என் ஜன்னலுக்கு வெளியே. . ..
கணா கணா ஆபார்
என் ஜன்னலுக்கு வெளியே விரிந்திருந்த சூன்யத்தை வெற்றுப் பார்வையாக அளந்து கொண்டிருக்கப் பிடிக்காமல் அறைக்குள் திரும்பினேன்.புழுக்கமாக இருந்தது. மனப் புழுக்கம் அல்ல. மழைக்கு முந்திய இறுக்கம்.வியர்த்துக் கசகசத்தது. சட்டையைக் கழற்றிவிட்டு ‘காந்தி சூட்’டுற்கு- அதான் மேல் சட்டையில்லாத வெற்றுடம்பிற்கு- மாறினேன். பொழுதைக் கொல்ல வழி புலப்படாமல் விரல்கள் ரிமோட்டை நெருடின. உயிர் பெற்று விரிந்த தொலைக்காட்சியில் பிரதமர் மோதி உரையாற்றிக் கொண்டிருந்தார்.
இமய மலைச்சாரலில் இராணுவ வீரர்கள் நடுவே உணர்ச்சி பெருக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். எனக்கு இந்தி தெரியாது. ஆதலால் அவர் முக பாவங்களை அவதானித்துக் கொண்டிருந்தேன். கரும்புப் பூப் போன்று வெண்மை அடர்ந்த கேசத்தைத் படைவீரர்கள் அணியும் தொப்பி ஒன்று மறைத்திருந்தது. கறுப்பு வண்ணக் கண்ணாடி கண்களை மூடியிருந்தது. எனவே எனக்கு அவரது குரலும் விரலுயர்த்திப் பேசும் அவரது உடல் அசைவும்தான் மொழி.
திடீரென்று திருவள்ளுவர் என்று ஒரு சொல் வந்து விழுந்தது. என் காதுகள் கூர்மையாகின. ஒலியை மிகுதிப்படுத்திக் கொண்டு கவனத்தைக் கூர்மையாக்கினேன்.
மோதி அவரது மழலைத் தமிழில் கடகடவென்று குறள் ஒன்று சொன்னார்:
“மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு” (வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியவராதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்கள்) கையில் ஒரு குறிப்பு இல்லை. எதையும் பார்த்துப் படிக்கவில்லை. பேசிக் கொண்டே போகிற வேகத்தில் வந்து விழுந்தது அந்தக் குறள்.
மெய்யாகச் சொல்கிறேன். எனக்கு மேனி சிலிர்த்தது. முதுகு சொடுக்கிற்று. சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டுச் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த என் மேனியின் மயிர்க்கால்கள் நிமிர்ந்தன!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் என் மொழியில் எழுதப்பட்ட ஒரு கவிதை, இன்று எதிரியைச் சில அடி தூரத்தில் எதிர் கொள்ளவிருக்கும் படை வீரனுக்கு மன எழுட்சி தரும் மந்திரமாக ஒலிக்கிறதே என்ற பெருமிதம், இந்திய வரைபடத்தில் இறுதி மாநிலமாக இருக்கும் தமிழகத்தின் மொழியாம் தமிழ் வட கோடி எல்லையில் – இன்னும் சில மைல்கள் எட்டி நடந்தால் அது அடுத்த தேசம்- ஒலிக்கிறதே என்ற ஆனந்தம் எல்லாமுமாக என்னைப் புரட்டின. எத்தனை வருடமாக ‘காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை’ என்ற வாக்கியத்தைக் காது புளிக்கக் கேட்டிருக்கிறோம். இன்றுதானே அது மெய்யானது என்று ஒரு பரவசம் என்னுள் பரவி சிலிர்த்தது இத்தனைநாளாய் இதற்குத்தானேடா ஆசைப்பட்டாய் என்று இதயம் என்னைக் கேட்டது. எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்று அது ஆனந்தத்தில் துடித்தது..
அடுத்த சில கணங்களில் ஆசுவாசப்பட்டேன். ஆனால் எண்ண அலைகள் எனக்குள் புரண்டன. அந்தக் குரலை மறுபடியும் அசை போட்டேன். அதைச் சொன்னவருக்குத் தாய்மொழி தமிழ் அல்ல. ஆனால் ஒரு குறிப்பு இல்லாமல், குனிந்து துண்டுச் சீட்டைப் பார்க்காமல், அவர் கம்பீரமாகக் குறளை மொழிகிறார். அது தேர்தல் கூட்டமல்ல. வாக்குக் கேட்டு வருகிற போது உதிர்க்கிற ‘வணக்கம்’ அல்ல அது. அங்கு யாரையும் தாஜா செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. எவரையும் மனம் குளிரச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. ஆனால் அவர் குறளை சுட்டிக்காட்டிப் பேசுகிறார். தமிழர் மட்டும் நிறைந்த அவை அல்ல அது. பலமொழி வீரர்கள் படை நடுவே பழந் தமிழ்ப் பனுவலை எடுத்துச் சொல்லுகிறார்.
காரணம் என்னவாக இருக்கும்.? அவரது நோக்கம் நிச்சயம் தமிழ்நாட்டுத் தமிழர்களை வசீகரிப்பதல்ல. ஏனெனில் அவரது பொழிவு இந்தியில் இருந்தது. என்னைப் போலவே தமிழ் நாட்டுத் தமிழர் பலருக்கும் இந்தி புரியாது என்பதால் அவர் உரை தொடங்கியதுமே அவர்கள் அவசர அவசரமாக அடுத்த சானலுக்கு நகர்ந்திருப்பார்கள். ஒளிபரப்பானதோ ஒரு உறக்கம் சூழும் மதிய நேரம்.
யோசிக்க யோசிக்க ஒன்று துலங்கியது. திருக்குறள் மீது இருக்கும் தீராத ஆர்வம்தான் காரணமாக இருக்க முடியும். அது உரைக்கும் கருத்துக்கள் அது ஓர் ஒப்பற்ற நூல் என்பதை அவருக்கு உணர்த்தியிருந்திருக்கும். அதன் காரணமாக அதன் மீது ஏற்பட்ட மரியாதையும் பிரியமும் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஓர் உலகப் பொது மறை, என் தாய் மொழியில் எழுதப்படவில்லை என்றால் என்ன, என் தாய் நாட்டின் மொழியில் எழுதப்பட்டிருக்கிறதே என்ற பெருமிதம்தான் காரணமாக இருக்க முடியும், இதை நான் ஏதோ என் அனுமானத்திலோ அல்லது அபிமானத்திலோ சொல்லவில்லை.
2015 ஜனவரி 16 – அந்த ஆண்டின் திருவள்ளுவர் தினத்தன்று. திருக்குறளின் குஜராத்தி மொழிபெயர்ப்பை தில்லியில் வெளியிட்டார் மோதி. அந்த விழாவில் பேசும் போது அவர் திருக்குறளை ‘Universal Veda’ என்று குறிப்பிட்டார். எந்த ஒரு நாட்டையும், தலைவரையும், சமூகத்தையும், மொழியையும், மதத்தையும், ஜாதியையும் குறிப்பிடாமல் எல்லோருக்கும் எல்லாக் காலத்திற்கும் தேவைப்படும் விஷயத்தைச் சொல்லும் நூல் அது என்று தமிழர் அல்லாதவருக்கு அதை அறிமுகப்படுத்தினார்.
இதுவும் தமிழரை, தமிழர்களது வாக்குகளைக் கவர்வதற்காகச் சொல்லப்பட்டதல்ல. ஏனெனில் கூட்டம் நடந்தது 2015 ஜனவரியில். 2014லிலேயே நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அதில் வென்று ஆட்சியும் அமைத்து விட்டார் மோதி.
2015 நவம்பர் 22: அதே 2015ஆம் ஆண்டு அவர் மலேசியாவிற்கு அழைக்கப்பட்டார். 15ஆயிரம் பேர் கூடியிருந்த அரங்கில் 45 நிமிடம் பேசினார். பேசத் தொடங்கும் போதே, “உங்கள் முன் நிற்கும் இந்தத் தருணத்தில் எனக்கு நினைவுக்கு வருவது ஒரு திருக்குறள்” என்றவர், “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” என்றார். இதுவும் தேர்தல் பேச்சல்ல. ஏனெனில் இது 2015 நவம்பர். அடுத்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்காண்டுகள் இருந்தன. அதுவும் தவிர அவர் பேசியது மலேசியாவில்.அங்கு மக்கள் தொகையில் தமிழர்கள் 9 சதவீதம்தான்
2018 ஏப்ரல் 18: சென்னைக்கு அருகில் உள்ள திருவிடந்தைக்கு பாதுகாப்புத் துறையின் கண்காட்சியைத் திறந்து வைக்க வந்திருந்தார் மோதி. தனது உரையைக் காலை வணக்கம் எனத் தமிழில் கூறித் தொடங்கினார். கூட்டம் கை தட்டி ஆரவாரம் செய்தது. “தொட்டத்தனைத்து ஊறும் மணற்கேணி மாந்தருக்குக் கற்றனத்து ஊறும் அறிவு” என்று தொடர்ந்தார். கூடியிருந்தோர் எழுந்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். வேற்று மொழிக்காரர் ஒருவர் தமிழைக் குழந்தையைப் போல உச்சரித்தால் கூட நமக்குள் எழும் குதூகலம் இருக்கிறதே அது சொல்லில் அடங்கா சுகம். சொல்லி மாளாத சந்தோஷம்.
2019 செப்டம்பர் 28: ஐக்கியநாடுகள் சபையின் பொது மன்றம். உலகத் தலைவர்கள் வந்து குழுமியிருக்கிறார்கள். மோதி பேச அழைக்கப்படுகிறார். “ எங்கள் நாட்டின் கலாசாரம் பல ஆயிரம் ஆண்டுகள் கொண்டது. மூவாயிரம் ஆண்டுகள் முன்பு, உலகின் மூத்த மொழி தமிழில், பூங்குன்றன் என்ற ஒரு புலவன் எழுதினான்:யாதும் ஊரே! யாவரும் கேளிர்” என்று பேச்சைத் தொடங்கினார். அவர் எங்கள் கலாசாரம் என்று தமிழ்க் கலாசாரத்தை உலக அரங்கின் முன் வைத்தார்.
இதுவும் வாக்குகளைக் குறி வைத்த வார்த்தை அல்ல. ஏனெனில் பேசிய இடம் ஓர் உலக அரங்கம். பேசிய ஆண்டு 2019. நாடாளுமன்றத் தேர்தல் அந்த ஆண்டு ஏப்ரல் மாதமே முடிந்து விட்டது (மோதியின் கட்சிக்குத் தமிழர்கள் தமிழ்நாட்டில் ஒரு இடம் கூடக் கொடுக்கவில்லை!)
தமிழ் இலக்கியங்களின் செழுமையை, அவை பொக்கிஷமெனப் பொதிந்து வைத்திருக்கும் சிந்தனைகளின் சிறப்பை, அவற்றின் ஆழத்தை, அழகை எத்தனையோ தமிழர்கள் பேசக் கேட்டு நாம் இதயம் குளிர்ந்திருக்கிறோம். அதில் நமக்கு மகிழ்ச்சி. ஆனால் நிஜமான பெருமை அதை மற்றவர்கள் கொண்டாடும் போதல்லவா பிறக்கிறது. அடுத்த வீட்டு ஆன்டி நம் வீட்டுக் குழந்தையைக் கொஞ்சும் போது ஏற்படும் ஆனந்தம் அலாதியானது. மெச்சி உன்னைப் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி என்றல்லவா சொல்கிறான் பாரதி!
மோதி அவர்களே எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்கள் தாய் மொழியில் ஒரு வார்த்தை: கணா கணா ஆபார் (குஜராத்தியில் சொல்கிறேன்: மிக மிக நன்றி)
குமுதம் 22.7.2020