‘ ஸ்க்ரீச்ச்ச்ச்ச் ’
என்ற விக்கலுடன் டாக்ஸி நின்றது. சாலையோர ஆடுகள் மிரண்டு தாவின. தகரக் குரலில் மேய்ப்பனை அழைத்தன.
“ காட்டுமன்னார்கோவிலுக்கு எப்படிப்பா போவணும் ? ”
குரலில் மிரட்டல் இருந்தது. தலை தூக்கிப் பார்த்த மேய்ப்பன், இடக்கையை மேற்குப் பக்கம் நீட்டினான்.
மேற்கே நகராமல் டாக்ஸி ஊருக்குள் திரும்பியது. ‘ ட ’ னா தெருவில் விருட்டென்று ஒடித்து தெருவின் முக்கு வரை சென்று அரைக்கணம் நின்றது. விர்ரென்று பின்பக்கமாய் நூறடி விரைந்து இன்னொரு முறை விக்கியது.
திமுதிமுவென்று காரில் இருந்து ஐந்துபேர் இறங்கினார்கள். புராதனமான ஜீன்ஸ் அணிந்த இளைஞர்கள். புஜத்தில், மார்பில், வயிற்றில் எங்கெங்கு காணினும் பைகள், கண்களில் திமிர், ஆளுக்கொரு துப்பாக்கி.
பதினொரு மணிப் பகல் தூக்கத்தில் கண்கள் செருகியிருந்த கிராமம். கார் ஒலி கேட்டு ஜன்னலில் விழித்தது. துப்பாக்கி கண்டு ஸ்தம்பித்தது. முன்னால் பின்னால் வலது புறங்களில் மூவர் கைக்குண்டுடன் காவலுக்கு வியாபிக்க இரண்டு பேர் பாங்க்கிற்குள் நுழைந்தார்கள்.
“ யாருடா இங்கே மானேஜர் ? ”
காலடிச் சத்தம் கேட்டு கரண்ட் அக்கவுண்ட் பேலன்சிங்கைக் கைவிட்டு நிமிர்ந்த மானேஜர் மிரண்டார். திடுக்கிட்டு எழுந்தார்.
“ யார் நீங்க ? என்ன வேணும் ? ”
அபத்தமான கேள்வி. துப்பாக்கியின் முனையில் துல்லியமாக வந்தவர்களின் நோக்கம் துலங்கிற்று.
“ மேனேஜர் யார் ? ”
சாவிக் கொத்து மேஜை மீது விசிறி விழுந்தது.
“ எதை வேணா எடுத்துக்குங்க. என்னை விட்டிருங்க. ”
வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கின. உயிராசை உந்தித்தள்ள மேனேஜர் வாசலை நோக்கி ஓடினார். பியூன் கவுண்ட்டர் மீதேறி வெளிப்புறம் பாய்ந்தான். வயிற்றில் உதை வாங்கிக் கதவருகே மடங்கிச் சரிந்தான். வாசற் பக்கம் குண்டு வெடித்துப் புகையும், ஜ்வாலையும் மூண்டன.
ஒரு சின்ன துரத்தலுக்குப் பின் மானேஜரின் வெள்ளைக் காலர், இளைஞனின் கையில் சிக்கிற்று. அடுத்த கணம் என்ன நிகழும் என்று முன்னோட்டம் மனத்தில் ஓட குமாஸ்தா தங்கராஜு, துப்பாக்கி இளைஞன் மேல் பாய்ந்தான்.
சினிமாவல்ல வாழ்க்கை. அவனால் மானேஜரைக் காப்பாற்ற முடியவில்லை. விநாடிகள் வித்தியாசத்தில் ஒரு ரத்தச் சட்டை நடுவே தங்கராஜுவும் சுருண்டு விழுந்தான்.
சிணுங்கிச் சிணுங்கி அழைத்த போன் எடுத்ததும் அமிலம் சிந்தியது.
“ அனந்த் ! உனக்குத் தங்கராஜுவை ஞாபகம் இருக்கிறதா ? ”
“ யார் ? ”
“ தங்கராஜு, ‘ சின்னப்பையன் ’ தங்கராஜு. ” மணக்கண்ணில் அந்தப் பள்ளித் தோழனின் முகம் நிழலாடிற்று. பவுடர் காணா முகம். சொளு சொளுவென்று எண்ணெய் தடவிப் பாலும் பழமும் பாணியில் பப் வைத்து வாரிய தலை. இஸ்திரி அறியாச் சட்டை. எப்போதும் கிரிக்கெட்டில் பன்னிரெண்டாம் ஆட்டக்காரன். முதல் ராங்கிற்குத் தன்னோடு மோதும் தோழன்.
“ அனந்த் ! அனந்த் ! ஆர் யூ அலைவ் ? ”
“ யெஸ். வெரி மச் ! ”
“ பட், தங்கராஜு இஸ் டெட் ! ”
“ என்ன ? ”
“ ஆமாம், பட்டப்பகலில், துப்பாக்கி முனையில் பரிதாபமாகச் செத்துப் போனான். ”
“ நிஜமாகவா இந்து ! ”
“ இப்போதுதான் டெலி பிரிண்டரில் செய்தி வந்தது. எங்களைப் பொறுத்தவரை டெலி பிரிண்டர் செய்தி அங்கீகரிக்கப்பட்ட நிஜம் ! ”
“ செய்தி ? டெலி பிரிண்டரில் ? ”
“ படிக்கிறேன் கேள் : தமிழ்நாட்டில் வங்கிக்குள் புகுந்து கொலை. பட்டப்பகலில் தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில் பகல் பதினொரு மணி அளவில் நடந்த சம்பவம். மேனேஜரும், குமாஸ்தாவும் ஸ்தலத்திலேயே மாண்டனர். ப்யூனுக்குக் காயம். மாண்டவர் விபரம் : கிருஷ்ணமூர்த்தி – மேனேஜர், வயது 36, மணமானவர். தங்கராஜ் – குமாஸ்தா, வயது முப்பது, மணமானவர். மேலும் விபரங்களுக்குக் காத்திருக்கவும். ”
“ நன்றாகத் தெரியுமா ? இது நம்ப தங்கராஜுதானா ? ”
“ நிச்சயமாகத் தெரியும். சென்ற வாரம்தான் அவனிடம் இருந்து எனக்குப் பிறந்தநாள் வாழ்த்து வந்தது. முப்பது வயது குமரிப் பெண்ணுக்கு வாழ்த்துச் சொல்கிற ஒரே ஸ்நேகிதன். ”
“ கிராமப்புறத்துப் புத்திசாலி ஏழை. வறுமை மாத்திரம் அவனைக் கட்டிப் போடாமல் இருந்திருந்தால் சிகரங்களைத் தொட்டிருப்பான், இந்து. ”
“ இரங்கல் செய்தி கேட்பதற்காக உனக்கு போன் பண்ணவில்லை, அனந்த். இந்தக் கொலை பற்றி எனக்கு ஒரு கட்டுரை வேண்டும் … ஆமாம் … உன்னிடமிருந்து … ”
“ என்னிடமிருந்து ? செய்திகளைப் புலனாய்ந்து நான் கட்டுரைகள் எழுதுவதில்லை. என்னைப் பொறுத்தவரைச் செய்திகள் வெறும் சம்பவங்கள், அல்லது தகவல்கள். அவை என்று நடந்தது, எங்கே நடந்தது. எவ்விதம் நடந்தது என்று துருவ எனக்கு ஆர்வம் இல்லை. அதே சமயம் இந்தச் செய்திகள் இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கும் சமூக ரசாயனத்தின் அடையாளங்கள் என்ற கரிசனம் உண்டு. உண்மையில் அவற்றை அவ்விதம் புரிந்து கொள்ளாவிடில் அந்தச் செய்திகளுக்கு அர்த்தம் இல்லை .”
“ தெரியும். தெரியும். உனக்கு என்று எங்கே எவ்விதம் என்பதைவிட, ஏன் என்ற கேள்வி முக்கியமானது என்று எனக்குத் தெரியும். வேர்களைத் தேடுகிற பத்திரகையாளன் நீ என்று எனக்குத் தெரியும். அதனால்தான் – உண்மையைச் சொல்லப்போனால் – அதற்காகத்தான் உன்னைக் கேட்கிறேன். ”
“ அதுதான் ஏன் ? ”
“ சும்மா சாக்ரடீஸ் மாதிரி ஏன் என்று கேட்காதே. உன்னிடத்தில் சொல்வதற்கு எனக்கு வெட்கமில்லை. இன்றைக்குப் படித்த நடுத்தர வர்க்கத்திற்குச் சிந்திக்க விருப்பம் இல்லை. அவர்கள் செயலின்மை என்ற வைரஸால் பீடிக்கப்பட்டுவிட்டார்கள். தே ஆர் சீஸ்ட் வித் இன் ஆக்ஷன். அந்தக் குற்ற உணர்வின் விளைவு இன்று இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் கொடிகட்டிப் பறக்கிறது. கள்ளக் கடத்தல்காரன் தானம் பண்ணுவது போல. அதைப் பயன்படுத்திக் கொண்டு நாங்கள் பணம் பண்ண விரும்புகிறோம். ஆனால் கீரைக் கடைக்குப் போட்டிக்கடை முளைத்த கதையாக எங்கள் சிறு உலகத்தில், ஒரு சின்ன ரொட்டித் துண்டைப் பிய்க்க ஏகப்பட்ட கைகள். வித்தியாசமாக முயற்சித்தால் எங்களுக்குச் சற்றுப் பெரிய துண்டு கிடைக்கக் கூடும். எனவே எங்களுக்குத் தேவை அறிவுஜீவிகள். நிருபர்கள் அல்ல . ”
“ உங்கள் வியாபாரத் தந்திரங்கள் குறித்து எனக்கு அக்கறை இல்லை. ஆனால் முன்பு என் கொத்தடிமைக் கட்டுரைகளுக்கு நேர்ந்த கதி இதற்கு ஏற்படாது என்பது என்ன நிச்சயம் ? ”
“ வெல் … அன்று விளம்பரங்களை இழக்க நாங்கள் விரும்பவில்லை. இன்று சர்க்குலேஷனை … ’
மெயின்ரோட்டிலிருந்து சற்று உள்ளடங்கிய கிராமம். தார் காணாக் கப்பிச் சாலை. பச்சை வயல் சதுரம் நடுவே விரிந்த பாதை. தொடுவானில் சித்திரம் போல் சோழன் கோவில். தெருவென்று அளந்தால் இரண்டே இரண்டு. அடுக்கி வைத்த ஒழுங்குடன் காரை வீடுகள். மற்றதெல்லாம் குடிசை கட்டி எடுத்து வரும்போது உதிர்ந்து விட்டாற்போல் ஒன்றிரண்டாய் எண்ணிப் பார்த்தால் நூறு வீடுகள். அதிக பட்சம் ஐநூறு குடிமக்கள்.
இந்தக் குக்கிராமத்தில் ஒரு வங்கிக்கிளை. போன தலைமுறை இங்கே போஸ்ட் ஆபீஸ் கூடப் பார்த்திருக்காது. தேசியமயமாக்கப்பட்டதன் விளைவாக வங்கிகள் கிராமங்களைத் தொட்டுவிட்டன. ஆனால் தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கங்கள் கிராம மக்களைச் சென்றடைந்துவிட்டனவா ?
அனந்த் அந்தக் கிராமத்தை அடைந்தபோது ஊழியர்களின் ஊர்வலம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. பெரும்பாலும் இளைஞர்கள். உள்ளே புயல் உறங்கும் இளைஞர்கள். கடந்த பதினைந்து வருடங்களில் எந்த வங்கியின் எந்தக் கிளைக்குள் நுழைந்தாலும் இளைஞர்கள். தேசியமயமாக்கப்பட்டதன் மற்றும் ஒரு கொடை, வங்கித் தொழிலில் வாலிபம் நுழைந்தது.
உன்னதமான நோக்கங்கள், உற்சாகம் ததும்பும் இளைஞர் படை, திறமையான நிர்வாகம், விரிந்து பரந்த அமைப்பு, பின் எங்கு நேர்ந்தது சிக்கல் ?
“ அரசியல் ! அதன் அடையாளம் இந்தக் கொலை. இது எங்களுக்கு விடப்பட்ட சவால் … ” அந்த இளைஞனின் கண்ணில் கனல் ஒளிர்ந்தது. படித்தவர்க்கத்துப் பகை. கண்ணகியின் கனல். அப்படியே விட்டால் என்றேனும் ஒருநாள் இந்த தேசத்தையே எரிக்கவல்ல நெருப்புத்துளி.
நெருப்பு இளைஞனை நிறுத்தச் சொல்லி நடுத்தர வயது மனிதர் ஒருவர் முன்னால் வந்தார். “ என் பெயர் கோபாலன் ” என்ற அறிமுகத்தில் மலையாளம் மணத்தது. செயலாளர் கோபாலன் கோபத்தோடு பேசியபோதும் கோர்வையாகப் பேசினார். அனுபவம் போலும். “ அரசுடைமையாக்கப் பட்டதல்ல, வங்கிகள் அரசியல் மயமாக்கப்பட்டதுவே எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேர். பேங்க்கிங் இன் தி கண்ட்ரி இஸ் நாட் ஜஸ்ட் நேஷனலைஸ்டு. பட் இட் இஸ் டோட்டலி பொலிட்டிகலைஸ்டு ” என்று ஆரம்பித்தார்.
“ இது வெகுஜன கோபத்தின் ஒரு வித வெளிப்பாடோ என்ற சந்தேகம் உங்களுக்குத் தோன்றவில்லையா, கோபாலன் ? ”
“ இல்லை. இங்கு நடந்தது கொலை மாத்திரமே. களவு இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான வங்கி ஊழியர்களுக்கு இந்தக் கொலை அறிவிக்கும் செய்தி தெள்ளத் தெளிவானது. ‘ இன்று இவன் ; நாளை நீ ! ”
“ மிகைப் படுத்துகிறீர்களோ என்று அஞ்சுகிறேன். இந்த மிரட்டலுக்கு என்ன அவசியம் ? ”
“ தான் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தங்களுக்கு ஓர் அடித்தளம் அமைய வங்கிப் பணம் வாரி விடப்படுகின்றன. வேலை கொடுக்க முடியாத அரசாங்கம் வீசுகிற ரொட்டித் துண்டு. உழைக்க விருப்பம் இல்லாதவர்கள் வசம் சேர்க்கப்படும் செல்வம். இவை கடன் அல்ல. ஓட்டுக்காகப் கொடுக்கப்படும் லஞ்சம். ஒரு வகையான ஜீவனாம்சம். ஓர் எல்லைக்கு மேல் இதை விஸ்தரிக்க முடியாதபோது திசை திருப்ப முயற்சிகள் நடக்கின்றன. எங்கள் மீது பழிசுமத்தும் காரியம் நடக்கிறது. பதற்றம் எழுகிறது. குண்டு வெடிக்கிறது. ”
“ சாதாரண மக்களின் கடன் மனுக்கள் மறுக்கப்படுவதன் காரணம் … ”
“ நாங்கள் அல்ல, விதிகள், ஒழுங்கு முறைகள், சட்டங்கள். ”
“ அரசியல்வாதி என்பவன் ஏதோ தெருப்பொறுக்கி அல்ல. அவன் மக்களின் பிரதிநிதி. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ”
புடவை கட்டி இருந்தபோதிலும் சந்திரகாந்தாவிற்கு ஆண் குரல். கோபமோ, கிண்டலோ பாவம் எதுவான போதிலும் அது முகத்தில் பிரதிபலித்தது. வட்ட முகம் வயதேறிய பின்னரும்கூட அழகாய் இருந்தது. காரணம், அந்தக் கரிய விழிகள் மூக்குக் கண்ணாடி கழுத்தில் கிடந்தது – தங்கச்சங்கிலி கோர்த்து.
” தெருப்பொறுக்கிகள் அரசியல் அதிகாரம் பெற்றுவிட்டார்கள் என்பதுதான் படித்தவர்களின் குமுறல் … ”
“ அது பொறாமை, கையாலாகப் புகைச்சல். படித்துவிட்டதன் காரணமாக அதாவது ஆங்கிலம் படித்துவிட்டதின் காரணமாகவே தாங்கள் புனிதமடைந்து விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். உண்மையில் இவர்களது படிப்பு இவர்களை மேன்மைப்படுத்தவில்லை. சொந்த மக்களிடமிருந்து அன்னியப்படுத்தியது. ஒரு பஞ்சாயத்து வார்டில்கூட இவர்கள் ஜெயிக்க முடியாது என்பது இதன் நிரூபணம். இவர்கள் அரசியல்வாதிகளை நக்கல் செய்கிறார்கள். நாடகம் போடுகிறார்கள். நகைச்சுவைத் துணுக்கு எழுதுகிறார்கள். ஏனெனில் அவர்களின் படிப்பைக் கொண்டு இதைத்தான் அவர்களால் செய்ய முடியும். ”
“ நீங்கள் எல்லாம் எப்படி தேர்தலில் ஜெயிக்கிறீர்கள் என்று அவர்கள் விரிவாகவே சொன்னார்கள். வங்கிப் பணத்தை … ”
“ அது அவர்கள் தகப்பன் வீட்டுப் பணம் அல்ல. பொது மக்களின் பணம். அது அவர்களைச் சென்றடையவில்லை என்னும்போது நாங்கள் தலையிட வேண்டியதாகிறது. ”
“ உங்களுடைய நோக்கங்களுக்கு உங்கள் விதிகளே எதிராக இருக்கின்றன என்று தெரியுமா உங்களுக்கு ? ”
“ இது ஒரு பிரம்மாண்டமான பொய். மித். உதாரணங்கள் செல்கிறேன். உண்மையா என்று விசாரியுங்கள். கடன் வழங்குவதை டெபாஸிட்டுகளோடு முடிச்சுப் போடக்கூடாது என்று தெளிவான ரிசர்வ் பேங்க் சர்க்குலர்கள் இருக்கின்றன. சுயவேலை நோக்கத்தில் தொழில் நடத்தும் இளைஞர்களுக்கு ‘ உன் டெபாசிட் ஆதரவு போதாது ’ – யுவர் டெபாசிட் சப்போர்ட் ஈஸ் இன்அடிக்குவேட் – என்று எழுதப்பட்ட கடிதங்கள், எத்தனை காண்பிக் கட்டும் உங்களுக்கு? சொந்தத் தொழில் துவங்குகிறவர்களிடம் கொலாட்ரல் செக்யூரிட்டியை வற்புறுத்தக்கூடாது என்று விதிகள் சொல்கின்றன. எந்த வங்கி இதை அமல் படுத்துகிறது ? குறைந்தபட்சம் ஒரு இன்ஷுரன்ஸ் பாலிஸியாவது கேட்பார்கள். ஈடு இருந்தால்தான் கடன் கொடுக்கப்படும் என்ற வட்டிக்கடை மனப்பான்மையோடு நடத்தப்படுவதாக பேங்க்குகள் தேசியமயமாக்கப் படவில்லை. பெரிய தொகை டெபாஸிட்டாக வருகிறது என்றால் விதிகளுக்குப் புறம்பாக சலுகை காட்ட இவர்கள் தயங்குவதில்லை. சிறிய தொகைகளைக் கடன் கேட்டு ஏழை மக்கள் வந்தால் சட்டம் பேசுகிறார்கள். மாற வேண்டியது விதிகள் அல்ல. மனப்பான்மை. அது மாறாத வரை அங்கங்கே குண்டு வெடிக்கும். அது துரதிருஷ்டமானது. ஆனால் தவிர்க்க முடியாது. ”
“ தலைக்குக் தலை குண்டு வெடிக்கும் என்று மிரட்டுவதைக் கேட்டால் எனக்கு குலை நடுங்குகிறது அனந்த். ”
இந்து எழுந்து கேஸட்டை ஆஃப் செய்தாள். அவள் முகத்தில் துளிக்கூட பயம் இல்லை. கிண்டல் ஜொலித்தது. “ தமிழ்நாடு, பாதி பஞ்சாப் ஆகிவிட்டது ” என்றாள் சிரித்துக் கொண்டே. அனந்த் சிரிக்கவில்லை. “ இதுதான் ! இதுதான் பிரச்சினையின் ஆணிவேர் இந்து ! ” என்று காதோரம் சிவக்க, கண்ணில் கோபம் ஒளிர மேசையில் குத்தினான்.
“ உன்னைப் போன்ற படித்தவர்கள் எந்தச் பிரச்சினையையும் முற்றிலுமாகப் புரிந்து கொள்ள முயலுவதில்லை. ஒன்று, கிண்டலடிக்கிறீர்கள். அல்லது மிகைப்படுத்துவீர்கள். எந்த ஒன்றும் உங்கள் பிரச்சினை ஆகாதவரை அது உங்களுக்கு வெறும் செய்தி. அல்லது விகடத் துணுக்கு. ”
“ நானா கொலை செய்யச் சொன்னேன் ? ”
“ நீ நேரடியாகச் சொல்லவில்லை. வேர்கள் அழுகிக் கொண்டிருக்கும் உன் கலாசாரம் சொல்கிறது. படித்தவனுக்கு சமூகக் கடமை உண்டு என்பதை நம்முடைய கல்வி நமக்குக் கற்றுத் தரவில்லை. இங்கு கல்வி என்பது செல்வம் சேர்ப்பதற்கான உபாயமாகப் போதிக்கப்படுகிறது. இதற்கு நீயும் நானும் தங்கராஜுவும் எண்ணற்ற இளைஞர்களும் பலியானோம். இதன் எதிரொலியைத் தான், இளைஞர்கள் மிகுந்துள்ள வங்கிகளில் கேட்கிறோம். இவர்களும், நம்முடைய அரசியல்வாதிகளைப் போன்றே, தங்களுடைய பதவிகளை மக்களின் காரணமாகவே பெற்றார்கள். ஆனால் அவர்கள் மக்களைக் கடன்காரர்களாகவே நடத்துகிறார்கள். ”
“ புரியவில்லை . ”
“ இங்கலீஷில் சொன்னால் உனக்குப் புரியும் ; தே ஆர் ஆப்ளிகேட்டட் டு பப்ளிக் பார் தேர் ஜாப். பட் தே ட்ரீட் பப்ளிக் ஆஸ் இஃப் தி பப்ளிக் ஓ தேர் சர்வைவல் டு தெம். (They are obligated to public for their job.But they treat public as if the public owe their survival to them)
“ அரசியல் நிர்ப்பந்தங்களின் காரணமாக, ஒரு நள்ளிரவில் வங்கிகளின் அமைப்பு சோஷலிஸ வடிவம் பெற்றுவிட்டன. ஆனால் அதை இயக்கும் மனிதர்கள் இன்னும் லேவாதேவிக்காரர்களாகவே இருக்கிறார்கள். இந்த முரண்பாடுகள் தீர்க்கப்படாதவரை அங்கங்கே துப்பாக்கிகள் வெடிக்கும். ”
“ நீயுமா அனந்த் ! ”
இந்து சிரித்தாள். ஆனால் அனந்த் முகத்தில் கவலை படிந்திருந்தது.
(ஆனந்த விகடன் )