுதான்”. அவர் ஒரு உதாரணமும் சொன்னார். ஒரே வயது, ஒரே தகுதி, ஒரே அளவு அனுபவம் உள்ள வெள்ளைக்காரர் ஒருவரும், கறுப்பர் ஒருவரும் வேலைக்கு மனுப் போட்டால் வெள்ளைக்காரரைத்தான் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கின்றன என்பதுதான் அந்த உதாரணத்தின் சாராம்சம்.
நிறுவனங்களில் உள்ள அதிகாரிகளிடம் பேசினால், “தரம்” திருப்திகரமாக இருப்பதில்லை என்று குறைப்பட்டுக் கொள்ளுகிறார்கள். இந்த ‘‘தரம்” என்ற வாதத்தை, நாம் மண்டல் பிரச்சினை பற்றியெறிந்தபோது இந்தியாவில் நிறையவே கேட்டோம்.
ஸ்பைக் லீ என்று ஒரு சினிமா டைரக்டர் இருக்கிறார். அவர் மாணவராக திரைப்படக் கல்லூரியில் இருந்தபோது எடுத்த படத்திற்கு அந்த ஆண்டின் சிறந்த பட விருது கிடைத்தது. தொழில் நுட்பம், கலைத் தேர்ச்சி, விஷய ஞானம் கொண்டவர் என்று பத்திரிகைகள் விமர்சனங்கள் எழுதின. அவர் கறுப்புதான்.
அவர் எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தார். “கறுப்பர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதை ஏற்றுக்கொள்ள இந்த தேசம் தயாராக இல்லை” என்று சொன்னார். “இன்னமும் எல்லோருடைய அடிமனத்திலும் ஆண்டான், அடிமை மனப்பான்மையின் மிச்ச சொச்சங்கள் நட்புக் கொண்டு இருக்கின்றன” என்கிறார் லீ. “எனக்குப் பரிசு கிடைத்தது. ஆனால் அதற்குப் பிறகும் படங்கள் கிடைக்கவில்லை” என்றார். நிறை கஷ்டத்திற்குப் பிறகு 13 ஆயிரம் டாலர் செலவில், ஒரு படம் எடுத்தார். அந்தப் படம் எண்பது லட்சம் டாலர் சம்பாதித்தது. இப்போது மூன்றரை கோடி டாலர் பட்ஜெட்டில் படம் எடுத்துத் தரும்படி ஹாலிவுட்காரர்கள் அவரை மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கறுப்பு இனத்தவராக இருக்கிறோம் என்பதால் அவருக்கு ஏதாவது மனத்தடைகள் – Complex – இருக்கிறதா என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்குக் காரணம் உண்டு. இந்த வருடம் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர் டோனி மாரிசன் என்ற பெண் எழுத்தாளர். கறுப்பினத்தவர். “கடவுளே, எனக்கு நில நிறக் கண்களைக் கொடு. அப்போதாவது பார்க்கிறவர்கள் அழகானவள் என்று என்னை மதிக்கட்டும். அன்பு செலுத்தட்டும்” என்று ஒரு கறுப்பினப் பெண் குழந்தை கடவுளிடம் வேண்டிக் கொள்கிற உருக்கமான கதையைப் பல வருடங்களுக்கு முன்பு அவர் எழுதியிருந்தார். அந்தக் குழந்தையின் மனநிலையில் தான் இருந்தது உண்டு என்று ஒரு முறை அவர் சொல்லியும் இருந்தார். அதனால், லீயிடம், கறுப்பாக இருப்பதால் உங்களுக்கு எதும் காம்ப்ளக்ஸ் உண்டா என்று கேட்டேன்.
“இங்கு எல்லோரும் அப்படி ஒரு மனநிலையில்தான் வளர்கிறோம். எங்கள் அடிமனத்தில் வெள்ளைக்காரர்கள் மீது வெறுப்பு. வெள்ளைக்காரர் களுக்கு எங்கள் மீது வெறுப்பு” என்றார் லீ.
இந்த வெறுப்பைப் பற்றி – கூடவே வெறுப்பு எதையும் சாதிக்காது என்பதையும் – டோனி மாரிசன் நிறையவே எழுதியிருக்கிறார். விவசாயக் கூலியான அவரது அப்பாவால் நான்கு டாலர் வாடகை கொடுக்க முடியாமல் போனபோது அவர்கள் குடும்பத்தையே வீட்டுக்குள் வைத்து உயிரோடு எரிக்க முயற்சி நடந்தது என்று அவர் சொல்கிறார். வாடகை கொடுக்கவில்லை என்பதற்காக சொந்த வீட்டையே யாராவது எரிக்க முற்படுவார்களா? “அவர்கள் செய்தது வாடகை பாக்கிக்காக அல்ல. நாம் கறுப்பர்கள் என்பதற்காக என்று அப்பா சொல்லுவார். என்னால் அதை நம்ப முடியவல்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை” என்கிறார் டோனி மாரிசன்.
ஆனால், கறுப்பர்கள் என்பதற்காகத்தான் பழி வாங்கப்படுகிறோம் என்று நம்புகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ராட்னி லாங். கெயின்ஸ்வில் நகர கமிஷனர்களில் ஒருவர். சிட்டி கமிஷனர் என்பது ஒரு மேயர் போன்ற ஒரு பதவி. ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு நாலு வருடகாலம் பணியாற்றி மக்களிடம் அவருக்கு நல்ல பெயர். இரண்டாம் முறையும் தேர்ந் தெடுக்கப்பட்டார்.
இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாதங்களில், லஞ்ச ஊழல் என்று சொல்லி அவரைப் பதவியில் இருந்து தாற்காலிகமாக நீக்கி வைத்திருந்தார்கள். மத்திய அரசு அதிகாரிகள் வந்து ஆறு மாதம் அவரது அலுவலகத்தைக் குடைந்து பார்த்தார்கள். அவர் மீது வழக்குப் போட வேண்டிய காலக் கெடு நெருங்கிக் கொண்டே வந்தது. வழக்குப் போடுகிற நேரத்தில், லஞ்ச ஊழல் அல்ல, போதை மருந்து கடத்தினார் என்று வழக்குப் போட்டார்கள். இங்கு நீதிமன்றங்களில் ஜுரி சிஸ்டம். அதாவது, நம்மூர் பஞ்சாயத்து போல சில குடிமக்களும் (ஜுரர்கள் என்று பெயர்) நீதிபதியோடு சேர்ந்து வழக்கை விசாரிப்பார்கள். குற்றவாளியா இல்லையா என்று தீர்ப்புச் சொல்வார்கள். குற்றவாளி என்றால் என்ன தண்டனை என்று நீதிபதி தீர்ப்பு வழங்குவார். லாங் வழக்கில் ஜுரர்கள் அத்தனை பேரும் வெள்ளைக்காரர்கள்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு லாங் தவறு செய்தாரா, இல்லையா என்று தங்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்று ஜுரர்கள் சொன்னார்கள். இந்த மாதிரி முடிவாகியது என்றால், தண்டனை கிடையாது. ஆனால் பதவியும் வகிக்க முடியாது. லாங் மேல் கோர்ட்டில் முறையீடு செய்தார். அவர் பதவிக்காலம் முடிய இரண்டு மாதம் இருக்கும் போது அவர் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு வந்தது. அவர் மீண்டும் போட்டியிட முடியாது. ஏனெனில் அமெரிக்காவில் எந்தப் பதவியையும் ஒருவர் தொடர்ந்து இரண்டு முறைதான் வகிக்க முடியும்.
“கறுப்பர்களை அதிகார பீடத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கு அமெரிக்கா நெடுகிலும், திரைமறைவில் சதி நடக்கிறது” என்கிறால் லாங்.
அவர் அப்படி நினைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 1993-ல் பாராளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை மாற்றி அமைத்தார்கள். அதன்பின் நடந்த தேர்தலில், பாராளுமன்றத்தில் கறுப்பு இனத்தவர்கள் எண்ணிக்கை 50 சதவிதம் அதிகரித்தது. 26 கறுப்பு இனத்தவர்கள் இருந்த இடத்தில் இப்போது 39 கறுப்பு இனத்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகிக்கிறார்கள். வட கரோலினா போன்ற மாநிலங்களில் கடந்த நாலு வருடங்களில், கறுப்பு இனத்தவர் ஒருவர் கூட பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. இப்போது முதன் முறையாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தொகுதிகளை இப்படி மாற்றி அமைத்ததை எதிர்த்து இப்போது வட கரோலினா, லூசியானாஇ ஜார்ஜியா, புளோரிடா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் வழக்குகள் நடக்கின்றன. இந்த வழக்குகளின் தீர்ப்பு தேர்தல் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும்.
கறுப்பினத்தில் வெற்றி பெற்றவர்களை ஆராய்ந்து பார்த்தால், அவர்களது வெற்றிக்குப் பின் ஒரு போராட்டம் இருக்கும். ரோஸ்பார்க், மார்ட்டின் லூதர் கிங், ஸ்பைக் லீ, டோனி மாரிசன், ராட்னி லாங் எல்லோரும் ஒரு போராட்டத்திற்குப் பின்னர்தான் வெற்றியை அடைந்தார்கள். ஆனால் தோற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது.
பள்ளிப் படிப்பை முடித்த கறுப்பின இளைஞர்களில் முப்பது சதவீதம் பேர்தான் கல்லூரிக்குப் படிக்க வருகிறார்கள். இந்த எண்ணிக்கை 1980-களில் இருந்ததைவிடக் குறைவு. 1960-களில் நடந்த போராட்டத்திற்குப் பிறகு எழுபதுகளில் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. எண்பதுகளில் தேங்கி நின்றது. இப்போது மடமடவென்று வீழ்ந்து கொண்டு வருகிறது.
“பண வசதி இல்லாததுதான் காரணம்” என்று விளக்குகிறார் யுனைட்டட் நீக்ரோ காலேஜ் பண்ட் என்ற அமைப்பின் தலைவர் வில்லியம் கேரி. “அமெரிக்காவிற்கு ஜலதோஷம் பிடிக்கிறது என்றால் கறுப்பினத்தவருக்கு ஜன்னியே கண்டுவிடும். அதாவது தேசத்திற்கு ஏற்படும் ஒரு சிறு பாதிப்புகூட எங்களுக்குப் பேரிடியாக அமைந்துவிடும். இரண்டு வருடங்களாக அமெரிக்கப் பொருளாதாரத்தில் தளர்ச்சி. எங்களுக்கோ அது பெரிய வீழ்ச்சி. சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் போது படிப்பிற்கு எங்கே போவது?” என்கிறார் அவர்.
வேலை இருந்தால்தான் வருமானம், வருமானம் இருந்தால்தான் படிப்பு, படிப்பு இருந்தால்தான் வேலை என்ற சுழலில் இன்று அமெரிக்கக் கறுப்பினம் சிக்கிக் கொண்டிருக்கிறது.
பிரச்சினை சிக்கலாகிக் கொண்டே போகும்போது தீர்பு கடினமாகிக் கொண்டே போகிறது. தீர்வு இல்லை என்ற அவநம்பிக்கை எழும்போது ஆத்திரம் பீறிட்டு எழுகிறது.
“அதுதான் சரி ; செய் !” (Do the Right) என்று ஸ்பைக்லீயின் படம் ஒன்று, வன்முறைதான் தீர்வு என்கிறது. ஃபாரக்கான் என்று ஒருவர். கறுப்பின இஸ்லாமியர்களின் தலைவர். பரபரப்பூட்டும் கருத்துகளை (“மாளிகைக்குள் இருந்து கொண்டு படித்தவர்கள் செய்யும் திருட்டுத்தனங்களைக் கண்டு கொள்ளாத அரசாங்கம், வயிற்றுக்கில்லாதவர்கள் வன்முறையில் இறங்கும்போது அவர்களைக் கடுமையாகத் தண்டிக்கிறது.’‘ “அமெரிக்கா கல்விக்குச் செலவழிக்கும் பணம் குறைவு. சிறைத்சாலைக்குச் செலவிடும் பணமோ ஏராளம்”) மேடை போட்டுப் பேசி வருகிறார். அமெரிக்கக் கறுப்பினத்தவரின் துன்பங்களுக்கு யூதர்கள்தான் காரணம். அவர்களை ஒழித்துக் கட்டினால்தான் கறுப்பினத்தவருக்கு மீட்சி என்பது அவரது சித்தாந்தம். அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. அவரை விமர்சிப்பவர்கள் கூட அவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.
மார்ட்டின் லூதர் கிங்கைப் போல இவரும் ஒரு மதத் தலைவர்தான். ஆனால் இவரது ஆதர்சம் காந்தி இல்லை. ஹிட்லர். “ஹிட்லர் ஒரு மகத்தான் தலைவர்” என்று பகிரங்கமாகவே பேசி வருகிறார்.
இன்றைய அமெரிக்காவில் வெள்ளைக்காரர்கள் மீது கறுப்பர்களுக்கு ஆத்திரம். கறுப்பர்களைக் கண்டு வெள்ளையர்களுக்குப் பயம். இங்கே இன்று காந்தி இல்லை ; ஹிட்லர் உண்டு. எதிர்காலம் என்னவாகும்?