கற்பனை யுத்தம்

maalan_tamil_writer

வெள்ளைக் குதிரைகளைச் செலுத்திக் கொண்டு வந்த மாவீரன் டான் குயிக்ஸாட் எதிரே  நெடிதுயுர்ந்து நின்ற அந்த பிரம்மாண்ட அமைப்புக்களைக் கண்டு திகைத்தான். அவை பிரம்மாண்ட காற்றாலைகள். அவற்றின் நீளமான கைகளைக் காற்று சுழற்றிக் கொண்டிருந்தது. டான் குயிக்ஸாட் வீரன்தான். ஆனால் முட்டாள். எதிரே இருப்பவை காற்றாலைகள், மனிதர்கள் அல்ல என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னைச் சிலர் கை வீசிச் சண்டைக்கு அழைப்பதாகவே நினைத்தான். “என்னையா சண்டைக்கு அழைக்கிறாய்? யார் என்று நினைத்தாய்? இதோ வருகிறேன் பார்!” என்று கர்ஜித்தான். மாவீரனாயிற்றே!

இடையிலிருந்த வாளை சரேலென்று உருவி எடுத்தான்.குதிரையை முடுக்கினான். வாளை உயர்த்திக் கொண்டு காற்றாலையை நோக்கிப் பாய்ந்தான். காற்றாலையின் கரங்கள் அவனைத் தூக்கி  எறிந்தன. குதிரையோடு குப்புற வீழ்ந்தான்.

மாவீரர்கள் (Knights) எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்கள் என்று கேலி செய்ய ஸ்பானிய மொழியில் எழுதப்பட்ட நாவல் The Ingenious Gentleman  Don Quixote of La Mancha. இந்த ஸ்பானிய மொழி நாவலின் பாத்திரத்தால் ஆங்கிலத்திற்கு ஒரு புதிய சொற்றொடர் கிடைத்தது.அது Tilting at windmills. இதற்குக் கற்பனை எதிரிகளுடன் போராடுவது என்று அர்த்தம்

கற்பனை எதிரிகளுடன் போராடுவது தமிழக அரசியலிலும் உண்டு. அதன் அண்மைக்கால உதாரணம்  குடியுரிமைச் சட்டத் திருத்திற்காக திமுக தொடங்கியிருக்கும் கையெழுத்து இயக்கம்.

குடியுரிமைச் சட்டத்தில், மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தத்தால் இஸ்லாமியர்கள் உட்பட யாரும் குடி உரிமையை இழக்க மாட்டார்கள் என்பது மீண்டும் மீண்டும் விளக்கப்பட்டிருக்கிறது. யாருக்காவது “பாதிப்பு” இருக்குமானால் அது பாகிஸ்தானில் வாழும் இஸ்லாமியர்களுக்கு வேண்டுமானால் ஒருவேளை இருக்கலாம். பாகிஸ்தானியர்களுக்காகக் குரல் கொடுக்கிறதா திமுக?

NPR எனப்படும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடும் குடியுரிமைச் சட்டத் திருத்ததுடன் இணைத்துப் பேசப்படுகிறது.

NPR என்றால் என்ன?

ஒரு பகுதியில் வழக்கமாக வசிக்கும் (usual resident) மக்களைப் பற்றிய தகவல்களைக் கொண்ட பதிவேடு NPR (National Population Register). ஒருவர் எங்கு, அதாவது எந்த ஊரில், மாவட்டத்தில், மாநிலத்தில் வசிக்கிறார் என்ற தகவல்களைக் கொண்ட ஒரு பட்டியல்

“வழக்கமாக” வசிக்கும் என்றால் என்ன?

அதுவும் NPRல் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் ஒரு பகுதியில் ஆறுமாதமாக அல்லது அதற்கும் மேலாக வசித்து வந்தார் என்றால் அதை வழக்கமாக வசித்தல் என்கிறது. ஒருவர் அடுத்த ஆறுமாதங்களில் வசிக்க உத்தேசித்திருக்கும் இடமும் கூட இந்த வரையறையில் வருகிறது.

இந்தத் தகவல்களைக் கேட்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா?

குடியுரிமைச் சட்டம் 1955 (Citizenship Act, 1955) குடிமக்களின் (குடியுரிமைப் பதிவு  மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கல்) விதிகள் 2003 (Citizenship (Registration of Citizens and Issue of National Identity Cards) Rules, 2003)  இவற்றின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் கோரப்படுகின்றன. இந்தச் சட்டங்களும் விதிகளும் நெடுங்காலமாக நடைமுறையில் இருப்பவை. பாஜக அரசு இயற்றியவை அல்ல. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்  இயற்றப்பட்டவை

என்னென்ன தகவல்கள் கேட்கப்படும்?

1.பெயர் 2.குடும்பத்தலைவருடனான உறவு 3.தந்தை பெயர் 4.தாயின் பெயர் 5.கணவர்/மனைவி பெயர் 6.பாலினம் 7.பிறந்த தேதி 8 திருமணமானவரா? 9 9.பிறந்த இடம் 10. எந்த நாட்டைச் சேர்ந்தவர் (Nationality) 11. வழக்கமாக வசிக்கும் முகவரி 12 எவ்வளவு காலமாக வசிக்கிறீர்கள் 13 நிரந்தர முகவரி 14 தொழில் 15 கல்வித் தகுதி

இதற்கு ஒருவர் என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும்?

எதுவுமில்லை. “நான் அளித்திருக்கும் தகவல்கள் நானறிந்த வரையில் உண்மையானவை” என்ற உறுதிமொழி கொடுத்தால் போதும்

ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் எதுவும் கொடுக்க வேண்டாமா?

கொடுக்க வேண்டாம்

கொடுக்காவிட்டால் அபராதம் விதிப்பார்கள் என்கிறார்களே?

அது தவறான, உண்மைக்கு மாறான தகவல். எந்த ஆவணமும் கேட்கப்படமாட்டாது, அபராதம் விதிக்கப்படமாட்டாது  என்று மக்களவையில் அரசு எழுத்து பூர்வமாகத் தெரிவித்திருக்கிறது.

அப்படியானால் இது சென்சஸ் (மக்கள் தொகைக் கணக்கெடுப்பு) போன்றதுதானா?

கிட்டத்தட்ட.ஆனால் சென்சஸில் மேலும் பல தகவல்கள் திரட்டப்படும். வீடு இருக்கிறதா, வீட்டில் என்னென்ன சாதனங்கள் உள்ளன, வருமானம், மொழி, மதம், பட்டியலினத்தவரா, பிறப்பு இறப்பு விவரம், மாற்றுத் திறனாளியா போன்ற விவரங்கள் சென்செஸில் திரட்டப்படும்

NRCயும் இதுவும் ஒன்றுதானா?

இல்லை. தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) நாட்டில் வசிக்கும் எல்லோருக்கும்-குடிமக்கள், குடிமக்கள் அல்லாதோர்- எல்லோருக்குமானது. தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்பது குடிமக்கள் பற்றிய தரவுதளம் (டேட்டா பேஸ்) அசாமில் இருந்த பிரச்சினைகள் காரணமாக உச்சநீதிமன்றம் தலையிட்டு, அதுவே அதன் மேற்பார்வையில் அங்கு NRCஐ தயாரித்தது. நாட்டின் மற்ற பகுதிகளில் NRC தயாரிக்கும் நோக்கம் இல்லை என்று அறிவித்திருக்கிறது.மக்களவையில் எழுத்து பூர்வமாக இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதெல்லாம் ஏன் இப்போது புதிதாக செய்யப்படுகிறது?

அரசு அறிவித்திருப்பது தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை அப்டேட் செய்வது (Updating the NPR). அதாவது புதிதாக எதுவும் தொடங்கப்படவில்லை.நாடு முழுக்க NRCஐ அறிமுகப்படுத்தப் போவதில்லை என்று தெள்ளத் தெளிவாக அறிவித்திருக்கிறது. எனவே பிறக்காத குழந்தைக்கு என்ன பெயர் என்று குடுமிபிடி சண்டை போட வேண்டியதில்லை.குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் இப்போது இந்தியக் குடிமக்களாக இருக்கும் எவருக்கும் பாதிப்பில்லை என்பது மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், வைகோ போல ஒரு உறுப்பினரைக் கொண்ட கட்சிகளுக்குக் கூட விவாதத்தில் பங்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டு, பத்து மணி நேர விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தி (குரல் வாக்கெடுப்பல்ல) மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதா இல்லையா என்பதை அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் கடமை கொண்ட அறிவார்ந்த நீதிபதிகள் தீர்ப்பளிக்கட்டும்.

பின் ஏன் அரசியல்கட்சிகள் இத்தனை ஆர்ப்பாட்டம், அமளி செய்கின்றன?

ரஜனிகாந்த் சொல்வதைப் போல, மக்களிடையே பீதியைக் கிளப்பி அரசியல் ஆதாயம் தேட அவை முயற்சிக்கின்றன. அவரே குறிப்பிடுவது போல சில மதகுருமார்களும் அதை ஊக்குவிக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் பாஜக அரசு எதைச் செய்தாலும் எதிர்ப்பது என்று எதிர்கட்சிகள் இயங்குகின்றன

“வார்டனா இருந்தா அடிப்போம்” என்ற வடிவேலுவின் திரைப்பட நகைச்சுவைக் காட்சியைப் பார்த்திருப்பார்களோ?

இருக்கலாம்.      

19.2.2020   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.