’ஏணி, தோணி வாத்தியார்!’ எனக் கூவிக் கொண்டு போனான் ஒருவன். (அடுத்தவர் நிலை உயர்த்தும், கரை சேர்க்கும் ஆனால் இவை மட்டும் ஆயுசுக்கும் அப்படியே இருக்கும்) “அவர்களோடு அரசியல் தொண்டனையும் சேர்த்துக் கொள்!” என்று இரைந்தான் இன்னொருவன். இந்த ரீதியில் அமைந்த கண்ணதாசனின் குட்டிக் கதை ஒன்றுண்டு.
இன்று இந்தியாவில் அரசியல் கட்சிகளின் தொண்டனாக இருப்பதென்பதும், சொந்தச் செலவில் சூடு வைத்துக் கொள்வது என்பதும் ஒன்றுதான். அதன் ஆதாரக் காரணம் அரசியல் கட்சிகளின் தனிமனிதத் துதி.
அதிகம் யோசிக்கத் தேவையின்றி, இன்று எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய யதார்த்தம் இது. இங்கு எல்லாக் கட்சிகளும் ஒரு தனி நபரை மையப்படுத்தியே இயங்குகின்றன. நெடிய பாரம்பரியம் கொண்ட கட்சியானாலும் சரி, சிறிய ஜாதிக் கட்சியானாலும் சரி, இதுதான் நிலைமை. இந்தத் தனிநபர்களின் விருப்பங்களுக்குத் தலை அசைக்காதவர்கள் வெளியே துரத்தப்படுவர். அவர்கள் எத்தனை காலம் தங்கள் உழைப்பை அந்தக் கட்சிக்கு அளித்திருந்தாலும் சரி, அதைப் பற்றிக் கவலை இல்லை. தத்துவங்களை அல்ல, தலைவர்களைத் தாங்கிப் பிடிப்பதுதான் தொண்டனின் வேலை
ஜனநாயகம் என்ற பெயரில் நாம் சிறு சிறு சர்வாதிகாரிகளை உருவாக்கி வைத்திருக்கிறோம்.
கட்சிக்குள் ஒருவன் வளர்ந்து வர வேண்டுமானால் –அதாவது மொகலாயச் சக்கரவர்த்திகளின் பாளையக்காரனாகப் பரிணாமம் பெற வேண்டுமானால்- கட்சியின் முன்னணித் தலைவர்களைக் கவரும் வண்ணம் காசு செலவழிக்க வேண்டும். அந்த முன்னணித் தலைவர்களோ பெரும்பாலும் தலைவரது குடும்பத்தினராக இருப்பார்கள்.
நிதி ஊற்றாக நீ இருக்கும் வரைதான் உனக்கு மரியாதை. ஓய்ந்து விட்டாய் என்றால் ஒதுக்கி விடுவார்கள். அநீதிகளை மாற்ற அரசியல் ஓர் ஆயுதம் என்று லட்சியங்களை ஏந்தி வந்த இளைஞன், அவற்றைக் கழற்றி வைத்து விட்டுக் கரைவேட்டியை கட்டிக் கொண்டு காசு வேட்டைக்குப் புறப்படுவான். எளியோரைச் சுரண்டுவான். இருப்பவரிடம் இழைவான். இடைபட்டவர்களை ஏமாற்றுவான்
இதற்கெல்லாம் வழி இல்லாமல் போனால் கடன் வாங்குவான். கடன் கொடுக்க ஆள் இல்லை என்றால் அப்பனோ பாட்டனோ வைத்து விட்டுப் போன வீட்டையோ நிலத்தையோ விற்று விடுவான்.
கடன்பட்டு, கவனத்தைப் பெற்று, வேட்பாளராகக் களம் இறங்குவதென்றால், கட்சிக்கோ, தலைமைக்கோ மறுபடியும் காசை இறக்க வேண்டும். பாஞ்சாலிகளைப் பணயம் வைக்கும் சூதாட்டத்தை பாரதம் ஒவ்வொரு தேர்தலிலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது
அலை ஒன்று வீசி, அதிகாரத்தின் அருகில் கொண்டு சென்று அமர்த்தினால் அப்போதும் அடிமைதான். சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ, சொந்தக் குரலில் ஒன்றையும் பேசிவிட முடியாது. ஜால்ரா கொண்டு இசை எழுப்பலாம். அல்லது சகிக்க முடியாமல் வசை வீசலாம். இரண்டுக்கும் இயக்கம் தலைமைதான்.
அடிமைத்தனம் மெச்சப்படும் தருணத்தில் அமைச்சராகக் கூட ஆகமுடியும். அப்போதும் கூட அதிகாரம் கையில் இராது. கருவூலத்திற்குக் கள்ளச் சாவி போடுகிறவனாகவோ, காற்றையேனும் விற்றுக் கப்பம் கட்ட வேண்டிய கட்டாயத்தில் அமிழ்ந்தவனாகவோ இருப்பான்
வண்டி மாட்டுக்கு வைக்கோல் போடுவது போல கூட்டுக் கொள்ளையில் கொஞ்சம் பிய்த்துக் கொடுக்கும் தலைமைகளும் உண்டு. அதற்குக் காரணம் அன்பு அல்ல. வண்டி ஓடவேண்டுமே என்ற நிர்பந்தம்.
ஊரெல்லாம் தொண்டன் கடன்பட்டு நிற்கும் போது கட்சித் தலைமைகளுக்கு ஊரெல்லாம் சொத்து சேர்ந்திருக்கும். இனி எழவே முடியாது எனத் தொண்டன் வீழ்ந்து கிடப்பான். இழப்பு ஒன்றும் இல்லை, இன்னொரு தொண்டன் எங்கோ உருவாகிக் கொண்டிருக்கிறான் என்று தலைமை இறுமாந்திருக்கும்
கடன்படத் தொண்டன். சுகம் பெறத் தலைவன். இதுதான் இந்திய அரசியலின் யதார்த்தம்