கவசம்

maalan_tamil_writer

   “ திஸ் இஸ் டூ மச் ” என்று வீறிட்டாள் மைதிலி.  கையில் இருந்த செய்திப் பத்திரிகை எகிறிப்போய் விழுந்தது. கலவரத்துடன் எட்டிப் பார்த்தாள் சாவித்ரி. ‘ அறிவு ஜீவிகள்  கிளப் ’  மொத்தமும்  கூடத்தில்  ஆஜராகியிருந்தது.

அறிவுஜீவிகள்  என்றால்  ஏதோ  தலையில்  கொம்பும்,  முதுகில் வாலும் முளைத்த ஆசாமிகள் அல்ல. பத்திரிகைக்காரர்கள் சித்திரம் போடுகிற மாதிரி அழுக்கு ஜீன்ஸும் கறுப்புத் தாடியுமாக உலவுகிற இளைஞர்கள் அல்ல. எல்லோரும் நடுவயதுக்காரர்கள். எம்.எஸ்ஸி., பி.எச்டி., என்று பெரிய படிப்புப் படித்து வெள்ளைச் சட்டை  மாட்டிக்கொண்டு  ஆபீஸ்  போய்  நாலு  இலக்கம்  சம்பாதிக்கிற  அறிவுஜீவிகள்.

மேதைகள் என்று அவர்கள் தங்களைச் சொல்லிக் கொண்டதில்லை. அதுகூட சாவித்ரி வைத்த பெயர்தான். கல்யாணம் ஆன புதிதில் சம்பத் ஒரு தரம் சொன்னான். “தடித்தடியா வெறுமனே அரட்டைக்கு வருகிறார்கள் என்று நினைத்துக் கொள்ளாதே. அவனவன் ஜயண்ட்ஸ்,  புத்திசாலி,  ராட்சன்கள்,  கிருஷ்ணன் – ஐ.ஐ.டி.-யில் பி.எச்டி., வசந்த் – பாங்க் அதிகாரி, நந்தா – கல்கத்தா பத்திரிகையின்  சென்னை  நிருபர். மின்னி – டாக்டர். மைதிலி – எக்னாமிக்ஸில் எம்ஃபில். ஒரு யுனெஸ்கோ திட்டத்தில் இங்கு வந்திருந்தாள்.  ஒரு  நாள்  உட்கார்ந்து  பேசிப்  பாரேன் ”

சாவித்ரி பேசிப் பார்த்தாள். சந்தேகமில்லை. எல்லோரும் சற்று முற்றிய புத்திசாலிகள். வெறும் புத்தகப் படிப்பாய் படித்து நலுங்கிப் போய்விடாமல், சுய சிந்தனையில் தீட்டித் தீட்டி மூளையைக் கத்தி போல் வைத்திருந்தார்கள். ஒரு பிரச்னையை எடுத்தால் வெறுமனே செய்தித்தாள் வாசிப்புப் போல் மேலோட்டமாய்ப் புரட்டிவிட்டு ஓய்ந்து விடுகிற ரகம் கிடையாது.  அக்கக்காய்க்  கழற்றுவார்கள். கட்சி கட்டிக் கொண்டு காமன் பண்டிகை நடக்கும். நாத்தனாரும் மதனியும் பேசிக் கொள்கிற மாதிரி இருக்கும். ஒருவரை ஒருவர் வாரிக் கொள்வார்கள். அதில் விரோதம் இராது. அவ்வப்போது  புகழ்ந்து  தள்ளுவார்கள் ;  அதில்  உண்மை  இராது.

சில்லறைத் தட்டுப்பாடு, பஞ்சாப் பிரச்சினை, தக்காளி விலையேற்றம், சில்க் ஸ்மிதா… எல்லாவற்றுக்கும்  காரணம்  இந்த சிஸ்டம்தான் என்பதை அவர்கள் சாவித்ரிக்கு விவரமாகச் சொன்னார்கள். சமூக அமைப்பு மாறினால் ஒழிய நமக்கு விமோசனம் இல்லை என்று சத்தியம் செய்தார்கள். ‘ கம்யூனிஸ்டுகளோ என்று அவ்வப்போது சாவித்ரிக்குச் சந்தேகம் வரும். சம்பத்திடம் கேட்டபோது , ‘‘ சேச்சே ! இவர்கள் அறிவுஜீவிகள் ”  என்று  பதில்  வந்தது.  அன்றில் இருந்து சாவித்ரியும் அவர்களை அறிவுஜீவிகள் என்றே அங்கீகரித்துக் கொண்டாள். அறிவு ஜீவிகள் கிளப் அடிக்கடி கூடி, அத்தனை பிரச்சினைகளுக்கும் ஆணி வேர், அமைப்பு முறைதான் என்று நிரூபித்துவிட்டு  சாவித்திரி  வீட்டில்  டீயும்  சப்பாத்தியும்  சாப்பிட்டுவிட்டுக் கலைவார்கள்.

“ உன்னை யாரோ கற்பழித்துவிட்ட மாதிரி ஏன் இப்படிக் கத்தறே ? ”  என்று மைதிலியைக் கடிந்து கொண்டான் வசந்த். ‘ அவளை ஒருவன் கற்பழிக்கணும்னா அவனுக்கு  எக்கச்சக்கமா  கற்பனை  வேணும் . ”

அவளுடைய  ஆண்பிள்ளைத்தனமான  உடம்பைப்  பார்த்து முறுவலித்தாள் மின்னி.

“ ஸ்டாப்  இட்.  ரேப்பிங்காவது  பரவாயில்லை.  அது  ஒரு  தனிப்பட்ட  பெண்  மீது ஒரு சில கணங்கள் நிகழ்த்தப்படும் உடல்ரீதியான வன்முறை. அநேகமாக அது ஆக்ஸிடெண்டல்.  ஆனால் இது ?  இது …  திஸ்  இஸ்  நத்திங்  பட்  மென்டல்  வயலன்ஸ் !  அதுவும் இன்டென்ஷனல் ! பெண்  சமூகத்தின்  மீது  அரசாங்கம்  நிகழ்த்தும் வன்முறை ! ”

நந்தா, மின்னி, வசந்த் எல்லோரும் அவள் காட்டிய செய்தியைப் படித்தார்கள். இரண்டு சக்கர வாகனங்களின் பின்னால் அமரும் பெண்கள் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னது செய்தி. “ சமூகத்தில் ஆண் சமூகம்,  பெண்  சமூகம்  என்று  உண்டா  என்ன ? ”

“ உயிர்களில் ஆணென்றும் பெண்ணென்றும் உண்டா என்ன ? ” – பதிலுக்கு இரைந்தாள் மைதிலி.

“ ஏய் !  புரிந்து கொள்.  இது  உங்களுக்குத்  தரப்பட்டிருக்கும்  சலுகை ! ”

“ சலுகை  எதற்கு ?  சாவதற்கா ?

“ உன்னால புத்திசாலித்தனமாகத்தான் பேச முடியாது. புரியும்படியாகக் கூடவா பேசக்கூடாது ? ”

“ விபத்து நடக்கும்போது பெண்கள் செத்தால் பரவாயில்லை. ஆண்கள் மட்டும் பிழைத்துக் கொள்ளவேண்டும் என்று அரசாங்கம் நினைப்பது உனக்கு புரியவில்லையா ? ஒன்று நீ முட்டாளாயிருக்கு வேண்டும் அல்லது ஒரு மேல் ஷாவனிஸ்ட் ஆக இருக்க வேண்டும், அரசாங்கத்தைப் போல ! ”   “ என்னைத் திட்டு !  உன் ஜென்மம் சாபல்யமாகும். அரசாங்கத்தை ஏன் சபிக்கிறாய் ?  அவர்கள் உங்களுக்குத் தந்திருக்கும் சலுகைகள் எத்தனை ? ”

“ எத்தனை ?  எனக்கும்  தான்  சொல்லேன் ? ”

“ பஸ்ஸில் இருந்து பல்கலைக்கழகம் வரை எல்லாம் தனி. இப்ப புதுசா பெண்களுக்காகப்  பிரத்தியேகமாக  ஒரு  பல்கலைக்கழகம்  வேறு ? ”

“ அது  எங்களுக்குச்  செய்யப்பட்ட  இன்னொரு  இன்சல்ட் ! ”

“ அப்படி  என்ன அகௌரவம் ?  அது  வீக்கர்  செக்ஸ்  என்பதன்  சலுகை . ”

“ உங்களோடு ஓடுவதில் நாங்கள் பலவினர்களாக இருக்கலாம். அது உடம்பின் அமைப்பு :  ஆனால் படிப்பதில் அல்ல, எந்த ஆணையும் எங்களால் அறிவில் ஜெயிக்க முடியும்.  பத்தாம்  வகுப்பு  ரிசல்ட்களைப்  பார்.  முதல்  இடம்  எல்லாம்  பெண்கள் !  ”

“ இந்த வலுவான மூளைகளைப் பாதுகாப்பானேன் என்றுதான் ஹெல்மெட் வேண்டாம் என்று சொல்லி விட்டார்களோ என்னவோ ? ”

மைதில் நெற்றிக் கண்ணைத் திறக்க இருந்தபோது மின்னி குறுக்கிட்டாள்.

“ பதறாதே  மைதிலி !  ஹெல்மெட்டுகளால்  சாவை  தவிர்த்துவிட  முடியாது ! ”

“ அரசாங்க  வைத்தியர்கள்  அப்படித்தானே  சத்தியம்  செய்கிறார்கள் ? ”

“ அது அவர்களுடைய தனிப்பட்ட அபிப்பிராயம். அபிப்பிராயங்கள் நிரூபணம் ஆகாது.  உடம்பிலேயே  கனமாக  பகுதி  தலை … ”

“ உன்னை  மனத்தில்  வைத்துக்  கொண்டு  சொல்கிறாயா ? ”

“ உஷ் !  உடம்பில் கனமாக பகுதி தலை. அதில் மேலும் எடை ஏற்றினால், பாலன்ஸ் தவறும்போது வேகமாகத் தரையில் மோதும், நியூட்டன் விதியை நியூராலாஜிஸ்ட்கள் மாற்றிவிட முடியாது. ஹெல்மெட்டே ஆளைக் கொன்ற வரலாறுகள் உண்டு, ஸ்வீடன் ஆராய்ச்சிகள், கர்நாடகா புள்ளி விவரங்கள் … ”

“ தாங்யூ டாக்டர் ! ஆனால் விவாசம் அது இல்லை. ஆணுக்கு கட்டாயம் என்று சொல்லும் அரசாங்கம், எப்படிப் பெண்ணுக்குச் சலுகை தர முடியும் ?  சாதாரண லாஜிக் – அது கூடப் பெரிய வார்த்தை – அடிப்படையான ‘காமன் சென்ஸே ’  உதைக்கிறதே ! ”

“ இதைப் படித்துவிட்டு நான்கூட கேஸ் போடலாம் என்று நினைத்தேன் ”  என்றான் சம்பத் சாவகாசமாக.

“ கமான் !  தட்ஸ் தி ஸ்பிரிட் ! ”  என்று  குதித்தாள்  மைதிலி.

“ இரு …  இரு… நீ  நினைக்கிற கோணத்தில் நான் இதைப் பார்க்கவில்லை. இது பாரபட்சம்  என்று  நான் நினைக்கிறேன். கிளியர் கேஸ் ஆஃப் டிஸ்கிரிமினேஷன் ! ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம் என்பது நம் அரசியல் சாசன விதிகளுக்கு முரணானது . ”

“ ஸோ ,  ஒரு சட்டம் அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு, தர்க்க முறைகளுக்கு உடன்பட்டதாக இருந்தால் மாத்திரம் உங்களுக்குப் போதுமானது. அப்படித்தானே ? ” – வசந்த் குரலில் கோபம் இருந்தது.

“ வேறு  எப்படி  இருக்க  வேண்டும்  என்கிறாய் ? ”

“ இந்த மாதிரியான சட்டம் கொண்டு வருவதற்கு அரசுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ! ”

“ ஏன் இல்லை ?  இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. ”

“ நான் மெஜாரிட்டி பற்றிப் பேசவில்லை. மொராலிட்டி பற்றிப் பேசுகிறேன். புத்தக ரீதியாக உரிமை இருக்கலாம். தார்மீக ரீதியாக உண்டா ? ”

“ இல்லை  என்று  எப்படி … ? ”

“ விபத்துகளில் பாதி, மோசமான சாலைகளால் நிகழ்கின்றன. நான் மட்டும் சொல்லவில்லை. புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அநேக கோர்ட் தீர்ப்புகள் சொல்கின்றன.  ஏன், அரசாங்கமே நஷ்ட ஈடு கொடுக்க வேண்டிய வழக்குகளில், தன் தரப்பு நியாயமாக இதைச் சொல்கிறது . ”

“ அதற்கும்  இதற்கும்  என்ன  சம்பந்தம் ? ”

“ ஏன் இல்லை ?  சாலைகளை மோசமான நிலையில் வைத்திருப்பது யார் ?  ஒரு விபத்து நிகழ்ந்தால் போலீஸ் என் மீது கேஸ் போடும். கார்ப்பரேஷன் மீது போடுமா ? கமிஷ்னரை கோர்ட்டுக்கு இழுக்குமா ?  சாலைகளை ஒழுங்காக பராமரிக்க முடியாத சர்க்காருக்கு, ஹெல்மெட்டைக் கட்டாயபடுத்தத் தார்மீக உரிமை எங்கே இருக்கிறது ? ”

“ நம்முடைய கார்ப்பரேஷன்கள், டெலிபோன்கள், பஸ் கட்டணங்கள், விரி விதிப்பு முறைகள், பத்திரிகைகள் எல்லாம் ஒழுங்குக்கு அப்பாற்பட்டவை என்பது உனக்குத் தெரியாதா ? ”

“ அமைச்சர்களை ஏன் விட்டுவிட்டாய் ? ”

“ இரண்டு கல்யாணம் செய்து கொண்டவர்கள் அரசு ஊழியனாகப் பணி செய்ய முடியாது என்பது பப்ளிக் சர்வீஸ் கமிஷன் விதி. ஆனால், இரண்டு பெண்டாட்டிகாரர்கள் அமைச்சர்களாக இருக்கலாம்.

“ நேற்று பேப்பரில் பார்த்தேன். ஒரு அமைச்சரின் மூன்றாவது மனைவிக்கு நான்காவது பிரசவத்தில் இரட்டைக் குழந்தை !  இரண்டு போதுமே என்ற அரசு விளம்பரங்கள் … ? ”

“ மனைவிகள்  குறித்துச்  சொன்னதில்லை  அது ! ”

“ இரண்டு குழந்தைகள் போதுமே என்று அறுவைக்கு ஆள் பிடிக்க ஆசிரியர்களை ஏவுவது இவருடைய அரசாங்கம்தான் . ”

“ எத்தனை  படித்தும் முட்டாள்தனத்தை ஜெயிக்க முடியவில்லை என்றால் உங்களை என்ன செய்யலாம் ? ”  என்றான் இத்தனை நேரம் பேசாதிருந்த பத்திரிகையாளன் நந்தா.

“ என்ன  சொல்கிறாய்  நந்தா ? ”

“ இந்தச் சட்டம்,  அரசியல் சாசனத்துக்கு முரணானது. காமன்சென்ஸுக்கு மாறானது. விஞ்ஞான ஆதாரம் இல்லாதது. ஒழுக்க நெறிகளுக்குப் புறம்பானது. எல்லாம் உங்களுக்குத் தெரிகிறது. ஆனால்,  இந்தச்  சட்டம் உங்கள் அடிமடியில் கை வைப்பது, தனி நபர் சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பது உறைக்கவில்லையா உங்கள் யாருக்கும் ? ”

எல்லோரும் மௌனமாக அவன் முகத்தைப் பார்த்தார்கள்.

“ இன்றைக்கு  ‘ உயிருக்கு ஆபத்து, ஹெல்மெட் போட்டுக் கொள் ’  என்று  சொல்லும் அரசாங்கம், நாளைக்கு ‘உடம்புக்கு ஆபத்து பாலியெஸ்டர் சட்டை போட்டுக் கொள்ளக்கூடாது என்று சொல்லாது என்பது என்ன நிச்சயம் ? ”

“ உளறாதே !  சாலை விபத்து என்பது தனி நபர் விஷயம் அல்ல, ஒரு சமூகம் சார்ந்தது . ”

“ சமூகம் சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களில் அரசாங்கம் எப்படி நடந்து கொண்டிருக்கிறது ? ’‘

“ உதாரணமாக ? ’‘

‘ குடும்பக்கட்டுப்பாடு. அது கூட சமூகத்தை, அரசாங்கத்தை நேரடியாகப் பாதிக்கிற விஷயம்தான். இரண்டு குழந்தை பெற்ற ஒவ்வொருவனும் ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்பது ஏன் சட்டமாகவில்லை? பார்க்கப் போனால், ஹெல்மெட்டைவிட எல்லா வகையிலும் முக்கியமான பிரச்சினை அல்லவா அது ? ”

“ அது வெகுஜனங்களின் நுண்ணிய உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயம். கட்டாயப் படுத்துவது சாத்தியமில்லை. பிரசாரம் தான் நடக்கிறதே … ? ”

“ மாஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கே பிரசாரம் எடுபடும் என்றால், பெரும்பாலும் படித்தவர்கள், விவரமானவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏன் பிரசாரம் முயற்சிக்கப் படவில்லை? திடீரென்று கடுமையான சட்டம் ஏன் என்பது தான் கேள்வி ? ”

“ படித்தவர்கள் தான் பிரசாரத்துக்குக் காது கொடுக்க மாட்டார்கள் . ”

“ இவ்வளவு பாமரனாக இராதே மின்னி. இந்த தேசத்தில் விளம்பரத்தின் மூலம் காயகல்பத்திலிருந்து கார்கள் வரை விற்கப்படுகின்றன. எத்தனை தலை போகிற வேலை இருந்தாலும் அத்தனையும் ஒதுக்கி வைத்துவிட்டுத் தினமும் என்ன நிகழ்ச்சி என்றாலும் மூணு மணி  நேரமாவது குடும்பத்தோடு டி.வி. முன் உட்கார்ந்திருப்பவர்கள், பெரும்பாலும் படித்தவர்கள்தான்; தி ஸோ கால்டு அர்பன் எலைட்ஸ் !  அப்புறம் ரேடியோ, செய்தித்தாள்… அரசாங்கத்தின் கையில் மீடியாவா இல்லை ? ”

மறுபடியும் எல்லோரிடத்தும் மௌனம்.

“ இதற்கு ஒரு பதில்தான் உண்டு. ஹெல்மேட் அணியப் போகிறவர்கள் மிடில் கிளாஸ்.  மிரட்டலுக்குப் பயப்படுகிற மிடில் கிளாஸ். ஞாபகம் வைத்துக்கொள்! ஜனங்களின் உயிரைப்பற்றிக் கவலைப்டுவதாக நீ சொல்கிற இந்த அரசாங்கம்தான், சில வருடங்களுக்கு முன், சைக்கிளில் இரண்டு பேர் செல்லலாம் என்று விதிகளைத் தளர்த்தியது. சைக்கிளில் இரண்டு பேர் செல்வதும் உயிருக்கு ஆபத்தான விஷயம் என்பது உனக்கும் எனக்கும்… ஏன், அரசாங்கத்துக்கும் கூட தெரியும். அப்படியிருந்தும் அதை அனுமதித்தது அரசாங்கம். ஏன்? சைக்கிள், சாதாரண மனிதனின் வாகனம்.”

“ மைதிலியின்  கேள்வியைச்  சற்று  மாற்றிக்  கேட்கிறேன்.  உயிரினில் சாதாரணன், மிடில் கிளாஸ் எல்லாம் உண்டா ?

“ கிடையாது. அரசாங்கத்தின் நோக்கம் உயிர்களைக் காப்பாற்றுவது அல்ல. அவனுக்குத் தீங்கு என்று தெரிந்தாலும் சாதாரணனுக்கு அவனுடைய விருப்பத்தை அனுமதிக்கும் அரசாங்கம். குடும்பப் பெருக்கம், லாட்டரிச்சீட்டு, சாராயக்கடை, சைக்கிள் டவுள்ஸ் எதுவானாலும் சரி, ஆனால், உனக்கோ அது எப்போதும் சுதந்திரத்தை மறுதலிக்கும். ”

“ ஏன் ? ’’

“ மிடில் கிளாஸின் ஓட்டுக்கள் ஒரு அரசாங்கத்தை உருவாக்காது. ஆனால், வெகுஜனங்களின் விரோதம் சாம்ராஜயங்களைச் சாய்த்துவிடும் . ”

“ நீ அரசியல் பேசுகிறாய் நந்தா. ”

“ ஆம்! அரசியல்தான் இங்கு எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது ! ”

கடைசியில் அந்தக் கட்டாய தினம் வந்தது. சம்பத்தும் வசந்தும் ஆளுக்கொரு தலைக் கவசம் அணிந்து ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்கள். காது, மூக்கு, வாயெல்லாம் போர்த்திமூடி, கண்ணுக்குப் புகை கண்ணாடி பொருத்திய ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு நந்தா கிளம்பியபோது, சாவித்ரி எதிரில் வந்தாள். இகழ்ச்சியாய்ச் சிரித்தாள்;

“ நீங்க அத்தனை அறிவுஜீவிகளும் அன்னிக்குப் போட்ட சத்தத்தைக் கேட்டதும், நீங்கள் எல்லாம் சட்டத்தை மீறி ஜெயிலுக்கு போயிடுவீங்கன்னு நினைச்சேன் ! ”

“ கமான் ! நாங்கள் ஹீரோஸ் இல்லை!” என்று படியிறங்கினான் நந்தா. ”

அரசாங்கத்தின் கவசம் எது என்று சாவித்ரிக்குப் பளிச்சென்று புரிந்தது.

( ஆனந்த விகடன் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.