கடவுளுடன் ஓர் ஒப்பந்தம்

maalan_tamil_writer

12

கடவுளுடன் ஓர் ஒப்பந்தம்

“ இங்கு பெண்கள் எல்லாம் செக்ஸ் விஷயத்தில் தாராளமாக நடந்து கொள்வார்களாமே, அப்படியிருக்க ஏன் இத்தனை ரேப் ? கேட்டவர் ஒரு இந்தியர். என் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்.

      “ என்ன சொல்கிறீர்கள், புரியவில்லையே   என்றேன் நான்.

      “ இல்லை இங்கு பெண்களுக்கு செக்ஸ் விஷயத்தில் கட்டுப்பாடுகள் கிடையாது. தயக்கமில்லாமல் யாரோடு வேண்டுமானாலும் படுத்துக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியிருக்க அவர்களைப் பலவந்தப்படுத்த வேண்டிய அவசியம் எங்கே வந்தது ?

            நான் அரை நிமிடம் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தேன். அமெரிக்காவில் இருக்கிற பெண்கள் எல்லாம் கூப்பிட்ட மாத்திரத்தில் யாரோடு வேண்டுமானாலும் படுத்துக் கொண்டுவிடுவார்கள் என்ற எண்ணம் எப்படி இவருக்கு ஏற்பட்டது ? எனக்குக் கொஞ்சம் திகைப்பாகத்தான் இருந்தது. காரணம் – கேட்டவர் அரைகுறை பாமரன் இல்லை. ஒரு விஞ்ஞானி. பொறியியல் துறையில் முதுநிலைப் பட்டதாரி. அரசாங்கத்தில் விஞ்ஞானியாகப் பணிபுரிகிறவர். அவரது துறையில் விஷய ஞானம்மிக்க வராகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசாங்கம் தனது பணத்தைச் செலவழித்து அவரை இங்கே அனுப்பி வைத்திருக்குமா? அவர் மனத்தில் இப்படி ஒரு எண்ணம். அமெரிக்கப் பெண்களைப்பற்றி.        

      “ அமெரிக்கப் பெண்கள் யாரோடு வேண்டுமானாலும் படுத்துக் கொள்வார்கள் என்று யார் உங்களுக்குச் சொன்னார்கள்?என்று கேட்டேன். “யாரும் சொல்லவில்லை. ஆனால் பார்த்திருக்கிறேன் டி.வி.யில், சினிமாவில், படிக்கிற காலத்தில் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் தவறவிட மாட்டேன். புஸ்தகங்களில் படித்திருக்கிறேன். நீங்கள் படித்ததில்லையா? ஹெரால்ட் ராபின்சன் எல்லாம் நீங்கள் படிக்கமாட்டீர்களா?

            நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அமெரிக்க இலக்கியமும் வாழ்க்கையும் எனக்கு அறிமுகப்படுத்திய பெண்கள் வேறு. ஆனால் அமெரிக்க மீடியா பெண்களைப் பற்றி நிறைய பொய்களை நமக்கு விற்றிருக்கின்றன. நமக்குப் பிடித்த பொய்களை. நாம் நம்ப விரும்பும் பொய்களை. ஆனால் சினிமாவல்ல வாழ்க்கை.

      தமிழ் சினிமாவைக் கொண்டு தமிழ்ப் பத்திரிகைகளின் விகடத் துணுக்குகளைக் கொண்டு ஒரு அமெரிக்கன், தமிழர்களைப் பற்றி முடிவு கட்டுகிறான் என்று வைத்துக்கொண்வோம். அவனது எண்ணம் எப்படி இருக்கும்?

      தமிழ்ப் பெண்கள் ‘ ஹெவி யாக மேக்கப் போட்டுக் கொள்வார்கள் ; ஒரு ரோட்டில், அல்லது பார்க்கில் உரத்த குரலில் இரட்டை அர்த்தப் பாட்டு பாடி இடுப்பை நெளித்து  நடனமாடுவார்கள். சொடக்குப் போடுவதற்குள் கண்ணீர் விடுவார்கள். ஸ்டெனோகிராபர் உத்தியோகம் பார்க்கும் பெண்கள் எல்லாம் மானேஜரை “ மயக்க முயல்வார்கள். ஆபீஸ் போகும் ஆண்கள் எல்லாம் அங்கே போய்த் தூங்குவார்கள். வீட்டில் புடவை தோய்ப்பார்கள். இதெல்லாம்தானே நமது சினிமாகக்ளும், துணுக்குகளும் நமது சமூகத்தைப் பற்றிப் பதிவு செய்திருக்கும் சித்திரங்கள்?

      மீடியா உருவாக்கி வைத்திருக்கும் தோற்றங்களைத் தகர்த்தெறிவது என்ற முடிவுடன் அமெரிக்காவில் சில இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. மெல்ல மெல்ல, ஆனால் சர்வ நிச்சயமாக, அவை ஆங்காங்கு அலை எழுப்பி வருகின்றன. இவற்றில் பங்கு கொள்கிறவர்கள், முன் நின்று நடத்துகிறவர்கள் இளைஞர்கள், குறிப்பாகப் பெண்கள்.

      “ டி.பி., சினிமா, எம்.டி.வி. எல்லாமாகச் சேர்ந்து, நாங்கள் – டீன் ஏஜர்கள் – செக்ஸிற்காக அலைந்து கொண்டிருக்கிறோம் என்று ஒரு பிரமையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. எங்கள் தேசத்துப் பெரியவர்கள் அதை நம்புகிறார்கள். அரசாங்கம் கூட நம்புகிறது. ‘ செக்ஸ் வைத்துக் கொள்ளாதே என்று அது சொல்லுவது இல்லை. செக்சின்போது காப்புறையைப் பயன்படுத்த மறந்துவிடாதே என்றுதான் சொல்கிறது. இது பொய்யான தோற்றம். மிகைப் படுத்தப்பட்ட சித்திரம். இதை மாற்றியே ஆக வேண்டும் என்று ஆக்ரோஷமாகவே வாதிடுகறாள் ஜென்னி பெல்லோ. அவளுக்கு வயது 17. இங்குள்ள ஒரு மேல் நிலைப்பள்ளி மாணவி. அவளது விரலில் இளம் சிவப்பு நிற மோதிரம். அது அவள் ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவள் என்பதற்கான அடையாளம்.

      “ நிஜமான காதல் காத்திருக்கும்” (True love Waits)  என்பது அந்த இயக்கத்தின் பெயர். ஜென்னி மாதிரியான எண்ணங்களோடு ஆங்காங்கு சிதறுண்டு கிடக்கிற இளைஞர்களை ஒன்றிணைக்கிறது இந்த இயக்கம். இதைப் பின்னின்று நடத்துவது ஃபர்ஸ்ட் பாப்டிஸ்ட் சர்ச் (First Babtist Church) என்றொரு மத அமைப்பு. போன வருடம் ஜுலை மாதத்திற்குள் ஐந்து லட்சம் இளைஞர்களை ஒன்றிணைத்துவிட வேண்டும் என்று இலக்கு வைத்துக் கொண்டு வேலை செய்தது. அதில் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.     

      மதிய உணவு வேளையின்போது மாணவர்கள், மற்ற மாணவர்களைச் சந்தித்து பிரசுரங்கள் கொடுத்து பிரசாரங்கள் செய்கிறார்கள். பள்ளிக் கூடங்களில் ஆரம்பித்தவர்கள், இப்போது பல்கலைக்கழகங்களுக்கும் வந்திருக்கிறார்கள். வாஷிங்டன் பக்கத்தில் மேரிலாண்ட் என்று ஒரு சின்ன மாநிலம். அந்தப் பகுதியில், எந்த நெடுஞ்சாலையில் போனாலும், இவர்களது விளம்பரங்கள்தான். அமெரிக்காவில், ஒரு காலத்தில் கன்னி கழியாத பெண் என்றால் கொஞ்சம் இளப்பம்தான். கன்னி கழியாதவர்கள் கூட மற்றவர்கள் கேலி செய்கிறார்களே என்று பயந்து தனக்கு “ அனுபவம்   உண்டு என்று சொல்லிக் கொள்வதுண்டு. இப்போதெல்லாம் “ கன்னித் தன்மை என்பது ஒன்றும் அவ்வளவு மோசமான வார்த்தை அல்ல   (Viriginity is not a dirty word) “ஆமாம், நான் கன்னிகழியாதவள்(ன்) (Yes, I am a Virgin) என்று பெருமையோடு அறிவிக்கும் பாட்ஜ்களைக் குத்திக் கொண்டு மாணவிகள், மாணவர்கள் வகுப்புகளுக்கு வருகிறார்கள். ஆங்காங்கு ‘ கன்னியர் கழகம்   (Virgin Clubs)  துவக்குகிறார்கள். மோக வெறியும் முக்கலும் முனகலுமாக இருந்த பாடல்கள் காணாமல் போய், “ காத்திருப்பதன் மேன்மையைச் சொல்லும் பாடல்கள் முளைத்திருக்கின்றன.

      இந்த இயக்கம் துவங்கியபோது, அதில் முதன் முதலில் பங்கு கொண்டவர்கள் 59 பேர் ; வெறும் 59 பேர். இரண்டு மாதத்திற்குள் 329 பேர் சேர்ந்தார்கள். அப்புறம் ஒரு வாரம் கழித்து 194 பேர் வந்து சேர்ந்தார்கள். ஆறு மாதங்களுக்குள் 13,500 பேர் என்று எண்ணிக்கை வளர்ந்துவிட்டது.

      இயக்கத்தின் வெற்றிக்கான காரணங்களை அலசிப் பார்த்தேன். இயக்கம் முதலில் தன்மான உணர்வைத் தூண்டுகிறது, “ எங்களையெல்லாம் மிருகங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல என்று நிரூபிக்க இது ஒரு சந்தர்ப்பம்   என்று சொன்னான் ஆடம் ஆலன் என்ற 15 வயதுப் பையன்.

      அதற்கு அடுத்ததாக, படிப்பு பாழாகிறது. டீன் ஏஜில் கர்ப்பமுற்றால், படிப்பை நிறுத்த வேண்டிவருகிறது. படிப்பு இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. “ நாம் படிப்பிற்காகக் கல்லூரிக்கு வந்திருக்கிறோம். கர்ப்பமடைவதற்காக அல்லஎன்று சொன்னாள் ஜென்னிபர் ஸ்லீப். அவளுக்கு வயது 16.

      அதற்குப் பிறகு கடவுள் வருகிறார். இந்தக் கன்னியர்கள் கடவுளோடு ஒரு   ‘ ஒப்பந்தம்   செய்து கொள்கிறார்கள். ‘ திருமணமாகும் வரை சுத்தமாக இருப்பேன்   என்பது உடன்படிக்கை வாசகம். கடவுளுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் என்பதால் அதை மீறுவதற்கு பயம், தயக்கம்.

      காப்புறைகளைவிட இந்தக் கடவுளுடனான ஒப்பந்தம் பலனளிக்கிறது. டீன் ஏஜர்கள் கர்ப்பமாவது 10 சதவிகிதம் குறைந்திருக்கிறது என்று ஒரு புள்ளிவிவரம் கணக்கு சொல்கிறது.

      “ கடிகாரப் பெண்டுலம் திசை திரும்பி இருக்கிறது   என்று மகிழ்ச்சி கொள்கிறார் ஜாக்குலின் ஜாக்சன் என்ற ஒரு தாய். “ 70 களில் விடுதலைக் காதல் (Free Love) என்று ஆரம்பித்தது. வெகுகாலத்திற்கு அந்தச் திசையிலேயே காற்று வீசிக் கொண்டிருந்தது. அது பல குழந்தைகளை நாசம் பண்ணியது. நல்லவேளை, காலம் மாறுகிறது    என்கிறார் இவர்.

      ஆனால், இது குறித்து கவலைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். “கடவுளுடன் ஒப்பந்தம் என்பது குற்ற உணர்வை ஏற்படுத்துவதற்கான தந்திரம். உடம்பைப் பற்றின சிந்தனையில் இருந்து மீண்டு வர முடியாமல் பெண்ணை முடக்கி வைக்கிற உபாயம். செக்ஸை ஒழுக்கம், கடமை என்று பார்க்காமல், உடம்பின் தேவை என்ற அளவில் அணுக முடிந்தால், வாழ்வின் ஒரு பருவத்திற்குப் பிறகு அதை அலட்சியம் செய்யவும், வேறு விஷயங்களில் சிந்தனையைச் செலுத்தி முன்னேறவும் அவளால் முடிந்தது. கடந்த 30 வருடங்களில் அமெரிக்காவில் பெண்கள் எவ்வளவோ சாதித்துக் காட்டி யிருக்கிறார்கள். இழந்துபோன உரிமைகளை மட்டுமல்ல, அதிகாரத்தையும் மீட்டெடுத்திருக்கிறார்கள். இதனால் கலக்கமடைந்திருக்கும் பழைமைவாதிகள், மீண்டும் அவர்களைப் பின்னோக்கித் தள்ள, மேற்கொள்ளும் முயற்சி இது. குழப்பம், தயக்கம் இவற்றை ஏற்படுத்தவும் தன்னம்பிக்கையைத் தகர்க்கவும், ஒருவரிடம் குற்ற உணர்வை ஏற்படுத்தினால் போதும்   என்று சாடுகிறார் ஜீடியத் பிரபிட். இவர் சமூகவியல் பேராசிரியை. பால் அரசியலில் (Gender Politics) நிபுணர்.

      அமெரிக்காவில் பெண்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதிலும், அதற்குப் பெண் விடுதலை இயக்கங்கள் வலுவான அமைப்புகளாக இருந்தது ஒரு முக்கிய காரணம் என்பதும் உண்மைதான். நாகர்கோவிலில் ஒரு பெண் பஸ் டிரைவராகப் பதவி ஏற்றதும் எல்லாப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டது உனக்கு நினைவு இருக்கும். இங்கு பெண்கள் பஸ் ஓட்டுவது, லாரி ஓட்டுவது இன்று சர்வ சாதாரணம். ஆசிரியைகள், டாக்டர்கள், என்ஜினியர்கள், டெலிபோன் ஆபரேட்டர்கள்,  குமாஸ்தாக்கள், நம்மூரிலும் இருக்கிறார்கள். ஆனால் பரபரப்பான நாற்சந்தியில், 30 அடி உயரத்தில் நின்று போக்குவரத்து சிக்னலில் ஃபியூஸாகிப் போன பல்பை மாற்றுகிற பெண்ணை நீ பார்த்திருக்க முடியாது. கோதாவில் இறங்கி குத்துச் சண்டை போடுகிற பெண்ணைப் பார்த்திருக்க முடியாது. இந்தியாவில் பெண்கள் ரயில் ஓட்டுகிறார்களா என்று தெரியாது. ஆனால், இங்கு ஓட்டுகிறார்கள். ஆனால் இதெல்லாம் 74 – க்குப் பிறகு ; பெண் உரிமை இயக்கங்கள் வந்த பிறகு.

      ஒரு இந்திரா காந்தியோ, பேநசீர் புட்டோவோ அமெரிக்காவில் உருவானதில்லை. ( ஜெயலலிதாக்கள் இருக்கிறார்கள் : மாநில அளவில் முதல்வர்களாக). ஆனால், நிர்வாகத்தில் அவர்களது செல்வாக்கு கணிசமானது. கிளிண்டன் நிர்வாகத்தில், 46 சதவிகிதம் பெண்கள்.

      மதவாதிகள் பெண்களை உடம்பைப் பற்றிய சிந்தனையில் முடக்கி வைக்கப் பார்க்கிறார்களோ இல்லையோ, அரசியல்வாதிகளின் பார்வை உடம்பில்தான் இருக்கிறது. டி.வி விவாதத்திற்காக வந்த ஒரு எம்.பி. சட்டையில் மாட்டப்பட்டிருந்த மைக் ‘ ஆன் செய்யப்பட்டிருப்பது தெரியாமல், அருகில் இருந்த இன்னொரு எம்.பி.யிடம், நிகழ்ச்சித் தயாரிப்பாளரின் ‘பெரீய்ய்ய்ய்ய மார்பகங்களை’ (Beeg Breasts) குறித்து கமென்ட் அடிக்கப் போய் மாட்டிக் கொண்டார். பெண் பத்திரிகையாளர்கள் சீறி எழுந்தார்கள். கடைசியில் அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.

      மார்பகத்தைப் பற்றிய சர்ச்சை மட்டரகமாகப் போன அதேசமயம், தாய்ப்பாலைப் பற்றிய ஆரோக்கியமான சிந்தனைகள் மலர்ந்திருக்கின்றன. அமெரிக்காவில் வேலைக்குப் போகும் பெண்களுக்குத் தாய்ப்பால் ஒரு பிரச்சினை, பிரசவத்திற்குப் பிறகு ஆறு அல்லது எட்டு வாரங்களில் அவர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும். அதிகபட்சம் மூன்று மாதம். வேலைக்கு வந்துவிட்டால் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாது. தாய்மார்களுக்கும் வேதனை; குழந்தைகளுக்கும் எதிர்ப்புச் சக்தி குறைவான உணவு. இந்த நிலை இப்போது வேகமாக மாறி வருகிறது.

      தாய்மார்கள் வேலையை விட்டு விட்டார்களா என்று கேட்கிறாயா? இல்லை, இல்லை. தாய்ப்பாலைச் சுரந்து (கறந்து…?) கொடுப்பதற்கு (Breast Pump) என்று ஒரு சாதனம் வந்திருக்கிறது. அப்படிக் கறந்த பாலை பாலிதீன் கவரில் சேகரித்து, ஃபிரிட்ஜ்ஜில் வைத்துவிட்டுப் போனால், வீட்டில் இருப்பவர்கள் வேண்டும்போது, குழந்தைக்குப் புகட்டலாம்.

      வேலைக்குப் போகும் தாய்மார்களுக்கு உதவி செய்யப் பல பெண்கள் அமைப்புகள், சேவை ஸ்தாபனங்களை, தன்னார்வக் குழுக்களை ஏற்படுத்தி வருகின்றன. பொது இடத்தில் பால் கொடுக்கும் தாயைக் கிண்டல் செய்பவர்கள், தரக்குறைவாக கமெண்ட் அடிப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை தரும் சட்டம் ஒன்றை புளோரிடா மாநிலம் அண்மையில் நிறைவேற்றியது. வேலை செய்யும் இடங்களில் இதற்கென மறைவிடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பெண்கள் அமைப்புகள் கோரி வருகின்றன.

      ஏற்கெனவே அலுவலகங்களிலும், தொழிற்கூடங்களிலும் புகை பிடிக்கக் கூடாது என்ற விதி இருக்கிறது. பொது இடங்களிலும் ஹோட்டல்கள், பார்கள் உட்பட, புகை பிடிக்கத் தடை இன்னும் மூன்று மாதங்களில் வர இருக்கிறது. சிகரெட்டில் இருக்கும் நிகோடின் அதைச் சார்ந்து இருக்கும் பழக்கத்தை (addiction) ஏற்படுத்தும் மருந்துப் பொருள். அதனால் அதை போதை மருந்துகளின் கீழ் கொண்டு வர வேண்டும் என ஒரு கோஷ்டி அரசை வற்புறுத்தி வருகிறது. சிகரெட்களில் நிகோடின் அளவைக் குறைக்க முடியுமா என்று ஆராயச் சொல்லி, அரசு சிகரெட் தயாரிப்பாளர்களைக் கேட்டிருக்கிறது. அப்படிச் செய்தால், ‘ சுவை   போய்விடும் என்று தயாரிப்பாளர்கள் சொல்லி வருகிறார்கள்.

      இன்னும் ஆறு வருடங்கள் கழித்து, 21-ம் நூற்றாண்டில் அமெரிக்கா அடியெடுத்து வைக்கும். அப்போது அது ‘ நவீன   அமெரிக்காவாக இருக்காது. வெகுவாக மாறியிருக்கும்.

      சரி, நாம் ?                                     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.